பரப்பிரம்மமான இறைவன், பிரபஞ்சத்திலுள்ள அசையும் உயிரினங்களிலும், அசையா வஸ்துக்களிலும் நிறைந்திருக்கிறான். 'அவனன்றி ஓரணுவும் அசையாது' என்பதன் விரிவாக்கம் இதுதான்.
அனைவரது உள்ளத்திலும் சந்தேகமின்றி நிறைந்திருக்கும் இறைவன், தர்மத்தின் வழி செல்பவர்களுக்குள்ளும்... தர்மத்திற்கு எதிராகச் செயல்படுபவர்களுக்குள்ளும் நிறைந்திருக்கிறார்.
அனைவருக்குள்ளும் இறைவனைக் காணும் ஒரு பக்தன், தர்மத்தின் வழி செல்பவர்களை அடையாளம் கொண்டு அவர்களை அணுகி நெருக்கம் கொள்வது எவ்வளவு முக்கியமோ... அதை விட முக்கியம், தர்மத்திற்கு எதிராக செயல்படுபவர்களை விட்டு விலகி நிற்பது. இதை மிக எளிதான ஒரு கதையைக் கொண்டு 'பகவான்' விளக்குவார்.
ஒரு காட்டுக்குள் தனது ஆசிரமத்தை அமைத்துக் கொண்ட குருவிடம் பல சிஷ்யர்கள் இருந்தனர். அவர் தனது சிஷ்யர்களுக்கு, 'எல்லா உயிரினங்களுக்குள்ளும் உறையும் இறைவனை உணர்ந்து கொள்வது மட்டுமல்ல அந்த உயிர்களை வணங்கி பணியவும் வேண்டும்...' என்று அறிவுருத்தினார்.
அதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த சிஷ்யன், ஆசிரமத்திற்குத் தேவையான சுள்ளிகளை சேகரிக்க சக சிஷ்யர்களுடன் காட்டுக்குள் சென்றான். அப்போது, 'மதம் பிடித்த யானை ஒன்று ஓடி வருகிறது. அதன் வழியில் குறுக்கிடாமல் விலகி ஓடுங்கள்...!' என்ற குரல் ஒலித்தது.
அந்தக் குரலைக் கேட்ட அனைவரும் அந்தப் பாதையிலிருந்து விலகி ஓடினார்கள்... அந்தக் குறிப்பிட்ட சிஷ்யனைத் தவிர. அவனை மற்றவர்கள் அழைத்த போது, 'அந்த யானைக்குள்ளும் இறவனே உறைகிறார். நான் ஏன் ஓட வேண்டும்...?' என்று கேட்டது மட்டுமல்ல... ஒடி வரும் யானையை நோக்கி பணிவுடன் வணங்கி நின்றான்.
'ஓடி விடு... ஓடி விடு...!' என்ற பாகனின் குரலையும் மறுத்துவிட்டு வழியில் சின்ற சிஷ்யனை, யானை தனது தும்பிக்கையால் தூக்கி வீசி விட்டுச் சென்றது. பலத்த அடிபெற்று மயங்கி விழுந்த சிஷ்யனை, குருவுடன் வந்த சிஷ்யர்கள் சுமந்து சென்று ஆசிரமத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
மயக்கம் தெளிந்த சிஷ்யனிடம், 'யானை வருவது தெரிந்தும்... அதன் வழியில் ஏன் நின்றாய்...?' என்று கேட்டபோது, 'நமது குருநாதர், அனைத்து உயிரினங்களுக்குள்ளும் இறைவன் உறைந்திருப்பதாகச் சொன்னதால்... யானைக்குள்ளும் இறைவன் உறைந்திருக்கிறார் என்று 'யானை இறைவனை' பணிந்து வணங்கினேன்...!' என்றான்.
அப்போது குறுக்கிட்ட... குருநாதர், 'ஆமாம் குழந்தாய், 'யானை இறைவன்' மதம் பிடித்து ஓடிவரும் போது... 'பாகன் இறைவன்' உன்னை விலகி இருக்கச் சொன்னானே. அதை ஏன் நீ கேட்கவில்லை. மதம் பிடித்த 'யானை இறைவனைத்' தவிர்த்து... உதவி புரிய வந்த' பாகன் இறைவனின்' வார்த்தையைத் தானே நீ கேட்டிருக்க வேண்டும்...!' என்றார்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment