இந்தக் கதையில், திராட்சைப் பழங்களுக்காக, எட்டி, எட்டிப் பார்த்து ஏமாந்த நரி, இறுதியில், ''சீ சீ இந்தப் பழம் புளிக்கும்...!' என்று சொல்லிவிட்டுச் சென்றதாக இருக்கும்.
பெரிய விலங்குகள் விட்டுச் சென்ற, எஞ்சிய மாமிசத்தைத் தின்னும் பழக்கத்தைக் கொண்ட நரி, திராட்சைப் பழத்திற்கு ஆசைப்படுமா...? ஆனால், இந்தக் கதையில், நரி, திரட்சைப் பழத்திற்கு ஆசையும் படுகிறது... கிடைக்காத போது ஏமாற்றமடைந்து வெறுப்பும் அடைகிறது.
ஏன் இந்த முறண்பாடு... ? இந்த முறண்பாடு எதை உணர்த்துகிறது... ?
பழங்கள் எப்போதும் உயரத்தில்தான் இருக்கின்றன. அதை விரும்புபவர்கள்தான், அதைத் தேடி அடைய வேண்டியிருக்கிறது. அது போலத்தான் ஞானமும். அதையும் அதை விரும்புபவர்கள்தான் முனைப்புடன் தேடி அடைய வேண்டியிருக்கிறது.
தனது 'கர்ம வினைகளால்' மீண்டும், மீண்டும் பிறவிகளை அடைந்து, தொடர்ந்து இந்தப் பிறவிப் பெரும் கடலில் சிக்கித் தவிக்கும் ஜீவன்... எப்போதாவது இந்தப் பிறவிக்கான மூலத்தை அடைந்து... மீண்டும் ஒரு பிறவி எடுக்காமல் இருக்கும் உபாயத்தை நோக்கி ஒரு முயற்சியை செய்கிறது... நரி திராட்சைக் கொத்தை நோக்கி எட்டிக் குதிப்பதைப் போன்று...
அந்த முயற்சியில் ஜீவன் வெற்றி பெறும் போது... ஞானம் என்ற பழம் கையில் கிடைத்து, 'ஆஹா... இந்தப் பழம் இனிக்கிறது...!' என்றும், அந்த ஞானத்தைப் பெற முடியாத போது.. 'சீ சீ இந்தப் பழம் புளிக்கும்...!' என்றும் ஜீவன் அலுத்துக் கொண்டு, மீண்டும் பிறவிகளுக்குள் சென்று சேர்கிறது.
இதைத்தான், இந்த சிறிய கதைக்குள் கொண்டு பொதித்து வைத்திருக்கிறார்... விஷ்ணு ஷர்மா.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment