இரண்டு விதமான விருந்துகள் இருக்கின்றன...
முதல் விருந்து... பொதுவானது. எல்லோருக்குமான விருந்து. திருமணம், விழாக்கள் போன்ற காலங்களில்... அனைவரும் பொதுவாக அமர்ந்து உண்ணும் விருந்து.
இந்த விருந்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான பதார்த்தங்கள் பரிமாறப்படும். அனைத்து இலைகளுக்கும் பறிமாறுதல் முடிந்தபின்... விருந்தினர்கள் அனைவரும் வரிசையாக அமர்வார்கள். நாம் எந்த இலையில் உட்காரப் போகிறோம் என்பது கூட நமக்குத் தெரியாது. நமக்கு அருகில் இருப்பவர்கள் யாரென்றும் தெரியாது. எது வேண்டுமானாலும் கேட்டு வாங்கி உண்ணலாம்.
இரண்டாவது விருந்து... தனியானது. நமக்கு மட்டுமே அளிக்கப்படும் விருந்து. நமக்கு மிக வேண்டியவரின் அழைப்பின் பேரில்... அவரது வீட்டிற்கே சென்று விருந்தேற்பது. இதில் நமக்கு விருந்தளிப்பவரும்... அவரது குடும்பத்தினரும்... நம்மை வாசலிலேயே வந்து வரவேற்பார்கள்.
நம்மை அமர வைத்து, சிறிது நேரம் அளவளாவியதற்குப் பின்னர்... மரியாதையுடன் அழைத்துச் சென்று... நமக்கென தயார் செய்யப்பட்ட பிரத்தியோகமான பதார்த்தங்கள் ஒவ்வொன்றின் சுவையையும் நமக்குப் புரிய வைத்துப் பறிமாறுவார்கள். அனைவருக்கு முன்னும்... நம்மால் கேட்டு வாங்கி சாபிட முடியாது. சற்றுக் கூச்சத்துடன்தான் உணவை சுவைக்க முடியும். உண்ட பின்னர்... பழம் மற்றும் வெற்றிலை மடித்துக் கொடுத்து விருந்தைப் பூர்த்தி செய்து... வாசல் வரை வந்து வழியனுப்புவார்கள்.
முதல் விருந்தில்... அனைவருக்கும் பொதுவான விருந்தில்... பொது மனிதர்களுள் ஒருவராக... நாம் ஏற்றுக் கொண்ட விருந்து. இதில் தனிப்பட்ட மரியாதைக்கும் இடம் இல்லை... எந்த விதமான சொல் கடனும் இல்லை.
இரண்டாவது விருந்தில்... நமக்கென பிரத்தியோகமாக வழங்கப்பட்ட மரியாதையும் உண்டு... அதே நேரத்தில், 'நாங்கள் அவருக்கு ஒரு சிறப்பான விருந்தை அளித்தோம்... !' என்றும், 'அவரைப் பார்த்துப் பார்த்துக் கவனித்தோம்...!' என்ற... சொல் கடனும் உண்டு.
முதலாவது விருந்து... கர்ம யோகமாகிறது.
இரண்டாவது விருந்து... கர்ம வினைகளில் சேருகிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment