Wednesday, January 29, 2020

'பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்' அருளிய... சிறு கதைகளின் தமிழாக்கம். 'தூண்டிலிடுபவரின் கவனம்'




ஒரு முனைப்பட்ட தியானம் என்பது... தியானிப்பவரால் எதையும் பார்க்கவோ, கேட்கவோ முடியாதது மட்டுமல்ல... தொடுதலைக் கூட உணரமுடியாத நிலையாக இருக்கும். புற உலக சிந்தனைகள் அனைத்தையும் இழந்த நிலையாக இருக்கும்.

ஒரு ஏரிக்கரையில் அமர்ந்தபடி,  தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தவனுடய கவனம் முழுவதுமாக தூண்டிலில் இருந்த சிறு மிதவையின் மீதே இருந்தது. இறுக்கமாகத் தூண்டிலைப் பிடித்தபடி, எப்போது அந்த மிதவை நீரில் மூழ்குமோ... அப்போது தூண்டிலைத் தூக்கி விட வேண்டும் என்ற கவனமான எண்ணத்துடனேயே இருந்தான்.

அப்போது வழிப்போக்கன் ஒருவன் வந்து, ' திரு.பானர்ஜி அவர்களது வீடு எங்கிருக்கிறது என்று வழி காட்ட முடியுமா...?' என்று கேட்டான். மீன்பிடிப்பவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. சுற்றி இருக்கும் சூழல் பற்றிய எந்த பிரஞ்சையும் இல்லாமல், அவனது கவனம் முழுவதும் அந்த மிதவையின் மீதே இருந்தது. மிதவை சற்று அசைய ஆரம்பித்தது. கைகளில் நடுக்கத்துடன்... தூண்டிலைத் தூக்கிவிட வேண்டும் என்ற கவனத்திலேயே இருந்தான்.

வழிப்போக்கனோ, மீண்டும், மீண்டும் அதே கேள்வியைக் கேட்டுச் சலித்து, பதில் ஏதும் வராத நிலையில், எரிச்சலுடன் அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தான். அதே வேளை, தூண்டிலின் மிதவை நீரில் மூழ்கியது. அதிலேயே கவனத்தை வைத்துக் கொண்டிருந்தவன், சட்டென்று தூண்டிலை இழுக்க, ஒரு பெரிய மீன் வந்து கரையில் விழுந்தது.

முகத்தில் வழிந்து கொண்டிருந்த வியர்வையைத் துடைத்தபடி, நடந்து சென்று கொண்டிருந்த வழிப்போக்கனைப் பார்த்து, 'ஐயா, இங்கே பாருங்கள்...!' என்று கூப்பிட்டான். திரும்பிப்பார்க்காமல் எரிச்சலுடன் சென்று கொண்டிருந்த வழிப்போக்கனை, மீண்டும் சத்தமாகக் கூப்பிடவே, திரும்பி வந்த வழிப்போக்கன், 'ஏன் என்னைப் பார்த்து சத்தம் போட்டு கூப்பிடுகிறாய்...?' என்று கேட்டான். அதற்கு இவனோ, 'நீங்கள், ஏதோ என்னிடம் கேட்டீர்களே...!' என்றான்.

திகைத்து நின்ற வழிப் போக்கனோ, 'நான் அதே கேள்வியைப் பல முறைக் கேட்டேன். அதை மீண்டும் ஒரு முறை கேட்க வேண்டுமோ...?' என்றான். அதற்கு மீன் பிடிப்பவன், 'அந்த நேரத்தில், எனது தூண்டிலின் மிதவை நீரில் மூழ்கும் தருவாயில் இருந்தது. அதனால், எதையும் கேட்க முடியாத நிலையில் நான் இருந்தேன்...' என்றான்.

இதுதான் தியானத்தின் ஒரு முனைப்பட்ட நிலை.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...