Friday, January 31, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 80. '6 ஆம் பாவம்', வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'.



6 ஆம் பாவம் :



ருண - ரோக - சத்ரு ஸ்தானம் என்று குறிப்பிடப்படும்... ஜோதிடத்தின் மிக முக்கியமான பாவம். இதைத்தான், கடன் - நோய் - எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஸ்தானம் என்று குறிப்பிடுகிறோம்.

ஒரு ஜீவன், தனது 'கர்ம வினைகளை' சுமந்து கொண்டுதான் இந்தப் பிறவியை அடைகிறது. அந்தக் கர்மவினைகளான 'பாபத்தையும்... புண்ணியத்தையும்' சமமாகப் பகிர்ந்து கொண்டு பிறக்கிறது. அதில் 'பாபம்' என்ற... துன்பத்தையும், தடங்கல்களையும், எதிர்ப்புகளையும், ஜீவன், எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது...? என்பதை இந்த '6 ஆம் பாவம்' வெளிப்படுத்துகிறது.

இந்தப் பாவத்தை, துன்பத்தை வெளிப்படுத்தும் பாவமாக மட்டும் பார்க்காமல்... 'ஜோதிடத்தின் சூட்சுமங்களை' வெளிப்படுத்தும் பாவமாகவும் பார்க்க வேண்டும்.

# பூர்வ புண்ணிய பாவமான '5 ஆம் பாவத்திற்கு'... இந்த 6 ஆம் பாவம் 'இரண்டாம் பாவமாக' வருகிறது.

- ஜீவன் சுமந்து வரும் 'கர்ம வினைகளின்' விளைவுகளைத்தான்... இந்த '6 ஆம் பாவம்' வெளிப்படுத்தப் போகிறது என்பதற்கு இந்த அமைவே சாட்சி.

- ஜீவன் பெறும் குடும்ப அமைவும், அதன் புறச் சூழல்களும், ஜீவனின் கர்ம வினைகளைச் சார்ந்ததுதான் என்பதை... இது உறுதிப் படுத்துகிறது.

# ஜீவனின், வாழ்வுக் காலத்தை வெளிப்படுத்தும் '8 ஆம் பாவமான'... 'ஆயுள் பாவத்திற்கு', இந்த '6 ஆம் பாவம்'... 11 என்ற 'லாப ஸ்தானமாக' அமைகிறது.

- ஜீவன் தனது வாழ்நாளை முழுமையாக வாழ்வதற்குக் 'காரணங்கள்' தேவைப்படுகிறது. அந்தக் காரணங்கள், ஜீவனது வாழ்வின் இலக்காகவோ... நோக்கமாகவோ... கடமையாகவோ... சேவையாகவோ.. இருக்கலாம். இந்தக் கடமைகள் வழியே கடந்து போகும் போது... தடைகளையும், தடங்கல்களையும், எதிர்ப்புகளையும் கடந்து போக நேரிடும். இவற்றை உத்வேகத்துடன் எதிர் கொண்டு நடை போடும் ஜீவன்தான்... தனது இலக்கை அடைகிறது.

- ஆகவேதான், இந்த '6 அம் பாவம்'... '8 ஆம் பாவமான' ஆயுள் ஸ்தானத்திற்கு, லாபமாக அமைகிறது.

# ஜீவன்... தான் மேற்கொள்ள வேண்டிய 'தர்மத்தையும்', அது அடையும் 'பாக்கியத்தையும்' வெளிப்படுத்தும்... '9 ஆம் பாவத்திற்கு', இந்த '6 ஆம் பாவம்'... 'கர்ம ஸ்தானமாக' அமைகிறது... அதாவது 'ஜீவன ஸ்தானமாக' அமைகிறது.

- ஒரு ஜீவன், எவ்வளவு 'கடுமையான வினைச் சுமைகளை' வேண்டுமானாலும் சுமந்து கொண்டு வந்திருக்கலாம். அனால், அது தனது வாழ்வில் மேற்கொள்ளும் 'தர்மமான வாழ்வு முறையே' அந்த பாப வினைகள் அனைத்தையும் களைந்து ஓட வைக்கும்.

- ஜீவனின், 'தர்மத்திற்கும் - அதர்மத்திற்கும்' இடையேயான போராட்டத்திற்கு, இந்த '6 அம் பாவம்'... 'கர்ம ஸ்தானமாக' அமைகிறது.

-  ஜீவன் அடையும் 'சுக-பாக்கியங்கள்' அனைத்தும், இந்த '6 அம் பாவத்தின்' நிலையை ஒட்டியே அமையும்.

# ஜீவனின்... 'கர்ம ஸ்தானம்' என்ற '10 ஆம் பாவமான'... 'ஜீவன் ஸ்தானத்திற்கு', இந்த '6 ஆம் பாவம்'... 'பாக்கியமாகவும்-தர்மமாகவும்' அமைகிறது.

- ஜீவன்... இந்தப் பிறவியில் மேற்கொள்ளும் 'கடமைகள்' என்ற ஜீவனப் பாதை... இந்த '6 ஆம் பாவம்' வெளிப்படுத்தும் 'வினைகளின் விளைவுகளை' ஒட்டியே அமைகிறது.

- '6 ஆம் பாவம்' வெளிப்படுத்தும் 'வினைகளின் விளைவுகளுக்கு' ஏற்ப... தனது செயல்களை,  வெளிப்படுத்தும் போதும்... எதிர்கொள்ளும் போதும்... அவை 'தர்மத்தை ஒட்டியதாக' இருக்க வேண்டும்.

- ஜீவன் வெளிப்படுத்தும் தர்மம் ஒன்றே, '6 ஆம் பாவம்' வெளிப்படுத்தும் 'வினைகள்' அனைத்தையும், பாக்கியமாக மாற்றக்கூடிய மந்திரமாக இருக்கும்.

# ஜீவனின்... 'சுக-சயனம்' மற்றும் 'விரய பாவமான'... 12 ஆம் பாவத்திற்கு, இந்த '6 ஆம் பாவம்'... 'தொடர்பு ஸ்தானமான', 7 ஆம் பாவமாகிறது.

- ஜீவனின் சுகமும், நிம்மதியும், அது எதிர்கொள்ளும் 'சூழல்களைப் பொருத்ததுதான்'.
- 12 ஆம் பாவம்... ஜீவனின் 'முற்பிறப்பை' வெளிப்படுத்தும் பாவமாகவும் அமையும்.
- இந்த '6 ஆம் பாவம்' வெளிப்படுத்தும் சூழல்களுக்கும், '12 ஆம் பாவம்' வெளிப்படுத்தும் சூழல்களுக்கும், இடையே... ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும்.
- ஜீவனின் முற்பிறப்பிற்கேற்பவே, இந்தப் பிறவியில், ஜீவன் எதிர்கொள்ளும் தொடர்புகளும் அமையும்.

இன்னும், எண்ணற்ற 'சூட்சுமங்களை' இந்த '6 ஆம் பாவம்' தன்னகத்தே புதைத்து வைத்துள்ளது.

ஸாய்ராம்.

-

Thursday, January 30, 2020

'பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்' அருளிய... சிறு கதைகளின் தமிழாக்கம். 'வைரத்தின் விலை'





'இறை அவதாரங்களான மகான்களை', அவ்வளவு எளிதாக அடையாளம் கண்டுவிட முடியாது. மிகச் சாதரண மாந்தர்களுக்கிடையே உலவும் அவர்களை யாரால்தான் இனம் பிரித்து அறிந்துவிட முடியும்...?

ஞானம் பெற்றவர்களால்தான், மகான்களை இனம் கண்டு கொள்ள முடியும். அதுவும், அவரவர்கள் பெற்ற ஞானத்தை மூலமாகக் கொண்டுதான்... மகான்களின் சாந்நியத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

சிலரால், அவரை 'சாதாரண மனிதர்' என்றும்... சிலரால், அவரை 'புனிதர்' என்றும் அறிந்து கொள்ள முடியும். ஆனால்,வெகு சிலரால் மட்டுமே அவரை ஒரு 'அவதார புருஷர்' என்று உணர்ந்து கொள்ள முடியும். அவரவர் பெற்ற ஞானத்தின் வழியேதான்... அவரவரின் அனுபவமும்.

உள்வாழ்வின் ஞானத்தை, உலகவாழ்வின் மூலதனமான பொருளாதாரத்தின் ஏற்ற-இறக்கங்களை, உதாரணமாகக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.

ஒரு வைர வியாபாரி, தனது வேலையாளிடம் ஒரு வைரத்தைக் கொடுத்து, 'இந்த வைரத்தை சந்தைக்கு எடுத்துப் போய், வெவ்வேறுபட்ட வியாபாரிகளிடம், இதன் விலையை விசாரித்துக் கொண்டு வா. இதன் விலையை ஒவ்வொருவரும் எவ்வாறு நிர்ணயிக்கிறார்கள் என்று பார்ப்போம்...!' எனக் கூறினார்.

வேலையாளும், அந்த வைரத்தை எடுத்துக் கொண்டு, சந்தையில் கத்தரிக்காய் வியாபாரியிடம் சென்று, அதன் விலையை விசாரித்த போது, வைரத்தைத் தனது கையில் எடை பார்ப்பது போலப் பார்த்து, 'இதற்கு, ஒன்பது கத்திரிக்காய் கூறுகளைத்தான் என்னால் தர முடியும்...!' என்றான். வேலையாள், ' கொஞ்சம் கூட்டி, பத்து கூறுகளாகத் தரமுடியுமா...?' என்று கேட்டதற்கு, ' நான் சொன்ன விலை ஏற்புடையதாக இருந்தால் கொடு. நான் ஏற்கனவே சந்தை விலையை விட சற்று அதிகமாகத்தான் சொல்லியிருக்கிறேன்...' என்றான்.

மனதிற்குள் சிரித்தபடி, வேலையாள் முதலாளியிடம் சென்று, 'ஐயா, ஒரு கத்தரிக்காய் வியாபாரியிடம் சென்றேன். அவன் ஒன்பது கத்தரிக்காய் கூறுகள்தான் தர முடியும் என்றும், அதற்கு மேலாக ஒரு கூறு கூட தர முடியாதென்றும் மறுத்துவிட்டான். மேலும், அவன் கூறிய விலை சந்தை விலையை விட அதிகமானது என்றும் கூறினான்..' என்றான்.

வைர வியாபாரி சிரித்துக் கொண்டே, 'இப்போது இந்த வைரத்தை ஒரு துணி வியாபாரியிடம் கொண்டு சென்று விசாரித்து வா. கத்தரிக்காய் வியாபாரிக்கு வைரத்தைப் பற்றி தெரிய வாய்ப்பு இருக்காது, அவனை விட துணி வியாபாரியின் பணப் புழக்கம் சற்று கூடுதலாக இருக்கும். அவன் எவ்வாறு மதிப்பிடுகிறான்... என்று பார்ப்போம்...!' என்றார்.

வேலையாளும் துணி வியாபாரியிடம் சென்று, ' இதை வாங்கிக் கொள்கிறீகளா... வாங்குவதானால, இதற்கு எவ்வளவு கொடுப்பீர்கள்...?' என்று கேட்க, வியாபாரியோ, 'இது நன்றாக இருக்கிறது. இதை வைத்து ஒரு ஆபரணம் செய்து கொள்ளலாம். இதற்கு தொள்ளாயிரம் ரூபாய் தர முடியும்...' என்றான். வேலையாளோ, 'சற்று கூட்டிக் கொடுத்தால் உங்களுக்கே தந்து விடுவேன். ஆயிரம் ரூபாயாவது கொடுங்கள்...' எனக் கேட்க, ' நான் சொன்னதை விட ஒரு ரூபாய் கூட கூட்டிக் கொடுக்க முடியாது. கட்டாயப் படுத்த வேண்டாம். நீங்களே ஒரு முடிவு செய்து கொள்ளுங்கள்...' என்றான்.

மீண்டும், மனதிற்குள் சிரித்தபடியே, முதலாளியிடம் சென்று நடந்ததைக் கூற, அவரும் சிரித்துக் கொண்டே, 'இப்போது ஒரு நகை வியாபாரியிடம் சென்று விசாரித்து வா...!' என்றார். நகை வியாபாரியிடம் சென்று, அவனிடம் வைரத்தைக் கொடுத்தவுடன், அவன் அதை வாங்கிப் பார்த்ததுமே, ' இதற்கு ஒரு லக்ஷம் ரூபாய் தருகிறேன்...' என்றான்.

திருப்தியடைந்த வேலையாள், அந்த வைரத்தை, அந்த நகை வியாபாரியிடமே கொடுத்து, ஒரு லக்ஷம் ரூபாய் பெற்று, அதைக் கொண்டு வந்து தனது முதலாளியிடம் ஒப்படைத்தான். இப்போது முதலாளி கேட்டார், 'வைரத்தின் விலை, இப்போது உனக்குப் புரிந்து விட்டதா...?' என்று.

ஆம், அவரவரின் தகுதிக்கு ஏற்பவே அருளும்... பொருளும்.

ஸாய்ராம்.

'பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்' அருளிய... சிறு கதைகளின் தமிழாக்கம். 'புத்தக அனுபவம்'





 இறைவனைப் பற்றிய அறிதல் வெறும் ஏடுகளில் இல்லை. ஆதலால், புத்தகங்களின் வாயிலாக இறைவனை அடைந்துவிடமுடியாது. ஏடுகளைத் தாண்டி, அந்த இறைவனை, அனுபவத்தால்தான் உணர்ந்து கொள்ள முடியும்.

இறைவனை, அறிந்துணர்ந்த குருநாதர்களைத் தவிர வேறு யாராலும் அந்த அனுபவத்தை நமக்குக் கொடுத்துவிட முடியாது. நமது குருவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு, உழைத்து அந்த இறையருளின் கருணையைப் பெற வேண்டும். குருவை அடைய முடியாதவர்கள், நேரடியாக இறைவனிடம் மன்றாடி, வேண்டி, அவன் கருணையைப் பெறவேண்டும்.

புத்தகங்கள்... அவை, இறைவனின் கருணையைப் பற்றியதாக இருந்தாலும், அவரை நிர்த்தாரணம் செய்யக் கூடிய மெய்ஞான வடிவங்களாக இருந்தாலும், அல்லது, விஞ்ஞானமாக இருந்தாலும், அவற்றின் வழியாக இறை அனுபவத்தைப் பெற முடியாது.

இறை அனுபவத்தை உணர்ந்து கொள்ள, உண்மையான முயற்சியை மேற்கொள்ளும் போது, அவரின் கருணை நமக்கு பூரணப்படும் போது, புத்தக வடிவங்கள் நமக்குத் தேவையிலாததாகப் போய் விடுகிறது.

ஒரு சந்தையை வெகு தூரத்திலிருந்து, அங்கிருந்து வரும் சப்தங்களை மட்டும் வைத்து பார்த்துவிட முடியாது. சந்தைக்கு நேரில் செல்லும் போதுதான், அங்கிருந்து எழுந்த சப்தங்கள் ஒவ்வொன்றையும்... தனித்தனியாக பிரித்து அறிந்து கொள்ள முடியும்.

அது, 'இந்தாருங்கள், உருளைக் கிழங்கு... வாங்கிக் கொள்ளுங்கள்...!' என்றும், 'எடுத்துக் கொண்டு, பணம் கொடுங்கள்...!' என்றும், தனித்தனியாக இருக்கும். தூரத்தில் சப்தமாக இருந்தது. அருகில் தெளிவான வார்த்தைகளாக இருக்கும். அதுபோலத்தான், புத்தகத்திலிருந்து மீண்டு... முயற்சியால் இறைவனைத் தேடுவதும்.

Wednesday, January 29, 2020

'பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்' அருளிய... சிறு கதைகளின் தமிழாக்கம். 'தூண்டிலிடுபவரின் கவனம்'




ஒரு முனைப்பட்ட தியானம் என்பது... தியானிப்பவரால் எதையும் பார்க்கவோ, கேட்கவோ முடியாதது மட்டுமல்ல... தொடுதலைக் கூட உணரமுடியாத நிலையாக இருக்கும். புற உலக சிந்தனைகள் அனைத்தையும் இழந்த நிலையாக இருக்கும்.

ஒரு ஏரிக்கரையில் அமர்ந்தபடி,  தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தவனுடய கவனம் முழுவதுமாக தூண்டிலில் இருந்த சிறு மிதவையின் மீதே இருந்தது. இறுக்கமாகத் தூண்டிலைப் பிடித்தபடி, எப்போது அந்த மிதவை நீரில் மூழ்குமோ... அப்போது தூண்டிலைத் தூக்கி விட வேண்டும் என்ற கவனமான எண்ணத்துடனேயே இருந்தான்.

அப்போது வழிப்போக்கன் ஒருவன் வந்து, ' திரு.பானர்ஜி அவர்களது வீடு எங்கிருக்கிறது என்று வழி காட்ட முடியுமா...?' என்று கேட்டான். மீன்பிடிப்பவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. சுற்றி இருக்கும் சூழல் பற்றிய எந்த பிரஞ்சையும் இல்லாமல், அவனது கவனம் முழுவதும் அந்த மிதவையின் மீதே இருந்தது. மிதவை சற்று அசைய ஆரம்பித்தது. கைகளில் நடுக்கத்துடன்... தூண்டிலைத் தூக்கிவிட வேண்டும் என்ற கவனத்திலேயே இருந்தான்.

வழிப்போக்கனோ, மீண்டும், மீண்டும் அதே கேள்வியைக் கேட்டுச் சலித்து, பதில் ஏதும் வராத நிலையில், எரிச்சலுடன் அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தான். அதே வேளை, தூண்டிலின் மிதவை நீரில் மூழ்கியது. அதிலேயே கவனத்தை வைத்துக் கொண்டிருந்தவன், சட்டென்று தூண்டிலை இழுக்க, ஒரு பெரிய மீன் வந்து கரையில் விழுந்தது.

முகத்தில் வழிந்து கொண்டிருந்த வியர்வையைத் துடைத்தபடி, நடந்து சென்று கொண்டிருந்த வழிப்போக்கனைப் பார்த்து, 'ஐயா, இங்கே பாருங்கள்...!' என்று கூப்பிட்டான். திரும்பிப்பார்க்காமல் எரிச்சலுடன் சென்று கொண்டிருந்த வழிப்போக்கனை, மீண்டும் சத்தமாகக் கூப்பிடவே, திரும்பி வந்த வழிப்போக்கன், 'ஏன் என்னைப் பார்த்து சத்தம் போட்டு கூப்பிடுகிறாய்...?' என்று கேட்டான். அதற்கு இவனோ, 'நீங்கள், ஏதோ என்னிடம் கேட்டீர்களே...!' என்றான்.

திகைத்து நின்ற வழிப் போக்கனோ, 'நான் அதே கேள்வியைப் பல முறைக் கேட்டேன். அதை மீண்டும் ஒரு முறை கேட்க வேண்டுமோ...?' என்றான். அதற்கு மீன் பிடிப்பவன், 'அந்த நேரத்தில், எனது தூண்டிலின் மிதவை நீரில் மூழ்கும் தருவாயில் இருந்தது. அதனால், எதையும் கேட்க முடியாத நிலையில் நான் இருந்தேன்...' என்றான்.

இதுதான் தியானத்தின் ஒரு முனைப்பட்ட நிலை.

ஸாய்ராம்.

'பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்' அருளிய... சிறு கதைகளின் தமிழாக்கம். 'கடவுளின் தரிசனம் கிடைக்குமா...?'





கடவுளை தரிசனம் செய்தே தீர வேண்டும்...! என்ற தீவிரம் மட்டும் இருந்தால் போதும்... அவன், நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை... அவரின் தரிசனம் உடனடியாகக் கிட்டும்.

மனிதன் உலக வாழ்வில் மூன்று விதமான பற்றுதல்களில் நீங்கமுடியாத அன்பைப் பொழிகிறான் : சொத்துக்களின் மீதான பற்றுதல் ; கணவன், மனைவி  இவர்களுக்கிடையேயான பற்றுதல் ; குழந்தையின் மீதான தாயின் பற்றுதல்.

இந்த மூன்று வகையான உலகப் பற்றுதல்கள் மீது வைக்கும் அன்பை இணைத்து... அதைக் கடவுளின் மீது வைக்கும் போது... அவரின் தரிசனம் உடனே கிடைத்துவிடும்.

இதே கேள்வியை, ஒரு சிஷ்யன் தனது குருவிடம் கேட்டான், ' குருவே, நான் எவ்வாறு கடவுளை தரிசனம் செய்வது...?'. 'என்னுடன் வா...! நான் காட்டுகிறேன்...!!' என்ற குரு, அவனை ஒரு குளத்திற்கு அழத்துச் சென்றார். குளத்திற்குள் இறங்கியவுடன், சிஷ்யன் எதிர்பார்க்காத போது, திடீரென்று அவனது தலையைத் தண்ணீருக்குள் அமிழ்த்தினார்.

எதிர்பாராத போது நிகழ்ந்த நிகழ்வினால் சிஷ்யன் தண்ணிருக்குள் மூச்சுக்காகத் தவித்தான். எப்போது ஒரு, ஆழ்ந்த மூச்சை எடுப்பேன்... என்று திணறிக் கொண்டிருந்த வேளை... குரு தனது கையைத் தலையிலிருந்து எடுத்தார். நீண்ட மூச்சை எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட சிஷ்யனிடம், குரு கேட்டார், 'தண்ணீருக்குள் எதை உணர்ந்தாய்...?'. அதற்கு சிஷ்யன், 'குருவே, நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஒரே ஒரு முச்சுக்காகத் திணறித் தவித்தேன்...!' என்றான்.

அப்போது குரு, 'அந்த மூச்சுக்காக நீ ஏங்கியது போலவே, கடவுளுக்காக நீ ஏங்கும் போது, அவரின் தரிசனம் கிடைப்பதற்கு நீ காத்திருக்கத் தேவையில்லை...!' என்றார்.

Tuesday, January 28, 2020

'பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்' அருளிய... சிறு கதைகளின் தமிழாக்கம். 'யானைப் பாகனான இறைவன்'




பரப்பிரம்மமான இறைவன், பிரபஞ்சத்திலுள்ள அசையும் உயிரினங்களிலும், அசையா வஸ்துக்களிலும் நிறைந்திருக்கிறான். 'அவனன்றி ஓரணுவும் அசையாது' என்பதன் விரிவாக்கம் இதுதான்.

அனைவரது உள்ளத்திலும் சந்தேகமின்றி நிறைந்திருக்கும் இறைவன், தர்மத்தின் வழி செல்பவர்களுக்குள்ளும்... தர்மத்திற்கு எதிராகச் செயல்படுபவர்களுக்குள்ளும் நிறைந்திருக்கிறார்.

அனைவருக்குள்ளும் இறைவனைக் காணும் ஒரு பக்தன், தர்மத்தின் வழி செல்பவர்களை அடையாளம் கொண்டு அவர்களை அணுகி நெருக்கம் கொள்வது எவ்வளவு முக்கியமோ... அதை விட முக்கியம், தர்மத்திற்கு எதிராக செயல்படுபவர்களை விட்டு விலகி நிற்பது. இதை மிக எளிதான ஒரு கதையைக் கொண்டு 'பகவான்' விளக்குவார்.

ஒரு காட்டுக்குள் தனது ஆசிரமத்தை அமைத்துக் கொண்ட குருவிடம் பல சிஷ்யர்கள் இருந்தனர். அவர் தனது சிஷ்யர்களுக்கு, 'எல்லா உயிரினங்களுக்குள்ளும் உறையும் இறைவனை உணர்ந்து கொள்வது மட்டுமல்ல அந்த உயிர்களை வணங்கி பணியவும் வேண்டும்...' என்று அறிவுருத்தினார்.

அதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த சிஷ்யன், ஆசிரமத்திற்குத் தேவையான சுள்ளிகளை சேகரிக்க சக சிஷ்யர்களுடன் காட்டுக்குள் சென்றான். அப்போது, 'மதம் பிடித்த யானை ஒன்று ஓடி வருகிறது. அதன் வழியில் குறுக்கிடாமல் விலகி ஓடுங்கள்...!' என்ற குரல் ஒலித்தது.

அந்தக் குரலைக் கேட்ட அனைவரும் அந்தப் பாதையிலிருந்து விலகி ஓடினார்கள்... அந்தக் குறிப்பிட்ட சிஷ்யனைத் தவிர. அவனை மற்றவர்கள் அழைத்த போது, 'அந்த யானைக்குள்ளும் இறவனே உறைகிறார். நான் ஏன் ஓட வேண்டும்...?' என்று கேட்டது மட்டுமல்ல... ஒடி வரும் யானையை நோக்கி பணிவுடன் வணங்கி நின்றான்.

'ஓடி விடு... ஓடி விடு...!' என்ற பாகனின் குரலையும் மறுத்துவிட்டு வழியில் சின்ற சிஷ்யனை, யானை தனது தும்பிக்கையால் தூக்கி வீசி விட்டுச் சென்றது. பலத்த அடிபெற்று மயங்கி விழுந்த சிஷ்யனை, குருவுடன் வந்த சிஷ்யர்கள் சுமந்து சென்று ஆசிரமத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

மயக்கம் தெளிந்த சிஷ்யனிடம், 'யானை வருவது தெரிந்தும்... அதன் வழியில் ஏன் நின்றாய்...?' என்று கேட்டபோது, 'நமது குருநாதர், அனைத்து உயிரினங்களுக்குள்ளும் இறைவன் உறைந்திருப்பதாகச் சொன்னதால்... யானைக்குள்ளும் இறைவன் உறைந்திருக்கிறார் என்று 'யானை இறைவனை' பணிந்து வணங்கினேன்...!' என்றான்.

அப்போது குறுக்கிட்ட... குருநாதர், 'ஆமாம் குழந்தாய், 'யானை இறைவன்' மதம் பிடித்து ஓடிவரும் போது... 'பாகன் இறைவன்' உன்னை விலகி இருக்கச் சொன்னானே. அதை ஏன் நீ கேட்கவில்லை. மதம் பிடித்த 'யானை இறைவனைத்' தவிர்த்து... உதவி புரிய வந்த' பாகன் இறைவனின்' வார்த்தையைத் தானே நீ கேட்டிருக்க வேண்டும்...!' என்றார்.

ஸாய்ராம்.

'பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்' அருளிய... சிறு கதைகளின் தமிழாக்கம். 'வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது பிரம்மம்'






புதிதாகத் திருமணமான மணப்பெண், தனது கணவருடன் பிறந்தகத்திற்கு வந்திருந்தாள். அவளின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத, அவளது தோழர்களும், தோழிகளும், மணமக்களை வாழ்த்துவதற்காக, அவளின் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.

தோழர்கள், மணமகனுடன் வரவேற்பறையிலும்... தோழிகள், மணமகளுடன் உள் அறையிலும்... அமர்ந்திருந்தார்கள். மணமகளது கணவனைக் காண ஆவலுற்ற தோழிகள்... அறையின் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வரவேற்பறையில், மணமகனையொத்த வயதுடையவர்கள் பலர் அமர்ந்திருந்ததால், அவர்களால் யார் மணமகன் என்று கண்டறிய முடியவில்லை. ஆகவே, மணமகளை ஜன்னலுக்கருகில் அழைத்து, அங்கு அமர்ந்திருப்பவர்களில், அவளது கணவன் யார்... என்று அடையாளம் காட்ட சொன்னார்கள்.

நாணத்துடன் இருந்த மணமகளிடம்... ஜன்னலில் தெரியும் ஒவ்வொருவராகச் சுட்டிக் காட்டி, ' அவரா, உன் கணவர்...?'... அவரா, உன் கணவர்...?'என்று அடுத்தடுத்துக் கேட்க, 'இல்லை, இல்லை...' என்று மறுத்தபடியே இருந்தாள்.

இறுதியாக, ஒருவரைச் சுட்டிக் காட்டி, 'அவர்தானே... உனது மணாளன்...?' என்று கேட்க, அவள் 'ஆம்' என்றும் சொல்லாமலும், 'இல்லை' என்றும் சொல்லாமலும், மௌனமாக... நாணத்துடன்... வெட்கித் தலை குனிந்தாள். அவளது தோழிகள், அவன்தான், அவளது கணவன் என்பதை அறிந்து கொண்டார்கள்.

அது போலத்தான், பிரம்மத்தை நிரூபணம் செய்வதும். பிரம்மத்தைப் பற்றிய எண்ணற்ற விளக்கங்களை, படித்தும்... கேட்டும்...அறிந்து கொள்ளலாம். அவையனைத்தும் மனதில் சந்தேகங்களையும்... கேள்விகளையுமே எழுப்பிக் கொண்டிருக்கும்.

எப்போது, ஒரு ஜீவனுக்கு... அந்த பிரம்மத்தை... அவனது 'சத்குருநாதர்' சுட்டிக் காடுகிறாரோ... அப்போது, ஜீவனது மனத்தில் எழுந்த சந்தேகங்களும்... கேள்விகளும் மறைந்து...  அது, அந்த பிரம்ம சொரூபத்தில் ஆனந்தமாக ஐக்கியமாகிவிடுகின்றது..

Monday, January 27, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 79. 'ஆயுள்காரகரான' சனி பகவான்', வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'. பகுதி 3.





'தர்ம பரிபாலனத்தை' மேற்கொள்பவரான... 'சனி பகவான்'...

# 'மகர இராசியில்' ... தனது ஆளுமையை நிலைநிறுத்தி 'ஆட்சி செய்கிறார்'. அந்த வீட்டில், 'ஞானக்காரகரான'... 'குரு பகவான்', தனது பலத்தை இழந்து... நீச நிலையில் சஞ்சரிக்கின்றார். 'ஆற்றல் காரகரான'... 'செவ்வாய் பகவான்' மிக வலிமை பெற்று, 'உச்ச கதியில்' இயங்குகிறார்.

இந்த அமைவு...

* ஜீவன், தனக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 'ஆயுள் காலத்தை' பூரணமாகக் கடந்து போகும். (சனி பகவானின் ஆட்சி நிலை)

* ஜீவன், தனக்கான உலக வாழ்வை, மிக முக்கியமானதாகவும், அதன் ஏற்ற-தாழ்வுகளிலும்... இன்ப-துன்பங்களிலும்... மூழ்கிப்போய், உலக வாழ்வின் போராட்டத்தில் தனது 'ஆற்றல்' முழுவதையும் இழந்து போகும். (செவ்வாய் பகவானின் உச்ச நிலை)

* தான் 'எதிர்கொள்ளும் அல்லது வெளிப்படுத்தும்' செயல்களின் விளைவுகளில் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும். அதனால் விளையும் இன்ப-துன்பங்களால் மீண்டும், மிண்டும் பிறவிகளை நோக்கி நகர ஆரம்பிக்கும். (குரு பகவானின் நீச நிலை)

# 'கும்ப இராசியில்'... தனித்துவம் பெற்ற 'ஆட்சியாளராக'... கோளோச்சுகிறார்.

இந்த அமைவு...

* பிறவியின் உன்னதத்தை உணர வைக்கும் ஸ்தானமாக... இந்த இராசி விடு அமைகிறது.

* 'அசத்து' என்ற அசையா பொருள்களிருந்து பயணித்த ஜீவனின் வாழ்வு அசையும் தாவரங்களாகி... பின்னர் புழு, பூச்சிகள், நீர்வாழ்வன, காற்றில் வாழ்வன, நிலம் வாழ்வனவற்றில் விலங்குகள் என பரிணமித்து இறுதியில் இந்த அரிய 'மனிதப் பிறவியை' அடைகிறது. இந்த உன்னதத்தை உணர வைக்கும் இடமாக இந்த இராசி வீடு அமைகிறது.

* அரிதிலும், அரிதாகப் பெற்ற இந்த 'மனித வாழ்வை' எவ்வாறு பூரணமாக்குவது...? என்ற நோக்கத்துடன் ஜீவனை பயணிக்க வைக்கும் ஸ்தானமாக இந்த இராசி வீடு அமைகிறது.

* ஒவ்வொரு 'பிரளய காலத்திலும்' ஜீவர்களின் மூலம்... ஒரு 'கும்பத்தில்' வைத்துக் காக்கப்படுவதாகவும்... பிளயத்தின் முடிவிலும், அடுத்த யுகத்தின் ஆரம்பத்திலும்... இந்த 'கும்பத்தில்' இருந்துதான்... ஜீவனின் உற்பத்தியும் ஆரம்பிக்கிறது என்பதையும்...  நமது புராணங்கள் வரையறுக்கின்றன.

* அந்த ஒப்பற்ற ஸ்தானமாக இந்த இராசி வீடு அமைகிறது. அதனால்தான், 'குடும்பத்துக்கு ஒரு கும்பம் அவசியம்...' என்ற சொல்வழக்கும் உலவுகிறது.

இதுவரையில்... 'தர்மபரிபாலன' நாயகரானவரும், ஜீவனின் செயல் வெளிப்பாடுகளுக்கு சாட்சியாளராகவும், ஜீவ வாழ்வின் ஆயுளுக்கு காரகத்துவமானவராகவும் பொறுப்பு வகிக்கும்... 'சனி பகவான்' அருளும் 'கர்ம வினைகளின் விளைவுகள்' பற்றிய பற்றிய... ஒரு சிறிய ஆய்வின் வழியே பயணித்தோம்... இறைவனின் அருளோடு.

ஸாய்ராம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 78. 'ஆயுள்காரகரான' சனி பகவான்', வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'. பகுதி 2.





ஆயுளின் நிர்ணய காலத்தைப் பரிபாலனம் செய்பவரும்... ஜீவன் 'எதிர்கொள்ளும் அல்லது வெளிப்படுத்தும்' செயல்களின் விளைவுகளுக்கு சாட்சியாக இருப்பவரும்... 'தர்மத்தை' நிலைநிறுத்துபவருமான... 'சனி பகவான்', ஜோதிட இராசிச் சக்கரத்தில்...

# மேஷ இராசியில்... தனது பலத்தை இழந்து, 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார். அந்த வீடு, 'ஆற்றல் காரகரான'... 'செவ்வாய் பகவானுக்கு' ஆட்சி வீடாக அமைகிறது. அந்த வீட்டில், 'ஆத்மகாரகரரான'... 'சூரிய பகவான்' மிக பலம் பெற்று, 'உச்ச கதியில்' உலவுகிறார்.

இந்த அமைவு...

* ஜீவன் தனது உயிர்ப்பையும், அதற்கான ஆற்றலையும், 'கோடி சூரியப் பிரகாசம் உள்ள' ஆத்மாவிடம் இருந்துதான் பெறுகிறது. இந்த ஸ்தானத்தில், ஜீவன் அந்த ஆத்ம பலத்தை முழுவதுமாக பெற்று அதை அனுபவிக்கும் பாக்கியத்தையும் பெறுகிறது. (சூரிய பகவானின் உச்ச நிலை)

* அந்த 'ஆத்ம பலம்', ஜீவனது 'கர்மவினைக்கு ஏற்றபடி', அது அனுபவிப்பதற்கு ஏற்றவாறு, 'மட்டுப்பட்ட ஆற்றலாக' மாற்றம் பெறுகிறது. (செவ்வாய் பகவானின் ஆட்சி நிலை)

* ஜீவனின் 'கர்மவினை' உலக வாழ்வில் மூழ்கிப்போகுமாறு இருப்பின், அந்த 'ஆத்மபலம்' உலக வாழ்வின் இன்ப-துன்பங்களில் கரைந்து போவதும்... உள் வாழ்வில் மூழ்கிப்போகுமாறு இருப்பின், மீண்டும் பிறவாமையும்... ஜீவனுக்கு அமையும். (சனி பகவானின் நீச நிலை)

# 'துலா இராசியில்'... மிக பலம் பெற்று 'உச்ச கதியில்' சஞ்சரிக்கிறார். அந்த வீட்டில் 'ஆத்மகாரகரான' ... 'சூரிய பகவான்' தனது பலத்தை இழந்து, 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார். இந்த ஸ்தானம்... 'சுக வாழ்வு நாயகரான' சுக்கிர பகவான் ஆட்சி பெறும் வீடாக அமைகிறது.

இந்த அமைவு...

* எல்லையில்லாத ஆற்றலின் ஊற்றான 'ஆத்மா', அதன் வெளிப்பாட்டை ஜீவனின் கர்மவினைக்கு ஏற்ப, ஜீவனின் மனத் திரைக்குள் மறைத்துக் கொண்டிருக்கிறது. (சூரிய பகவானின் நீச நிலை)

* ஜீவன் தனது கர்மவினைக்கு ஏற்ப, இந்த உலக வாழ்வுச் சூழலுக்குள் கட்டுண்டு கிடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. (சுக்கிர பகவானின் ஆட்சி நிலை)

* ஜீவன் தனக்குண்டான வாழ்வுக் காலத்தை, எந்தத் தடங்கல்களும் இல்லாமல், உலக வாழ்வுச் சூழலிலேயே, மூழ்கி கடந்து போகிறது. அது இன்பமாக இருப்பினும்... துன்பமாக இருப்பினும்... 'ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்து, தமது வாழ்வு நிலை மாறிவிடும்...' என்ற எதிர்பார்ப்புடன், தனது வாழ்வுக் காலத்தை முழுமையாகக் கடந்து போகிறது. (சனி பகவானின்' உச்ச நிலை)

இறைவனின் அருளுடன்... தர்மத்தின் நாயகனின் வழியில்... தொடர்ந்து பயணிப்போம்.

ஸாய்ராம்.

Saturday, January 25, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 77. 'ஆயுள்காரகரான' சனி பகவான்', வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'. பகுதி 1.





'ஆயுள்' - ஒரு ஜீவனுக்கு, இந்தப் புவியில், தனது கர்மவினைகளுக்கு ஏற்ப, அமையும் உடலுக்குள், வாழக் கூடிய வாழ்நாட்கள்.

இந்த வாழ்நாட்களை, அந்தந்த ஜீவர்களே, 'தமது செயல்கள் வெளிப்படுத்தும் விளைவுகளின்' மூலமாகத் தீர்மானித்துக் கொள்கின்றன என்பதைத்தான்... ஜோதிடக் கலை,  'பிறப்பு-இறப்பு' என்ற சுழற்சித் தத்துவத்தின் மூலம் நிரூபணம் செய்கிறது.

ஒவ்வொரு ஜீவனும், அதனதன் பிறவிகளில்... சேர்த்து வைத்துள்ள மொத்தக் .கர்மவினைக் கட்டுகளிருந்து. (சஞ்சித கர்மா), இந்தப் பிறவிக்கான'கர்ம வினைத் தொகுப்பை (பிராரப்பத கர்மா), சுமந்து கொண்டு பிறவியெடுக்கிறது. இந்தப் பிறவியில், அந்த ஜீவன்' எதிர்கொள்ளும் அல்லது வெளிப்படுத்தும்' செயல்களின் விளைவையும் (ஆகாமிய கர்மா) சுமந்து கொண்டு... அடுத்த பிறவியை நோக்கி நகர்கிறது. இந்த கர்ம வினைகளின் சுழற்சியையே... 'பிறவிப் பெரும் பிணி' என்பதாக வருணிக்கிறோம்.

'மகா கருணையாளரான' இறைவன், இந்தப் பிறவியை அடையும் ஜீவனுக்கு, அதன் 'மொத்தத் தொகுப்பான' (சஞ்சித கர்மா) கர்ம வினைகளிலிருந்து... 'புண்ணிய மற்றும் பாப வினைகளை' சமமாகக் கலந்து (பிராரப்த கர்மா) இந்தப் பிறவியை அளிக்கிறார். அதனால்தான், இந்தப் பிறவியில், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி அனுபவிக்கிறோம்.

நாம் அனுபவிக்கும் இன்ப-துன்ப நிகழ்வுகளுக்கு நமது 'பூர்வ வினைகளே' காரணம் என்பதை உணரும்போதுதான்... அதிலிருந்து விடுபடவதொன்றே... பிறவிப்பிணியிலிருந்து விடுபடுவதற்கான உபாயம் என்பதை அறிகிறோம்.

இந்த அனுபவத்தை... ஜீவன்... தனது 'ஆயுள் காலத்தில்' பெறுவதற்கு... பேருதவியாக இருப்பவரும்... 'ஜோதிடக் கலையில்', ஆயுளுக்குக் 'காரகராகவும்'... இந்த வாழ்நாட்களில் ஜீவன், 'விளைவிக்கும் அல்லது எதிர்கொள்ளும்' செயல்களுக்கான 'சாட்சியாகவும்'... 'தர்மத்தை' பரிபாலனம் செய்யக் கூடியவராகவும்... 'சனி பகவான்' அமைகிறார்.

ஜோதிடச் சித்திரத்தில்... 'சனி பகவான்'...

# 'மேஷ இராசியில்' தனது சுய பலத்தை இழந்து, 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார்.

# 'துலா இராசியில்' தனது பலத்தை மீட்டு, 'உச்ச கதியில்' சஞ்சரிக்கிறார்.

# 'மகர இராசியில்' தனது ஆளுமையை நிலை நிறுத்தி 'ஆட்சி செய்கிறார்'.

# 'கும்ப இராசியில்' தனித்துவம் பெற்ற 'ஆட்சியாளராக' அமைகிறார்.

இவரின் நிலைகள் உணர்த்தும்... வெளிப்படுத்தும்... கர்ம வினைகளின் சூட்சுமங்களை... அவரருளாலும்... இறையருளாலும்... தொடர்ந்து ஆய்வோம்.

ஸாய்ராம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 76. 'ஞானக்காரகரான குரு பகவான்', வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'. பகுதி 3.





'ஞான வெளிப்பாட்டை' ஒரு ஜீவன் பெறும் மார்க்கத்தை... 'ஜோதிடச் சித்திரத்தின்' வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

'குரு பகவான்'... இராசி சக்கரத்தில்...

# 'கடக இராசியில்' பலமுடன்... 'உச்ச கதியில்' இயங்குகிறார். ஆனால், அந்த வீடு 'சந்திர பகவானின்' சுய சேத்திரமாக அமைகிறது. 'மனோகாரகரான'... 'சந்திர பகவான்' இந்த இராசி விட்டில் 'ஆட்சி பலம்' பெறுகிறார். 'ஆற்றல் காரகரான'... 'செவ்வாய் பகவான்' இதே விட்டில் தனது பலத்தை இழந்து... 'நீச நிலையில்' சஞ்சாரம் செய்கிறார்.

இந்த நிலை...

*  ஜீவன், தனது மனதில் உதிக்கும் எண்ணங்கள் என்ற 'கர்ம வினைகளின் விளைவுகளை'... சமநிலையில் இருந்து நோக்கும் வல்லமையைப் பெறுகிறது. (சந்திர பகவானின் ஆட்சி நிலை)

* இந்த திடமான மனோ நிலையில் இருக்கும் ஜீவன்... அதன் எண்ணங்களை மிக ஆக்கப்பூர்வமாகவும்... மட்டுப்பட்ட ஆற்றலுடனும் வெளிப்படுத்துகிறது. எண்ணங்கள் போகும் போக்கில் செல்லாமல்... மனதை அதன் செயல்களின் சரியான விளைவுகளை விளைவிக்கும் பாதையில் செலுத்தும் வல்லமையை ஜீவன் பெறுகிறது. (செவ்வாய் பகவானின் நீச நிலை)

* 'சம நிலையில் இருக்கும் மனம்'... 'சரியான ஆற்றலுடன் இயங்கும் மனம்'... இந்த இரண்டு நிலைகள் போதும், ஞானத்தின் வெளிப்பாட்டை உணர்வதற்கு. ஜீவன், ஞான ஒளி வெள்ளத்தில் மூழ்கி முத்தெடுக்கும் வாய்ப்பைப் பெறும். (குரு பகவானின் உச்ச நிலை)

# 'மகர இராசியில்' தனது பலத்தை இழந்து, 'குரு பகவான்' நிச நிலையில் சஞ்சரிக்கிறார். அந்த விடு... 'ஆயுள் காரகரரான'... 'சனி பகவானுக்கு', ஆட்சி வீடாகிறது. அதே நேரத்தில், இந்த விட்டில்... 'ஆற்றல் காரகரான'... 'செவ்வாய் பகவான்' பலம் பெற்று 'உச்ச கதியில்' சஞ்சரிக்கிறார்.

இதன் விளைவாக...

* ஜீவன் தனக்கு, இந்தப் பிறவியில் விதிக்கப்பட்ட... 'பிராரப்த கர்மம்' என்ற 'கர்ம வினையின் விளைவுகளை... தனது ஆயுள் காலம் முழுவதும் அனுபவித்துக் கடக்கிறது. (சனி பகவானின் ஆட்சி பலம்)

* ஜீவனுக்கு... அதற்கான வல்லமையும்... ஆற்றலும்... இயற்கையாகவே அமைந்திருக்கும். (செவ்வாய் பகவானின்' உச்ச நிலை)

* இந்தக் 'கர்ம வினைப் போராட்டத்தில்'... தனது கடமைகளைப் பூரணமாக்கப் போராடும் ஜீவனுக்கு... 'ஞானத் தேடுதல்' சற்றுத் தொலைவுதான். ஆனாலும், தனது கடமைகளின் பூரணத்துவத்திற்காக போராடும் ஜீவன்... இறுதியில் தனது ஞான நிலையில் சங்கமிப்பதை தவிர்க்கமுடியாது. இது, ஜீவனுக்கான கடமை உணர்வுக்குக் கிடைக்கும் பரிசாக அமையும். (குரு பகவானின் நீச நிலை).

... இராசிச் சக்கரத்தில்... 'குரு பகவானின்' அமைவு... இந்த ஞானத் தேடலின் சூட்சுமங்களைச் சுட்டிக் காட்டுகிறது.

தொடர்ந்து, ஜோதிட சூட்சுமங்களை ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

Friday, January 24, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 75. 'ஞானக்காரகரான குரு பகவான்', வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'. பகுதி 2.





'ஞான வெளிப்பாட்டை' ஒரு ஜீவன் எவ்வாறு பெறுகிறது... ? என்பதை, ஜோதிடச் சித்திரத்தில் அவரமைந்த ஸ்தானங்களைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

'குரு பகவான்'... இராசியில் ;

# 'தனுர் இராசியை' தனது 'ஆட்சி வீடாகக் கொள்கிறார். அந்த வீட்டில் அவரின் ஆளுமை மட்டுமே நிறைந்திருக்கிறது. 

* இந்த ஆளுமை, ஜீவனை விருப்பு - வெறுப்புகளுக்கு உள்ளாகாமல்... தனது கடமைகளை பூரணப்படுத்துவதற்கு உதவுகிறது.

* தனது 'கர்ம வினைகளை' அனுபவித்துக் கடக்கும் ஜீவனுக்கு... அந்த கர்ம வினைகளால் வெளிப்படும்... இன்ப-துன்பங்களுக்கு ஏற்ப... தன்னை சமப்படுத்திக் கொள்ளும் பக்குவத்தை அளிக்கிறது.

* இன்ப-துன்பங்களில் சமப்படும் ஜீவன்... அதனால் வெளிப்படும் விளைவுகளான 'பாப-புண்ணியங்களில்' இருந்து முற்றிலுமாக விடுதலை அடைகிறது.

* இந்த விடுதலைதான்... தொடர் பிறப்புகளின் சுழற்சியை நிறுத்துகிறது.

# 'மீன இராசியை' தனது 'ஆட்சி வீடாகக்' கொள்ளும் 'குரு பகவான்'... அந்த வீட்டில் 'உச்ச நிலை' பலத்தை அடையும் 'சுக்கிர பகவானுக்கு' உறுதுணையாக இருக்கிறார். மேலும், பலமிழந்து... 'நீச நிலையில்' சஞ்சரிக்கும்'புத பகவானையும்' அரவணைத்துச் செல்கிறார்.


* இந்த ஸ்தானத்தில்... 'குரு பகவானது' பங்கு மிகவும் கடினமாகத்தான் இருக்கிறது. எங்கு 'சுக வாழ்வு' மிகுகிறதோ... அங்கு 'ஞானத்தின்' வெளிப்பாடு குறைவுறத்தான் செய்யும். இங்கும், ஜீவனுக்கு ஏற்படும் போராட்டம் அதுதான். சுக வாழ்வின் மிகுதியினால்... அதுதான் நிரந்தரம் என்ற நிலைக்கு ஜீவனின் வாழ்வு தள்ளப்படுகிறது. ( சுக்கிர பகவானின் உச்ச நிலை)

* ஞானத்தை அடைவது என்பது... அஞ்ஞானத்திலிருந்து விடுபடுவதில்தான் ஆரம்பிக்கிறது. எவ்வாறு கண்ணாடியின் தூய்மை, அதன் அழுக்கை நீக்கும் போது வெளிப்படுகிறதோ... அவ்வாறே, அஞ்ஞானத்தை நீக்கும் போதுதான்... ஞானத்தின் இருப்பும் வெளிப்படுகிறது. இதற்கான புத்தி சக்தியை ஜீவன் பெறுவதில் பெறும் தடையாக இருப்பது... ஜீவன் பெற்ற சுகவாழ்வு என்றால் அது மிகையானதல்ல.(புத பகவானின் நீச நிலை)

*எப்போது 'சுக வாழ்வுக்குத்' தடை ஏற்படுகிறதோ... எப்போது சுக வாழ்வு நிரந்தரமானது அல்ல என்ற 'புத்தி சக்தி' ஏற்படுகிறதோ... அப்போதிருந்தே... ஞானத்தின் தேடுதல் ஆரம்பிக்கிறது. ஞானம் பெறுவது அல்ல... அது அடையப்படுவது. ஜீவன், இயற்கையிலேயே ஞானத்துடன் இருக்கிறது. கர்ம வினைகளின் விளைவால்... அது அஞ்ஞானத்தில் மூழ்கி இருக்கிறது. எப்போது அஞ்ஞானம் விலகுகிறதோ... அப்போதே ஞானம் தான் இருந்த இடத்திலிருந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ( குரு பகவானின் ஆட்சி நிலை)

தொடர்ந்து, இந்த ஞான வெளிப்பாட்டை ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.


Thursday, January 23, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 74. 'ஞானக்காரகரான குரு பகவான்', வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'. பகுதி 1.





'ஞானம்' என்பது 'ஜீவனுக்கு'... 'ஆத்ம சொரூபம்' அளிக்கும் அருள் கொடை என்றால், அது மிகையில்லை.

அனைத்தையும் அறிந்தது 'ஆத்மா'. அது 'ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்தைப் போன்றது. அந்த ஆத்மசொரூபத்திடம் இருந்து, அருளாற்றலைப் பெற்றுக் கொண்ட ஜீவன், இந்த புற உலகத்தில்... தான் சுமந்து கொண்டு வந்திருக்கிற 'கர்ம வினைகளை' மூலமாகக் கொண்டு ஜீவிதம் செய்கிறது.

இந்த ஜீவிதம்... கர்மவினைகளின் விளைவுகளான... 'இன்ப-துன்ப அனுபவங்களை' மாறி, மாறி அனுபவிப்பதிலேயே கழிந்து விடுகிறது. இதனால் தொடர்ந்து பிறவிகள் மேல் பிறவிகளாக எடுத்து... சலித்துப் போன ஜீவன்... 'இந்த வாழ்வின் நோக்கம்தான் என்ன... ?' என்ற கேள்வியை மனதில் எழுப்புகிறது. இந்தக் கேள்விதான் 'ஞான வெளிப்பாட்டிற்கான' முதல் வித்தாக அமைகிறது.

இந்தக் கேள்வியை ஒரு முறையேனும் எழுப்பாத ஜீவன்... இந்த உலகத்தில் இல்லை... எனலாம்.

இந்த 'ஞான வெளிப்பாட்டை...' ஒரு ஜீவன், 'எப்போது தனது வாழ்வில் பெறுகிறது...?' அல்லது, 'எப்போது அதை நோக்கிப் பயணம் செய்கிறது...? ' என்பதை, 'ஜோதிடச் சித்திரத்தில்'... 'நவக்கிரக நாயகர்களில்' மிகச் சுபராகக் கருதப்படும் 'குரு பகவானின்' நிலையைக் கொண்டே அறிந்துகொள்ளலாம்.

பொதுவாக, ஜோதிடச் சித்திரத்தில்... 'குரு பகவான்'...

* 'தனுர் இராசியை' தனது 'ஆட்சி வீடாகக்' கொள்கிறார்.

* 'மீன இராசியையும்' தனது 'ஆட்சி வீடாகக்' கொள்கிறார்'.

* 'கடக இராசியில்' தனது 'உச்ச பலத்தை' அடைகிறார்.

* 'மகர இராசியில்' தனது பலத்தை இழந்து 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார்.

இந்த அமைவுகள்... நமக்கு எதைச் சுட்டிக் காட்டுகிறது... என்பதை, இறைவனின் அருளால் தொடர்ந்து ஆய்வோம்...

ஸாய்ராம்.


Saturday, January 18, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 73. 'மனோகாரகனான சந்திர பகவான்', வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'. பகுதி 2.




ஜோதிடச் சித்திரத்தில்... மனோகாரகனான, 'சந்திர பகவானின்' அமைவு... எவ்வாறு 'கர்ம வினைகளின் விளைவுகளை' வெளிப்படுத்துகிறது என்பதை தொடர்ந்து ஆய்வோம்.

- 'கடக இராசியைத்' தனது 'ஆட்சி வீடாகக்' கொள்கிறார்.

- 'ரிஷப இராசியில்' தனது 'உச்ச பலத்தைப்' பெறுகிறார்.

- .விருச்சிக இராசியில்' தனது பலத்தை இழந்து... 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார்.

# 'கடக இராசியில்'... ஆட்சி பெறும், 'சந்திர பகவானின்' வீட்டில், 'ஆற்றல் காரகரான'... 'செவ்வா பகவான்' தனது பலத்தை இழந்து, 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார். 'ஞானக்காரகரான'... 'குரு பகவான்' பலம் பெற்று, 'உச்ச நிலையில்' சஞ்சரிக்கிறார்.

இந்த அமைவினால்...

* மனதில் தோன்றும் எண்ணங்களை... ஒரு கட்டுக்குள் கொண்டுவரும் தன்மை, ஜீவனுக்கு இருக்கும். (சந்திர பகவானின் ஆட்சி நிலை)

* அவ்வாறு தோன்றும் எண்ணங்களை... சிதறவிடாமல் சேர்த்துவைத்து... அதனை இலக்கை நோக்கி செலுத்தும் வல்லமை ஜீவனுக்கு இருக்கும். (செவ்வாய் பகவானின் நீச நிலை)

* ஒருமை படுத்திய எண்ணம், சிதறவிடாத ஆற்றல் என்ற இந்த இரண்டு சக்திகளையும்... தனது ஞானத்தைக் கொண்டு செயல் படுத்தும் ஆற்றல் ஜீவனுக்கு அமையும். (குரு பகவானின் உச்ச நிலை)

# 'ரிஷப இராசியில்' தனது உச்ச பலத்தைப் பெறும் 'சந்திர பகவான்' அமைந்திருக்கும் வீட்டின் 'ஆட்சியாதிபதியாக'... 'சுக்கிர பகவான்' அமைகிறார்.

இந்த அமைவினால்...

* மனதில் தோன்றும் எண்ணங்கள் பெரும்பாலும், தனது சுக வாழ்வை நோக்கியதாகவும்... அதை 'சிறிதும் விட்டுக் கொடுக்காமல்' வாழும் மனநிலையும் ஜீவனுக்கு ஏற்படும். (சந்திர பகவானின் உச்ச நிலை)

* எண்ணங்களுக்கு ஏற்பவே சுக வாழ்வும் அமையும். தனது சுகத்திற்காக எதையும் விட்டுக் கொடுக்காத தன்மை ஜீவனுக்கு ஏற்படும். (சுக்கிர பகவானின் ஆட்சி நிலை)

# 'விருச்சிக இராசியில்' தனது பலத்தை இழந்து 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார்... 'சந்திர பகவான்'. இந்த விட்டின் 'ஸ்தானாதிபதியாக' பலம் பெர்று 'ஆட்சி விட்டில்' அமைகிறார் 'ஆற்றல்காரகரான'... 'செவ்வாய் பகவான்'.

இந்த அமைவினால்...

* மனதில் தோன்றும் எண்ணங்களால்... ஜீவன் தனக்குத் தானே, ஒரு 'தாழ்வு நிலைக்குத்' தள்ளப்படுவார். (சந்திர பகவானின் நீச நிலை)

* இந்தத் தாழ்வு நிலையினால்... தத்தளித்து, தவிக்கும் நிலைக்குப் போகாமல், ஜீவன்... தனது ஆற்றலை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மையை அடையும். (செவ்வாய் பகவானின் ஆட்சி பலம்)

இவ்வாறாக... மனம என்ற, 'கர்ம வினைகளின் உற்பத்தி ஸ்தானத்தை'... 'சந்திர பகவான்' வெளிப்படுத்துமாறு... ஜோதிடச் சித்திரத்தில் அமைக்கப் பட்டிருக்கிறார்... என்பதிலிருந்தே... இந்தக் கலை எவ்வாறெல்லாம் 'கர்ம வினைகளின் முடிச்சுகளை' களைகிறது என்பது ஒரு புரிதலுக்குள் வரும்.

தொடர்ந்து சிந்திப்போம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

Thursday, January 16, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 72. 'மனோகாரகனான சந்திர பகவான்', வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'. பகுதி 1..





கண்ணுக்குத் தெரியும் இந்த உடலுக்கு, எவ்வாறு 'சிரசு' என்ற தலைப்பகுதி பிரதானமாகிறதோ... அது போல கண்ணுக்குத் தெரியாத இந்த ஜீவனுக்கு, 'மனதே' பிரதானமாகிறது.

சிரசுப் பகுதியின் முக்கிய அங்கமான 'மூளைதான்' இந்த உடலை இயக்கும் மூலம் என்பதை நாம் அறிவோம். ஆனால், அந்த மூளையை இயக்குவதே... கண்ணுக்குத் தெரியாத... சூட்சுமமான இந்த ஜீவனின், மூலமான 'மனம்தான்'... என்று அறியும் போது... வியப்பின் உச்சத்துக்கே செல்கிறோம்.

இந்த மனம் எவ்வாறு இயங்குகிறது  ? என்று ஆய்ந்தால், அது, ஒவ்வொரு ஜீவனின் 'பூர்வ புண்ணியம்' என்ற, 'கர்ம வினைகள்தான்' என்பது உணர்வுக்கு வரும். இந்த 'கர்ம வினைகள்தான்'... அதன் விளைவுகளான, 'இன்பம் - துன்பம்' என்ற அடுக்கடுக்கான... 'வினைகளின் விளைவுகளை', ஜீவனுக்கு அதன் மனதில்... 'எண்ணங்களாக' உற்பத்திசெய்கிறது.

இவ்வாறு, மனதில், 'கடலின் அலைகள் போல...' தொடர்ந்து எழும் 'எண்ண அலைகள்...' மூளை வழியாக... உடலின் உறுப்புகளுக்கு 'ஆணைகளாகவும்,,,' மனதுடன் தொடர்புடைய... 'நாளமில்ல சுரபிகளுக்கு'... 'உணர்ச்சிகளாகவும்' வெளிப்படுத்தப்படுகிறது.

இந்த ஆணைகளை, உடலின் உறுப்புகளும்... உடலுடன் சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற நாளமில்லா சுரபிகளும்... ஏற்றுக் கொண்டு, அதை இந்த ஜீவனுக்கு, 'இன்பமாகவும் - துன்பமாகவும்' அனுபவமாக்குகிறது.

ஆகையால்தான், இந்த மனதை... கர்ம வினைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றை எண்ணங்களாக வெளிப்படுத்தும்... 'மனோகாரகன்' என்று அழைக்கிறது... ஜோதிடக் கலை.

இந்த மனோகாரகனான... 'சந்திர பகவானின்' நிலைகளை எவ்வாறு ஜோதிடக் கலை அணுகுகிறது என்பதையும்... அந்த 'சந்திர பகவான்' ஜோதிடச் சித்திரத்தில்... அமையும் அமைவுகளைப் பற்றியும்... தொடர்ந்து சிந்திப்போம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.


Saturday, January 11, 2020

பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அருளிய சிறு கதைகளின் தமிழாக்கம். 'புல்லைத் தின்ற புலி'





மேய்ந்து கொண்டிருந்த ஆட்டு மந்தையை நோக்கி பாய்ந்து சென்ற ஒரு பெண் புலி, தனது வயிற்றில் இருந்த ஒரு புலிக் குட்டியை ஈன்று விட்டு இறந்தது. அந்த புலிக் குட்டி, ஆட்டு மந்தைகளின் நடுவிலேயே வளர்ந்து வந்தது. ஆடுகளைப் போலவே 'புற்களை சாப்பிட்டும்'... ஆடுகளைப் போலவே 'கத்திக் கொண்டும்'... தன்னை ஒரு ஆடாகவே நினைத்து வளர்ந்து வந்தது அந்தப் புலி.

ஒரு நாள் அந்த ஆட்டு மந்தையை ஒரு புலி வேட்டையாட வந்தது. அந்த மந்தையில், ஒரு புலி இருப்பதைப் பார்த்து... அது ஆடுகளைப் போலவே கத்துவதையும் பார்த்து... ஆச்சரியமடைந்து.

வேட்டையாடச் சென்ற புலி, மந்தையில் இருந்த புலியை இழுத்துச் சென்று, அதை ஆற்றங்கரையில் தண்ணீர் குடிக்க வைத்தது. தண்ணீரில் தனது உருவத்தைப் பார்த்த புலிக்கு, அப்போதுதான் தான் யார்...? என்ற உண்மை தெரிந்தது. புலி தனக்கு உண்ணக் கொடுத்த 'இறைச்சித் துண்டை' உண்ணும் போதுதான்... தனக்குள் இருந்த 'ரத்தத்தின் ருசியும்'... 'இறைச்சியின்' ருசியும்' உணர்வுக்கு வந்தது.

அந்த உணர்வைப் பெற்ற புலியைப் பார்த்து, 'இப்போது உனக்குப் புரியும், நீயும் நானும் ஒரே இனம்தான் என்று... வா என்னோடு, நமது இருப்பிடமான காட்டுக்குள் செல்லலாம். அதுதான் நமது வசிப்பிடம்...' என்று கூறி, அதைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றது.

ஆட்டு மந்தையில், தன்னை ஒரு ஆடு என்றே நினைத்துக் கொண்டிருந்த ஒரு புலியை, எவ்வாறு காட்டில் வாழும் புலி ஒன்று வந்து, அது ஆடு அல்ல... புலி என்று உணர வைத்து அழைத்துச் சென்றதோ...

அது போல, நாம் யார் என்ற உண்மையை நமக்கு உணரவைக்கவே... ஒரு 'சத்குரு' நமது வாழ்வில் பிரசன்னமாகிறார். அவர் வந்து, நாம் யார்... என்று உணர்வைத்ததும்தான், நாம் இந்த உடலல்ல... நமக்குள் இருந்து அருள் செய்யும் 'பிரம்ம சொரூபம்தான்' நாம் என்று உணர்ந்து கொள்கிறோம்.

நாம் செய்ய வேண்டியது ஒரு சிறிய ஆன்மீக முயற்சிதான்... மிகுதியை சத்குருவே பார்த்துக் கொள்வார்.


பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அருளிய சிறு கதைகளின் தமிழாக்கம். 'மாடியும்,,, மாடிப் படிகளும்'





ஒருவர், கீழே குவித்து வைத்திருக்கும் மணலையும், சுண்ணாம்புக் கலவையையும், செங்கற்களையும் பார்த்துக் கொண்டே, மாடிப்படிகளின் வழியாக மேலே ஏறி மாடியை அடைகிறார்.

படிகளில் ஏறும் போதே... படிகளின் உறுதித் தன்மையையும், கைப்பிடிகளின் பலத்தையும் பரிசோத்துக் கொண்டடே மாடியை அடைகிறார். மாடிப்பகுதியை பார்வையிட்டு... அதன் உறுதித் தன்மையையும் கண்டு திருப்தியடைகிறார்.

மாடியில் இருந்து கீழே, மணல்... சுண்ணாம்புக் கல்... செங்கற்கள்... என ஒவ்வொன்றாகப் பார்க்கும் போதுதான், அவை அனைத்தும் 'மண்ணை' அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப் பட்டுள்ளது... என்ற உண்மை அவருக்குப் புரிகிறது.

அதுமட்டுமல்ல... தான் ஏறி வந்த மாடிப் படிகள், மாடியின் கைப்பிடி, மாடியின் தரைத்தளம், பக்கவாட்டுச் சுவர், தரைத்தளப் பகுதி என அந்த மோத்த வீட்டின் மூலமும்... அதே 'மண்ணை' அடிப்படையாகக் கொண்டுதான் வடிவைமைக்கப் பட்டிருக்கின்றன.

கீழே இருக்கும் போது உணர்வுக்கு வராத உண்மைகள், மேலிருக்கும் போது  உணர்வாகிறது.

அது போல, 'பிரம்ம தேடலில்'... இந்த உடல் தாங்கி நிற்கும் பெயர் பிரம்மல்ல... இந்த உடல் பிரம்மல்ல... இந்த பிரபஞ்சத்தில் கண்ணுக்குத் தெரியும் எந்த வஸ்துவும் பிரம்மல்ல... என்று படிப்படியாக 'இதுவல்ல... இதுவல்ல' என்று கடந்து சென்று... இறுதியில், தனக்குள்ளே இருந்து அருள் செய்து கொண்டிருப்பதுதான் பிரம்மம் என உணர்ந்து கொள்கிறோம்.

இந்த உணர்வு மேலெழும்போதுதான், இதுவரை தான், தனித் தனியாக பார்த்த பிரபஞ்ச வஸ்துக்கள்... அனைத்தும் 'பிரம்ம சொரூபமே'... என்ற உண்மை உணர்வுக்கு வருகிறது.

Friday, January 10, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 71. 'ஆற்றல்காரகரான செவ்வாய் பகவான் வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'. பகுதி 2..





ஆற்றலை வெளிப்படுத்துபவராக... ஜோதிடக் கலையில், 'செவ்வாய் பகவான்' இடம் பெறுகிறார். இவர் ஜோதிடச் சித்திரத்தின் அடிப்படை அமைவான... இராசிச் சித்திரத்தில் அமையும் நிலைகளே... 'கர்ம வினைகளின் சூத்திரத்தை வெளிப்படுத்துகின்றன.

# 'மேஷ இராசியை' ஆட்சி வீடாகக் கொள்ளும் 'செவ்வாய் பகவான்'... அந்த வீட்டை, 'உச்ச பலம்' பெறும்... 'ஆத்மகாரகரான'... 'சூரிய பகவானுடனும்'... 'நீச நிலையில்' தத்தளிக்கும்... 'ஆயுள் காரகரான'... 'சனி பகவானுடனும்' பகிர்ந்து கொள்கிறார்.

இந்த அமைவு உணர்த்துவது...

* ஜீவாத்மா... தனது பூரண ஆற்றலுடன் ஒளி பெற்று நிகழும் நிலையில் இருப்பார். (செவ்வாய் பகவானின் ஆட்சி)

* அந்த ஆற்றல், ஆத்மகாரகரானின்... அளவிலா ஆற்றலுடன் கலந்து ஒருமித்து நிற்கும் வாய்ப்பு நிகழும். (சூரிய பகவானின் உச்ச கதி)

* இந்த இணைப்பு... 'ஜீவ - ஈஸ்வர ஐக்கியம்' என்ற உன்னத நிலைக்கு வழிவகுத்து... பிறவிகள் இல்லா நிலையை நோக்கி நகரும். ( சனி பகவானின் நீச நிலை)

# 'விருச்சிக இராசியை' ஆட்சி வீடாகக் கொள்ளும் செவ்வாய் பகவான்'... அந்த விட்டில்... 'நீச நிலையில்' தத்தளிக்கும், 'மனோகாரகனான'... 'சந்திர பகவானுடன்' பகிர்ந்து கொள்கிறார்.

இந்த அமைவு உணர்த்துவது...

* ஜீவாத்மாவின் ஆற்றல் பூரணமாக ஒளி பெற்றிருக்கும். (செவ்வாய் பகவானின் ஆட்சி நிலை)

* அந்த அளவிலா ஆற்றலுக்கும் முன்... மனதில் எழும் 'கர்ம வினைகளின் விளைவுகளான'... 'எண்ணங்களை'... 'மனம்'... தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளப் போராடும். (சந்திர பகவானின் நீச நிலை)

# 'மகர இராசியில்'... 'உச்ச கதியை' அனுபவிக்கும் 'செவ்வாய் பகவான்'... அந்த வீட்டின் 'ஆட்சி அதிபதியாகிய'... 'ஆயுள் காரகரான'... 'சனி பகவானுடனும்', தனது பலத்தை இழந்து, 'நீச நிலையில்' இருக்கும்... 'ஞானக்காரகரான'... 'குரு பகவானுடனும்' பகிர்ந்து கொள்கிறார்.

இந்த அமைவு உணர்த்துவது...

* நீண்ட ஆயுளையும், அந்த ஆயுள் காலத்திற்கேற்ப... ஆற்றலையும் ஜீவாத்மா பெற்றிருக்கும். ( சனி பகவானின் ஆட்சி நிலையும், செவ்வாய் பகவானின் உச்ச கதியும்)

* இந்த நீண்ட ஆயுள் போரட்டத்தில்... கடமைகளுக்குள் சிக்கித் தவித்து, தனது ஆற்றலை இழந்து கொண்டெ வரும் ஜீவாத்மாவால்,,, ஞானம் பெற முடியாது போகும் நிலை உருவாகும். (குரு பகவானின் நிச நிலை)

#'கடக இராசியில்'... தனது பலத்தை இழந்து...'நீச நிலையில்' சஞ்சரிக்கும் 'செவ்வாய் பகவான்'... பலம் பெற்ற 'மனோகாரகரான'... 'சந்திர பகவான்' ஆட்சி செய்யும் வீட்டில் அமர்கிறார். அந்த விட்டில், 'ஞானக்காரகரான'... 'குரு பகவான்' பலம் பெற்று... 'உச்ச கதியில்' இயங்கும் வாய்ப்பையும் பெறுகிறார்.

இந்த அமைவு உணர்த்துவது...

*மனம் என்ற ஸ்தானத்தில்தான்... ஜீவாத்மாவின் 'கர்ம வினைகள்'... எண்ணங்களாக வெளிப்படுகிறது. இந்த இராசியில், 'மனோகாரகன்' பலம் பெற்று இருப்பதால்... எண்ணங்கள் ஒரே சீராக இருப்பதற்கு வாய்ப்புகள் உருவாகிறது. (சந்திர பகவானின் ஆட்சி நிலை)

* அந்த எண்ணங்களை சம நிலையில் வைத்திருப்பதும்... தேவையான எண்ணத்தை ஒரு நிலைப் படுத்துவதும்... ஜீவாத்மாவுக்குச் சாத்தியமாகிறது. இந்த ஞானத்தை... ஞானக்காரகரான் அருளும் நிலை உருவாகிறது. (குரு பகவானின் உச்ச கதி)

* எண்ணங்களின் சமநிலை மற்றும் ஒன்று பட்ட நிலையும்... அதை வெளிப்படுத்தும் ஞானமும்... ஒன்று படும் போது... ஜீவாத்மாவின் ஆற்றல் மட்டுப்படுத்தப்படுகிறது. (செவ்வாய் பகவானின் நீச நிலை)

இவ்வாறாக, 'செவ்வாய் பகவான்'... அவரது ஆற்றலை' கொண்டு... அவரமரும் இராசிகளின் நிலைகளுக்கேற்ப... ஜீவாத்மாவின் 'கர்ம வினைகளின் விளைவுகளை வெளிப்படுத்துகிறார்.

ஸாய்ராம்.

Thursday, January 9, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 70. 'ஆற்றல்காரகரான செவ்வாய் பகவான் வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'. பகுதி 1..





இந்த உலக வாழ்வு... அதில் பங்கு பெறும்... ஒவ்வொரு ஜீவனின்'கர்ம வினைகளை' அடிப்படையாகக் கொண்டுதான்... படைப்பாளரால் நிர்வாகிக்கப்படுகிறது.

இந்தக் 'கர்ம வினைகளைச்' சுமந்து கொண்டு, இந்த புவி வாழ்வைக் கடக்கும் ஜீவர்களின் வாழ்வை... மேலோட்டமாகப் பார்க்கும் போது, மிகவும் 'விசித்திரமான கலவைகள்' கொண்டதாக இருப்பது போலத் தோன்றினாலும், உள்ளார்ந்து பார்க்கும் போது... அதன் 'தர்மமும் - கர்மமும்' எப்போதும் இணைந்திருப்பது தெரியும்.

அதன் சூட்சுமத்தை அறிந்து கொள்ளும் கலைதான்... ஜோதிடக்கலை.

பரமாத்ம சொரூபம்... ஆத்ம சொரூபமாகி, இந்த ஜீவனை, வழி நடத்துவதற்கு... 'தனது எல்லையற்ற ஆற்றலை...' ஜீவனது 'கர்ம-வினைகளுக்கேற்ப'... 'ஜீவ-ஆத்மாவாக'... ஒரு கட்டுக்குள் வைத்து அளிக்கிறது.

அந்த 'ஆற்றலை' ஜோதிடச் சித்திரத்தில் வெளிப்படுத்துபவராக... 'செவ்வாய் பகவான்' அமைகிறார். இந்த 'செவ்வாய் பகவான்' ஜோதிடச் சித்திரத்தில்... எவ்வாறெல்லாம் அமைகிறார் என்று பார்க்கும் போதுதான்... அந்த அமைவுகள் வெளிப்படுத்தும் 'கர்ம வினை' சூத்திரங்களின் சூட்சுமங்கள் புரிகிறது.

'ஆற்றல் காரகரான'... 'செவ்வாய் பகவான்' ஜோதிடச் சித்திரத்தில்...

# மேஷ இராசியை' தனது ஆட்சி வீடாகக் கொள்கிறார்.

இந்த விட்டில், தனது பலத்தை தக்க வைத்துக் கொள்கிறார் 'செவ்வாய் பகவான்'. இந்த வீட்டில், 'ஆத்மகாரகரான'... 'சூரிய பகவான்' தனது 'உச்ச பலத்தை' அடைகிறார். 'ஆயுள் காரகரான'... 'சனி பகவான்' தனது 'நீச பலத்தைப் பெறுகிறார்.

# 'விருச்சிக இராசியையும்' தனது ஆட்சி வீடாகக் கொள்கிறார்.

'செவ்வாய் பகவான்', இந்த விட்டில், தனது பலத்தை தக்க வைத்துக் கொள்கிறார் . இந்த வீட்டில், 'மனோகாரகரான'... 'சந்திர பகவான்' தனது பலத்தை இழந்து... 'நீச நிலையை' அடைகிறார்.

# 'மகர இராசியில்' தனது 'உச்ச பலத்தை' அடைகிறார்.

'செவ்வாய் பகவான்', இந்த வீட்டில், தனது உச்ச பலத்தை அடைகிறார். இந்த வீடு, 'ஆயுள் காரகரான'... 'சனி பகவானின்' ஆட்சி வீடாகிறது. அதுமட்டுமல்ல, இந்த வீட்டில், 'ஞானக் காரகரான'... 'குரு பகவான்' தனது பலத்தை இழந்து... 'நீச நிலையில்' நிலை பெறுகிறார்..


# 'கடக இராசியில்' தனது 'நீச பலத்தை' அடைகிறார்.

'செவ்வாய் பகவான்', இந்த வீட்டில், தனது பலத்தை இழந்து, 'நீச நிலையில் சஞ்சரிக்கிறார். இந்த வீடு, 'மனோகாரகரான'... 'சந்திர பகவானின்' ஆட்சி வீடாகிறது. இந்த வீட்டில், 'ஞானக்காரகரான'... 'குரு பகவான்' பலம் பெற்று 'உச்ச கதியில்' சஞ்சரிக்கிறார்.

இந்த ஒவ்வொரு நிலையிலும், 'செவ்வாய் பகவான்' வெளிப்படுத்தும், கர்ம-வினைச் சூழல்களை... தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.




ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 69. 'கல்வியும்... சுக போக வாழ்வும்...' பகுதி - 3.





சுக வாழ்வுக்கும் அடிப்படையான... பொருளாதார வளர்ச்சி,செல்வம், வீடு, வாகனம் என, எண்ணற்ற சுக வாழ்வுச் சூழல்களுக்கு... 'சுக்கிர பகவான்' காரணகர்த்தாவாகிறார்.

ஜோதிட கலையின், பிரதான அமைப்பான 'இராசிச் சக்கரத்தில்' அவரின் அமைவை சற்று ஆழ்ந்து நோக்கினால்... எண்ணற்ற சூட்சுமங்களை அதில் மறைந்த்து வைத்திருப்பது புலனாகும்.

'சுக்கிர பகவானுக்கு',  ரிஷபம் மற்றும் துலாம் இராசிகள் 'ஆட்சி வீடுகளாகின்றன.

முதல் வீடான...

# ரிஷப இராசியில்... 'சுக்கிர பகவான்' ஆட்சி பெற்று வலுக்கிறார். அந்த வீட்டில் 'மனோகாரகனான'... 'சந்திர பகவான்' தனது 'உச்ச பலத்தை பெறுகிறார்.

இந்த அமைவு வெளிப்படுத்தும் சூட்சுமம்...

* தனது வீட்டில் வலுத்து, ஆட்சி பெற்ற 'சுக்கிர பகவான்' அந்த ஆதிபத்தியத்திற்கு ஏற்ப நிறைவான செல்வ சுகங்களான வண்டி, வீடு, வாகனம், மகிழ்வான இல்லறம் என அனைத்து உலக சுகங்களையும் அளிக்கத் தவறுவதில்லை.

* 'சுக்கிர பகவான்' ஆட்சி பெறும் வீட்டில் உச்ச பலம் பெறும்... 'சந்திர பகவான்', இந்த சுக போகக்காரகருக்கு, அந்த போகத்தை மேலும், மேலும் பெருக்கிக் கொள்ளும் எண்ணங்களைத்தான் ஊக்குவிப்பார். 'போதும்' என்ற எண்ணம் எப்போதும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வார்.

இரண்டாம் வீடான...

# துலா இராசியில்... 'சுக்கிர பகவான்' ஆட்சி பெற்று வலுக்கிறார். அந்த வீட்டில் 'ஆயுள் காரகரான' ... 'சனி பகவான்' தனது 'உச்ச பலத்தைப்' பெறுகிறார். அது மட்டுமல்ல, 'ஆத்மகாரகரான'... 'சூரிய பகவான்' அந்த வீட்டில், பலமிழந்து... 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார்.

இந்த அமைவு வெளிப்படுத்தும் சூட்சுமம்...

* 'சுக்கிர பகவானின்' ஆட்சி பலம்... ஆதிபத்தியத்திற்கு ஏற்ப நிறைந்த செல்வ சுகங்களை அளிக்கும்.

* 'சுக்கிர பகவானின்' வீட்டில், தனது 'உச்ச பலத்தை' பெறும் 'சனி பகவான்' இவருக்கு நிறைந்த ஆயுள் பலத்தை அளிப்பார். ஆதிபத்தியத்திற்கு ஏற்ப செல்வ வளம் பெற்ற ஜாதகர்... தனது செல்வ நிலையை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளும் பாக்கியத்தையும் அளிப்பார்.

* 'சுக்கிர பகவானின்' வீட்டில், தனது 'நீச நிலையைப்' பெற்றிருக்கும் ஆத்மகாரகரான 'சூரிய பகவான்'... இந்த சுக போகக்காரகரை, 'உலக வாழ்விலேயே உழல வைப்பார்'. இந்த உடல்தான் நிரந்தரம் என்ற மாயை உருவாக்கி... உள்ளிருக்கும் நிலையான... 'ஆத்ம பந்தத்தை' அறிந்து கொள்ள முடியாமல் வாழ்வைக் கடக்க வைப்பார்.

இந்தக் 'காரண - காரிய' முடிச்சுகளை... 'கர்ம வினைக் சுழல்களை' எவ்வாறேல்லாம்... இந்த இராசிக் கட்டத்தில் 'புதைத்து வைத்திருக்கிறார்கள்' என்பதை உணரும் போது... இந்த 'ஜோதிடக் கலையின் புனிதத்துவம்' இதைக் கையாள்பவர்களைப் பெருமைப்படுத்துகிறது.

ஸாய்ராம்.


Wednesday, January 8, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 68. 'கல்வியும்... சுக போக வாழ்வும்...' பகுதி - 2.






கல்வி, அதற்கு மூலமான அறிவு, அதிலிருந்து வெளிப்படும் புத்தி... என இவற்றை வெளிப்படுத்தும் கிரகமாக... 'புத பகவான்' அமைகிறார்.

சுக வாழ்வுக்கு அடிப்படையான... பொருளாதார வளர்ச்சி, செல்வம், வீடு, வாகனம் என எண்ணற்ற  சுக வாழ்வுச் சூழல்களுக்கு... 'சுக்கிர பகவான்' காரணமாக அமைகிறார்.

இவர்கள் இருவருமே, ஒருவருக்கொருவர் 'நட்புக் கிரகங்கள்' என்பதை யாவரும் அறிவோம்.

ஜோதிடக் கலையின், மூலமான 'இராசிச் சக்கரத்தில்' இந்த இரு கிரகங்களின் சூட்சும அமைவுகளே... 'கல்வியும், சுக வாழ்வும்...' எவ்வாறான நிலையை ஒரு ஜீவனின் வாழ்வில்... அவரவர்களின் 'கர்ம வினைகளுக்கு ஏற்ப' அமைகிறது, என்பதைச் சுட்டிக் காட்டும்.

'புத பகவான்', 'கன்னி இராசியில்' தனது 'உச்ச பலத்தை' அடைகிறார். அந்த வீடு அவருக்கு 'ஆட்சி வீடாகவும்' அமைகிறது. 'தனது ஆட்சி விட்டிலேயே... உச்ச பலத்தை அடையும்... வல்லமை' இவருக்கு மட்டுமே அமைகிறது. 'கல்வியின் மேன்மையைக்' குறிப்பிடும் ஸ்தானமாக இந்த 'கன்னி வீடு' அமைவதில் வியப்பில்லை.

அது போலவே, 'சுக்கிர பகவான்', 'மீன இராசியில்' தனது 'உச்ச பலத்தை' அடைகிறார். அந்த விட்டின் 'ஆட்சியாதிபதியாக'... 'குரு பகவான்' அமைகிறார். 'சுக-போகக்காரகன், தனக்காரகன் ஆட்சி பெறும் வீட்டில் உச்ச நிலை பெறுவது...' என்பதும் இவருக்கு மட்டுமே அமைகிறது. 'செல்வ சுகத்தின் மேன்மையைக்' குறிப்பிடும் ஸ்தானமாக இந்த 'மீன வீடு' அமைவதில் வியப்பில்லை.

இந்த இரண்டு இராசி வீடுகளான... 'கன்னி இராசியிலும்'... 'மீன இராசியிலும்'... இந்த இரண்டு 'நேரெதிர் தன்மைகளைக் கொண்ட'... 'புத பகவானும்'... 'சுக்கிர பகவானும்'... எவ்வாறு ஒரு சூட்சும 'பரிவர்த்தனையை' மேற்கொள்கிறார்கள் என்பதுதான்... 'காரண - காரியங்களின்' தன்மைகளை வெளிப்படுத்துகிறது.

# 'கன்னி இராசியில்'... 'புத பகவான்'... 'ஆட்சி மற்றும் உச்ச நிலையைப்' பெறுகிறார். அதே வேளையில், 'சுக்கிர பகவான்' இதே விட்டில்... 'நீச நிலையில்' பலமிழந்து காணப்படுகிறார்.

... இந்த அமைவு வெளிப்படுத்தும் சூட்சுமம், ' கல்வியில் மேன்மையை அடையும்  ஜீவர்கள்... செல்வ நிலையை அனுபவிக்க முடியாது... தத்தளித்து நிற்பார்கள்' என்பதுதான்.

# 'மீன இராசியில்'... 'சுக்கிர பகவான்'... உச்ச நிலையைபெ பெறுகிறார். அதே வேளையில், 'புத பகவான்' இதே வீட்டில்... 'நீச நிலையில்' பலமிழந்து காணப்படுகிறார்.

... இந்த அமைவு வெளிப்படுத்தும் சூட்சுமம், 'செல்வச் செழிப்பில் சுக-போக வாழ்வு வாழும் வாய்ப்பைப் பெற்ற ஜீவர்கள்... கல்வி அறிவுப் பாதையில் பயணிக்க முடியாமல் போக நேரிடும்' என்பதுதான்.

இந்த 'காரண-காரிய' ... கர்ம வினை முடிச்சுகளை அறிந்து கொள்ளும் போது, ஜீவர்களின் வாழ்வில்... 'கல்வியும்... சுக போக வாழ்வும்...' எவ்வாறு ஒன்றுக் கொன்று 'எதிர் நிலைகளில்' நிற்கிறது... என்ற தெளிவு பிறந்துவிடும்.

ஸாய்ராம்.,

Tuesday, January 7, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 67. 'கல்வியும்... சுக போக வாழ்வும்...' பகுதி - 1.





இந்த உலக வாழ்வு... அதில் பங்கு பெறும்... ஒவ்வொரு ஜீவனின் 'கர்மவினைகளை' அடிப்படையாகக் கொண்டுதான்... படைப்பாளரால் நிர்வகிக்கப்படுகிறது.

இந்த 'கர்மவினைகளைச்' சுமந்து கொண்டு, இந்த புவி வாழ்வைக் கடக்கும் ஜீவர்களின் வாழ்வை... மேலோட்டமாகப் பார்க்கும் போது, மிகவும் 'விசித்திரமான கலவைகள்' கொண்டதாக இருப்பது போலத் தெரிந்தாலும்... உள்ளார்ந்து பார்க்கும் போது... அதன் 'தர்மமும் - கர்மமும்' எப்போதும் இணைந்திருப்பது தெரியும்.

அதன் சூட்சுமத்தை அறிந்து கொள்ளாமல், நாம் மேலோட்டமாக சில கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டு, 'காரியங்களை' மட்டும் பார்த்து 'காரணங்களை' அறியாமல் விட்டு விடுகிறோம். இந்தக் காரணங்களை... அதாவது, 'கர்மவினைகளின் முடிச்சுகளை', அறிய முற்படும் கலைதான் 'ஜோதிடக் கலை'.

~ 'கல்விக்கும்... செல்வத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது...!'
~ 'பணம் இருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை... குணம் இருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை...'
~ 'படித்தவர்களால்... பணம் பண்ண முடியாது...'
~ 'பணம் பண்ணுபவர்களால்... கல்வியின் சுவையை சுவைக்க முடியாது...'

இது போன்ற எண்ணற்ற சொல்லாடல்கள்... சமுதாயத்தில் உலவி வருவதை அறிவோம். ஆனால், இதன் உண்மை தாத்பரியங்களை ஜோதிடம் மிக எளிதாக விளக்கிவிடுகிறது.

உதாரணமாக... கல்வி, அதற்கு மூலமான அறிவு, அதிலிருந்து வெளிப்படும் புத்தி... என இவற்றை வெளிப்படுத்தும் கிரகமாக... 'புத பகவான்' அமைகிறார்.

சுக வாழ்விற்கு அடிப்படையான... பொருளாதார வளர்ச்சி, செல்வம், வீடு, வாகனம் என எண்ணற்ற சுகவாழ்வுச் சூழல்களுக்கு... 'சுக்கிர பகவான்' காரணமாக அமைகிறார். இவர்கள் இருவரும் 'மிகவும் நட்புக்கிரகங்கள்' என்பதை யாவரும் அறிவோம்.

'சுக்கிர பகவானை' லக்னமாகக் கொள்ளும் போது... 'புத பகவான்' ஒரு நிலையில், 'பூர்வ புண்ணியாதிபதியாகவும்'... இன்னொரு நிலையில், 'பாக்கியாதிபதியாகவும்' அமைந்துவிடுகிறார்.

இந்த அமைவு உணர்த்துவது...

* இந்தப் பிறவியில் ஒருவர் 'சுக போக வாழ்வை' அனுபவிப்பதற்கு... முன்ஜென்மத்தில், 'கல்வி - கேள்விகளில்'... சிறப்பை அடைந்திருந்து... செல்வச் சிறப்பை நுகராது இருந்திருக்க வேண்டும்.

* தற்போது, அனுபவிக்கும் 'சுக போகம்' நிலைத்திருப்பதற்கும், அதை அனுபவிப்பதற்கும், கல்வி - அறிவின் துணையைக் கொள்ள வேண்டும் என்ற நுட்பத்தை உணர்த்துவதுதான்.

அது போல, 'புத பகவானை' லக்னமாக கொள்ளும் போது... 'சுக்கிர பகவான்' ஒரு நிலையில் 'பூர்வ புண்ணியாதிபதியாகவும்'... இன்னொரு நிலையில், 'பாக்கியாதிபதியாகவும்' அமைந்துவிடுகிறார்.

இந்த அமைவு உணர்த்துவது...

* இந்தப் பிறவியில் ஒருவர் 'கல்வி - கேள்விகளில்' சிறந்து விளங்குவதற்கு, முன் ஜென்மங்களில், செல்வச் செழிப்பில் திளைத்திருந்து... செல்வம்தான் நிலையானது என்று எண்ணி... அதிலேயே நிலைத்திருந்து... தனது வாழ்வை கடந்திருப்பது.

* தற்போது, கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள்... அதன் பூரணத்துவத்தை அனுபவிக்க... தேவையான  செல்வத்தைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

தொடர்ந்து... இந்தப் பாதையில் பயணிப்போம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.




Monday, January 6, 2020

'உனக்கென உள்ளது, உன்னை வந்து சேரும்' - குருவின் போதனை





அதுவரை எவ்வாறு பொறுமை காப்பது... ?

திருமண விழாவுக்கான அழைப்பை ஏற்றுக் கொண்டு, ஒருவன் திருமணத்திற்குச் சென்றான். திருமணம் முடிந்த பின்... முதல் ஆளாக விருந்து பரிமாறும் இடத்திற்குச் சென்றான்.

இரண்டு நீண்ட வரிசைகளில், இலைகள் போடப்பட்டிருந்தன. விருந்தினர்கள் அமர்ந்த உடன் பரிமாறுவதற்குத் தயாராக... பரிமாறுபவர்களும் காத்திருந்தனர். இவன், அவர்களில் ஒருவரிடம், எங்கிருந்து முதலில்  விருந்து பரிமாறப்படப் போகிறது... என்பதை உறுதி செய்து கொண்டு, அந்த பந்தியில் முதல் ஆளாக அமர்ந்தான்.

இவனை அடுத்து வந்தவர்கள் அனைவரும் வரிசையாக அமர, பந்தியின் இரு வரிசைகளும் முழுமையாக நிரப்பப்பட்டு விட்டன. பந்தி பரிமாற வேண்டியதுதான் பாக்கி. பரிமாறுபவர்கள், பதார்த்தங்கள் நிறைந்த பாத்திரங்களுடன் பந்திக்கு நடுவே வந்தனர்.

இவனமர்ந்த பந்திக்கு நேரெதிர் வரிசையில்... இறுதியாய் வந்து அமர்ந்தவரிடமிருந்து ஆரம்பித்து பரிமாறத் துவங்கினார்கள். இவனது மனத்தில் தோன்றிய ஏமாற்றத்தை அடக்கிக் கொண்டு, பொறுமையாகக் காத்திருந்தான்.

உப்பு... பருப்பு... நெய்... இனிப்பு... காய்கறிகளிலிருந்து... சாதம்... சாம்பார்... வற்றல் குழம்பு... ரஸம்... மோர் வரையிலான அனைத்துப் பதார்த்தங்களும் இவனை நோக்கி வரும் போது... அதன் வரிசைகளும் மாறி, அளவுகளிலும் குறைந்து, ஒவ்வொன்றாய் எதிர்பார்த்து... காத்துக் கிடந்து... உண்ண வேண்டியதாக இருந்தது.

வெறுப்பின் விளிம்புக்கு கொஞ்சம் கொஞ்சமாக சென்றுக் கொண்டிருந்தவன், எப்படியோ... பாயாஸம் வரை வந்துவிட்டான். பாயாஸம் இவனுக்கு மிகவும் பிடித்தமான பதார்த்தம். அதற்காக கொஞ்சம் அப்பளத்தை ஒதுக்கி வைத்திருந்தான். பாயாஸமும் பரிமாறிக் கொண்டு வரப்பட்டது.

இவனது இலைக்கு முன் இலைக்கு பரிமாறிய போது பாயாஸம், அந்தப் பாத்திரத்தில் முடிந்து விட்டது. பரிமாறியவர், 'கொஞ்சம் இருங்கள்... பாயாஸம் இந்தப் பாத்திரத்தில் முடிந்து விட்டது. நிரப்பிக் கொண்டு வருகிறேன்...' என்று கூறி விட்டு, பதார்த்தங்கள் வைக்கும் இடத்திற்கு சென்று விட்டார்.

இவன், அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். காரணம், இந்த வரிசையிலேயே... இவன் மட்டும்தான் பாயாஸத்திற்காக காத்திருக்கும் கடைசி விருந்தாளி. பாயாஸத்தை நிரப்பிய பின் அந்த நபர், அந்த பாத்திரத்தை இன்னொருவரிடம் கொடுத்து, கையைக் காட்டி... அவரை பரிமாற அனுப்பி வைத்தார். வந்தது  இன்னொரு நெருக்கடி.

புதிதாக பாயாஸம் பரிமாற வந்தவர், இவனிருக்கும் எதிர் வரிசையில்... இரண்டாவது முறையாக பாயாஸம் கேட்பவர்களிடமிருந்து ஆரம்பித்து... பரிமாறத் துவங்கினார்.

வெறுப்பின் உச்சத்திற்கே சென்றவன்... இலையை மூடிவிட்டு... வேகமாக எழுந்து கை கழுவச் சென்றான். இவனது வெறுப்பை யாரிடம்தான் காட்டுவது...?

- திருமணத்திற்கு அழைத்தவரிடமா... அல்லது,

- இங்கிருந்துதான் பந்தி ஆரம்பிக்கிறது... என்று சொன்னவரிடமா... அல்லது,

- முதல் முறை பாயாஸம் பரிமாறியவரிடமா... அல்லது,

- அவர் கை காட்டி அனுப்பிய போதும், எதிர் வரிசையிலிருந்து பரிமாற ஆரம்பித்த... இரண்டாவது நபரிடமா...

இவர்கள் ஒருவருமே, இதற்குக் காரணமல்ல... 'எனது விதிதான் இது'... என்று நொந்து கொண்டு... கையைக் கழுவினான்.

வெளியே வரக் கிளம்பியவனின் பாதையில் ஒரு பெரியவர் வந்து நின்றார். அவர் கையில் 'ஒரு குவளை நிறைய பாயாஸம்' இருந்தது. அதை அவர் இவனிடம் நீட்டியபடி... ' இதைக் குடித்து விட்டுச் செல்லப்பா...!' என்றார்.

ஒரு நொடி, தாமதித்து, அவரிடம்... 'நான் பாயாஸம் சாப்பிடாமல் செல்வது, உங்களுக்கு எப்படித் தெரியும்...?' என்று கேட்டான்.

'அது எனக்குத் தெரியாது. ஒரு குவளை மோர் வேண்டும் என்று நான் கேட்டதற்கு, அவர்கள் பாயாஸாத்தைக் கொண்டு வந்து கொடுத்து விட்டார்கள். அதோ... மோர் கொண்டு வருகிறார்கள். இதைப் பிடித்துக் கொள்..' என்றார்.

கையில் அந்த சூடான, பாயஸத்தை வாங்கிக் கொண்டு... 'எனது குருநாதர்' எனக்களித்த போதனையை நினைத்துக் கொண்டேன்.

'உனக்கென உள்ளது, உன்னை வந்து சேரும்...!'

ஸாய்ராம். 

Saturday, January 4, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 66. 'பிரம்ம ஹத்தி' ஒரு ஆய்வு.





'பிரம்ம ஹத்தி' என்பது பற்றி ஜோதிட உலகில் பல்வேறு கருத்துக்கள் உலவி வருகின்றது. அதைபற்றிய ஒரு ஆய்வை இங்கு சமர்ப்பிக்கின்றோம். இது ஒரு தெளிவை பெருவதற்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

'பிரம்மம்' என்ற பேரருள் கருணைதான்...  இந்த ஜீவனது உடலில்... 'சத்து சித்து பரமானந்த சொரூபம்' என்ற வடிவத்தை அடைகிறது. அந்த 'சுத்த சைதன்யத்தை' மூலமாகக் கொண்டுதான்... இந்த ஜீவன்... தனது 'கர்ம வினைகளால்'... இந்த உடலைப் பெறுகிறது. இந்த உடலின் மூலமாகத் தனது 'கர்ம வினைகளை' அனுபவித்து... மீண்டும்... அந்த 'பரம சொரூபத்தில்' கலந்துவிடுகிறது. இந்த உலகில் பிறவியெடுத்த ஒவ்வொரு ஜீவனும்... இந்த 'சுழல் வட்டத்திலிருந்து' தப்பித்து விடுவதில்லை.


பிறவிகள் எடுப்பது ஒரு நிலை... பிறவியைத் தவிர்ப்பது ஒரு நிலை...

முதல் நிலையில்... இந்த பிறவியில், தமது 'கர்ம வினைகளை' இன்பமாகவும் - துன்பமாகவும்... இந்த ஜீவன் அனுபவித்தே தீர வேண்டும். இந்த கர்ம வினைகளை அனுபவித்துதான் கடந்தும் போக வேண்டும். இதிலிருந்து தப்பிக்க வேறு எந்த வாய்ப்போ, வழியோ... ஜீவனுக்கு இல்லை.

இரண்டவது நிலையில்... எத்தனை பிறவிகளை அடைந்தாலும்... இறுதியில் 'பரப் பிரம்மத்தை' அடைவதைத் தவிர, ஜீவனுக்கு வேறு வழியும் இல்லை.

இந்த முதல் நிலைதான். ஜீவனுக்குத் தடையாக அமைகிறது. அதாவது 'பரப்பிரம்மத்தை அடைய'... 'தமது கர்ம வினைகள் தடையாக' இருக்கிறது.
இதைத்தான்... 'பிரம்ம ஹத்தி' என்றழைக்கிறோம். 'பிரம்மம்' என்பதை ஓரளவு எளிமையாக நிர்ணயம் செய்திருக்கிறோம். 'ஹத்தி' என்பது தடை என்பதாகிறது. 'பிரம்ம ஹத்தி' என்ற சொல்லாடலை... 'பிரம்மத்தை அடைவதற்குத் தடை' என்று எளிமைப்படுத்தலாம்.

எது பிரம்மத்தை அடையத் தடையாகிறது...? என்ற கேள்வியை எழுப்பினால், அதற்குப் பதிலாக... நமது கர்மவினைகள்தான்... என்பதுதான் பதிலாகக் கிடைக்கும்.

இந்தத் தடையைத் தகர்த்தெடுக்க நம்மால் முடியும் என்பதைத்தான்... நமது தேசத்தில் அவதரித்த எண்ணற்ற மகான்களும்... மகன்னீயர்களும்... ஞானியர்களும்... சித்த புருஷர்களும்... யோகியர்களும்... நிரூபணம் செய்திருக்கிறார்கள்.

அவர்களால்தான் இது முடியும். எளிய ஜீவர்களுக்கு இது சாத்தியமாகுமா...? என்ற கேள்வி எழுந்தால்... அதுவும் சாத்தியமாகியிருக்கிறது. மகான்களின், மகன்னீயர்களின், ஞானியர்களின், சித்த புருஷர்களின், யோகியர்களின்... தொடர்புகளைப் பெற்ற, எளிய ஜீவர்கள் கடைத்தேற்றம் பெற்ற எண்ணற்ற பதிவுகள் நம் புராணங்களிலும், இதிகாசங்களிலும் கொட்டிக் கிடக்கின்றன.

அதுமட்டுமல்ல... அண்மையில் வாழ்ந்து 'இறை சொரூபமான'... இராமகிருஷ்ண பரமஹம்ஸர், லாகிரி மஹாசயர், சேஷத்திரி மகான், , யுக்தேஸ்வர் கிரி மஹராஜ், வள்ளலார், ரமண மகிரிஷி, ஸாயீ பாபா, காஞ்சிப் பெரியவர், யோகானந்த பரமஹம்ஸர், யோகி ராம்சுரத் குமார், அரவிந்தர், அன்னை... போன்ற எண்ணற்ற மகா புருஷர்களின் வாழ்வியல் வரலாறுகள் இதற்குச் சான்றாக அமைகின்றன.

இறுதியாக, 'பகவான் ரமண மகிரிஷி'... அருளிய 'ஒரு எளிய உபாயத்தை' நாம் கடைபிடிக்க... இந்தத் தடையை வென்று...'பிரம்மத்தை' அடைவது வெகு சுலபாகும்.

அது, 'உனது கர்ம வினைகளை உனது உடம்பு பார்த்துக் கொள்ளும். நீ என்னைப் பார்...!' என்பதுதான்.

ஸாய்ராம்.

'குடை ரிப்பேர்' - சிறுகதை'




1985, அந்தக் காலத்தில்தான் 'மடக்கும் நவீன குடைகள்' வர ஆரம்பித்த காலம். அப்போதெல்லாம், பெருமளவில் பழைய நீண்ட கருப்பு நிறக் குடைகளே நடைமுறையில் பயன்படுத்தப்பட்டன.

குடை ரிப்பேர் செய்யும் நபர்களும், மடக்கும் குடைகளுக்கான தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ளாத காலம்.

ஒரு நாள் மதிய நேரத்தில்... வீட்டு வாசல் நிழலில்... ஒரு குடை ரிப்பேர் செய்பவர், ஒரு மடக்கும் குடையை பழுது நீக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். நான் வீட்டுக்குள் நுழைந்ததும், அம்மாவிடம்...' மடக்கும் குடையை இவரிடம் ரிப்பேர் செய்யக் கொடுத்திருக்கிறார்களே... இவரால் அது முடியுமா... சந்தேகம்தான்...' என்று கூறியபடியே உள்ளே சென்றேன்.

அம்மாவோ. 'அது நமது குடைதான். ஏன்... அவர் அதை சரிசெய்ய மாட்டாரா...?' என்று கேட்க... நான் வெளியே வந்து அவரிடம், ' உங்களுக்கு இந்த மடக்கும் குடையை சரி செய்யத் தெரியுமா...?' என்று கேட்டேன். ஏனெனில், அந்தக் குடையை இரண்டாக மடக்கும் இடத்தில் மட்டும்தான் ஒரு இணைப்புக் கம்பி உடைந்திருந்தது. மற்ற படி குடையை விரிப்பதிலோ... பயன்படுத்துவதிலோ எந்த சிக்கலும் இல்லை. அவர்...'சார்... நான் பார்க்காத குடைகளா  ! இதை ஒரு கால் மணி நேரத்தில் சரி செய்து கொடுக்கிறேன்...' என்றார்.

நான் சாப்பிட அமர்ந்த நேரம், அம்மா அவருக்கு ஒரு கப் தேநீரைக் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்து உட்கார்ந்தார். 'சார்.. !' என்ற குரல் கேட்டு, வெளியில் வந்த போது...' சரி செய்துவிட்டேன். இப்போது பாருங்கள் ' என்றார். நானும் ஆச்சரியத்துடன் குடையை வாங்கிப் பார்த்தேன்.

கம்பியின் இணைப்பு உடைந்திருந்த இடத்தில்... ஒரு சிறு கம்பியொன்றை வளைத்து இறுக்கிக் கட்டியிருந்தார். அந்த இடம்... குடைக்கு வெளியே முட்டிக் கொண்டிருந்தது. சரி, பரவாயில்லை என்று குடையை மடக்க முயற்சித்தேன். 'சார்... அது இரண்டாக மடங்காது. இப்போது நீங்கள் அதை நேராகத்தான் பிடிக்க வேண்டியிருக்கும்...' என்றார். நானும் சிரித்துக் கொண்டே... ' இதை மடக்கிக் காட்டுங்கள்...' என்றேன். அவர் சற்று சிரமம்பட்டு மடக்கினார்.

இப்பொது குடை 'ஒரு மத்தளத்தைப் போல' இரு முனைகள் சிறுத்தும்... நடுவில் பருத்தும் இருந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு... 'இதைக் கொஞ்சம் விரித்துக் காட்டுங்கள்...' என்றேன். மேலும் சிரமத்துடன் அதை விரித்தார். ஆனால் விரிந்த குடை இப்பொது அதன் இடத்தில் நிற்க முடியாது வழுக்கிக் கொண்டே  வந்தது. 'இது விரிந்த படி நிற்காதா...  ?' என்றேன்.

'சார்... நிற்கும் சார். இந்த ஸ்பிரிங்க் கொஞ்சம் வேலை செய்யாமல் இருக்கிறது. அதை வெளிக்கொண்டுவர... நான் நுனியில் வளைத்த ஒரு சிறிய கம்பியை தருகிறேன். குடையை விரித்தபடி... இந்தக் கம்பியைக் கொண்டு, அந்த ஸ்பிரிங்கை இழுத்து விட்டால், குடை விரிந்தபடி இருக்கும்...' என்றார். 'ஓ... நான் இந்தக் கம்பியையும் எப்போதும் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் இல்லையா...?' என்றேன். அவர் அதற்கும் சளைக்காமல்... 'சார்... நான் இன்னொரு வளைத்த கம்பியையும் வைத்திருக்கிறேன். அதையும் தருகிறேன், சார்...!' என்றார். "ஓ ! இன்னொரு ஸ்பேரா...!!' என்ற போது... உண்மையில் என்னால் சிரிப்பை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை.

மடக்கிய கம்பியின் உதவியுடன் விரித்த குடையுடன் நிற்கும் என்னை வந்து பார்த்த அம்மா... 'பார்த்தாயா... குடையை எப்படி சரி செய்துவிட்டார். யாரையும் ஆளைப் பார்த்து எடை போடாதே...!' என்றார். நானும் எதுவும் சொல்லாமல்... 'அவருக்கு உண்டானதைக் கொடுத்துவிடுங்கள்...' என்று கூறியபடியே உள்ளே வந்துவிட்டேன்.

அம்மாவும் அவருக்கு பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளே வந்து, 'எங்கே... குடையைக் கொடு பார்க்கலாம்...' என்றார்கள். நான் குடையை விரித்தபடியே.. 'இரண்டு நுனி வளைந்த கம்பிகளையும்' கொடுத்தேன். இது என்னப்பா...?' என்றதற்கு... 'அது குடையை விரிப்பதற்கான ஸ்பேர் கம்பிகள். தொலைத்து விடாமல், பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்...' என்றேன்.

நான் உள்ளிருந்து... அம்மா, அந்த குடையை மடக்க முயற்சி செய்ததையும்... அதை மடக்கிய பின்... 'அந்த மத்தளக் குடையை' மறைத்து வைக்கத் தவித்ததையும்... குலுங்கிக் குலுங்கி சிரித்தபடி ரசித்துக் கொண்டிருந்தேன்.

இன்று அம்மா என்னுடன் இல்லை. ஆனால்... 'குடை ரிப்பேர்... குடை ரிப்பேர்...!!' என்ற குரல் மட்டும் என் காதுகளில் இப்பொதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஸாய்ராம்.

Thursday, January 2, 2020

இக வாழ்வுக்கு... ஞானிகள் அளிக்கும் அருள்





அகப்பச் சுவையறியா தாழ்ந்தமிழ்ந்தெல் லார்க்கு
மிகப்பெய் திடுமே விருந்திவ் - விகத்தின்ப
மேது நுகரா ரிறைஞ்சுவார்க் கீந்தருள்வார்
கோதகன்ற ஞானியருள் கூர்ந்து.

( 'ஸ்ரீ சாது ஓம்' சுவாமிகள் அருளிய 'சாதனை சாரம்', பாடல் : 13. ஞானி அருள் )

இந்தப் பாடலை சற்று எளிமையாக்கினால்...

'அகப்பை சுவை அறியாது... ஆழ்ந்து... அமிழ்ந்து... எல்லார்க்கும்,
மிகப் பெய்திடுமே விருந்து. இகத்து இன்பம்
ஏதும் நுகரார்... இறைஞ்சுவார்க்கு ஈந்து அருள்வார்
கோது அகன்ற ஞானி அருள்'

... என்று அமையும்.

இதன் பொழிப்புரையாக... சுவாமிகள் அருளியது...

' சுவை மிக்க பாயாசம் போன்ற உணவுப் பொருள்களை வாரி வழங்கும் அகப்பையானது, அதன் சுவையை ருசி பார்ப்பதேயில்ல. பரிமாறும் ஒவ்வொரு சமயத்திலும் அது அந்தச் சுவை மிகுந்த பாயசம் போன்ற உணவுப் பொருள்களுள் ஆழ்ந்து, முழுகி... முழுகி... எழுந்து வந்து, எல்லோருக்கும் பாயச விருந்தைப் பரிமாறும். அது போலவே, யாதொரு உலக தோஷமும் அற்ற ஆன்ம ஞானிகள்... இகபர சுகங்களுள் எதையுமே தாம் நுகர மாட்டார்கள். ஆனால், அவற்றை வேண்டி வந்து பிரார்த்திக்கும் காமியார்த்திகளுக்கு (உலக வாழ்வில் உழலுபவர்களுக்கு) கிடைக்கும் படி அருள் செய்வர்.'

ஸாய்ராம்.

'

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...