எங்களது குருநாதர், திடீரென... 'பணம் என்பது முக்கியமா... அப்பா !' என்று ஒரு கேள்வியை முன் வைத்தார். நாங்கள், பவ்யமாக... 'தேவைக்கு ஏற்ப, அவசியமான அளவுக்கு இருப்பது போதுமே... சுவாமி..' என்றோம்.
'என்ன... பணத்தைப் பற்றி இவ்வாறு சொல்லி விட்டாய்... !' என்று... ஒரு சுவாரஸ்யமான கதையொன்றை சொல்ல ஆரம்பித்தார்...
'ஒருவன் இறக்கும் தருவாயில், படுக்கையில் படுத்திருந்தான். அவனுக்கு துளசித் தீர்த்தம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவனது வாய்க்கருகில், இலை வடிவில் 'துளசித் தாயார்' காத்துக் கொண்டிருந்தாள்.
அப்போது, அருகிலிருக்கும் கோவிலில், பிரதானமான தெய்வம் பக்தர்களின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தது. ஆனால், ஒருவரையும் காணவில்லை. அவருக்கு பூஜையும்... நிவேதனமும் சமர்ப்பித்து... நிவேதனத்தின் ஒரு பகுதி பட்சிகளுக்காக வைக்கப்பட்ட போதும்... கரைவது கூட (காகங்கள்) வந்து அன்னத்தை எடுக்கவில்லை. ஒரு சிதறுகாய் உடைக்க வைத்தும்... அதைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளக்கூட... எவரும் வராத நிலையில்... கோபத்தின் உச்சிக்குச் சென்ற தெய்வம்... தனது காலால், தனக்கு முன் இருக்கும் உண்டியலை எட்டி உதைத்தது.
உண்டியல் படிகளில் உருண்டு ஓடி... அதன் மூடி திறந்து... கீழே, சில்லறைகள் சிதறி உருண்டு ஓடின. படுக்கையில் இறக்கும் தருவாயில் படுத்திருந்தவன்... சடாரென எழுந்து, 'என்ன... காசு விழும் சத்தம் கேட்கிறதே... !' என்றானாம். அதைக் கேட்ட துளசித் தாயார் விக்கித்து நின்றாளாம்... !'
... என்று முடித்தார்.
அனவரையும் சிரிக்க வைத்து... பணத்தின் தன்மை... இன்று, எந்த நிலையில் இருக்கிறது... என்பதை, குருநாதர் உணரவைத்தார்.
குருநாதரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment