'இறை அவதாரங்களான மகான்களை', அவ்வளவு எளிதாக அடையாளம் கண்டுவிட முடியாது. மிகச் சாதரண மாந்தர்களுக்கிடையே உலவும் அவர்களை யாரால்தான் இனம் பிரித்து அறிந்துவிட முடியும்...?
ஞானம் பெற்றவர்களால்தான், மகான்களை இனம் கண்டு கொள்ள முடியும். அதுவும், அவரவர்கள் பெற்ற ஞானத்தை மூலமாகக் கொண்டுதான்... மகான்களின் சாந்நியத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
சிலரால், அவரை 'சாதாரண மனிதர்' என்றும்... சிலரால், அவரை 'புனிதர்' என்றும் அறிந்து கொள்ள முடியும். ஆனால்,வெகு சிலரால் மட்டுமே அவரை ஒரு 'அவதார புருஷர்' என்று உணர்ந்து கொள்ள முடியும். அவரவர் பெற்ற ஞானத்தின் வழியேதான்... அவரவரின் அனுபவமும்.
உள்வாழ்வின் ஞானத்தை, உலகவாழ்வின் மூலதனமான பொருளாதாரத்தின் ஏற்ற-இறக்கங்களை, உதாரணமாகக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.
ஒரு வைர வியாபாரி, தனது வேலையாளிடம் ஒரு வைரத்தைக் கொடுத்து, 'இந்த வைரத்தை சந்தைக்கு எடுத்துப் போய், வெவ்வேறுபட்ட வியாபாரிகளிடம், இதன் விலையை விசாரித்துக் கொண்டு வா. இதன் விலையை ஒவ்வொருவரும் எவ்வாறு நிர்ணயிக்கிறார்கள் என்று பார்ப்போம்...!' எனக் கூறினார்.
வேலையாளும், அந்த வைரத்தை எடுத்துக் கொண்டு, சந்தையில் கத்தரிக்காய் வியாபாரியிடம் சென்று, அதன் விலையை விசாரித்த போது, வைரத்தைத் தனது கையில் எடை பார்ப்பது போலப் பார்த்து, 'இதற்கு, ஒன்பது கத்திரிக்காய் கூறுகளைத்தான் என்னால் தர முடியும்...!' என்றான். வேலையாள், ' கொஞ்சம் கூட்டி, பத்து கூறுகளாகத் தரமுடியுமா...?' என்று கேட்டதற்கு, ' நான் சொன்ன விலை ஏற்புடையதாக இருந்தால் கொடு. நான் ஏற்கனவே சந்தை விலையை விட சற்று அதிகமாகத்தான் சொல்லியிருக்கிறேன்...' என்றான்.
மனதிற்குள் சிரித்தபடி, வேலையாள் முதலாளியிடம் சென்று, 'ஐயா, ஒரு கத்தரிக்காய் வியாபாரியிடம் சென்றேன். அவன் ஒன்பது கத்தரிக்காய் கூறுகள்தான் தர முடியும் என்றும், அதற்கு மேலாக ஒரு கூறு கூட தர முடியாதென்றும் மறுத்துவிட்டான். மேலும், அவன் கூறிய விலை சந்தை விலையை விட அதிகமானது என்றும் கூறினான்..' என்றான்.
வைர வியாபாரி சிரித்துக் கொண்டே, 'இப்போது இந்த வைரத்தை ஒரு துணி வியாபாரியிடம் கொண்டு சென்று விசாரித்து வா. கத்தரிக்காய் வியாபாரிக்கு வைரத்தைப் பற்றி தெரிய வாய்ப்பு இருக்காது, அவனை விட துணி வியாபாரியின் பணப் புழக்கம் சற்று கூடுதலாக இருக்கும். அவன் எவ்வாறு மதிப்பிடுகிறான்... என்று பார்ப்போம்...!' என்றார்.
வேலையாளும் துணி வியாபாரியிடம் சென்று, ' இதை வாங்கிக் கொள்கிறீகளா... வாங்குவதானால, இதற்கு எவ்வளவு கொடுப்பீர்கள்...?' என்று கேட்க, வியாபாரியோ, 'இது நன்றாக இருக்கிறது. இதை வைத்து ஒரு ஆபரணம் செய்து கொள்ளலாம். இதற்கு தொள்ளாயிரம் ரூபாய் தர முடியும்...' என்றான். வேலையாளோ, 'சற்று கூட்டிக் கொடுத்தால் உங்களுக்கே தந்து விடுவேன். ஆயிரம் ரூபாயாவது கொடுங்கள்...' எனக் கேட்க, ' நான் சொன்னதை விட ஒரு ரூபாய் கூட கூட்டிக் கொடுக்க முடியாது. கட்டாயப் படுத்த வேண்டாம். நீங்களே ஒரு முடிவு செய்து கொள்ளுங்கள்...' என்றான்.
மீண்டும், மனதிற்குள் சிரித்தபடியே, முதலாளியிடம் சென்று நடந்ததைக் கூற, அவரும் சிரித்துக் கொண்டே, 'இப்போது ஒரு நகை வியாபாரியிடம் சென்று விசாரித்து வா...!' என்றார். நகை வியாபாரியிடம் சென்று, அவனிடம் வைரத்தைக் கொடுத்தவுடன், அவன் அதை வாங்கிப் பார்த்ததுமே, ' இதற்கு ஒரு லக்ஷம் ரூபாய் தருகிறேன்...' என்றான்.
திருப்தியடைந்த வேலையாள், அந்த வைரத்தை, அந்த நகை வியாபாரியிடமே கொடுத்து, ஒரு லக்ஷம் ரூபாய் பெற்று, அதைக் கொண்டு வந்து தனது முதலாளியிடம் ஒப்படைத்தான். இப்போது முதலாளி கேட்டார், 'வைரத்தின் விலை, இப்போது உனக்குப் புரிந்து விட்டதா...?' என்று.
ஆம், அவரவரின் தகுதிக்கு ஏற்பவே அருளும்... பொருளும்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment