புதிதாகத் திருமணமான மணப்பெண், தனது கணவருடன் பிறந்தகத்திற்கு வந்திருந்தாள். அவளின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத, அவளது தோழர்களும், தோழிகளும், மணமக்களை வாழ்த்துவதற்காக, அவளின் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.
தோழர்கள், மணமகனுடன் வரவேற்பறையிலும்... தோழிகள், மணமகளுடன் உள் அறையிலும்... அமர்ந்திருந்தார்கள். மணமகளது கணவனைக் காண ஆவலுற்ற தோழிகள்... அறையின் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வரவேற்பறையில், மணமகனையொத்த வயதுடையவர்கள் பலர் அமர்ந்திருந்ததால், அவர்களால் யார் மணமகன் என்று கண்டறிய முடியவில்லை. ஆகவே, மணமகளை ஜன்னலுக்கருகில் அழைத்து, அங்கு அமர்ந்திருப்பவர்களில், அவளது கணவன் யார்... என்று அடையாளம் காட்ட சொன்னார்கள்.
நாணத்துடன் இருந்த மணமகளிடம்... ஜன்னலில் தெரியும் ஒவ்வொருவராகச் சுட்டிக் காட்டி, ' அவரா, உன் கணவர்...?'... அவரா, உன் கணவர்...?'என்று அடுத்தடுத்துக் கேட்க, 'இல்லை, இல்லை...' என்று மறுத்தபடியே இருந்தாள்.
இறுதியாக, ஒருவரைச் சுட்டிக் காட்டி, 'அவர்தானே... உனது மணாளன்...?' என்று கேட்க, அவள் 'ஆம்' என்றும் சொல்லாமலும், 'இல்லை' என்றும் சொல்லாமலும், மௌனமாக... நாணத்துடன்... வெட்கித் தலை குனிந்தாள். அவளது தோழிகள், அவன்தான், அவளது கணவன் என்பதை அறிந்து கொண்டார்கள்.
அது போலத்தான், பிரம்மத்தை நிரூபணம் செய்வதும். பிரம்மத்தைப் பற்றிய எண்ணற்ற விளக்கங்களை, படித்தும்... கேட்டும்...அறிந்து கொள்ளலாம். அவையனைத்தும் மனதில் சந்தேகங்களையும்... கேள்விகளையுமே எழுப்பிக் கொண்டிருக்கும்.
எப்போது, ஒரு ஜீவனுக்கு... அந்த பிரம்மத்தை... அவனது 'சத்குருநாதர்' சுட்டிக் காடுகிறாரோ... அப்போது, ஜீவனது மனத்தில் எழுந்த சந்தேகங்களும்... கேள்விகளும் மறைந்து... அது, அந்த பிரம்ம சொரூபத்தில் ஆனந்தமாக ஐக்கியமாகிவிடுகின்றது..

No comments:
Post a Comment