Monday, June 29, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 127. 'குலதெய்வம்' பகுதி - 1.





'ஒன்றாய்  அரும்பி, பலவாய் விரிந்து, இவ்வுலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் - எந்தன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா ! இப்பொருள் அறிவார்
அன்று ஆலியிலையில் துயின்ற எம்மானும் என் ஐயனுமே.'

ஒன்றாய் இருக்கும் பரம்பொருள் பலவாய் விரிதலைப் பற்றிய 'அபிராமி பட்டரின்' பாடல்தான் இது. 

ஒன்றாய் இருந்த பரம் பொருள்... இந்த உலகாய் விரியும் போது, ஒரே சக்தியின் பல பிரிவுகளாக அந்த சக்தி பிரிந்து நிற்கிறது. அதற்குக் காரணம், ஒவ்வொரு ஜீவனின் உள்ளுக்குள்ளேயும் இருந்தருளும், அந்த ஒரே சக்தி வடிவான ஆத்ம சொரூபமும், இந்த உலகில், அதன் 'கர்ம வினைகளின் விளைவாக' பலவாய் விரிந்து நின்றதால்தான்.

ஜீவர்கள், அதனதன் கர்ம வினைகளின் விளைவாக, பல நிலைகளை எதிர் கொள்ள வேன்டியிருப்பதால்... அவர்களுக்குள் இருந்தருளும் அருள் சக்தியும், அந்த ஜீவர்களைக் காத்தருள பலவடிவங்களை எடுக்க வேண்டியிருக்கிறது.

ஒரே சக்தியாக இருக்கும் போது 'ஈஸ்வரனாய்' இருக்கும் சக்தி, சலனமாகும் போது, 'சிவ சக்தி' ரூபமாகவும்... உலகெங்கும் விரியும் போது விஷ்ணுவாகவும்... பரந்து விரிந்து நின்று அருளும் போது எண்ணற்ற வடிவங்களாய்...'பரப்பிரம்ம' சொரூபமான பிரம்மாவகவும் எழுந்தருளி அருள்பாலிக்கிறது.

ஒரே சக்தியின் பல வடிவங்களான ஒவ்வொரு சக்தியும்... ஒரே ஆத்ம சொரூபமான ஒவ்வொரு ஜீவனும் எதிர்கொள்கிற ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ப... அவற்றிற்கு அருள் செய்வதற்காக... ஒவ்வொரு வடிவத்தை எடுத்துக் கொள்கிறது.

ஒரு ஜீவன், தனக்குள்ளே ஒடுங்கி இருக்கும் போது, பரம்பொருளான ஆத்மாசொரூபம் 'சிவபெருமானாரின்' வடிவத்தை எடுத்துக் கொள்கிறது. அது சற்று சலனிக்கும் பொது, 'பராசக்தித் தாயாரக'... சிவ சக்தி ரூபமாக மாறுகிறது. இந்த உலகத்தில் அது உலவும்பொது, 'மஹாவிஷ்ணுவாக' அவதரித்துக் கொள்கிறது. அதற்குத் துணை நிற்கும் போது 'மஹாலக்ஷ்மியாக' தன்னை மாற்றிக் கொள்கிறது.

இந்த உலகை இரட்சிக்கும் பொது 'எட்டு திக்குப் பாலகர்ளாக' தன்னை வரித்துக் கொள்கிறது. அது சப்தநாதமாக ஒடுங்கி நிற்கும் போது 'விநாயகராக'... ஆற்றலாக வெளிப்படும் போது 'முருகராக'... இவ்வாறு எண்ணற்ற வடிவங்களில்... காரண, காரியமாக... ஜீவர்களை இரட்சிக்க உருமாற்றமடைகிறது. 

ஜீவன் தனது ஓய்வாகிய ஆழ்ந்த உறக்கத்தில் ஆழும் போது... பரந்து விரிந்து நிற்கும் சக்தி... ஜீவனது ஹிருதயம் என்ற மூலத்தில்... ஒரே பரம்பொருளான ஆத்ம சக்தியாக ஒடுங்கி... ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. இதைத்தான், அபிராமி பட்டர், 'அனைத்தையும் நீங்கி நிற்பாள்... எந்தன் நெஞ்சுநுள்ளே... ' என்று, இந்த சூட்சுமத்தை உணர்ந்து கொண்டவர்களாக, ஆலிலையில்; துயிலும் எம்பெருமானாராகிய 'மஹாவிஷ்ணுவையும்'... மூலமான' சர்வேஸ்வரனையும்'... குறிப்பிடுகிறார். 

அபிராமி பட்டர் விளக்கியுள்ள இந்த சூட்சுமத்தை, எப்போதோ உணர்ந்து கொண்ட ரிஷிகள்... உலக மாந்தர்களின் உயர் மேம்பாடு கருதி, நமது சமுதாயத்தை, ஒரு சீரான சமுதாயமாக வழிநடத்த, ஜீவர்களின் ஆத்ம சக்தியை, ஒரு வரையரையாக வகுத்து, தெய்வ நிலைகளை... மாந்தர்கள் எந்நாளும் வழி தொடர ஏதுவாக சூட்சுமமான பல உட்பிரிவுகளாகப் பிரித்தனர்.

ஒழுக்க நியதிகளின் படி, அன்றைய பெரும் அரச வம்சங்களை 'சூரிய', 'சந்திர' குலங்களாகவும்', 'சூரிய வம்சத்திற்கு' குல தெய்வமாக 'மஹாவிஷ்ணுவையும்', சந்திர வம்சத்திற்குக் குல தெய்வமாகயும்,  'சர்வேஸ்வரனையும்'... குடி மக்களை... சிவ குலமாகவும், விஷ்ணு குலமாகவும் வரையருத்தனர். அந்தக் குலங்களுக்கு... 'குல தெய்வங்களையும்' வகுத்து... சமுதாயத்தை ஒரு சீரான வழியில் நடத்துவதற்கு...இந்த வரையறைகளை வகுத்துத் தந்தனர்.

இவையனைத்தும், மாந்தர்களின் ஒழுக்கமான வாழ்வு முறைகளுக்கு வழி காட்டுவதற்காகத்தான். இதில், இறுதியாக வரும் 'குலதெய்வ' வழிபாட்டை... முதல் மூல வழிபாடாகக் கொண்டு, அதன் வழியாக படிப்படியாக உள் திரும்பி... ஒன்றாக இருக்கும் பரம் பொருளான ஆத்ம சொரூபத்தில் கலந்து விட வைப்பதே, அவர்களின் ஒரே, குறிக்கோளாக இருந்தது.

அந்தக் 'குல தெய்வ வழிபாட்டின்' முக்கியத்துவத்தையும்... அதனால் கட்டமைக்கப்பட்ட ஒழுங்கான சமுதாயக் கட்டமைப்பையும்... தொடர்ந்து பார்ப்போம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...