Tuesday, June 30, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 129. 'குலதெய்வம்' பகுதி - 3.



குலத்தின் வழியாக... குடியின் வழியாக... குடும்பத்தின் வழியாக... வழிநடத்தப்படும் ஒருவருக்கு 'குலதெய்வமாக' இருந்து அருள் செய்யும் தெய்வமே, முதல் வழிகாட்டியாக இருக்கிறது.

அவரின் வாழ்வின் முதல் தெய்வமான குலதெய்வம் அவருடைய முழுமையான வாழ்விற்கும் பொறுப்பேற்கிறது. அவரின் பிறப்பிலிருந்து, மறைவு வரையிலான அனைத்து நிகழ்வுகளிலும், முன்னின்று அவரை வழி நடத்துகிறது.

அவரை, அவரின் குடியின் வழியாகக் கட்டி வைக்கும் தெய்வமாக, குலதெய்வம் இருக்கிறது. குழந்தையாகப் பிறந்த முதல் 'புண்ணியாவாகனம்' என்ற சடங்கில் ஆரம்பித்து... பெயர் சூட்டல், தலை முடி இறக்குதல் என்பதிலிருந்து, வாழ்வு முழுவதும் நடக்கும் அனைத்து சம்சாரங்களுக்கும் (கடமைகள்)... பிரதான தெய்வமாக இருந்து வழி நடத்துகிறது.

அவரின் உலக வாழ்வின் நிமித்தமாக, சூழ்நிலைகளால், அவர் தனது பூர்வத்தை விட்டு வெளியேறி, மாற்று இடங்களில் வசிக்க நேரும் போதும், அவரை நீங்காது நின்று வழி நடத்துகிறது. அவரின் ஒவ்வொரு உலக வாழ்வின் வழியான முன்னேற்றங்களிலும், அவருக்குத் துணையாக இருந்து அருள் செய்கிறது. 
அவர் ஒரு தொழில் செய்யும் போதும், தொழிலின் வழியாக அவர் சேர்க்கும் சொத்துக்கள் அனைத்திற்கும்... முதல் பொறுப்பாளராகக் குலதெய்வம் தனது பங்கை அளிக்கிறது.

பலரின் வாழ்வு, பூர்வத்தை விட்டு அகன்று, மாற்று சூழல்களில் அமைந்திருக்கலாம். அந்த சுழல்களுக்கு ஏற்ப, அவர் தனது உலக வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும்... உள் வாழ்வின் முன்னேற்றத்திற்குமாகவும்... இஷ்ட தெய்வ வழிபாடு, சத்குரு வழிபாடு என்று பயணிக்கலாம். அந்த இரண்டு வழிகளிலும் அவர்களை வழிநடத்தும் இஷ்ட தெய்வமும், சத்குருவும் அவரவர்களின் குலதெய்வத்தை முன்னிட்டுத்தான்... அவர்களை வழிநடத்துவார்கள்.

குலதெய்வ வழிபாடு, அந்தந்த குடிவழிபாட்டுக்கு ஏற்ப முறைப்படுத்தப் பட்டிருக்கிறது. அன்றாட வழிபாட்டிலிருந்து... குடி வழிபாட்டுக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வழிபடும் விழாக்கால வழிபாடுகளான... வருடம் ஒரு முறை அல்லது மூன்று, ஐந்து, ஏழு வருடங்களுக்கு ஒரு முறை என... முறைப்படுத்தப் பட்டிருக்கிறது.

இந்த முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகளை, குடி வழிபாட்டுக்காரர்கள் மீறாதவாறு வழி நடத்தப்படுகிறார்கள். இஷ்ட தெய்வ வழிபாடுகளின் போதும், சத்குரு வழிபாடுகளின் பொதும் ஒருவருக்கு இருக்கும் சுதந்திரம்... குலதெய்வ வழிபாட்டின் போது இருப்பதில்லை. காரணம், அந்த குடி வழிபாட்டுக் காரர்களின் நிலைகளைக் கருதி... அந்த வழிபாட்டு முறைகள் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும் படியாக முறைப் படுத்தப்பட்டிருக்கிறது. புதிய வழிமுறைகள் எப்போதும் ஊக்குவிக்கப் படுவதில்லை.

இருக்கும் இடத்திலிருந்து, மானஸீகமாக வழிபட்டாலே போதும். அவரவர்களின் குலதெய்வம் அவரவர்களைக் காத்தருளும். குலதெய்வத்தின் வழிகாட்டுதலின் படியே, இஷ்ட தெய்வங்களின் அனுக்கிரகங்களும், சத்குருநாதர்களின் அனுக்கிரகங்களும் ஒருவருக்கு அமையும்.

குலதெய்வத்தின் அனுக்கிரகத்தோடும்... இஷ்ட தெய்வத்தின் அனுக்கிரகத்தோடும்... சத்குருநாதரின் அனுக்கிரகத்தோடும்... நமக்குக் கிடைத்த இந்த அரிய பிறவியில்... கடமைகளைப் பற்றற்று முடித்து... இந்த ஜீவனை அதன் மூலமான பரமார்த்த சொரூபத்தில் கொண்டு சேர்ப்போம்.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...