Thursday, June 25, 2020

கம்பருக்கு அருளிய திருவரங்கத்து மேட்டழகிய சிங்கர்.



'வால்மீகிப் பெருமான்' அருளிய 'இராமாயணக் காவியத்தை' தமிழில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் 'கம்பர்'. அதற்காகத் தனது குல தெய்வமான 'நரஸிம்மப் பெருமானிடம்' பிரார்த்திக் கொண்டு... காப்பியத்தை எழுதத் தொடங்கினார்.

வால்மீகி எழுதிய இராம காதையின் மூலத்தை முழுவதுமாக உள் வாங்கி... அதைத் தனது கவித் திறத்தினால்... தமிழ்க் காப்பியமாக உருவாக்கினார், கம்பர். தெள்ளியத் தமிழ் வார்த்தைகளைக் கொண்டு... தேனினும் இனிய பாடல்களால்... 'பகவான் இராமரது' காப்பியத்தை,,, 'இராமவதாரமாக' உருவாக்கினார்.

வால்மீகியின் இராம காதையில் இல்லாத ஒரு இடைச்செருகலாக... தனது குலதெய்வமான, 'பகவான் நரஸிம்மரது' அவதாரத்தை, தனது இராமாயணக் காப்பியத்தில் சேர்த்தார். அதுவும், தக்கதொரு இணைவாகக் காப்பியத்திற்குப் பெருமையைச் சேர்த்தது.

காப்பியத்தை அரங்கேற்ற அவர் தேர்ந்தெடுத்தது... திருவரங்கத்தைத்தான். திருவரங்கத்தில் எழுந்தருளும் 'ஸ்ரீ ரெங்ஙநாயகித் தாயார் சமேத... ஸ்ரீ ரெங்கநாதப் பெருமாளின்' திருக் கோவிலில், தாயாரின் சன்னிதானத்தில் எதிர் புறம் இருக்கும் நான்கு கால் மண்டபத்தில்தான் அரங்கேற்றம் நடைபெறத் தீர்மானம் செய்யப்பட்டது.


மண்டபத்திற்கு எதிர் புறம் தாயார் சன்னிதானமும்... இடது புறம் ஒரு கற்பாறை மேடும்... அதனுள் ஒரு குகையும் இருந்தது. அரங்கேற்றத்திற்கான நாளில்... பண்டிதர்கள் புடை சூழ... தனது காப்பியத்தைப் பெருமாளின் சன்னதியிலும், தாயாரின் சன்னதியிலும் வைத்து வண்ங்கிய பின், சூழ்ந்திருக்கும் அறிஞர்கள் முன்பாகச் சமர்ப்பித்தார்.

காப்பியத்தின் மூலத்தைச் சற்றும் சிதைக்காமல்... அதை அழகாக மெருகேற்றி... அற்புதமான கவிதைகளால் கொர்த்து... பகவான் இராமவதாரத்தை அவர் அருளியதை... எல்லோரும் ரசித்துக் கேட்டார்கள். இறுதியாக அதை அங்கீகரிக்கும் கட்டம் வந்தது. அப்போது அறிஞர்கள்... அந்தக் காப்பியத்தை அவ்வாறே ஏற்றுக் கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை... ஆனால், வால்மீகி அருளிய காப்பியத்தில் இல்லாத ஒரு அங்கமான, நரஸிம்ம அவதாரக் காதையை மட்டும்  நீக்க வேண்டும்... என்று முடிவெடுத்தனர்.

காதையைக் கேட்ட பெரும்பாலான பக்தர்களும்... காப்பியத்தை இயற்றிய கம்ப நாட்டாழ்வாரும்... அடுத்து என்ன செய்வது என்று கலங்கி நின்றனர். காப்பிய அரங்கேற்றம் பூரணமாக வேண்டுமெனில், பகவான் நரஸிம்மரின் அவதாரத்தை நீக்க வேண்டும் என்ற நிலையில்... கண்களை முடி... தனது குல தெய்வமான 'நரஸிம்மரை' மனமுருக வேண்டினார்... மண்டபத்தைச் சூழ்ந்திருந்த அனைவரும் அடுத்து என்ன நடக்கப் போகிறது... என்று அமைதியாகக் காத்திருந்த வேளையில்... 'ஒரு சிங்கத்தின் கர்ஜனைக் குரல்' அந்தப் பகுதியையே அதிரச் செய்தது. 

அனைவரும் பதைப் பதைப்புடன் எழுந்திருந்து... கர்ஜனைச் சப்தம் கேட்ட  அந்தக் கற்பாறைக் குகையையே பார்த்துக் கொண்டிருந்தனர். அதிர்ந்து போன பண்டிதர்கள்... நரஸிம்மப் பெருமானின் கர்ஜனைதான் அந்தக் குகையிலிருந்து எழுந்தது... என்பதை உணர்ந்து... கம்பநாட்டாழ்வார் சமர்ப்பித்த காதையை முழுமையாக ஏற்றுக் கொண்டு... அதற்குக் 'கம்பராமாயணம்' என்ற பெயரையும்... அதை வடித்த கம்பருக்கு, ;கவிச் சக்கரவர்த்தி' என்ற பட்டத்தையும் சூட்டினர்.

இன்றும், அந்த மண்டபம்... 'கம்பர் மண்டபம்' என்றும்... அந்தக் கற்பாறைக் குகை... நரஸிங்கப் பெருமாளின் கர்ஜனை எழுந்தருளிய குகையாக... 'மேட்டழகிய சிங்கராக' அவர் எழுந்தருளியிருக்கிற ஆலயமாக... அனைத்து பக்தர்களாலும் வழிபடப்படுகிறது.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...