கடவுளை தரிசனம் செய்தே தீர வேண்டும்...! என்ற தீவிரம் மட்டும் இருந்தால் போதும்... அவன், நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை... அவரின் தரிசனம் உடனடியாகக் கிட்டும்.
மனிதன் உலக வாழ்வில் மூன்று விதமான பற்றுதல்களில் நீங்கமுடியாத அன்பைப் பொழிகிறான் : சொத்துக்களின் மீதான பற்றுதல் ; கணவன், மனைவி இவர்களுக்கிடையேயான பற்றுதல் ; குழந்தையின் மீதான தாயின் பற்றுதல்.
இந்த மூன்று வகையான உலகப் பற்றுதல்கள் மீது வைக்கும் அன்பை இணைத்து... அதைக் கடவுளின் மீது வைக்கும் போது... அவரின் தரிசனம் உடனே கிடைத்துவிடும்.
இதே கேள்வியை, ஒரு சிஷ்யன் தனது குருவிடம் கேட்டான், ' குருவே, நான் எவ்வாறு கடவுளை தரிசனம் செய்வது...?'. 'என்னுடன் வா...! நான் காட்டுகிறேன்...!!' என்ற குரு, அவனை ஒரு குளத்திற்கு அழத்துச் சென்றார். குளத்திற்குள் இறங்கியவுடன், சிஷ்யன் எதிர்பார்க்காத போது, திடீரென்று அவனது தலையைத் தண்ணீருக்குள் அமிழ்த்தினார்.
எதிர்பாராத போது நிகழ்ந்த நிகழ்வினால் சிஷ்யன் தண்ணிருக்குள் மூச்சுக்காகத் தவித்தான். எப்போது ஒரு, ஆழ்ந்த மூச்சை எடுப்பேன்... என்று திணறிக் கொண்டிருந்த வேளை... குரு தனது கையைத் தலையிலிருந்து எடுத்தார். நீண்ட மூச்சை எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட சிஷ்யனிடம், குரு கேட்டார், 'தண்ணீருக்குள் எதை உணர்ந்தாய்...?'. அதற்கு சிஷ்யன், 'குருவே, நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஒரே ஒரு முச்சுக்காகத் திணறித் தவித்தேன்...!' என்றான்.
அப்போது குரு, 'அந்த மூச்சுக்காக நீ ஏங்கியது போலவே, கடவுளுக்காக நீ ஏங்கும் போது, அவரின் தரிசனம் கிடைப்பதற்கு நீ காத்திருக்கத் தேவையில்லை...!' என்றார்.

No comments:
Post a Comment