Sunday, June 21, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 124. 'விதியும்... மதியும்'




பஞ்சபாண்டவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலப் பகுதியை சீராக்கி... அதை ஒரு பெரும் சாம்ராஜ்யமாக உருவாக்கி... அந்த சாம்ராஜ்யத்திற்கு 'தர்மரை' சக்கரவர்த்தியாகக் கொண்டு ஆட்சி செய்துவந்தனர். 

இவர்களின் அழைப்பை ஏற்று, இந்த ராஜ்யத்தை பார்க்க வந்த கௌரவர்கள்... இவர்களது சுக வாழ்வைக் கண்டு போறாமை அடைந்து... பாண்டவர்களின் ராஜ்யத்தை சகுனியின் துணையுடன் சூது செய்து கவரத் திட்டமிட்டனர். அதன் படி, விழா ஒன்றை காரணமாகக் காட்டி... அந்த விழாவிற்கு, பாணடவர்களை அழைக்கத் திட்டமிட்டனர்.

பாண்டவர்களை விழாவுக்கு வருமாறு... ஓலையொன்றை எழுதி, அதில் பாண்டவர்களின் ஒரு சித்தப்பாவான, 'திருதிராஷ்டர்' கையெழுத்திட்டு... அதை, இன்னொரு சித்தப்பாவான 'விதுரரின்' கைகளில் கொடுத்து... பாண்டவர்களிடம் சேர்க்குமாறு அனுப்பிவைத்தனர்... 'சகுனியின்' தலைமையிலான துரியோதன சகோதரர்கள்.

ஓலையக் கொண்டு வந்த விதுரர், பாண்டவ சகோதரர்களின் மூத்தவரான தருமரிடம் ஓலையைக் கொடுத்து, 'தர்மா, இந்த அழைப்பில் சூது இருப்பதாக உணர்கிறேன். ஆதலால், விழாவுக்கு வருவதை தவிர்த்து விடு'... என்று கூறுகிறார். விதுரரிடமிருந்து, ஓலையைப் பெற்றுக் கொண்ட தருமர், தனது தம்பிமார்களிடம், இது சம்பந்தமான ஆலோசனையைக் கேட்டார்.

சகாதேவனைத் தவிர்த்து, பீமன், அர்ஜுனன், நகுலன் முதலான முவரும்...'ஓலையைக் கொண்டு வந்த விதுரரே... அழைப்பை ஏற்க வேண்டாம் என்று கூறும் போது... நாம் அதில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை அண்ணா... !', என்று தங்களது அபிப்பிராயத்தைக் கூறினர். 

ஆனால், 'சாஸ்திரம் அறிந்த' சகாதேவனோ, தருமரிடம் சில கேள்விகளை முன் வைத்தான்,

சகாதேவன் : 'அண்ணா, ஓலையை எழுதியது யார்... ?'

தருமர் : 'சகுனியாக இருக்க வேண்டும்'

சகாதேவன் : ஓலையில் கையெழுத்திட்டிருப்பது யார்... ?'

தருமர் : 'சித்தப்பா திருதிராஷ்டர்'.

சகாதேவன் : 'ஓலையைக் கொண்டு வந்தவர் யார்... ?'

தருமர் : 'சித்தப்பா விதுரர்'

சகாதேவன் : 'ஓலையை எழுதிய சகுனியோ... கையெழுத்திட்ட திருதிராஷ்டரோ... கொண்டு வந்த விதுரரோ... காரணமல்ல, அண்ணா, விதிதான் காரணம். விதி நம்மை அழைக்கிறது, அண்ணா... அதற்கேற்ப முடிவு எடுங்கள்.. !'
 ... என்றான்.

தருமர், சகாதேவனின் இந்த விளக்கத்தை முழுமையாகக் கேட்டுக் கொண்டு விழாவிற்குச் செல்லத் தீர்மானித்தார். ஏனைய, மூன்று சகோதரர்களும், 'இவ்வளவையும் தெரிந்து கொண்டு... நாம், அந்த விழாவிற்குச் செல்வதற்கான அவசியம்தான் என்ன... அண்ணா... !' என்று கேட்டனர். 

அதற்குத் தருமர், 'ஓலையை எழுதியது சகுனியாக இருக்கலாம். ஆனால், அதில் உள்ள சூட்சுமங்களை அறியாமலா திருதிராஷ்டர் கையெழுத்திட்டிருப்பார்... ? நம்மை விழாவிற்கு வர வேண்டாம்... என்று சொல்லும் விதுரர், தனக்குண்டான கடமையை நிறைவேற்ற... அழைப்பிற்கான ஓலையைக் கொண்டு வந்து நம்மிடம் கொடுத்திருக்கிறாரே. நாம் மட்டும் எப்படி... இந்த அழைப்பை ஏற்காமல், மறுக்க முடியும்... ?' என்று கூறினார்.

இதுதான் விதியின் வலிமை. இதை விதியென்று அறிந்து சொன்ன சகாதேவனுக்கோ... அதை உணர்ந்துகொண்ட தருமருக்கோ... இது சம்பந்தமாக, பகவான் கிருஷ்ணரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்... என்ற மதியினை, மறக்க வைத்ததும் விதிதானே... !.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...