அதிருஷ்டமும்... துரதிருஷ்டமும்... சுண்டி விடும் ஒரு நாணயத்தைப் போன்றதுதான்.
தலை விழுவது அதிர்ஷ்டம் என்று நினைக்கும் போது... பூ விழுந்தவர் வெற்றி பெருவதும். பூ விழுந்தவர் துரதிர்ஷ்டம் என்று நினைக்கும் போது... தலை விழுந்தவர் தோற்றுப் போவதும்... போலத்தான், அதிருஷ்டம் மற்றும் துரதிருஷ்டத்தின் நிலைகள்.
நாம் அதிருஷ்டம் என்று நினைப்பது துரதிருஷ்டமாக மாறிப் போவதும்... துரதிருஷ்டம் என்று நாம் நினைப்பது அதிருஷ்டமாக மாறிவிடுவதையும்... ஒரு மேற்கத்தியக் கதை சுவாரஸ்யமாக விளக்குகிறது...
'அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்களை... அறுவடை செய்யப் போகும் போது, அந்த வயல் பரப்புகளுக்குள்... ஒரு குதிரைக் கூட்டமே வந்து மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டு... தலையில் கையை வைத்துக் கொண்டு இடிந்து போய் அமர்ந்து விட்டார் ஒரு விவசாயி.
ஊரார் அனைவருமே... 'என்ன... துரதிருஷ்டம் ! அறுவடை நேரத்தில், இவருக்கு மட்டும் வந்த சோதனை... !' என்று கவலையுடன் பேசிக் கொண்டனர். ஆனால், அந்த விவசாயியின் மகனோ... இந்தக் காட்சியை வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தான். அவன் தங்களது வயலுக்கு... உடனே ஒரு தற்காலிக வேலியை அமைத்துக் குதிரைகளைச் சிறைப்படுத்தினான்.
நல்ல வாளிப்பான குதிரைகளாக இருந்ததால்... அதை நன்கு பயிற்சிக்கு உட்படுத்தினான். ஒன்றுடன் ஒன்று இனப்பெருக்கமும் செய்து... ஒரு குதிரைப் பண்ணையையே உருவாக்கிவிட்டான். இவனது குதிரைகள் நல்ல விலைக்கு விற்பனையானது. இப்போது, ஊரார் அனைவருமே... 'பாருங்கள்... இவர்களுக்கு வந்த அதிருஷ்டத்தை... ! பயிரிட்டு கிடைக்கும் வருமானத்தை விட பன்மடங்கு வருமானத்தை ஈட்டி விட்டார்கள்... !' என்று பெருமையுடன் பேசிக் கொண்டனர்.
ஒரு நாள், மகன் ஒரு குதிரையை பழக்கும் போது, தவறி கீழே விழுந்து காலை முறித்துக் கொண்டான். உடனே ஊரார்கள், 'பாருங்கள்... அவர்களின் துரதிருஷ்டத்தை... ! பணம் ஈட்டித் தந்த குதிரைகளே... இப்போது அவனது காலை உடைத்துப் படுக்க வைத்து விட்டதே... !' என்று கவலையுடன் பேசிக் கொண்டனர்.
அப்போது, அவர்களின் நாட்டின் மீதி... அந்நிய நாட்டுப் படையெடுப்பு ஏற்பட்டதால்.. வீட்டுக்கு ஒருவர் கட்டாயமாகப் படையில் சேர்க்கப்பட்டனர். அந்த ஊரில் இருந்த அனைத்து இளஞர்களுமே போருக்குச் சென்று விட... கால் உடைந்ததனால், இவன் மட்டும் ஊரிலே இருக்க நேரிட்டது. இப்போது ஊரார்கள், ' பார்த்தீர்களா... ! கால் உடைந்ததே... இவனுக்கு அதிருஷ்டமாகப் போய் விட்டது. இல்லையென்றால் இவனும் போருக்குப் போக வேண்டியிருந்திருக்குமே... ' என்று வியப்புடன் பேசிக் கொண்டார்கள்.'
இவ்வாறாக... இந்தக் கதை அதிருஷ்டத்தையும்... துரதிருஷ்டத்தையும்... மாறி மாறி அனுபவிக்கும் நிலையை விவரித்துக் கொண்டே போகும்...
நமது பார்வையில்... இவையிரண்டையும் ஒரே மனப்பான்மையில் எதிர்கொள்வதுதான் சிறந்த முறையாக இருக்கும்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment