Thursday, June 11, 2020

பாலுக்குள் மறைந்திருக்கும் நெய்யின் சூட்சுமம்.



பாலுக்குள்தான்... நெய் மறைந்திருக்கிறது.

காய்ச்சாத பால் சில மணி நேரம் தன்னைக் காத்துக் கொள்ளும்.  அதை நாம் பயன்படுத்தாத போது... அது, தன் தன்மையை இழந்து கெட்டுப் போய்விடும் அபாயம் உள்ளது.

சிறிது கால அவகாசத்திலேயே தன் நிலையை இழந்துவிடும் பாலைக் காக்க வேண்டுமெனில் அதைக் காய்ச்ச வேண்டும். அப்போது, அதன் ஆயுள் சற்று நீட்சியாகும். மீண்டும் அதனைத் தக்க வைத்துக் கொள்ள... அதில் சிறிது உறை சேர்த்து... அதன் ஆயுளை நீட்சியாக்க... பால் திரிந்து தயிராக மாறும்.

இந்த நிலையிலேயெ வைத்திருந்தால் அது புளித்துப் போகும். இந்த நிலையை மாற்ற... அதை மத்து கொண்டு கடையும் போது... வெண்ணையாகத் திரண்டு... மோரில் மிதக்கும். அந்த மோரை சிறிது சிறிதாகத் தண்ணீர் ஊற்றி சில மணி நேரங்கள் காக்கலாம்... இறுதியில் அதுவும் புளித்து போகும். மிஞ்சி நிற்பது வெண்ணைதான்.

இந்த வெண்ணையும்... சில மணி நேரங்களில் புளித்துப் போகும். அதை மீட்டெடுக்க வேண்டுமெனில்... அதைக் காய்ச்ச வேண்டும். வெண்ணை மெதுவாக உருகி... திரண்டு... நெய்யாக மாறிவிடும். இந்த மாற்றம்தான் இறுதியானது. இதன் அற்புதம் என்னவெனில்... இந்த நெய்யிற்கு அழிவு இல்லை என்பதுதான்.

ஆம்... இந்த அழிவில்லாத நெய்... சிறிது நேரத்திலேயே அழிந்து விடும் பாலுக்குள்தான் மறைந்திருந்தது. 

பால்...நெய்யாக மாறுவதற்குள்தான் எத்தனை அபாயங்களைத் தாண்ட வேண்டியிருக்கிறது... ?

~ காய்ச்சிய பாலாக... பால் கலந்த பானங்களாக... பால் முழுவதுமே... அந்த நிலையிலேயே தன்னை இழந்து விடுகிறது.
~ தயிராக மாற்றம் பெற்று... உணவாகிப் போகிறது.
~ மோராக மாற்றம் பெற்று பானமாகிப் போகிறது.
~ வெண்ணையான பின்னும்... முற்றிலும் அது உப உணவுப் பொருளாக மாறிவிடுகிறது.

இதிலிருந்தெல்லாம் தப்பித்த வெண்ணைதான்... இறுதியில் நெய்யாக மாற்றமடைகிறது.

இந்தப் பாலின் நிலையைப் போன்றதுதான்... ஜீவனின் வாழ்வும். 

உலக சுகங்களிலேயே மூழ்கி... தனது வாழ்நாட்களை... தனது 'கர்ம வினைகளின் வழியாகவே'... அதன் போக்கிலேயே சென்று...தனது மறைவையும்... தொடர்ந்து மீண்டும், மீண்டும் பிறவிகளையும்... அடையும் வாழ்வையே ஜீவர்கள் மேற்கொள்ள் நேரிடுகிறது.

இந்த அழிந்து போகும் உடலில்தான்... என்றும் அழியாத 'ஆத்ம சொரூபம்' இருக்கிறது என்ற உண்மையை... அறிந்து கொள்ளாமலேயே... பாலைப் போலவே... இந்த ஜீவர்களின் வாழ்வும் அழிந்து போகிறது.

எப்போது... இந்த அழிவில்லாத ஆத்ம சொரூபத்தை அறிந்து கொள்கிறோமோ... அப்போதுதான்... 'இறைவனின் கருணை'... 'ஒரு சத்குருவின்' உருவை எடுத்து வந்து... பாலுக்கு உறை போல... தனது உள்ளார்ந்த அனுபவ ஆற்றலால்... ஜீவனின் வெளி உலக வாழ்வைத் திருப்பி... உள்ளார்ந்த ஆத்ம அனுபவத்தை அளித்து... என்றும் அழியாத ஆத்ம சொரூபத்தில்... இந்த ஜீவனைக் கலக்க வைக்கிறது.

அப்போதுதான்... நெய்யைப் போலவே... இந்த ஜீவனும் அழிவில்லாத ஆத்மா சொரூபமாக மாறிவிடுகிறது. அப்போது, இந்த ஜீவனுக்கு, இறப்புமில்லை... பிறப்புமில்லை.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...