அதுவரை எவ்வாறு பொறுமை காப்பது... ?
திருமண விழாவுக்கான அழைப்பை ஏற்றுக் கொண்டு, ஒருவன் திருமணத்திற்குச் சென்றான். திருமணம் முடிந்த பின்... முதல் ஆளாக விருந்து பரிமாறும் இடத்திற்குச் சென்றான்.
இரண்டு நீண்ட வரிசைகளில், இலைகள் போடப்பட்டிருந்தன. விருந்தினர்கள் அமர்ந்த உடன் பரிமாறுவதற்குத் தயாராக... பரிமாறுபவர்களும் காத்திருந்தனர். இவன், அவர்களில் ஒருவரிடம், எங்கிருந்து முதலில் விருந்து பரிமாறப்படப் போகிறது... என்பதை உறுதி செய்து கொண்டு, அந்த பந்தியில் முதல் ஆளாக அமர்ந்தான்.
இவனை அடுத்து வந்தவர்கள் அனைவரும் வரிசையாக அமர, பந்தியின் இரு வரிசைகளும் முழுமையாக நிரப்பப்பட்டு விட்டன. பந்தி பரிமாற வேண்டியதுதான் பாக்கி. பரிமாறுபவர்கள், பதார்த்தங்கள் நிறைந்த பாத்திரங்களுடன் பந்திக்கு நடுவே வந்தனர்.
இவனமர்ந்த பந்திக்கு நேரெதிர் வரிசையில்... இறுதியாய் வந்து அமர்ந்தவரிடமிருந்து ஆரம்பித்து பரிமாறத் துவங்கினார்கள். இவனது மனத்தில் தோன்றிய ஏமாற்றத்தை அடக்கிக் கொண்டு, பொறுமையாகக் காத்திருந்தான்.
உப்பு... பருப்பு... நெய்... இனிப்பு... காய்கறிகளிலிருந்து... சாதம்... சாம்பார்... வற்றல் குழம்பு... ரஸம்... மோர் வரையிலான அனைத்துப் பதார்த்தங்களும் இவனை நோக்கி வரும் போது... அதன் வரிசைகளும் மாறி, அளவுகளிலும் குறைந்து, ஒவ்வொன்றாய் எதிர்பார்த்து... காத்துக் கிடந்து... உண்ண வேண்டியதாக இருந்தது.
வெறுப்பின் விளிம்புக்கு கொஞ்சம் கொஞ்சமாக சென்றுக் கொண்டிருந்தவன், எப்படியோ... பாயாஸம் வரை வந்துவிட்டான். பாயாஸம் இவனுக்கு மிகவும் பிடித்தமான பதார்த்தம். அதற்காக கொஞ்சம் அப்பளத்தை ஒதுக்கி வைத்திருந்தான். பாயாஸமும் பரிமாறிக் கொண்டு வரப்பட்டது.
இவனது இலைக்கு முன் இலைக்கு பரிமாறிய போது பாயாஸம், அந்தப் பாத்திரத்தில் முடிந்து விட்டது. பரிமாறியவர், 'கொஞ்சம் இருங்கள்... பாயாஸம் இந்தப் பாத்திரத்தில் முடிந்து விட்டது. நிரப்பிக் கொண்டு வருகிறேன்...' என்று கூறி விட்டு, பதார்த்தங்கள் வைக்கும் இடத்திற்கு சென்று விட்டார்.
இவன், அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். காரணம், இந்த வரிசையிலேயே... இவன் மட்டும்தான் பாயாஸத்திற்காக காத்திருக்கும் கடைசி விருந்தாளி. பாயாஸத்தை நிரப்பிய பின் அந்த நபர், அந்த பாத்திரத்தை இன்னொருவரிடம் கொடுத்து, கையைக் காட்டி... அவரை பரிமாற அனுப்பி வைத்தார். வந்தது இன்னொரு நெருக்கடி.
புதிதாக பாயாஸம் பரிமாற வந்தவர், இவனிருக்கும் எதிர் வரிசையில்... இரண்டாவது முறையாக பாயாஸம் கேட்பவர்களிடமிருந்து ஆரம்பித்து... பரிமாறத் துவங்கினார்.
வெறுப்பின் உச்சத்திற்கே சென்றவன்... இலையை மூடிவிட்டு... வேகமாக எழுந்து கை கழுவச் சென்றான். இவனது வெறுப்பை யாரிடம்தான் காட்டுவது...?
- திருமணத்திற்கு அழைத்தவரிடமா... அல்லது,
- இங்கிருந்துதான் பந்தி ஆரம்பிக்கிறது... என்று சொன்னவரிடமா... அல்லது,
- முதல் முறை பாயாஸம் பரிமாறியவரிடமா... அல்லது,
- அவர் கை காட்டி அனுப்பிய போதும், எதிர் வரிசையிலிருந்து பரிமாற ஆரம்பித்த... இரண்டாவது நபரிடமா...
இவர்கள் ஒருவருமே, இதற்குக் காரணமல்ல... 'எனது விதிதான் இது'... என்று நொந்து கொண்டு... கையைக் கழுவினான்.
வெளியே வரக் கிளம்பியவனின் பாதையில் ஒரு பெரியவர் வந்து நின்றார். அவர் கையில் 'ஒரு குவளை நிறைய பாயாஸம்' இருந்தது. அதை அவர் இவனிடம் நீட்டியபடி... ' இதைக் குடித்து விட்டுச் செல்லப்பா...!' என்றார்.
ஒரு நொடி, தாமதித்து, அவரிடம்... 'நான் பாயாஸம் சாப்பிடாமல் செல்வது, உங்களுக்கு எப்படித் தெரியும்...?' என்று கேட்டான்.
'அது எனக்குத் தெரியாது. ஒரு குவளை மோர் வேண்டும் என்று நான் கேட்டதற்கு, அவர்கள் பாயாஸாத்தைக் கொண்டு வந்து கொடுத்து விட்டார்கள். அதோ... மோர் கொண்டு வருகிறார்கள். இதைப் பிடித்துக் கொள்..' என்றார்.
கையில் அந்த சூடான, பாயஸத்தை வாங்கிக் கொண்டு... 'எனது குருநாதர்' எனக்களித்த போதனையை நினைத்துக் கொண்டேன்.
'உனக்கென உள்ளது, உன்னை வந்து சேரும்...!'
ஸாய்ராம்.

No comments:
Post a Comment