Tuesday, July 22, 2025

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம். 

அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவான் சிரீடி ஸாயிமஹானின்' திருவடியில் கலந்து விட்ட, திரு ராஜ்மோகன் அவர்களுக்கும், எங்களது பலமுறைப் பயணமாகிய 'திருவண்ணாமலைப்' பயணத்தின் போதுதான் இந்த அற்புத வாய்ப்பு  நிகழ்ந்தது.                                 

பகவான் சேஷாத்திரி ...ரமண மகிரிஷிகள் ...யோகி ராம்சுரத்குமார் ஆசிரமங்களை சேவித்துவிட்டு, அன்று, சேஷாத்திரி ஆசிரமத்தில் சற்று உடல் நலம் குன்றிய நிலையிலிருந்த, 'ஸ்ரீ உமாதேவி தாயரை' தரிசனம் செய்ய முயன்று, வாய்ப்பில்லாது போகவே, அவரின் குடில் வாசலில் எங்களது அன்பை சமர்ப்பிவித்து விட்டு வெளியே வந்தோம்.  

ஆசிரமத்திற்கு எதிரில் நின்று கொண்டிருந்த எங்களுக்கு அருகே இருவர் ஒரு 'அறிவிப்புப் பலகையை'  ஊன்றினார்கள். அந்த அறிவுப்பு பலகையில்தான் 'தாயாரின் ஆசிரமத்திற்கு செல்லும் வழி' என்ற வாசகம் பதிவாகியிருந்தது.

உடனே எங்களது பயணம் தாயாரின் ஆசிரமத்தை நோக்கி தொடர்ந்தது. மாடியில் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்த 'திரு வேலன்' அவர்களை கீழிருந்து பார்த்தோம். அன்புடன் எங்களை மேலே அழைத்து எங்களிடம்  நீண்ட நேரம் உரையாடினார்.  

தாயாரின் தரிசனத்திற்கு தற்போது வாய்ப்பில்லை என்று கூறியவரிடம், நாங்கள் இன்னும் இரண்டு நாட்களுக்கு திருவண்ணாமலையில்தான் இருப்போம் என்றும், இருக்கும் வரை ஆசிரமம் வந்து செல்கிறோம் என்றும் கூறி ... தாயாரின் குடிலை நொக்கி வணங்கி எழுந்து வந்தோம்.                   

அடுத்த நாள் காலையிலும் ... அதற்கு அடுத்த நாள் மாலையிலும் தாயாரின் குடிலுக்குச் சென்றோம். அந்த மாலை வேளையின் அனுபவத்தை, என்றுமே மறக்கமுடியாது.                        

எங்களது அன்பை வெளிப்படுத்த சிறிது பழங்களை சமர்ப்பித்துவிட்டு, பின்னர்  ஊர் திரும்பலாம் என்பதுதான் எங்கள் திட்டம்.  திரு. வேலன் அவர்கள் எங்களிடம் அன்புடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.          

எங்களிடம் உரையாடிக் கொண்டிருந்த திரு. வேலன் அவர்களின் பின்னால் இருந்து ... தாயார் மெல்ல நடந்து வந்ததைக் கண்ட நாங்கள் மெய்சிலிர்த்துப் போனோம்.                                            

இன்றும் அந்த நிகழ்வு என் கண் முன்னே நிலைத்து நிற்கிறது. 'ஒரு வண்ணத்துப் பூச்சி, மெல்லப் பறந்து வந்து , ஒரு மலரின் இதழ் மேலே, மெல்ல அமர்வது போல ...' தாயார் அங்கிருந்த இருக்கையில் மெல்ல அமர்ந்தார். பத்து நிமிடங்களுக்கு மேலாக, அந்த இருக்கையில் அமர்ந்தபடியே, எங்களை ஆழ்ந்து நோக்கி அருள் செய்தார். பின்னர் எழுந்து நின்று, தனது கையை உயர்த்தி,அனுக்கிரகம் செய்து விட்டு, மெல்ல அடியெடுத்து வைத்து உள்ளே சென்றார்.                                            

வஜ்ராஸ்னத்தில் அமர்ந்திருந்த நான், இந்த நிகழ்வு முழுவதும் ... கண்களில் நீர்மழ்க ... அணு அணுவாக உள்வாங்கிக் கொண்டேன். அருகிலே அண்ணார் , கண்களை மூடியபடியே ஆனந்தத்தில் திழைத்திருந்ததை பிறகுதான் என்னால் உணரமுடிந்தது.                                                  

தாயாரால் அனுக்கிரகிக்கப்பட்ட பின்னர் ... திரு. வேலன் அவர்களால் வழங்கப்பட்ட பிரசாதமான பழங்கள், தாயாரின் திருவுருவப் படங்களுடனும், நிறைந்த மனதுடன்  திரும்பியதும் ... அன்று இரவு கிரிவலப் பயணத்தின் போது திரு, வேலன் அவர்களுடன் மீண்டும் ஒரு தேநீர் விடுதியில் சந்திப்பு நிகழ்ந்ததும் ...இன்றும் பசுமையாக மனதில் நிழலாடுகிறது.                                                   

ஸாய்ராம்.




No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...