Saturday, June 13, 2020

தேடுதலின் தூரமும்... தீர்வின் அருகாமையும்...




நமது தேடுதல்... நம்மைத் தொலைவிற்கு இட்டுச் செல்கிறது. ஆனால், அதற்கானத் தீர்வோ... நமக்கு வெகு அருகாமையிலேயே இருக்கிறது.

இதுதான், மதுர கவி ஆழ்வாரின் வாழ்விலும் நிகழ்ந்தது. வேதங்களையும்... வேதங்களின் சிகரமான வேதாந்தங்களையும்... கற்றறிந்தாலும், இந்த ஜீவன் யார்... ? அதன் பிறப்பின்  நோக்கம்தான் என்ன... ? அது எங்கிருந்து தோன்றுகிறது... ? எதில் நிலை கொள்கிறது... ? இறுதியில் எங்கு போய் சேர்கிறது... ? என்றத் தேடல், அவரை வடதிசையை நோக்கிப் பயணிக்க வைத்தது.

வடக்கில், அயோத்திவரை சென்ற அவரை... 'ஒரு உள்ளார்ந்த ஈர்ப்பு' தென்திசையை நோக்கி இழுத்தது. அந்த உள்ளார்ந்த ஈர்ப்பின் வழிகாட்டுதல்... தனது பிறப்பிடமான 'திருக்கோளூருக்கு' அருகிலேயே அமைந்த 'திருக்குருகூருக்கு' அவரை அழைத்து வந்து சேர்ந்தது.

ஆச்சர்யத்திலும் ஆச்சரியமாக... ஒரு புளிய மரத்தின் கீழே... வெகு கால யோக தவத்தில் மூழ்கியிருக்கும்... தனது 'சத்குருவான'... 'நம்மாழ்வாரின்' திருவடி தரிசனமும் கிடைத்தது. தனது தேடல்கள் எல்லாம்... ஒரு முடிவுக்கு வந்தது போல... இவர் மனம் அமைதியில் ஆழ்ந்தது. 

அவரின் முன்பாக... அமைதியுடன் அமர்ந்திருந்த மதுர கவியாழ்வாரின் மனம்... மெல்ல மெல்ல ஆனந்தத்திலும் திளைக்க ஆரம்பித்தது. தனது தேடல்களுக்கு முடிவாகவும்... தனது வாழ்விற்கு விடிவாகவும்... தனக்கு முன்னிருக்கும் சத்குருவின் கடைக் கண் பார்வைக்காகவும்... காத்திருந்தார் மதுர கவியார்.

ஆச்சார்யாரின் திருவுள்ளம் கனிந்தது. மெல்லக் கண் விழித்த 'நாமாழ்வார்'... தன்னால் ஈர்க்கப்பட்ட... தனது அத்யந்த சிஷ்யனை அன்புடன் நோக்கி... அருளாசி வழங்கினார். 

அவரின் அருளினால் ஈர்க்கப்பட்ட மதுர கவியார்... நெடுநாள் தனது மனத்தை அரித்துக் கொண்டிருக்கும் கேள்விகளின் சாரத்தை ஒரு 'விடுகதை வினாவாக' ஆச்சார்யாரின் முன் வைத்தார்.

கேள்வி : 'செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்... ?'

அழிந்து கொண்டிருக்கும்... நிலையற்ற... இந்த உடலுக்குள்ளே இருக்கும் ஜீவன்... எதை மூலமாகக் கொண்டு... இந்த உடலில் வாழ்ந்து கொண்டிருக்கிறது... ? என்பதுதான் மதுர கவியாரின் கேள்வி.

ஆச்சார்யாரின் பதில் : 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்... !'

நிலையற்ற உடலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன்... அதன் பாப புண்ணியங்களான... 'கர்ம வினைகளை' மூலமாகக் கொண்டு,,, ஜீவித்துக் கொண்டிருக்கிறது... என்பதுதான், நம்மாழ்வாரின் பதிலாக அமைந்தது.

தனது தேடுதல்களெல்லாம்... ஒரு முடிவுக்கு வந்த சந்தோஷத்தில்... அஷ்டபாவங்களும் தனது மேனியைத் தீண்ட... கண்களில் நீர்மழ்க...ஆச்சார்யாரின் திருவடிகளில் சரணாகதியடைந்தார்... மதுர கவியாழ்வார்.

ஒற்றை வரி பதிலில் பொதிந்திருக்கும் அருள் ஞானம்... மதுரகவியாரின் உள்ளத்தில் ஞான விளக்கை ஏற்றியது. 

பாப புண்ணியங்கள் என்ற கர்மவினைகளைத் தீனியாக உண்ணாமல்... என்றும் நிலைத்திருக்கும்... ஜீவனுக்கு மூலமாகிய 'பரமாத்ம சொரூபத்தை' தீனியாக்கினால்... ஜீவன் அழிவற்ற பரமாத்ம சொரூபத்தில்... என்றும் அழிவின்றி கலந்து போகும்... என்ற 'அருள் ஞான விளக்குதான்' அது.

ஆம், தேடுதலின் முடிவு... தூரத்தில் இல்லை.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...