Tuesday, June 30, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 129. 'குலதெய்வம்' பகுதி - 3.



குலத்தின் வழியாக... குடியின் வழியாக... குடும்பத்தின் வழியாக... வழிநடத்தப்படும் ஒருவருக்கு 'குலதெய்வமாக' இருந்து அருள் செய்யும் தெய்வமே, முதல் வழிகாட்டியாக இருக்கிறது.

அவரின் வாழ்வின் முதல் தெய்வமான குலதெய்வம் அவருடைய முழுமையான வாழ்விற்கும் பொறுப்பேற்கிறது. அவரின் பிறப்பிலிருந்து, மறைவு வரையிலான அனைத்து நிகழ்வுகளிலும், முன்னின்று அவரை வழி நடத்துகிறது.

அவரை, அவரின் குடியின் வழியாகக் கட்டி வைக்கும் தெய்வமாக, குலதெய்வம் இருக்கிறது. குழந்தையாகப் பிறந்த முதல் 'புண்ணியாவாகனம்' என்ற சடங்கில் ஆரம்பித்து... பெயர் சூட்டல், தலை முடி இறக்குதல் என்பதிலிருந்து, வாழ்வு முழுவதும் நடக்கும் அனைத்து சம்சாரங்களுக்கும் (கடமைகள்)... பிரதான தெய்வமாக இருந்து வழி நடத்துகிறது.

அவரின் உலக வாழ்வின் நிமித்தமாக, சூழ்நிலைகளால், அவர் தனது பூர்வத்தை விட்டு வெளியேறி, மாற்று இடங்களில் வசிக்க நேரும் போதும், அவரை நீங்காது நின்று வழி நடத்துகிறது. அவரின் ஒவ்வொரு உலக வாழ்வின் வழியான முன்னேற்றங்களிலும், அவருக்குத் துணையாக இருந்து அருள் செய்கிறது. 
அவர் ஒரு தொழில் செய்யும் போதும், தொழிலின் வழியாக அவர் சேர்க்கும் சொத்துக்கள் அனைத்திற்கும்... முதல் பொறுப்பாளராகக் குலதெய்வம் தனது பங்கை அளிக்கிறது.

பலரின் வாழ்வு, பூர்வத்தை விட்டு அகன்று, மாற்று சூழல்களில் அமைந்திருக்கலாம். அந்த சுழல்களுக்கு ஏற்ப, அவர் தனது உலக வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும்... உள் வாழ்வின் முன்னேற்றத்திற்குமாகவும்... இஷ்ட தெய்வ வழிபாடு, சத்குரு வழிபாடு என்று பயணிக்கலாம். அந்த இரண்டு வழிகளிலும் அவர்களை வழிநடத்தும் இஷ்ட தெய்வமும், சத்குருவும் அவரவர்களின் குலதெய்வத்தை முன்னிட்டுத்தான்... அவர்களை வழிநடத்துவார்கள்.

குலதெய்வ வழிபாடு, அந்தந்த குடிவழிபாட்டுக்கு ஏற்ப முறைப்படுத்தப் பட்டிருக்கிறது. அன்றாட வழிபாட்டிலிருந்து... குடி வழிபாட்டுக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வழிபடும் விழாக்கால வழிபாடுகளான... வருடம் ஒரு முறை அல்லது மூன்று, ஐந்து, ஏழு வருடங்களுக்கு ஒரு முறை என... முறைப்படுத்தப் பட்டிருக்கிறது.

இந்த முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகளை, குடி வழிபாட்டுக்காரர்கள் மீறாதவாறு வழி நடத்தப்படுகிறார்கள். இஷ்ட தெய்வ வழிபாடுகளின் போதும், சத்குரு வழிபாடுகளின் பொதும் ஒருவருக்கு இருக்கும் சுதந்திரம்... குலதெய்வ வழிபாட்டின் போது இருப்பதில்லை. காரணம், அந்த குடி வழிபாட்டுக் காரர்களின் நிலைகளைக் கருதி... அந்த வழிபாட்டு முறைகள் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும் படியாக முறைப் படுத்தப்பட்டிருக்கிறது. புதிய வழிமுறைகள் எப்போதும் ஊக்குவிக்கப் படுவதில்லை.

இருக்கும் இடத்திலிருந்து, மானஸீகமாக வழிபட்டாலே போதும். அவரவர்களின் குலதெய்வம் அவரவர்களைக் காத்தருளும். குலதெய்வத்தின் வழிகாட்டுதலின் படியே, இஷ்ட தெய்வங்களின் அனுக்கிரகங்களும், சத்குருநாதர்களின் அனுக்கிரகங்களும் ஒருவருக்கு அமையும்.

குலதெய்வத்தின் அனுக்கிரகத்தோடும்... இஷ்ட தெய்வத்தின் அனுக்கிரகத்தோடும்... சத்குருநாதரின் அனுக்கிரகத்தோடும்... நமக்குக் கிடைத்த இந்த அரிய பிறவியில்... கடமைகளைப் பற்றற்று முடித்து... இந்த ஜீவனை அதன் மூலமான பரமார்த்த சொரூபத்தில் கொண்டு சேர்ப்போம்.

ஸாய்ராம்.

Monday, June 29, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 128. 'குலதெய்வம்' பகுதி - 2.




நியமம் என்ற ஒழுக்க நியதிகளின் படி.. அரச வம்சங்களை 'சூரிய - சந்திர குலங்களாகவும்'... அவர்களின் குலதெய்வங்களாக 'மஹாவிஷ்ணு - சர்வேஸ்வரனையும்'... குடி மக்களை 'சிவ - விஷ்ணு குலங்களாகவும்'... அந்த குலங்களுக்கு ஏற்ப... 'குலதெய்வங்களையும்' வரையறுத்தனர்.

'சிவ குலத்தைச்' சேர்ந்தவர்களையும், 'விஷ்ணு குலத்தைச்' சேர்ந்தர்களையும், 'ஒரு குலமாகவும்'... அந்த குலத்தில் இருப்பவர்களை, அவர்களின் பழக்க வழங்களுக்கு ஏற்ப 'ஒரு குடியாகவும்'... அந்தக் குடியில் இருப்பவர்கள ஒரு 'குடும்ப அமைவாகவும்' வகைப் படுத்தினர். இந்த வழியாக 'குலம் - குடி - குடும்பம்'... என்ற வகையில் சமுதாயம் வழி நடத்தப்பட்டது.

இவ்வாறாக, 'சிவ குலத்தில்' இருப்பவர்களின் 'குடிப் பிறப்புக் கேற்ப'... சிவனின் அம்சமாக ஒரு குலதெய்வத்தையும்... அந்தக் குடிப் பிறப்பில் இருக்கும் அனைவரையும் ஒரே குடியில் இருக்கும் 'சகோதர உறவுகளாக'... ஒரே குடும்பமாக வாழத் தலைப்பட்டனர்.

அது போல. 'விஷ்ணு குலத்தில்' இருப்பவர்களின் 'குடிப் பிறப்பிற் கேற்ப'... பகவான் விஷ்ணுவின் அம்சமான குலதெய்வத்தை அந்தக் குடிக்கும்... அந்தக் குடியில் இருக்கும் அனைவரையும் ஒரு சகோதர் உறவுகளாக... ஒரே குடும்பமாக வாழத் தலைப் பட்டனர்.

உதாரணமாக, 'சிவ குலத்தில்' இருக்கும், ஒரு குடியினருக்கு, 'சிவபெருமானாரின் அம்சமாக'... 'நல்லாண்டவர் சுவாமி' குலதெய்வமாகிறார். 'தாயார் பராசக்தி'... அந்தக் குலத்தினருக்கான  பெண் தெய்வமாக... 'சப்த கன்னிமாராக' உருவமேற்றுக் கொள்கிறார். 'பகவான் விஷு பகவான்' அந்தக் குடிக்கு காவல் தெய்வமாக. சந்நியாசி' என்ற 'கருப்பு சுவாமியாக'... காவல் தெய்வமாகிறார்.

அதே போல, 'விஷ்ணு குலத்தில்' இருக்கும், ஒரு குடியினருக்கு, 'பிரசன்ன வெங்கடாஜலபதி' குலதெய்வமாகவும்... கருப்பண்ணார் சுவாமி, காவல் தெய்வமாகவும் அமைகிறார்.

இவ்வாறு, அமைந்திருக்கும் இரு குலங்களுக்கிடையேதான், 'கொள்வினை, கொடுப்பினை' என்ற உறவுப் பாலங்கள் அமைக்கப்பட்டன. இந்த உறவுகள் அமையும் போது, ஒரெ குலத்தில் அமையாமலும், ஒரே குடியில் அமையாமலும், ஒரே குடும்ப உறவில் அமையாமலும்... இருக்கும் படியாக விதிகள் வகுக்கப்பட்டன.

இந்த விதிகளுக்குட்பட்டு, இந்த சமூக அமைப்பு... ஒரு ஒழுங்கான பாதையில் பயணிக்கும் படியாக அமைக்கப் பட்டு...அதை, இந்த சமூகம் இன்றும் தவாறாமல் கடைபிடித்து வருகிறது.

அந்த விதிகளையும்... அதன் கடைப்பிடித்தல் பற்றியும்... தொடர்ந்து  அறிந்து கொள்வோம்... இறவனின் அருளோடு...

ஸாய்ராம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 127. 'குலதெய்வம்' பகுதி - 1.





'ஒன்றாய்  அரும்பி, பலவாய் விரிந்து, இவ்வுலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் - எந்தன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா ! இப்பொருள் அறிவார்
அன்று ஆலியிலையில் துயின்ற எம்மானும் என் ஐயனுமே.'

ஒன்றாய் இருக்கும் பரம்பொருள் பலவாய் விரிதலைப் பற்றிய 'அபிராமி பட்டரின்' பாடல்தான் இது. 

ஒன்றாய் இருந்த பரம் பொருள்... இந்த உலகாய் விரியும் போது, ஒரே சக்தியின் பல பிரிவுகளாக அந்த சக்தி பிரிந்து நிற்கிறது. அதற்குக் காரணம், ஒவ்வொரு ஜீவனின் உள்ளுக்குள்ளேயும் இருந்தருளும், அந்த ஒரே சக்தி வடிவான ஆத்ம சொரூபமும், இந்த உலகில், அதன் 'கர்ம வினைகளின் விளைவாக' பலவாய் விரிந்து நின்றதால்தான்.

ஜீவர்கள், அதனதன் கர்ம வினைகளின் விளைவாக, பல நிலைகளை எதிர் கொள்ள வேன்டியிருப்பதால்... அவர்களுக்குள் இருந்தருளும் அருள் சக்தியும், அந்த ஜீவர்களைக் காத்தருள பலவடிவங்களை எடுக்க வேண்டியிருக்கிறது.

ஒரே சக்தியாக இருக்கும் போது 'ஈஸ்வரனாய்' இருக்கும் சக்தி, சலனமாகும் போது, 'சிவ சக்தி' ரூபமாகவும்... உலகெங்கும் விரியும் போது விஷ்ணுவாகவும்... பரந்து விரிந்து நின்று அருளும் போது எண்ணற்ற வடிவங்களாய்...'பரப்பிரம்ம' சொரூபமான பிரம்மாவகவும் எழுந்தருளி அருள்பாலிக்கிறது.

ஒரே சக்தியின் பல வடிவங்களான ஒவ்வொரு சக்தியும்... ஒரே ஆத்ம சொரூபமான ஒவ்வொரு ஜீவனும் எதிர்கொள்கிற ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ப... அவற்றிற்கு அருள் செய்வதற்காக... ஒவ்வொரு வடிவத்தை எடுத்துக் கொள்கிறது.

ஒரு ஜீவன், தனக்குள்ளே ஒடுங்கி இருக்கும் போது, பரம்பொருளான ஆத்மாசொரூபம் 'சிவபெருமானாரின்' வடிவத்தை எடுத்துக் கொள்கிறது. அது சற்று சலனிக்கும் பொது, 'பராசக்தித் தாயாரக'... சிவ சக்தி ரூபமாக மாறுகிறது. இந்த உலகத்தில் அது உலவும்பொது, 'மஹாவிஷ்ணுவாக' அவதரித்துக் கொள்கிறது. அதற்குத் துணை நிற்கும் போது 'மஹாலக்ஷ்மியாக' தன்னை மாற்றிக் கொள்கிறது.

இந்த உலகை இரட்சிக்கும் பொது 'எட்டு திக்குப் பாலகர்ளாக' தன்னை வரித்துக் கொள்கிறது. அது சப்தநாதமாக ஒடுங்கி நிற்கும் போது 'விநாயகராக'... ஆற்றலாக வெளிப்படும் போது 'முருகராக'... இவ்வாறு எண்ணற்ற வடிவங்களில்... காரண, காரியமாக... ஜீவர்களை இரட்சிக்க உருமாற்றமடைகிறது. 

ஜீவன் தனது ஓய்வாகிய ஆழ்ந்த உறக்கத்தில் ஆழும் போது... பரந்து விரிந்து நிற்கும் சக்தி... ஜீவனது ஹிருதயம் என்ற மூலத்தில்... ஒரே பரம்பொருளான ஆத்ம சக்தியாக ஒடுங்கி... ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. இதைத்தான், அபிராமி பட்டர், 'அனைத்தையும் நீங்கி நிற்பாள்... எந்தன் நெஞ்சுநுள்ளே... ' என்று, இந்த சூட்சுமத்தை உணர்ந்து கொண்டவர்களாக, ஆலிலையில்; துயிலும் எம்பெருமானாராகிய 'மஹாவிஷ்ணுவையும்'... மூலமான' சர்வேஸ்வரனையும்'... குறிப்பிடுகிறார். 

அபிராமி பட்டர் விளக்கியுள்ள இந்த சூட்சுமத்தை, எப்போதோ உணர்ந்து கொண்ட ரிஷிகள்... உலக மாந்தர்களின் உயர் மேம்பாடு கருதி, நமது சமுதாயத்தை, ஒரு சீரான சமுதாயமாக வழிநடத்த, ஜீவர்களின் ஆத்ம சக்தியை, ஒரு வரையரையாக வகுத்து, தெய்வ நிலைகளை... மாந்தர்கள் எந்நாளும் வழி தொடர ஏதுவாக சூட்சுமமான பல உட்பிரிவுகளாகப் பிரித்தனர்.

ஒழுக்க நியதிகளின் படி, அன்றைய பெரும் அரச வம்சங்களை 'சூரிய', 'சந்திர' குலங்களாகவும்', 'சூரிய வம்சத்திற்கு' குல தெய்வமாக 'மஹாவிஷ்ணுவையும்', சந்திர வம்சத்திற்குக் குல தெய்வமாகயும்,  'சர்வேஸ்வரனையும்'... குடி மக்களை... சிவ குலமாகவும், விஷ்ணு குலமாகவும் வரையருத்தனர். அந்தக் குலங்களுக்கு... 'குல தெய்வங்களையும்' வகுத்து... சமுதாயத்தை ஒரு சீரான வழியில் நடத்துவதற்கு...இந்த வரையறைகளை வகுத்துத் தந்தனர்.

இவையனைத்தும், மாந்தர்களின் ஒழுக்கமான வாழ்வு முறைகளுக்கு வழி காட்டுவதற்காகத்தான். இதில், இறுதியாக வரும் 'குலதெய்வ' வழிபாட்டை... முதல் மூல வழிபாடாகக் கொண்டு, அதன் வழியாக படிப்படியாக உள் திரும்பி... ஒன்றாக இருக்கும் பரம் பொருளான ஆத்ம சொரூபத்தில் கலந்து விட வைப்பதே, அவர்களின் ஒரே, குறிக்கோளாக இருந்தது.

அந்தக் 'குல தெய்வ வழிபாட்டின்' முக்கியத்துவத்தையும்... அதனால் கட்டமைக்கப்பட்ட ஒழுங்கான சமுதாயக் கட்டமைப்பையும்... தொடர்ந்து பார்ப்போம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

Friday, June 26, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 126. 'விஞ்ஞானமும், மெய்ஞானமும் கூடிய ஜோதிடக் கலை'




ஜோதிடக் கலை, 'விஞானமும்'... 'மெய்ஞானமும்' கூடிய கலையாகும். இந்தக் கலை 'வான சாஸ்த்திரத்தையும்'... 'கணிதவியலையும்'... அடிப்படையாகக் கொண்டது.

ஜோதிடக் கலை... விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கான சாட்சியாக இருப்பது... 'ரிஷிகள்' வகுத்துள்ள 'பஞ்சாங்கம்தான்'. 

பஞ்சாங்கம் என்பது, பிரபஞ்சத்தில் உலவும் கிரகங்கள்... விண்மீன்களைப் பற்றியும், அவற்றின் மூலமான சூரியனையும்... இவை, அனைத்தையும் பூமியுடன் இணைக்கும் சந்திரனையும்... அறிந்து கொள்ளும் முழுமையான... 'வான சாஸ்த்திரத்தையும்', ;கணிதமுறைகளையும்; உள்ளடக்கிய விஞ்ஞானமாகும். 

இந்த 'வானசாஸ்திர விஞ்ஞானத்தை'... அன்றைய ரிஷிகள் தங்களது 'மெய்ஞானத்தின் வழியாகத்தான்' அறிந்து கொண்டார்கள். அவர்கள், தங்களது 'அந்தர் ஞானம்' என்ற உள் நோக்குதாலால்... 'அண்டத்தில் உள்ளது அனைத்தும்... இந்தப் பிண்டத்தில் உள்ளது...' என்ற, 'ஞான திருஷ்டியைக்' கொண்டு... மிகத் துல்லியமாக இவற்றை அறிந்து கொண்டார்கள்.


 

வானசாஸ்த்திரத்தின் வழியாக அறிந்து கொண்ட இவையணைத்தையும்... பூமியுடன் இணைத்துப் பார்க்கக் 'கணித முறை' தேவைப்பட்டது. அந்தக் கணித முறையை ரிஷிகள், நாழிகைகள்... நொடிகள்... விநாடிகள் என்ற கணக்கீடுகளின் மூலம் வகுத்தார்கள். 

அந்தத் கணக்கீட்டு முறைகள் மூலம்... கோள்கள் மற்றும் விண்மீன்களின் சுற்றுப் பாதைகள்... அவற்றின் தொலைவு... மேலும், பூமியிலிருந்து, அவற்றின் அமைவு மற்றும் அவற்றின் சுழற்சிக் கால அளவுகள் என்று... அனைத்தையும் துல்லியமாகக் கணக்கிட்டார்கள்.

அவற்றை,

~ வாரம் என்ற 'கிழமைகளாகவும்'...
~ சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையேயான தூரத்தை கணக்கிட்டு அதைத் 'திதிகளாகவும்'...
~ திதிகளை வகுத்துக் 'கரணங்களாகவும்'...
~ சந்திரனின் சுற்றுப் பாதைக்கு ஆதாரமாக இருக்கும் 'நட்சத்திரங்களாகவும்'...
~ சந்திரன், நட்சத்திரத்தின் பகுதிகளைக் கடப்பதை 'யோகங்களாகவும்'...

... ஐந்து வகைகளாக வகைப்படுத்தி... அதை 'பஞ்சாங்கம்' என்ற துல்லிய கணக்கீட்டு முறையாக வகுத்தளித்திருக்கிறார்கள். இந்த பஞ்சாங்கமே முழுமையான விஞ்ஞான அறிவுக்கான சாட்சி.

இந்த பஞ்சாங்கத்தில், மெய்ஞானத்தின் வழியான வான சாஸ்த்திர விஞ்ஞானமும்... மெய்ஞானம் கூடிய கணித சாஸ்த்திர விஞ்ஞானமும்... ஒன்றாய்க் கலந்திருப்பதை கலந்திருப்பதைக் காணலாம்.

இந்த பஞ்சாங்கத்தை உள்ளடக்கிய ஜோதிடக் கலையை, விஞ்ஞானமாகவும் அணுகலாம்... மெய்ஞானமாகவும் அணுகலாம்.

இதை விஞ்ஞானமாக அணுகும் போது, கிரகங்களையும் அவற்றின் சுழற்சிகளைப் பற்றியும்... விண்மீன்கள் என்ற நட்சத்திரக் கூட்டங்களைப் பற்றியுமான... வான் வெளி அறிவுப் பாதையில் பயணிக்கலாம்.

அதுவே, மெய்ஞானமாக அணுகும் போது, கிரகங்களின் சுழற்சி... பூமியில் இருக்கும் ஜீவர்களின் வாழ்வினை... எவ்வாறு பிரதிபலிக்கின்றன... என்ற ஜோதிடக் கலையின் முன்னறிவிப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.

ஜோதிடக் கலையை, விஞ்ஞானமாக அணுகும்போது... அதற்கு உலக வாழ்வின் பயணத்திற்குத் தேவையான... உலக அறிவு தேவைப்படுகிறது. மெய்ஞானமாக அணுகும் போது... உள் வாழ்வு என்ற ஆன்மீகத் தேடலின் மூலமான பரமாத்ம சொரூபத்தின் அனுக்கிரகம் தேவைப்படுகிறது.

ஸாய்ராம்/

Thursday, June 25, 2020

கம்பருக்கு அருளிய திருவரங்கத்து மேட்டழகிய சிங்கர்.



'வால்மீகிப் பெருமான்' அருளிய 'இராமாயணக் காவியத்தை' தமிழில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் 'கம்பர்'. அதற்காகத் தனது குல தெய்வமான 'நரஸிம்மப் பெருமானிடம்' பிரார்த்திக் கொண்டு... காப்பியத்தை எழுதத் தொடங்கினார்.

வால்மீகி எழுதிய இராம காதையின் மூலத்தை முழுவதுமாக உள் வாங்கி... அதைத் தனது கவித் திறத்தினால்... தமிழ்க் காப்பியமாக உருவாக்கினார், கம்பர். தெள்ளியத் தமிழ் வார்த்தைகளைக் கொண்டு... தேனினும் இனிய பாடல்களால்... 'பகவான் இராமரது' காப்பியத்தை,,, 'இராமவதாரமாக' உருவாக்கினார்.

வால்மீகியின் இராம காதையில் இல்லாத ஒரு இடைச்செருகலாக... தனது குலதெய்வமான, 'பகவான் நரஸிம்மரது' அவதாரத்தை, தனது இராமாயணக் காப்பியத்தில் சேர்த்தார். அதுவும், தக்கதொரு இணைவாகக் காப்பியத்திற்குப் பெருமையைச் சேர்த்தது.

காப்பியத்தை அரங்கேற்ற அவர் தேர்ந்தெடுத்தது... திருவரங்கத்தைத்தான். திருவரங்கத்தில் எழுந்தருளும் 'ஸ்ரீ ரெங்ஙநாயகித் தாயார் சமேத... ஸ்ரீ ரெங்கநாதப் பெருமாளின்' திருக் கோவிலில், தாயாரின் சன்னிதானத்தில் எதிர் புறம் இருக்கும் நான்கு கால் மண்டபத்தில்தான் அரங்கேற்றம் நடைபெறத் தீர்மானம் செய்யப்பட்டது.


மண்டபத்திற்கு எதிர் புறம் தாயார் சன்னிதானமும்... இடது புறம் ஒரு கற்பாறை மேடும்... அதனுள் ஒரு குகையும் இருந்தது. அரங்கேற்றத்திற்கான நாளில்... பண்டிதர்கள் புடை சூழ... தனது காப்பியத்தைப் பெருமாளின் சன்னதியிலும், தாயாரின் சன்னதியிலும் வைத்து வண்ங்கிய பின், சூழ்ந்திருக்கும் அறிஞர்கள் முன்பாகச் சமர்ப்பித்தார்.

காப்பியத்தின் மூலத்தைச் சற்றும் சிதைக்காமல்... அதை அழகாக மெருகேற்றி... அற்புதமான கவிதைகளால் கொர்த்து... பகவான் இராமவதாரத்தை அவர் அருளியதை... எல்லோரும் ரசித்துக் கேட்டார்கள். இறுதியாக அதை அங்கீகரிக்கும் கட்டம் வந்தது. அப்போது அறிஞர்கள்... அந்தக் காப்பியத்தை அவ்வாறே ஏற்றுக் கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை... ஆனால், வால்மீகி அருளிய காப்பியத்தில் இல்லாத ஒரு அங்கமான, நரஸிம்ம அவதாரக் காதையை மட்டும்  நீக்க வேண்டும்... என்று முடிவெடுத்தனர்.

காதையைக் கேட்ட பெரும்பாலான பக்தர்களும்... காப்பியத்தை இயற்றிய கம்ப நாட்டாழ்வாரும்... அடுத்து என்ன செய்வது என்று கலங்கி நின்றனர். காப்பிய அரங்கேற்றம் பூரணமாக வேண்டுமெனில், பகவான் நரஸிம்மரின் அவதாரத்தை நீக்க வேண்டும் என்ற நிலையில்... கண்களை முடி... தனது குல தெய்வமான 'நரஸிம்மரை' மனமுருக வேண்டினார்... மண்டபத்தைச் சூழ்ந்திருந்த அனைவரும் அடுத்து என்ன நடக்கப் போகிறது... என்று அமைதியாகக் காத்திருந்த வேளையில்... 'ஒரு சிங்கத்தின் கர்ஜனைக் குரல்' அந்தப் பகுதியையே அதிரச் செய்தது. 

அனைவரும் பதைப் பதைப்புடன் எழுந்திருந்து... கர்ஜனைச் சப்தம் கேட்ட  அந்தக் கற்பாறைக் குகையையே பார்த்துக் கொண்டிருந்தனர். அதிர்ந்து போன பண்டிதர்கள்... நரஸிம்மப் பெருமானின் கர்ஜனைதான் அந்தக் குகையிலிருந்து எழுந்தது... என்பதை உணர்ந்து... கம்பநாட்டாழ்வார் சமர்ப்பித்த காதையை முழுமையாக ஏற்றுக் கொண்டு... அதற்குக் 'கம்பராமாயணம்' என்ற பெயரையும்... அதை வடித்த கம்பருக்கு, ;கவிச் சக்கரவர்த்தி' என்ற பட்டத்தையும் சூட்டினர்.

இன்றும், அந்த மண்டபம்... 'கம்பர் மண்டபம்' என்றும்... அந்தக் கற்பாறைக் குகை... நரஸிங்கப் பெருமாளின் கர்ஜனை எழுந்தருளிய குகையாக... 'மேட்டழகிய சிங்கராக' அவர் எழுந்தருளியிருக்கிற ஆலயமாக... அனைத்து பக்தர்களாலும் வழிபடப்படுகிறது.

ஸாய்ராம்.

Tuesday, June 23, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 125. 'தெய்வத் துணையும்... செல்வச் செழிப்பும்...'





துன்பத்தில் உழலும் ஜீவர்களை 'ஜோதிடக் கலையின்' வழியே வழி நடத்தும் போது... பரிகாரங்களாக, 'இறைவனது திருவடியைச்' சரணடையச் செய்வது... ஜோதிடர்கள் வழக்கமாகக் கடைப்பிடிக்கும் வழிமுறைதான்.

ஆனால், அந்த தொடர் வழிபாட்டு முறைகளைக் கடைப் பிடித்தாலும்... தமது துன்பங்கள் தீரத் தாமதமாகும் போது, விரக்தியில் ஜீவர்கள் வெளிப்படுத்தும் ஒரு பொதுவான கருத்து, 'தெய்வத்தின் மீது உண்மையான பக்தியை வைப்பவர்களின் வாழ்வு துன்பத்தில் உழலுவதாகவும்... அதுவே உலக வாழ்வில் கருத்தாக இருப்பவர்களின் வாழ்வு செல்வச் செழிப்பில் திளைப்பதாகவும்... இருக்கிறதே... !' என்ற ஆதங்கமாகத்தான் இருக்கும்.

மேலோட்டமாகப் பார்த்தால், அது உண்மையைப் போல் தோற்றமளிக்கும். ஆனால், சற்று ஆழமாகச் சிந்தித்தால்தான் உண்மை நிலை புலப்படும். தெய்வத்தின் துணை... என்பது வேறு, செல்வச் செழிப்பின் நிலை... என்பது வேறு.

இந்த உலகில் ஜீவர்கள் தத்தமது 'பூர்வ கர்ம வினைகளின் விளைவுகளால்தான்' பிறப்பை அடைகிறார்கள். அந்த கர்ம வினைகளின் விளைவுகளை ஒட்டியே அவர்களது வாழ்வும் அமைகிறது. அதற்கேற்ப, வறுமையில் உழல்வதும்... செல்வநிலைகளில் திளைப்பதும்... அவரவர்களின் 'பூர்வ கர்ம வினைகளே'. ஆதலால், உலக மாந்தர்கள் அனைவருமே செல்வச் செழிப்பில் திளைப்துமில்லை... வறுமையில் உழல்வதுமில்லை. எனவே, செல்வச் செழிப்பு என்பது அனைவருக்கும் பொதுவானதல்ல.

ஆனால், தெய்வத்தின் துணை என்பது உலக மாந்தர்கள் அனைவருக்கும் பொதுவானது. ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் இருந்து அருள் செய்யும் இறைவன்... அந்த ஜீவனுக்கு மூலமான ஆத்மாவாக இருந்து அருள் புரிகிறான். அந்த ஆத்மா வழங்கும், ஞானமும்... பகுத்தறியும் தன்மையும்... முடிவெடுக்கும் வாய்ப்பும்... அனைவருக்குமே பொதுவானது. ஆதலால், இந்த உலகில் பிறக்கும் அனைத்து ஜீவர்களுக்கும் பொதுவான இந்த ஆத்மா என்ற தெய்வத்தின் துணையை எல்லோருமே அனுபவிக்கலாம். அதற்கு எந்தத் தடையுமில்லை.

இவ்வாறு, அனைவருக்கும் பொதுவான தெய்வத்தின் துணையை... அனைவருக்கும் பொதுவானதாக இல்லாத செல்வச் செழிப்புடன் ஒப்பிடுவது... முரணானதுதானே... !

ஸாய்ராம்.

Sunday, June 21, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 124. 'விதியும்... மதியும்'




பஞ்சபாண்டவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலப் பகுதியை சீராக்கி... அதை ஒரு பெரும் சாம்ராஜ்யமாக உருவாக்கி... அந்த சாம்ராஜ்யத்திற்கு 'தர்மரை' சக்கரவர்த்தியாகக் கொண்டு ஆட்சி செய்துவந்தனர். 

இவர்களின் அழைப்பை ஏற்று, இந்த ராஜ்யத்தை பார்க்க வந்த கௌரவர்கள்... இவர்களது சுக வாழ்வைக் கண்டு போறாமை அடைந்து... பாண்டவர்களின் ராஜ்யத்தை சகுனியின் துணையுடன் சூது செய்து கவரத் திட்டமிட்டனர். அதன் படி, விழா ஒன்றை காரணமாகக் காட்டி... அந்த விழாவிற்கு, பாணடவர்களை அழைக்கத் திட்டமிட்டனர்.

பாண்டவர்களை விழாவுக்கு வருமாறு... ஓலையொன்றை எழுதி, அதில் பாண்டவர்களின் ஒரு சித்தப்பாவான, 'திருதிராஷ்டர்' கையெழுத்திட்டு... அதை, இன்னொரு சித்தப்பாவான 'விதுரரின்' கைகளில் கொடுத்து... பாண்டவர்களிடம் சேர்க்குமாறு அனுப்பிவைத்தனர்... 'சகுனியின்' தலைமையிலான துரியோதன சகோதரர்கள்.

ஓலையக் கொண்டு வந்த விதுரர், பாண்டவ சகோதரர்களின் மூத்தவரான தருமரிடம் ஓலையைக் கொடுத்து, 'தர்மா, இந்த அழைப்பில் சூது இருப்பதாக உணர்கிறேன். ஆதலால், விழாவுக்கு வருவதை தவிர்த்து விடு'... என்று கூறுகிறார். விதுரரிடமிருந்து, ஓலையைப் பெற்றுக் கொண்ட தருமர், தனது தம்பிமார்களிடம், இது சம்பந்தமான ஆலோசனையைக் கேட்டார்.

சகாதேவனைத் தவிர்த்து, பீமன், அர்ஜுனன், நகுலன் முதலான முவரும்...'ஓலையைக் கொண்டு வந்த விதுரரே... அழைப்பை ஏற்க வேண்டாம் என்று கூறும் போது... நாம் அதில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை அண்ணா... !', என்று தங்களது அபிப்பிராயத்தைக் கூறினர். 

ஆனால், 'சாஸ்திரம் அறிந்த' சகாதேவனோ, தருமரிடம் சில கேள்விகளை முன் வைத்தான்,

சகாதேவன் : 'அண்ணா, ஓலையை எழுதியது யார்... ?'

தருமர் : 'சகுனியாக இருக்க வேண்டும்'

சகாதேவன் : ஓலையில் கையெழுத்திட்டிருப்பது யார்... ?'

தருமர் : 'சித்தப்பா திருதிராஷ்டர்'.

சகாதேவன் : 'ஓலையைக் கொண்டு வந்தவர் யார்... ?'

தருமர் : 'சித்தப்பா விதுரர்'

சகாதேவன் : 'ஓலையை எழுதிய சகுனியோ... கையெழுத்திட்ட திருதிராஷ்டரோ... கொண்டு வந்த விதுரரோ... காரணமல்ல, அண்ணா, விதிதான் காரணம். விதி நம்மை அழைக்கிறது, அண்ணா... அதற்கேற்ப முடிவு எடுங்கள்.. !'
 ... என்றான்.

தருமர், சகாதேவனின் இந்த விளக்கத்தை முழுமையாகக் கேட்டுக் கொண்டு விழாவிற்குச் செல்லத் தீர்மானித்தார். ஏனைய, மூன்று சகோதரர்களும், 'இவ்வளவையும் தெரிந்து கொண்டு... நாம், அந்த விழாவிற்குச் செல்வதற்கான அவசியம்தான் என்ன... அண்ணா... !' என்று கேட்டனர். 

அதற்குத் தருமர், 'ஓலையை எழுதியது சகுனியாக இருக்கலாம். ஆனால், அதில் உள்ள சூட்சுமங்களை அறியாமலா திருதிராஷ்டர் கையெழுத்திட்டிருப்பார்... ? நம்மை விழாவிற்கு வர வேண்டாம்... என்று சொல்லும் விதுரர், தனக்குண்டான கடமையை நிறைவேற்ற... அழைப்பிற்கான ஓலையைக் கொண்டு வந்து நம்மிடம் கொடுத்திருக்கிறாரே. நாம் மட்டும் எப்படி... இந்த அழைப்பை ஏற்காமல், மறுக்க முடியும்... ?' என்று கூறினார்.

இதுதான் விதியின் வலிமை. இதை விதியென்று அறிந்து சொன்ன சகாதேவனுக்கோ... அதை உணர்ந்துகொண்ட தருமருக்கோ... இது சம்பந்தமாக, பகவான் கிருஷ்ணரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்... என்ற மதியினை, மறக்க வைத்ததும் விதிதானே... !.

ஸாய்ராம்.

ஆயிரம் கரங்கள் நீட்டி...





ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி !

அருள் பொங்கும் முகத்தைக் காட்டி, இருள் நீக்கம் தந்தாய் போற்றி !

தாயினும் பரிந்து சாலச் சகரை அணைப்பாய் போற்றி !

தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம், துணைக்கரம் கொடுப்பாய் போற்றி !

தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி !

தூரத்தே நெருப்பை வைத்து, சாரத்தைத் தருவாய் போற்றி !

ஞாயிறே நலமே வாழ்க ! நாயகன் வடிவே போற்றி !

நானிலம் உள நாள் மட்டும், போற்றுவோம், போற்றி ! போற்றி !!

(கவிஞர் கண்ணதாஸன் அவர்களுக்கு நன்றி)

ஸாய்ராம்.

Friday, June 19, 2020

ஸாயீ, அப்போதும்... இப்போதும்... எப்போதும்... நடத்தும் லீலைகள்.




அண்ணார் திரு.V. ராஜ்மோகன் அவர்கள். அடியேனை 21 வருடங்களுக்கு முன்னர்...  ஸாயீ பந்துவாக... ஸாயீயின் திருவடிகளுக்குள் கொண்டு சேர்த்தவர். எங்களது எண்ணற்ற குரு தேடலுக்கான பயணங்களில் ஒன்றாகவே பயணித்திருக்கிறோம். அவருக்கு,1999 ன் ஆரம்பத்தில் ஸாயீ பகவான் அருளிய அனுபவத்தைத்தான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

அவரது வியாபார சம்பந்தமான சென்னைப் பயணத்தின் போது... தங்கியிருந்த விடுதியிலிருந்து ஆட்டோவில்... அவரது வழக்கறிஞரைப் பார்க்கச் சென்றார். ஆட்டோவில் ஏறி அமர்ந்தபின்தான் தனக்கு இருபுறமும் 'ஸாயீ மகானின்' படங்கள் ஒட்டியிருப்பதைப் பார்த்தார். பாபாவைப் பற்றிய எந்த விவரங்களையும் அவர் அறிந்திராததால்... ஏதோ, அவர் இஸ்லாமிய அவுலியாக்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

ஆட்டோவிலிருந்து இறங்கி வழக்கறிஞரின் அலுவலகத்திற்குச் சென்ற போது... அவரது இருக்கைக்குப் பின்னால்... 'ஸாயீ மகானின்' திருவுருவப்படம் மாட்டியிருப்பதைப் பார்த்து... சற்று ஆச்சரியத்தில்தான் முழ்கிப் போனார். மீண்டும், இரண்டாவதுமுறையாக... அந்த அவுலியாவின் தரிசனம். அப்போதும், அவரைப் பற்றிய எந்த விவரணத்தையும் அறிந்து கொள்ளாமல்... தான் வந்த வேலையை முடித்துக் கொண்டு... கிளம்பினார்.

சாலைக்கு வந்ததும்... 'சார்... போகலாமா... ?' என்ற குரலைக் கேட்டு திரும்பிய போது... தான் வந்த அதே ஆட்டோ நிற்பதைப் பார்த்து மீண்டும் அதியத்தில் ஆழ்ந்தார். ஏனெனில் சென்னையில் சில மணி நேரத்திற்குள் ஒரே ஆட்டோவை மீண்டும் பார்ப்பது அரிதானால்தான். ஆட்டோவில் ஏறியபின்...சற்று ஆழ்ந்து அந்த அவுலியாவைப் பார்த்தார். இது ஒரே நாளில் நிகழ்ந்த மூன்றாவது தரிசனம்.

திருச்சிக்குத் திரும்பிய அடுத்தா நாள் காலையில், அலுவலக அறைக்கு வந்து... அன்றைய தினசரிப் பத்திரிக்கையைப் புரட்டிய போது... பெரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார், காரணம் நான்காவது முறையாக... அதே அவுலியாவின் தரிசனம். திருச்சியில், மணிகண்டத்திற்கு அருகில் முடிகண்டம் என்ற சிற்றுரில், 1998 ல் ஸ்தாபிக்கப்பட்ட 'ஸாயீ பகவானின்' திருக்கோவிலின் வருடப் பூர்த்தியின் அழைப்பிதழ்தான் அது.

இனிமேல் தாமதிக்கக் கூடாது, என்று நினைத்தவர், அந்த அவுலியாவை தரிசனம் செய்ய... பூஜை சாமான்களுடன் முடிகண்டத்திற்குக் கிளம்பி விட்டார். அங்கு சென்று, துவாரகமாயியில், ஸாயீயின் சித்திர ரூபத்திற்கு முன் வீழ்ந்து வணங்கிய போதுதான்... இவர்தான் என்னை ஈர்த்துக் கொண்ட... எனக்கேயான 'சத்குருநாதர்' என்பதை உணர்ந்து... ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிப் போனார்.

ஆம், ஸாயீயின் லீலைகள், அப்பொதும்... இப்போதும்... எப்போதும்... தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஸாய்ராம்.

அதிருஷ்டமும்... துரதிருஷ்டமும்...





அதிருஷ்டமும்... துரதிருஷ்டமும்... சுண்டி விடும் ஒரு நாணயத்தைப் போன்றதுதான். 

தலை விழுவது அதிர்ஷ்டம் என்று நினைக்கும் போது... பூ விழுந்தவர் வெற்றி பெருவதும். பூ விழுந்தவர் துரதிர்ஷ்டம் என்று நினைக்கும் போது... தலை விழுந்தவர் தோற்றுப் போவதும்... போலத்தான், அதிருஷ்டம் மற்றும் துரதிருஷ்டத்தின் நிலைகள்.

நாம் அதிருஷ்டம் என்று நினைப்பது துரதிருஷ்டமாக மாறிப் போவதும்... துரதிருஷ்டம் என்று நாம் நினைப்பது அதிருஷ்டமாக மாறிவிடுவதையும்... ஒரு மேற்கத்தியக் கதை சுவாரஸ்யமாக விளக்குகிறது...

'அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்களை... அறுவடை செய்யப் போகும் போது, அந்த வயல் பரப்புகளுக்குள்... ஒரு குதிரைக் கூட்டமே வந்து மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டு... தலையில் கையை வைத்துக் கொண்டு இடிந்து போய் அமர்ந்து விட்டார் ஒரு விவசாயி.

ஊரார் அனைவருமே... 'என்ன... துரதிருஷ்டம் ! அறுவடை நேரத்தில், இவருக்கு மட்டும் வந்த சோதனை... !' என்று கவலையுடன் பேசிக் கொண்டனர். ஆனால், அந்த விவசாயியின் மகனோ... இந்தக் காட்சியை வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தான். அவன் தங்களது வயலுக்கு... உடனே ஒரு தற்காலிக வேலியை அமைத்துக் குதிரைகளைச் சிறைப்படுத்தினான். 

நல்ல வாளிப்பான குதிரைகளாக இருந்ததால்... அதை நன்கு பயிற்சிக்கு உட்படுத்தினான். ஒன்றுடன் ஒன்று இனப்பெருக்கமும் செய்து... ஒரு குதிரைப் பண்ணையையே உருவாக்கிவிட்டான். இவனது குதிரைகள் நல்ல விலைக்கு விற்பனையானது. இப்போது, ஊரார் அனைவருமே... 'பாருங்கள்... இவர்களுக்கு வந்த அதிருஷ்டத்தை... ! பயிரிட்டு கிடைக்கும் வருமானத்தை விட பன்மடங்கு வருமானத்தை ஈட்டி விட்டார்கள்... !' என்று பெருமையுடன் பேசிக் கொண்டனர்.

ஒரு நாள், மகன் ஒரு குதிரையை பழக்கும் போது, தவறி கீழே விழுந்து காலை முறித்துக் கொண்டான். உடனே ஊரார்கள், 'பாருங்கள்... அவர்களின் துரதிருஷ்டத்தை... ! பணம் ஈட்டித் தந்த குதிரைகளே... இப்போது அவனது காலை உடைத்துப் படுக்க வைத்து விட்டதே... !' என்று கவலையுடன் பேசிக் கொண்டனர்.

அப்போது, அவர்களின் நாட்டின் மீதி... அந்நிய நாட்டுப் படையெடுப்பு ஏற்பட்டதால்.. வீட்டுக்கு ஒருவர் கட்டாயமாகப் படையில் சேர்க்கப்பட்டனர். அந்த ஊரில் இருந்த அனைத்து இளஞர்களுமே போருக்குச் சென்று விட... கால் உடைந்ததனால், இவன் மட்டும் ஊரிலே இருக்க நேரிட்டது. இப்போது ஊரார்கள், ' பார்த்தீர்களா... ! கால் உடைந்ததே... இவனுக்கு அதிருஷ்டமாகப் போய் விட்டது. இல்லையென்றால் இவனும் போருக்குப் போக வேண்டியிருந்திருக்குமே... ' என்று வியப்புடன் பேசிக் கொண்டார்கள்.'

இவ்வாறாக... இந்தக் கதை அதிருஷ்டத்தையும்... துரதிருஷ்டத்தையும்... மாறி மாறி அனுபவிக்கும் நிலையை விவரித்துக் கொண்டே போகும்...

நமது பார்வையில்... இவையிரண்டையும் ஒரே மனப்பான்மையில் எதிர்கொள்வதுதான் சிறந்த முறையாக இருக்கும்.

ஸாய்ராம்.

Thursday, June 18, 2020

சொற்களின் வல்லமை...




நாம் வெளிப்படுத்தும் சொற்கள்... எவ்வளவு வல்லமையானது, என்பதை விளக்க... எங்களது குருநாதர் வழங்கிய ஒரு சிறிய கதை...

'ஒருவனது தலையைச் சுற்றிய படியே விஷப் பூச்சி ஒன்று பறந்து கொண்டிருந்தது. கண்களையும், தனது கைகளால் காதுகளையும் பொத்திக் கொண்டு... அமைதியாக அமர்ந்திருந்தவன்... விஷப் பூச்சியின் ரீங்காரம் சற்று ஓய்ந்ததும்... 'அப்பாடா... !' என்று வாயைத் திறந்தான். அதுவரை காத்திருந்த அந்த விஷப் பூச்சி... சட்டென்று அவனது வாயில் புகுந்து கொண்டது.'

இந்தக் கதையைக் கூறிய குருநாதர்... 'அது போலத்தான் அப்பா... ! ஆரம்பத்திலிருந்து பார்த்துப் பார்த்துப் பழகி விட்டு... இறுதியில் கோபமாக ஒரு சொல்லை வெளியிட்டு விட்டால்... அந்தச் சொல்லே... அந்த மொத்தப் பழக்கத்திற்கும் எமனாகிப் போய்விடும். நாம் ஒருவரை விட்டு விலகும் போது உதிர்க்கும் இறுதிச் சொற்கள்தான்... அடுத்து சந்திப்புக்கு... ஆரம்பமாக இருக்கும். ஆதலால், ஆரம்பத்திலிருந்து எச்சரிக்கையுடன் பழகுவதைப் போலவே... விலகும் தருவாயிலும் எச்சரிக்கையுடன் பழகி... விலக வேண்டும்... !' என்று விளக்கம் அளித்தார்.

ஆம், பகைமை பாராட்டாமல் விலகும் யுக்திக்குப் பெயர்தான்... 'ஞானம்'.

குருநாதரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.

ஸாய்ராம்.

Wednesday, June 17, 2020

பெருமையும்... சிறுமையும்...



எது பெருமை... ? எது சிறுமை... ?

இதற்கான விளக்கத்தை... ஒரு சிறு அனுபவக் கதை மூலம், விளக்கினார்... எங்கள் குருநாதர்...

'ஒரு பயிலவான்... நிறைந்த சபை நடுவே... தனது எடையின் அளவை விட 6 மடங்கு எடையைத் தலைக்கு மேல் தூக்கி நிறுத்த... சபையே எழுந்து கைத் தட்டி ஆரவாரம் செய்தது.

மாலைகளும்... பரிசுகளும்... பாராட்டுகளும்... பட்டயமும் கிடைத்தன. அந்த மகிழ்ச்சியுடன், வீட்டுக்குத் திரும்பும் போது... வீட்டுக்குத் தேவையான மளிகை மற்றும் காய்கறிகளை இரண்டு கைகளிலும்... இரண்டு பைகள் நிறைய வாங்கிச் சுமந்து கொண்டு... தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தான்.

வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மனைவி... ஏதும் பாரதது போல தலையைத் திருப்பிக் கொண்டு வீட்டிற்கு உள்ளே சென்றாள். அவமானத்தால் மனமுடைந்த நிலையில்... உள்ளே சென்று இரண்டு பைகளையும் இறக்கி வைத்தான்.

தன்னை விட 6 மடங்கு எடையுள்ள பாரத்தை... சபைக்கு முன்... தலைக்கு மேலே தூக்க முடிந்தவனுக்கு,  தன்னை விட 6 மடங்கு எடை கொண்ட வீட்டுக்கு உண்டான பொருள்கள் அடங்கிய பைகளை... பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஈடு கொடுத்துத் தூக்க முடியாத நிலை ஏற்பட்டது.

முந்தையது சபை... பிந்தையது குடும்பம்.

முந்தையதில் பாராட்டு... பிந்தையதில்... அவமானம்.

முந்தையது பெருமை... பிந்தையது கடமை.'

குருநாதரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.

ஸாய்ராம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 123. 'அறிவாளி... புத்திசாலி... ஞானவான்' பகுதி - 3.




அறிவுக்கும்... புத்திக்கும்... ஞானத்திற்கும்... மூலமானவராக, ஜோதிடக் கலையில்... 'புத பகவான்' அங்கம் வகிக்கிறார்.

இந்த ஜீவனுக்கு மூலமாக... சத்து-சித்து-பரமானந்த சோரூபியான 'ஆத்மாவே' இருக்கிறார். அதை அறியாத ஜீவன், அறிவாகவும்... புத்தியாகவும்... ஞானமாகவும்... தனக்குள்ளே இருக்கும், அந்த பூரணத்தைப் புறத்தே தேடுவதைத்தான்... அறிவுக்கான தேடுதல் என்றும், ஞானத்திற்கான தேடுதல் என்றும் வகைப்படுத்திக் கொள்கிறது.

இந்த அறியாமைக்கு மூல காரணமாக அமைவது ஜீவர்களின் 'கர்ம வினைகள்தான்'. அந்த 'அறியாமைக்குள்' இருந்து தவிக்கும் ஜீவனால், கண்ணுக்குத் தெரியும் புற உலகின் மீது, தனக்கு இருக்கும் நம்பிக்கை, கண்ணுக்குத் தெரியாத அக உலகத்தின் மீது இருப்பதில்லை.

ஒருவரது ஜாதகத்தில் அமையும் 'சூரிய-புத பகவான்களின் இணைவு' புற அறிவுத் திறமையயியும்... 'புத-சந்திர பகவான்களின் இணைவு' புத்திசாலித்தனத்தையும்... வெளிப்படுத்துகிறது. இவை இரண்டுமே, கர்ம வினைகளின் கட்டுக்குட்பட்டதான தேடுதல்களாகவும்... அடைதல்களாகவும்... மட்டுமே இருக்கும்.

ஆனால், ஒருவரது ஜாதகத்தில் 'குரு-புத பகவான்களின்' இணைவு... கட்டுக்குட்படாத... அக உலகத் தேடுதல்களுக்கான கதவுகளைத் திறந்து விடும். அந்த எல்லையில்லாத... என்றும் மாறாத... சுய ஒளிப்பிரகாசத்தில் கொண்டு சேர்க்கும்.

தன்னை அறிந்தவன்... அனைத்தையும் அறிந்தவனாகிறான்... என்ற பூரணத்துவத்தில் கொண்டு சேர்க்கும் வல்லமை, இந்த 'குரு-புத பகவான்களின் இணைவில் அல்லது தொடர்பில்' ஒருவருக்கு ஏற்படுகிறது.

ஆகவே, 'புத-சூரிய பகவான்களின் இணைவு'... அறிவையும், 'புத-சந்திர பகவான்களின் இணைவு'... புத்திசாலித்தனத்தையும், 'புத-குரு பகவான்களின் இணைவு... ஞானத்தின் கருவூலத்தையும் திறக்கின்றன.... என்பது மிகையானதல்ல.

ஸாய்ராம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 122. 'அறிவாளி... புத்திசாலி... ஞானவான்' பகுதி - 2.




அறிவுக்கும்... புத்திக்கும்... ஞானத்திற்கும்... மூலமானவராக, ஜோதிடக் கலையில் 'புத பகவான்' அருள் செய்கிறார்.

எல்லையற்ற... என்றும் மாறாத... ஞானப் பூரணமான 'ஆத்மாவை' தனது மூலமாகக் கொண்ட... ஜீவன், தனது கர்ம வினைக் கட்டுக்களால் கட்டுண்டு... புறத்தே ஞானத்தைத் தேடும் ஜீவனாக வாழ்கிறது. அந்தத் தேடுதலையும்... அது அடையும் ஞானத்தின் அனுபவங்களையும்... அந்த ஜீவனின் ஜாதகத்தில் அமையும் 'புத பகவான்'... தனது நிலைகளின் மூலமாக வெளிப்படுத்துகிறார்.

அறிந்து கொள்ளும் அறிவு என்பது வேறு. அறிந்து கொண்டவற்றைத் தக்க சமயத்தில் பயன்படுத்துவது என்பது வேறு. முந்தையது அறிவாகிறது... பிந்தையது புத்திசாலித்தனமாகிறது.

வடையை எடுத்துக் கொள்வதற்கான அறிவு ஒருபுறம்... அதைக் கால்களுக்கு இடையே காப்பாற்றி வைத்துக் கொள்ளத் தெரியாத புத்திசாலித்தனம் மறுபுறம். 
வடையை எடுத்துக் கொள்ளாத அறிவு ஒரு புறம்... அதை புத்திசாலித்தனமாகக் கவர்வது மறுபுறம். இதைத்தான்... காகம்-நரியின் கதை உணர்த்துகிறது.

'சூரிய பகவானுடன்' இணைந்த 'புத பகவான்' அறிவாளியாக... நிபுணணாக ஒருவரை மாற்றினாலும்... எந்த அறிவையும், நுட்பத்தோடி 'கிரகித்துக் கொள்ளும்'... 'சந்திர பகவானின்'  துணை... அந்த 'புத பகவானுக்குத்' தேவைப்படுகிறது.

'சந்திர பகவான்' தான் கிரகித்துக் கொள்ளும் அறிவைத் தக்க சமயத்தில் 'புத பகவானுக்கு' உணர்த்தி... புத்திசாலித்தனமாக செயல்படுவதை உறுதி செய்வதால்... ஒருவரின் ஜாதகத்தில்... புத - சந்திர பகவான்களின் இணைவு' ஜாதகரை புத்திசாலி என்று உணர்த்துகிறது.

தொடர்ந்து, ஞானத்தின் வழியேயான 'புத பகவானின்' பயணத்தில் பங்கு கொள்வோம்... இறையருளோடு...

ஸாய்ராம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 121. 'அறிவாளி... புத்திசாலி... ஞானவான்' பகுதி - 1.





அறிவு... புத்தி... ஞானம்... என்ற இந்த மூன்று நிலைகளுக்கும்... அடிப்படையாக இருந்து அருளும் கிரகமாக 'புத பகவான்' அமைகிறார்.

ஒவ்வொரு 'ஜீவனுக்கும்', மூலமாக... சாட்சியாக...  இருந்து அருள் செய்யும் பரம்பொருளான 'ஆத்மா', 'ஞானத்தின் பூரண வடிவமாக' இருக்கிறது. ஆனால், தற்போதைய பிறவிக்கான, தனது 'கர்ம வினைகளைச்' சுமந்து வந்திருக்கும் ஜீவனோ... தனக்குள் இருந்து அருள் செய்யும் பூரணத்தை அறியாமல்... தனது விதி வசத்தால்... தனக்கான பூரணத்துவத்தை வெளியிலேயே தேடுகிறது.

வெளியில் தேடும் போது... இந்தப் பிறவிக்குண்டான 'ஞானம்' முதலில் 'அறிவின்' ரூபத்தை எடுக்கிறது. அது, 'இந்தப் பிறவிக்கு உண்டான அறிவாக' அமைகிறது. 

இந்த அறிவைக் குறிக்கும் கிரகமாக... ஜோதிடக் கலையில், 'புத பகவான்' அமைகிறார். அவரின் அமைவு ஸ்திரமாகவும்... சுப நிலையிலும்... நல்ல ஆதிபத்தியத்தைப் பெற்றும்... அமையும் போது... அவருக்கான இந்தப் பிறவியின் அறிவுக் கருவூலம் திறக்கப்படுகிறது.

அவருடன், பிரபஞ்ச நாயகனான 'சூரிய பகவானின்' இணைவு ஏற்படும் போது... இவ்வுலகில் ஒரு சிறந்த அறிவாளியாக... அங்கீகாரம் பெற்று... அவரால் வலம் வர முடிகிறது.

அதனால்தான், 'சூரிய - புத பகவான்களின் இணைவை'... 'நிபுண யோகம்' என்று குறிப்பிடுகிறோம்.

தொடர்ந்து, புத்திசாலித்தனத்தையும்... ஞானத்தையும் ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

Tuesday, June 16, 2020

பணம் படுத்தும் பாடு...



எங்களது குருநாதர், திடீரென... 'பணம் என்பது முக்கியமா... அப்பா !' என்று ஒரு கேள்வியை முன் வைத்தார். நாங்கள், பவ்யமாக... 'தேவைக்கு ஏற்ப, அவசியமான அளவுக்கு இருப்பது போதுமே... சுவாமி..' என்றோம்.

 'என்ன... பணத்தைப் பற்றி இவ்வாறு சொல்லி விட்டாய்... !' என்று... ஒரு சுவாரஸ்யமான கதையொன்றை சொல்ல ஆரம்பித்தார்...

'ஒருவன் இறக்கும் தருவாயில், படுக்கையில் படுத்திருந்தான். அவனுக்கு துளசித் தீர்த்தம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவனது வாய்க்கருகில், இலை வடிவில் 'துளசித் தாயார்' காத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது, அருகிலிருக்கும் கோவிலில், பிரதானமான தெய்வம் பக்தர்களின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தது. ஆனால், ஒருவரையும் காணவில்லை. அவருக்கு பூஜையும்... நிவேதனமும் சமர்ப்பித்து... நிவேதனத்தின் ஒரு பகுதி பட்சிகளுக்காக வைக்கப்பட்ட போதும்... கரைவது கூட (காகங்கள்) வந்து அன்னத்தை எடுக்கவில்லை. ஒரு சிதறுகாய் உடைக்க வைத்தும்... அதைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளக்கூட... எவரும் வராத நிலையில்... கோபத்தின் உச்சிக்குச் சென்ற தெய்வம்... தனது காலால், தனக்கு முன் இருக்கும் உண்டியலை எட்டி உதைத்தது.

உண்டியல் படிகளில் உருண்டு ஓடி... அதன் மூடி திறந்து... கீழே, சில்லறைகள் சிதறி உருண்டு ஓடின. படுக்கையில் இறக்கும் தருவாயில் படுத்திருந்தவன்... சடாரென எழுந்து, 'என்ன... காசு விழும் சத்தம் கேட்கிறதே... !' என்றானாம். அதைக் கேட்ட துளசித் தாயார் விக்கித்து நின்றாளாம்... !'

... என்று முடித்தார். 

அனவரையும் சிரிக்க வைத்து... பணத்தின் தன்மை... இன்று, எந்த நிலையில் இருக்கிறது...  என்பதை, குருநாதர் உணரவைத்தார்.

குருநாதரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.

ஸாய்ராம்.


Monday, June 15, 2020

திருக்குறள் உணர்த்தும் ஞானம் - பகுதி 7. 'பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்.





'பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.'     (அதிகாரம் : 'கடவுள் வாழ்த்து' : குறல் எண்-10)

'இறைவனின் மீது பக்தி கொள்பவர்கள், இந்தப் பிறவியைக் கடந்து அவரது திருவடிகளை அடைகிறார்கள்.'... என்பதுதான் இந்தக் குறளுக்கு பொதுவாக வழங்கும் கருத்தாக அமைகிறது.

இந்தக் குறளைச் சற்று ஆய்ந்தால், 'பிறவியை'... 'பெருங் கடலுக்கு' ஒப்பாகக் கூறுவது புலனாகும்.

நாயன்மார்களும்... ஆழ்வாராதிகளும், 'கோடிக்கணக்கான பிறவியைக் கடந்தே ஒரு ஜீவன் கடைத் தேற்றம் பெறுகிறது' என்பதை வலியுருத்தி இருக்கிறார்கள். அந்தக் கோடிக்கணக்கான பிறவிகளைத்தான்... பெருங் கடல், என்பதாக வருணிக்கிறார்.

தனது முந்தைய பிறவியின் 'கர்ம வினைகளைச்' சுமந்து கொண்டு... இந்தப் பிறவியை அடையும் ஜீவன், அந்தக் 'கர்மவினைகள்'... விளைவிக்கும் விளைவுகளையே... ஒவ்வொன்றாக அனுபவிக்கிறது. அந்த வினைகளுக்கு இப் பிறவியில் ஜீவன் வெளிப்படுத்தும் வெளிப்பாடுகளுக்கு ஏற்ப... மீண்டும் பிறவியை அடைகிறது. இவ்வாறு, ஜீவன் தனது பிறவிகளை நீட்டித்துக் கொண்டே போகிறது. இதைத்தான்... பெரும் கடல், என்பதற்கு ஒப்பாகக் கூறுகிறார்.

ஒரு கடலை நீந்திக் கடப்பது என்பது... முடியாத காரியம். அதிலும் ஒரு பெரும் கடல் என்ற அகண்ட சமுத்திரத்தை நீந்திக் கடப்பது என்பது முடியவே முடியாத காரியமாகிவிடும். ஆனால், அந்தக் கடலில் வீழ்ந்த ஒருவன், அதை நீந்தித்தான் கடக்க வேண்டுமெனில், முயற்சித்து... முயற்சித்து... கடக்க முடியாமல் மூழ்கிப் போவதற்கான வாய்ப்புதான் உருவாகும்.

அதைத்தான்... மீண்டும் மீண்டும் பிறந்து, அந்தப் பிறவித் தொடரிலிருந்து மீள முடியாது... தத்தளிக்கும் ஜீவனுக்கு ஒப்பாகக் கூறுகிறார். பெருங்கடலை நீந்திக் கட்ப்பதைப் போல, இந்தப் பிறவிக் கடலையும்... கர்ம வினைகளை, ஒவ்வொன்றாக அனுபவித்துத்தான் கடந்து போக வேண்டும். அதைத் தவிர வேறு வழியும் இல்லை.

ஜீவனுக்குள்ளே இருந்து அருள் செய்யும்... அந்த இறைவன் என்ற பேரருள் கருணை... கடலில் நீந்தித் தத்தளிக்கும் ஜீவனின் பிரார்த்தனைக்கு இரங்கி... ஒரு ஓடமாக வந்து காப்பதைப் போல, இந்தப் பிறவிப் பெருங்கடலில் தத்தளித்துத் தவிக்கும்... ஜீவனின் பிரார்த்தனைக்கும் இரங்கி... இறைவன், இந்தப் பிறவிப் பெருங்கடலில் இருந்து ஜீவனை மீட்டருள்கிறார்.

பிறவியைக் கடந்து போகும் போது எதிர்கொள்ளும் துன்பங்களையும்... அதிலிருந்து மீள்வதற்கான நுட்பத்தையும்... இதை விட எளிதாக எவரால்தான் விளக்கிட முடியும்... !

ஸாய்ராம்.

Saturday, June 13, 2020

பாமாலை - சிவ சக்தித் தாயாரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.





ஆதியும் அந்தமும் இல்லா ஜோதியே,
அருணையில் அசலமாய் அமர்பவள் நீயே,
அடி முடி அறிந்திடா அடியவர் மனதினில்,
அருந்தவ தபசியாய் உறைபவள் நீயே... !                                 (ஆதியும்.... )

வினைகளின் சுமையை சுமந்திடும் அடியவர்,
தொடர்ந்திடும் பிறவியின் தொடர் அறுப்பாயே,
இருளினில் தனிமையில் தவிப்பவர் மனதினில்,
உள்ளொளியாக உறைபவள் நீயே... !                                         (ஆதியும்... )

புலன் வழியாக புறம் செல்லும் மனதினை,
அகத்தினில் இருந்து இழுப்பவள் நீயே,
மனத்தினில் தோன்றும் வினைகளின் விளைவை,
முளைவிடும் முன்னே முறிப்பவள் நீயே... !                           (ஆதியும்... )

கடமைகள் யாவும் கடந்திங்கு போக,
கருவியாய் என்னை மாற்றிடு தாயே,
தாமரை போலே நிரினில் வாழும்,
நிலையதை எனக்கு அருளிடு நீயே... !                                        (ஆதியும்... )

உள்ளொளி காட்டி உணர்வினை ஊட்டி,
இருமையை அழிக்கும் அருள் பெரும் சுடரே,
நானென்பதழிந்து தான் என்பதாகி,
தன்னுள் நிலைக்கும் நிலை அருள்வாயே... !                           (ஆதியும்... )

(தாயாரின் அருளினால்... 28.8.2019 அன்று உருவான பாடல்... )

ஸாய்ராம்.

தேடுதலின் தூரமும்... தீர்வின் அருகாமையும்...




நமது தேடுதல்... நம்மைத் தொலைவிற்கு இட்டுச் செல்கிறது. ஆனால், அதற்கானத் தீர்வோ... நமக்கு வெகு அருகாமையிலேயே இருக்கிறது.

இதுதான், மதுர கவி ஆழ்வாரின் வாழ்விலும் நிகழ்ந்தது. வேதங்களையும்... வேதங்களின் சிகரமான வேதாந்தங்களையும்... கற்றறிந்தாலும், இந்த ஜீவன் யார்... ? அதன் பிறப்பின்  நோக்கம்தான் என்ன... ? அது எங்கிருந்து தோன்றுகிறது... ? எதில் நிலை கொள்கிறது... ? இறுதியில் எங்கு போய் சேர்கிறது... ? என்றத் தேடல், அவரை வடதிசையை நோக்கிப் பயணிக்க வைத்தது.

வடக்கில், அயோத்திவரை சென்ற அவரை... 'ஒரு உள்ளார்ந்த ஈர்ப்பு' தென்திசையை நோக்கி இழுத்தது. அந்த உள்ளார்ந்த ஈர்ப்பின் வழிகாட்டுதல்... தனது பிறப்பிடமான 'திருக்கோளூருக்கு' அருகிலேயே அமைந்த 'திருக்குருகூருக்கு' அவரை அழைத்து வந்து சேர்ந்தது.

ஆச்சர்யத்திலும் ஆச்சரியமாக... ஒரு புளிய மரத்தின் கீழே... வெகு கால யோக தவத்தில் மூழ்கியிருக்கும்... தனது 'சத்குருவான'... 'நம்மாழ்வாரின்' திருவடி தரிசனமும் கிடைத்தது. தனது தேடல்கள் எல்லாம்... ஒரு முடிவுக்கு வந்தது போல... இவர் மனம் அமைதியில் ஆழ்ந்தது. 

அவரின் முன்பாக... அமைதியுடன் அமர்ந்திருந்த மதுர கவியாழ்வாரின் மனம்... மெல்ல மெல்ல ஆனந்தத்திலும் திளைக்க ஆரம்பித்தது. தனது தேடல்களுக்கு முடிவாகவும்... தனது வாழ்விற்கு விடிவாகவும்... தனக்கு முன்னிருக்கும் சத்குருவின் கடைக் கண் பார்வைக்காகவும்... காத்திருந்தார் மதுர கவியார்.

ஆச்சார்யாரின் திருவுள்ளம் கனிந்தது. மெல்லக் கண் விழித்த 'நாமாழ்வார்'... தன்னால் ஈர்க்கப்பட்ட... தனது அத்யந்த சிஷ்யனை அன்புடன் நோக்கி... அருளாசி வழங்கினார். 

அவரின் அருளினால் ஈர்க்கப்பட்ட மதுர கவியார்... நெடுநாள் தனது மனத்தை அரித்துக் கொண்டிருக்கும் கேள்விகளின் சாரத்தை ஒரு 'விடுகதை வினாவாக' ஆச்சார்யாரின் முன் வைத்தார்.

கேள்வி : 'செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்... ?'

அழிந்து கொண்டிருக்கும்... நிலையற்ற... இந்த உடலுக்குள்ளே இருக்கும் ஜீவன்... எதை மூலமாகக் கொண்டு... இந்த உடலில் வாழ்ந்து கொண்டிருக்கிறது... ? என்பதுதான் மதுர கவியாரின் கேள்வி.

ஆச்சார்யாரின் பதில் : 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்... !'

நிலையற்ற உடலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன்... அதன் பாப புண்ணியங்களான... 'கர்ம வினைகளை' மூலமாகக் கொண்டு,,, ஜீவித்துக் கொண்டிருக்கிறது... என்பதுதான், நம்மாழ்வாரின் பதிலாக அமைந்தது.

தனது தேடுதல்களெல்லாம்... ஒரு முடிவுக்கு வந்த சந்தோஷத்தில்... அஷ்டபாவங்களும் தனது மேனியைத் தீண்ட... கண்களில் நீர்மழ்க...ஆச்சார்யாரின் திருவடிகளில் சரணாகதியடைந்தார்... மதுர கவியாழ்வார்.

ஒற்றை வரி பதிலில் பொதிந்திருக்கும் அருள் ஞானம்... மதுரகவியாரின் உள்ளத்தில் ஞான விளக்கை ஏற்றியது. 

பாப புண்ணியங்கள் என்ற கர்மவினைகளைத் தீனியாக உண்ணாமல்... என்றும் நிலைத்திருக்கும்... ஜீவனுக்கு மூலமாகிய 'பரமாத்ம சொரூபத்தை' தீனியாக்கினால்... ஜீவன் அழிவற்ற பரமாத்ம சொரூபத்தில்... என்றும் அழிவின்றி கலந்து போகும்... என்ற 'அருள் ஞான விளக்குதான்' அது.

ஆம், தேடுதலின் முடிவு... தூரத்தில் இல்லை.

ஸாய்ராம்.

Friday, June 12, 2020

எது விருந்து... ?




இரண்டு விதமான விருந்துகள் இருக்கின்றன...

முதல் விருந்து... பொதுவானது. எல்லோருக்குமான விருந்து. திருமணம், விழாக்கள் போன்ற காலங்களில்... அனைவரும் பொதுவாக அமர்ந்து உண்ணும் விருந்து. 

இந்த விருந்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான பதார்த்தங்கள் பரிமாறப்படும். அனைத்து இலைகளுக்கும் பறிமாறுதல் முடிந்தபின்... விருந்தினர்கள் அனைவரும் வரிசையாக அமர்வார்கள். நாம் எந்த இலையில் உட்காரப் போகிறோம் என்பது கூட நமக்குத் தெரியாது. நமக்கு அருகில் இருப்பவர்கள் யாரென்றும் தெரியாது. எது வேண்டுமானாலும் கேட்டு வாங்கி உண்ணலாம்.

இரண்டாவது விருந்து... தனியானது. நமக்கு மட்டுமே அளிக்கப்படும் விருந்து. நமக்கு மிக வேண்டியவரின் அழைப்பின் பேரில்... அவரது வீட்டிற்கே சென்று விருந்தேற்பது. இதில் நமக்கு விருந்தளிப்பவரும்... அவரது குடும்பத்தினரும்... நம்மை வாசலிலேயே வந்து வரவேற்பார்கள். 

நம்மை அமர வைத்து, சிறிது நேரம் அளவளாவியதற்குப் பின்னர்... மரியாதையுடன் அழைத்துச் சென்று... நமக்கென தயார் செய்யப்பட்ட பிரத்தியோகமான பதார்த்தங்கள் ஒவ்வொன்றின் சுவையையும் நமக்குப் புரிய வைத்துப் பறிமாறுவார்கள். அனைவருக்கு முன்னும்... நம்மால் கேட்டு வாங்கி சாபிட முடியாது. சற்றுக் கூச்சத்துடன்தான் உணவை சுவைக்க முடியும். உண்ட பின்னர்... பழம் மற்றும் வெற்றிலை மடித்துக் கொடுத்து விருந்தைப் பூர்த்தி செய்து... வாசல் வரை வந்து வழியனுப்புவார்கள்.

முதல் விருந்தில்... அனைவருக்கும் பொதுவான விருந்தில்... பொது மனிதர்களுள் ஒருவராக... நாம் ஏற்றுக் கொண்ட விருந்து. இதில் தனிப்பட்ட மரியாதைக்கும் இடம் இல்லை... எந்த விதமான சொல் கடனும் இல்லை.

இரண்டாவது விருந்தில்... நமக்கென பிரத்தியோகமாக வழங்கப்பட்ட மரியாதையும் உண்டு... அதே நேரத்தில், 'நாங்கள் அவருக்கு ஒரு சிறப்பான விருந்தை அளித்தோம்... !' என்றும், 'அவரைப் பார்த்துப் பார்த்துக் கவனித்தோம்...!' என்ற... சொல் கடனும் உண்டு.

முதலாவது விருந்து... கர்ம யோகமாகிறது.

இரண்டாவது விருந்து... கர்ம வினைகளில் சேருகிறது.

ஸாய்ராம்.

கிடைப்பது, கிடைத்தே தீரும்.




திருமணத்திற்குச் சென்றிருந்தவன்... திருமணம் முடிந்த பிறகு, முதல் ஆளாக பந்தி பறிமாறும் கூடத்திற்குச் சென்றான். பந்தி பறிமாறுபவரிடம், எங்கிருந்து பந்தி ஆரம்பிக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டு... உள் வாசலுக்கு அருகிலிருந்து ஆரம்பிக்கும் பந்தியில்... முதலாவதாக அமர்ந்தான்.

அவனைத் தொடர்ந்து, ஒவ்வொருவராக வந்து அமர.. கூடம் நிறைந்து விட்டது. விரித்த இலைகளில் பரிமாறுவதுதான் பாக்கி. பறிமாற ஆரம்பித்தவர்கள்... கூடத்தின் வெளி வாசல் பகுதியிலிருந்து பறிமாற ஆரம்பித்தார்கள். பசியோடு இருந்தவனுக்கு... இது முதல் ஏமாற்றமாக இருந்தது... காரணம் இவன்தான் பந்தியின் கடைசி ஆளாக அமைந்து போனதால்.

எந்த ஒரு பதார்த்தமாக இருந்தாலும்... இவனது இலைக்கு வரும் போது... அது தனக்குக் கிடைக்குமா... கிடைக்காதா... என்ற எதிர்பார்ப்பிலேயே உணவருந்திக் கொண்டிருந்தான். உள் வாசலுக்கு அருகிலேயே இருந்ததால்... அடுத்த பந்திக்குக் காத்திருப்பவர்கள்... இவன் அமர்ந்திருக்கும் பந்திதான் முதல் பந்தி என்று நினைத்துக் கொண்டு... இவனுக்கு அருகிலேயே காத்திருந்தது... இவனுக்கும் பெரும் உறுத்தலாக வேறு இருந்தது.

வேக வேகமாக உணவருந்திவிட்டு... பாயஸத்திற்காகக் காத்திருந்தான். பாயஸம் பறிமாறுபவர், இவனது இலைக்கு வரும்போது... பாயஸம் தீர்ந்து விடவே, 'சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். பாயஸம் நிறைத்துக் கொண்டு வருகிறேன்.' எனக் கூறி விட்டு... சமையல் கூடம் நோக்கிச் சென்றார். சென்றவர், பாயஸ வாளியை இன்னொருவரிடம் கொடுத்து... இவனிருக்கும் திசையைக் காட்டி... அவரை அனுப்பி வைத்தார்.

வந்தவர்... இவனது இலைக்கு முன்னால் இருப்பவரிடமிருந்து பரிமாற ஆரம்பித்தார். இதுவரை இவன் காத்திருந்த பொறுமை எல்லை மீறி.. கோபமாக எழுந்தது. இவனது கோபத்தை யாரிடம்தான் காட்டுவது... ? திருமணத்திற்கு அழைத்தவர் மீதா... ? பந்தியில் அமர வைத்தவர் மீதா... ?  இறுதியிலிருந்து பறிமாறியவர் மீதா... ? எனவே, அமைதியாக,  இலையை மூடிவிட்டு... எழுந்து... கைகழுவும் இடத்திற்குச் சென்றான்.

கையை கழுவி விட்டு... வெளியேறும் போது... வாசலுக்கு முன்..  ஒரு பெரியவர், டம்ளர் நிறைய பாயாஸத்தை நீட்டிக் கொண்டு நின்றார். சற்று ஆச்சரியத்துடன், 'நான் பாயாஸம் கிடைக்காத கோபத்தால் வெளியேறுகிறேன்... என்பதை அறிந்து கொண்டுதான்... எனக்கு பாயஸம் தருகிறீர்களா... ?' எனக் கேட்டான். அதற்கு அந்தப் பெரியவர், 'இல்லையப்பா... உனக்குக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் கொண்டு வந்தேன் என்றார்... !'.

ஒன்றும் பேசாமல்... பாயஸத்தை வாங்கி குடித்து முடித்ததுத்... திரும்பிய போது... அந்தப் பெரியவரைக் கூட்டத்தில் காணமுடியவில்லை. ஆம், கிடைக்க வேண்டியது, கிடைத்தே தீரும்.

குருநாதரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.

ஸாய்ராம்.

Thursday, June 11, 2020

பாலுக்குள் மறைந்திருக்கும் நெய்யின் சூட்சுமம்.



பாலுக்குள்தான்... நெய் மறைந்திருக்கிறது.

காய்ச்சாத பால் சில மணி நேரம் தன்னைக் காத்துக் கொள்ளும்.  அதை நாம் பயன்படுத்தாத போது... அது, தன் தன்மையை இழந்து கெட்டுப் போய்விடும் அபாயம் உள்ளது.

சிறிது கால அவகாசத்திலேயே தன் நிலையை இழந்துவிடும் பாலைக் காக்க வேண்டுமெனில் அதைக் காய்ச்ச வேண்டும். அப்போது, அதன் ஆயுள் சற்று நீட்சியாகும். மீண்டும் அதனைத் தக்க வைத்துக் கொள்ள... அதில் சிறிது உறை சேர்த்து... அதன் ஆயுளை நீட்சியாக்க... பால் திரிந்து தயிராக மாறும்.

இந்த நிலையிலேயெ வைத்திருந்தால் அது புளித்துப் போகும். இந்த நிலையை மாற்ற... அதை மத்து கொண்டு கடையும் போது... வெண்ணையாகத் திரண்டு... மோரில் மிதக்கும். அந்த மோரை சிறிது சிறிதாகத் தண்ணீர் ஊற்றி சில மணி நேரங்கள் காக்கலாம்... இறுதியில் அதுவும் புளித்து போகும். மிஞ்சி நிற்பது வெண்ணைதான்.

இந்த வெண்ணையும்... சில மணி நேரங்களில் புளித்துப் போகும். அதை மீட்டெடுக்க வேண்டுமெனில்... அதைக் காய்ச்ச வேண்டும். வெண்ணை மெதுவாக உருகி... திரண்டு... நெய்யாக மாறிவிடும். இந்த மாற்றம்தான் இறுதியானது. இதன் அற்புதம் என்னவெனில்... இந்த நெய்யிற்கு அழிவு இல்லை என்பதுதான்.

ஆம்... இந்த அழிவில்லாத நெய்... சிறிது நேரத்திலேயே அழிந்து விடும் பாலுக்குள்தான் மறைந்திருந்தது. 

பால்...நெய்யாக மாறுவதற்குள்தான் எத்தனை அபாயங்களைத் தாண்ட வேண்டியிருக்கிறது... ?

~ காய்ச்சிய பாலாக... பால் கலந்த பானங்களாக... பால் முழுவதுமே... அந்த நிலையிலேயே தன்னை இழந்து விடுகிறது.
~ தயிராக மாற்றம் பெற்று... உணவாகிப் போகிறது.
~ மோராக மாற்றம் பெற்று பானமாகிப் போகிறது.
~ வெண்ணையான பின்னும்... முற்றிலும் அது உப உணவுப் பொருளாக மாறிவிடுகிறது.

இதிலிருந்தெல்லாம் தப்பித்த வெண்ணைதான்... இறுதியில் நெய்யாக மாற்றமடைகிறது.

இந்தப் பாலின் நிலையைப் போன்றதுதான்... ஜீவனின் வாழ்வும். 

உலக சுகங்களிலேயே மூழ்கி... தனது வாழ்நாட்களை... தனது 'கர்ம வினைகளின் வழியாகவே'... அதன் போக்கிலேயே சென்று...தனது மறைவையும்... தொடர்ந்து மீண்டும், மீண்டும் பிறவிகளையும்... அடையும் வாழ்வையே ஜீவர்கள் மேற்கொள்ள் நேரிடுகிறது.

இந்த அழிந்து போகும் உடலில்தான்... என்றும் அழியாத 'ஆத்ம சொரூபம்' இருக்கிறது என்ற உண்மையை... அறிந்து கொள்ளாமலேயே... பாலைப் போலவே... இந்த ஜீவர்களின் வாழ்வும் அழிந்து போகிறது.

எப்போது... இந்த அழிவில்லாத ஆத்ம சொரூபத்தை அறிந்து கொள்கிறோமோ... அப்போதுதான்... 'இறைவனின் கருணை'... 'ஒரு சத்குருவின்' உருவை எடுத்து வந்து... பாலுக்கு உறை போல... தனது உள்ளார்ந்த அனுபவ ஆற்றலால்... ஜீவனின் வெளி உலக வாழ்வைத் திருப்பி... உள்ளார்ந்த ஆத்ம அனுபவத்தை அளித்து... என்றும் அழியாத ஆத்ம சொரூபத்தில்... இந்த ஜீவனைக் கலக்க வைக்கிறது.

அப்போதுதான்... நெய்யைப் போலவே... இந்த ஜீவனும் அழிவில்லாத ஆத்மா சொரூபமாக மாறிவிடுகிறது. அப்போது, இந்த ஜீவனுக்கு, இறப்புமில்லை... பிறப்புமில்லை.

ஸாய்ராம்.

Friday, June 5, 2020

பக்தனுக்கான ஆயுள் காப்பீடு...





ஒரு 'தெய்வீகத் திட்டம்' எந்த ஆயுள் காப்பு நிறுவனத்தையும் விட விவேகத்துடன் நம் எதிர் காலத்தைப் பாதுகாக்கிறது.

இவ்வுலகம் முழுவதும் புறக் காப்பீட்டில் கவலையுடன் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் நிறைந்திருக்கிறார்கள்.அவர்களுடைய கசப்பான எண்ண்ங்கள் அவர்களின் நெற்றியுலுள்ள வடுக்களைப் போலுள்ளன. 

நம் முதல் சுவாசத்திலிருந்தே, நமக்குக் காற்று, பால் இவைகளைக் கொடுத்தவனுக்குத் தன் பக்தர்களின் அன்றாட வாழ்விற்கு எப்படி வழி செய்வது என்பது தெரியும்.

- பாதுரி மகாசயர்.

ஸாய்ராம்.

பகவத் கீதை (iii ; 4 - 8)




வினையைத் துறந்த எவரும்
வினையிலிருந்து தப்பிக்க இயலாது ;
வெறும் துரத்தினாலே எவரும்
பரிபூரண்ம் அடைய இயலாது
ஒரு கண நேரமேனும் எக்காலத்திலும்,
எவரும் வினயற்று இருக்க இயலாது ;
இச்சை இல்லை எனினும், இயற்கை நியதி
எவரையும் வினையாற்ற வைக்கும்.

- கிருஷ்ண பகவான்.

ஸாய்ராம்.

பேராசையும்... நிதர்சனமும்...





ஒரு நரி தனது உணவைத் தேடி... சூரிய உதயத்தின் போது பயணத்தை ஆரம்பித்தது. அப்போது, அதன் நிழல்... அதற்கு முன்னே மிக நீண்டு, பெரியதாகத் தோன்றியது. 'ஓகோ... இதுதான் நமது உருவமோ... !' என்று நினைத்துக் கொண்ட நரி, யானையைப் போன்ற ஒரு பெரிய மிருகம்தான் இன்று நமக்கு உணவாகத் தகுதியானது... என்று எண்ணி... யானையைத் தேடி அழைந்து கொண்டிருந்தது.

முற்பகல் நேரத்தில், தனது நிழல் சிறிதாவதைக் கண்டு... தன் உணவுத் தேடலால்... தான் கொஞ்சம் இளைத்து விட்டதாகக் கருதி... தனது இரையின் தேடலை மான்களின் பக்கம் நோக்கித் திருப்பியது. 

அதற்குள் மதிய நேரம் நெருங்கிவிடவே... தனது நிழல் மிகவும் சுருங்கி... தனது காலடிகளுக்குள் மறைந்து போவதைக் கண்ட நரி... தான் பசியால் மிகவும் இளைத்துப் போனதாகக் கருதி... கிடைக்கும் உணவை உண்டு தன்னை திருப்தி செய்ய கொள்ள வேண்டி... உணவு கிடைத்தால் போதும் என்ற மன்நிலைக்கு வந்துவிட்டது.

அது போலத்தான், நாமும்... நமது பேராசையால்... நமது தகுதியை மறந்து தேடிக் கொன்டிருக்கிறோம். எப்போது நமது தகுதி நமக்குத் தெரிய வருகிறதோ... அப்போதிருந்துதான்... நமது தகுதிக்கேற்றவற்றைத் தேட ஆரம்பிக்கிறோம்.

குருநாதரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.

ஸாய்ராம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 120 ; 'திருமணப் பொருத்தத்தில் ஜாதகத்தின் பங்கு' பகுதி - 3




வரன்களின் ஜாதகங்களைத் தனித் தனியாக ஆய்வு செய்வதென்பது... இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது.

பெயர் பொருத்தம்... நட்சத்திரப் பொருத்தம்... என்ற வரைமுறைகள், சமூகம் ஒரு அறிமுக வளையத்துகுள் இருக்கும் வரை... மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எப்போது, ஒரு அறிமுக சமூகம்... அந்த வளையத்திற்கு வெளியே தமது... வாழ்வை விரித்துக் கொண்டதோ... அப்போதே, வரன்களைப் பற்றி அறிந்து கொள்ள... அவர்களின் விருப்பு, வெறுப்புகளைப் பற்றி அறிந்து கொள்ள... ஜாதகத்தின் துணை மிக அவசியமானதொன்றாகிறது.

பெண்களின் ஜாதகத்தில்...

~  லக்னம் (1 ஆம் பாவம்)...
~ குடும்பம் (2 ஆம் பாவம்)...
~ தைர்யம் (3ஆம் பாவம்)...
~ பூர்வம் (5 ஆம் பாவம்)...
~ களத்திரம் (7 ஆம் பாவம்)...
~ மாங்கல்யம் (8 ஆம் பாவம்)...

... என்ற பாவங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது... அந்தப் பெண்ணின் விருப்பு, வெறுப்புகளும், குண நலன்களும்... ஒரு புரிதலுக்குள் வந்து விடும். அது மட்டுமல்ல, பெண்ணின் பலம் மற்றும் பலவீனங்களும் ஒரு புரிதலுக்குள் வந்து விடும். இப்போது, அதற்கேற்றவாறு, ஒரு வரனைத் தேர்ந்தெடுக்க முடியும்.

ஆண்களின் ஜாதகத்தில்...

~ லக்னம் (1 ஆம் பாவம்)...
~ சுகபாவம் (4 ஆம் பாவம்)...
~ பூர்வம் (5 ஆம் பாவம்)...
~ களத்திரம் (7 ஆம் பாவம்)...
~ பாக்கியம் என்ற தர்மம் (9 ஆம் பாவம்)...
~ ஜீவனம் என்ற கர்மம் (10 ஆம் பாவம்)...

... என்ற பாவங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் பொது... அந்த ஆண் மகனின் அனைத்து அம்சங்களும் ஒரு புரிதலுக்குள் வந்து விடும். அந்த ஆணின் குண நலன்களும்... பலம் மற்றும் பலவீனங்களும்...தெரிந்ததற்குப்பின் பின், அதற்கேற்றவாறு, வரன்களைத் தேர்வு செய்வது... இன்றைய சூழலுக்கு மட்டுமல்ல... எப்போதும், அது ஒரு நிறைவான பொருத்த முறையாக அமையும்.

மெலும், இந்த தனித்தனியான ஜாதக ஆய்வில்... இரண்டு வரன்களும் இதுவரை கடந்துள்ள 'தசாக்கள்' எவ்வாறு இருந்தது... என்றும், இனி, இருவரும் இணையும் போது கடக்கப் போகும் தசாக்களும் எவ்வாறு இருக்கும்... என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

இந்த தசாக்களுக்கான ஆய்வுதான்... இருவரும் இணைந்து பயணிக்கும் வாழ்வின் பாதையைத் தீர்மானிக்கவிருக்கிறது. இந்த தசாக்கள்... 

~ இருவருக்கும் யோகமான தசாக்களாக அமையும் போது, அது உத்தமமாகவும்,
~ ஒருவருக்கு யோகமாகவும்... ஒருவருக்கு சமமாகவும் இருக்கும் பக்ஷத்தில், மத்திமமாகவும்,
~ இருவருக்கும் சமமான பலமுடைய தசாக்களாக இருக்கும் பக்ஷத்திலும் மத்திமமாகவும்,
~ ஒருவருக்கு யோகமாகவோ, சமமாகவோ இருந்து மற்றவருக்கு அது யோகமற்று இருந்தால் அதமமாகவும்,
~ இருவருக்கும் யோகமற்ற, சமமற்ற தசாக்கள் நடக்கும் பக்ஷத்திலும் அதமமாகவும்...

... எடுத்துக் கொள்ள வேண்டும். 

இந்த தசாக்களின் பொருத்தம் மிக, மிக முக்கியமானது. குறிப்பாக, குறைந்தது ஒரு 5 வருடங்களுக்காகவாவது சுபமான தசைகளை... வரன்கள் கடக்க வேண்டியது அவசியம். எனெனில், அந்த ஆரம்பக் காலங்கள்தான், அன்பை வெளிப்படுத்துவதற்கும்... ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடப்பதிற்கும் ஏற்ற காலம். அதை நம் குழந்தைகளுக்கு அளிப்பது மிக அவசியம்.

இறைவனின் அருளால்... ஜாதகப் பொருத்தம் என்ற இந்த தனித்தனி ஜாதக ஆய்வின் முக்கியத்துவத்தின் வழியே... இதுவரை பயணித்தோம். தொடர்ந்து வேறு பல ஜோதிடத்தின் சூட்சுமங்களுக்குள்ளும் பயணிப்போம்.

ஸாய்ராம்.

Wednesday, June 3, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 119 ; 'திருமணப் பொருத்தத்தில் ஜாதகத்தின் பங்கு' பகுதி - 2





திருமணப் பொருத்தத்தில்... ஜாதகத்தை முழுமையாக ஆய்வு செய்வதென்பது... இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது. 

ஏனெனில் முந்தைய காலத்தைப் போல, நெருங்கிய உறவிலும்... உறவிலும்... நன்கறிந்த தத்தமது இனத்திலும் நடந்த திருமணங்கள்... காலத்தின் சூழலால்...  ஒருவருக்கு ஒருவர் மிகவும் தொலைவில் வாழக்குடிய சூழல் உருவாகியுள்ளதால்... வரன்களின் ஜாதகத்தைத் தனித்தனியாக ஆய்வு செய்வது அவசியமாகிறது.

மேலும், 'நெருங்கிய உறவாக' இருந்தாலும், 'உறவாக' இருந்தாலும், 'இனமாக' இருந்தாலும்... வரன்களுக்கு இடையேயான 'வாழ்க்கைச் சூழல்கள்'... வேறு, வேறாக இருப்பதற்கான வய்ப்புகளும் உள்ளது. உதாரணமாக... 

~ தொழில் முறைக் கல்விகளைக் கற்று, அதன் வழியேயான ஜீவனத்தையும், வாழ்க்கையையும் அனுபவிக்கும் மாந்தர்கள் ஒரு புறம்... 
~ கணிணி என்ற ஊடகத்துறையில் கல்வியையும், வேலை வாய்ப்பையும் பெற்று வசதியான வாழ்வுக்குப் பழகிப் போன மாந்தர்கள் ஒரு புறம்...
~ அரசு உத்தியோகம் என காலம் காலமாக... பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் மாந்தர்கள் ஒரு புறம்...
~ தொழில், வியாபாரம் என... வியாபாரச் சூழலில் வாழும் மாந்தர்கள் ஒரு புறம்...
~ தனியார் துறையில் பணியாற்றும் எண்ணற்ற மாந்தர்களின் சூழல் ஒருபுறம்...
~ சிறு தொழில்களில் ஈட்பட்டு, தமது வாழ்வின் சூழல்களை அமைத்துக் கொண்ட மாந்தர்கள் ஒரு புறம்...
~ கூலித் தொழில்களில் ஈடுபட்டு... தமது வாழ்வை அமைத்துக் கொண்டு வாழும் எண்ணற்ற மாந்தர்கள் ஒருபுறம்...
~ நிரந்தர வாழ்வு அமையாத சூழலில் தத்தளிக்கும் மாந்தர்கள் ஒருபுறம்...

... என எண்ணற்ற சூழல்கள் நிலவுகிறது. இந்த சூழல்களுக்குள் இருப்பவர்கள்... தமது சூழல்களுக்குள் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இல்லாத போது... மாற்றுச் சூழல்களுக்குள் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் கட்டாயம் ஏற்படுகிறது. இத்தகைய சூழலின் மாற்றங்கள்... வரன்களின் வாழ்வில் இடர்களை ஏற்படுத்தா வண்ணம்... பொருத்தங்கள் பார்க்கப் பட வேண்டும். 

அறிமுகமான உறவுகளுக்கிடையே பொருத்தங்கள் பார்க்கும் போது... 'நட்சத்திர ரீதியான பொருத்த முறையே' போதுமானது. ஏனெனில், வரன்களுக்கு இடையே ஒருவருக்கு ஒருவர் அறிந்திருக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஆனால், ஒருவரை ஒருவர் அறிமுகமில்லாத போது... இந்த 'நட்சத்திரப் பொருத்தம்' ஒரு பொதுவான பொருத்த முறைக்குள் அடங்கிப் போவதை மறுக்க முடியாது.

ஏனெனில், பெரும்பாலும் ஒரே நட்சத்திரத்தில் எண்ணற்ற மாந்தர்கள் இருப்பதும்... ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிந்திருப்பதும்... நட்சத்திரங்கள் பெரும்பாலும், இரண்டு இராசி வீடுகளை பகிர்ந்து கொள்வதும்... ஒரு 'பொதுவான பொருத்த முறைகளுக்குள்' அடங்கிவிட வாய்ப்புகளை உருவாக்கி விடுகிறது.

இந்த நிலையில்தான்... ஜாதகத்தின் துணை மிகவும் அவசியமானதாகிறது. அதைத் தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.  

Tuesday, June 2, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 118 ; 'திருமணப் பொருத்தத்தில் ஜாதகத்தின் பங்கு' பகுதி - 1



திருமணத்திற்கு வரனைத் தீர்மானம் செய்வதற்கு முன்... அவர்களின் ஜாதகத்தை தனித் தனியாக ஆய்வு செய்து... வரன்களைப் பற்றிய ஒரு ஆய்விற்குப் பின்.. இணைப்பது ஒரு சிறந்த முறையாக இருக்கும்.

உதாரணமாக... தனது பெண்ணுக்கு உரிய வரன்... நிரந்தர உத்தியோகம்... நிறைந்த வருவாய்... வீடு, வாகன வசதிகள்... கொண்ட வரனாக இருக்க வேண்டும்... என்று எண்ணுவது நியாயமானதுதான். அதே நேரத்தில்... தனது பெண்ணின் குணத்திற்கு ஏற்ற வரனாக அவர் இருப்பாரா... ? என்பதைத்தான் முதலில் உறுதி செய்ய வேண்டும்.

அதை உறுதி செய்வதற்கு... தனது பெண்ணின் குணநலன்களை நன்றாக அறிந்திருப்பவர்களான பெற்றோர்கள்... அந்த குணநலன்களை... அவரது ஜாதகம் வெளிப்படுத்துகிறதா... ? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்கு, தனது பெண்ணின் ஜாதகத்தை... தனக்கு உகந்த ஜோதிடரிடம் காட்டி... அதில் தமது பெண்ணின், லக்னம்... குடும்பம்... தைர்யம் மற்றும் தொடர்பு ஸ்தானம்... பூர்வம்... சயனம்... மாங்கல்யம்... என்ற ஸ்தானங்களை ஆய்வு செய்து... அதைத் தனது பெண்ணின் குணநலன்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்ணைப் பெற்றவர்களுக்குத் தங்களது குழந்தையின் பலமும்... பலவீனங்களும்... 'உள்ளங்கை நெல்லிக் கனி போலத்' தெரிந்து விடும். இப்போது தனது பெண்ணிற்கு அமையும் வரன்களில்... தனது பெண்ணின் பலவீனங்களை, பலப்படுத்தும் அமைவு... அந்த வரனின் ஜாதகத்தில் இருக்கிறதா... ? என்பதும், தனது பெண்ணின் பலமான அமைவுகளை, ஏற்றுக் கொண்டு... அதை பக்குவமாகக் கையாளும் அமைவு... அந்த வரனின் ஜாதகத்தில் இருக்கிறதா... ? என்பதும்... தெளிவாகத் தெரிந்து விடும்.

பலவீனங்களை... பலத்தைக் கொண்டு சமன் செய்வதுதான்... ஜாதகங்களை இணைக்கும் சூட்சுமம். திருமணம் ஒரு வியாபாரம் அல்ல. ஒரு வியாபாரத்திற்கு பங்குதாரரை சேர்க்கும் போதுதான்... இரண்டு பலமான ஜதகர்களை இணைக்க வேண்டும். அதிலும், பணம் உள்ளவரோடு... நிர்வாகத் திறமையுள்ள ஒருவரை இணைப்பதும்... வெற்றியைத் தேடித்தரும். அது, தேடுதல்களைப் பொருத்தது. பணத்தோடு பணத்தையா... ? அல்லது பணத்தோடு திறமையையா... ? என்பதைப் பொருத்தது.

ஆனால், திருமணம் இரண்டு பாலினங்களை இணைப்பது. இரண்டு மனிதர்கள் இணைந்து... இறுதி வரை வாழ்வைத் தொடர்வது. வியாபாரத்தைப் போல... இது லாப - நஷ்டங்களைப் பொருத்ததல்ல. இது இன்ப - துன்பங்களைப்  பகிர்ந்து கொள்ளும் ஒரு இணைபிரியா பந்தம்.

ஆதலால், களத்திரம்... தொடர்பு... பங்குதாரர்கள்... நட்பு... கலவியல்... என்ற, 7 ஆம் இடத்தை மட்டும் பார்த்து பொருத்தும் நிலையைத் தவிர்த்து... பலம் - பலவீனம் என்ற இரு நிலைகளையும் சமப்படுத்தும் பொருத்த முறையைக் கையாள வேண்டும். இது இன்றைய காலத்தின் கட்டாயம்.

தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளால்...

ஸாய்ராம்.

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...