துன்பத்தில் உழலும் ஜீவர்களை 'ஜோதிடக் கலையின்' வழியே வழி நடத்தும் போது... பரிகாரங்களாக, 'இறைவனது திருவடியைச்' சரணடையச் செய்வது... ஜோதிடர்கள் வழக்கமாகக் கடைப்பிடிக்கும் வழிமுறைதான்.
ஆனால், அந்த தொடர் வழிபாட்டு முறைகளைக் கடைப் பிடித்தாலும்... தமது துன்பங்கள் தீரத் தாமதமாகும் போது, விரக்தியில் ஜீவர்கள் வெளிப்படுத்தும் ஒரு பொதுவான கருத்து, 'தெய்வத்தின் மீது உண்மையான பக்தியை வைப்பவர்களின் வாழ்வு துன்பத்தில் உழலுவதாகவும்... அதுவே உலக வாழ்வில் கருத்தாக இருப்பவர்களின் வாழ்வு செல்வச் செழிப்பில் திளைப்பதாகவும்... இருக்கிறதே... !' என்ற ஆதங்கமாகத்தான் இருக்கும்.
மேலோட்டமாகப் பார்த்தால், அது உண்மையைப் போல் தோற்றமளிக்கும். ஆனால், சற்று ஆழமாகச் சிந்தித்தால்தான் உண்மை நிலை புலப்படும். தெய்வத்தின் துணை... என்பது வேறு, செல்வச் செழிப்பின் நிலை... என்பது வேறு.
இந்த உலகில் ஜீவர்கள் தத்தமது 'பூர்வ கர்ம வினைகளின் விளைவுகளால்தான்' பிறப்பை அடைகிறார்கள். அந்த கர்ம வினைகளின் விளைவுகளை ஒட்டியே அவர்களது வாழ்வும் அமைகிறது. அதற்கேற்ப, வறுமையில் உழல்வதும்... செல்வநிலைகளில் திளைப்பதும்... அவரவர்களின் 'பூர்வ கர்ம வினைகளே'. ஆதலால், உலக மாந்தர்கள் அனைவருமே செல்வச் செழிப்பில் திளைப்துமில்லை... வறுமையில் உழல்வதுமில்லை. எனவே, செல்வச் செழிப்பு என்பது அனைவருக்கும் பொதுவானதல்ல.
ஆனால், தெய்வத்தின் துணை என்பது உலக மாந்தர்கள் அனைவருக்கும் பொதுவானது. ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் இருந்து அருள் செய்யும் இறைவன்... அந்த ஜீவனுக்கு மூலமான ஆத்மாவாக இருந்து அருள் புரிகிறான். அந்த ஆத்மா வழங்கும், ஞானமும்... பகுத்தறியும் தன்மையும்... முடிவெடுக்கும் வாய்ப்பும்... அனைவருக்குமே பொதுவானது. ஆதலால், இந்த உலகில் பிறக்கும் அனைத்து ஜீவர்களுக்கும் பொதுவான இந்த ஆத்மா என்ற தெய்வத்தின் துணையை எல்லோருமே அனுபவிக்கலாம். அதற்கு எந்தத் தடையுமில்லை.
இவ்வாறு, அனைவருக்கும் பொதுவான தெய்வத்தின் துணையை... அனைவருக்கும் பொதுவானதாக இல்லாத செல்வச் செழிப்புடன் ஒப்பிடுவது... முரணானதுதானே... !
ஸாய்ராம்.

No comments:
Post a Comment