Friday, January 31, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 80. '6 ஆம் பாவம்', வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'.



6 ஆம் பாவம் :



ருண - ரோக - சத்ரு ஸ்தானம் என்று குறிப்பிடப்படும்... ஜோதிடத்தின் மிக முக்கியமான பாவம். இதைத்தான், கடன் - நோய் - எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஸ்தானம் என்று குறிப்பிடுகிறோம்.

ஒரு ஜீவன், தனது 'கர்ம வினைகளை' சுமந்து கொண்டுதான் இந்தப் பிறவியை அடைகிறது. அந்தக் கர்மவினைகளான 'பாபத்தையும்... புண்ணியத்தையும்' சமமாகப் பகிர்ந்து கொண்டு பிறக்கிறது. அதில் 'பாபம்' என்ற... துன்பத்தையும், தடங்கல்களையும், எதிர்ப்புகளையும், ஜீவன், எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது...? என்பதை இந்த '6 ஆம் பாவம்' வெளிப்படுத்துகிறது.

இந்தப் பாவத்தை, துன்பத்தை வெளிப்படுத்தும் பாவமாக மட்டும் பார்க்காமல்... 'ஜோதிடத்தின் சூட்சுமங்களை' வெளிப்படுத்தும் பாவமாகவும் பார்க்க வேண்டும்.

# பூர்வ புண்ணிய பாவமான '5 ஆம் பாவத்திற்கு'... இந்த 6 ஆம் பாவம் 'இரண்டாம் பாவமாக' வருகிறது.

- ஜீவன் சுமந்து வரும் 'கர்ம வினைகளின்' விளைவுகளைத்தான்... இந்த '6 ஆம் பாவம்' வெளிப்படுத்தப் போகிறது என்பதற்கு இந்த அமைவே சாட்சி.

- ஜீவன் பெறும் குடும்ப அமைவும், அதன் புறச் சூழல்களும், ஜீவனின் கர்ம வினைகளைச் சார்ந்ததுதான் என்பதை... இது உறுதிப் படுத்துகிறது.

# ஜீவனின், வாழ்வுக் காலத்தை வெளிப்படுத்தும் '8 ஆம் பாவமான'... 'ஆயுள் பாவத்திற்கு', இந்த '6 ஆம் பாவம்'... 11 என்ற 'லாப ஸ்தானமாக' அமைகிறது.

- ஜீவன் தனது வாழ்நாளை முழுமையாக வாழ்வதற்குக் 'காரணங்கள்' தேவைப்படுகிறது. அந்தக் காரணங்கள், ஜீவனது வாழ்வின் இலக்காகவோ... நோக்கமாகவோ... கடமையாகவோ... சேவையாகவோ.. இருக்கலாம். இந்தக் கடமைகள் வழியே கடந்து போகும் போது... தடைகளையும், தடங்கல்களையும், எதிர்ப்புகளையும் கடந்து போக நேரிடும். இவற்றை உத்வேகத்துடன் எதிர் கொண்டு நடை போடும் ஜீவன்தான்... தனது இலக்கை அடைகிறது.

- ஆகவேதான், இந்த '6 அம் பாவம்'... '8 ஆம் பாவமான' ஆயுள் ஸ்தானத்திற்கு, லாபமாக அமைகிறது.

# ஜீவன்... தான் மேற்கொள்ள வேண்டிய 'தர்மத்தையும்', அது அடையும் 'பாக்கியத்தையும்' வெளிப்படுத்தும்... '9 ஆம் பாவத்திற்கு', இந்த '6 ஆம் பாவம்'... 'கர்ம ஸ்தானமாக' அமைகிறது... அதாவது 'ஜீவன ஸ்தானமாக' அமைகிறது.

- ஒரு ஜீவன், எவ்வளவு 'கடுமையான வினைச் சுமைகளை' வேண்டுமானாலும் சுமந்து கொண்டு வந்திருக்கலாம். அனால், அது தனது வாழ்வில் மேற்கொள்ளும் 'தர்மமான வாழ்வு முறையே' அந்த பாப வினைகள் அனைத்தையும் களைந்து ஓட வைக்கும்.

- ஜீவனின், 'தர்மத்திற்கும் - அதர்மத்திற்கும்' இடையேயான போராட்டத்திற்கு, இந்த '6 அம் பாவம்'... 'கர்ம ஸ்தானமாக' அமைகிறது.

-  ஜீவன் அடையும் 'சுக-பாக்கியங்கள்' அனைத்தும், இந்த '6 அம் பாவத்தின்' நிலையை ஒட்டியே அமையும்.

# ஜீவனின்... 'கர்ம ஸ்தானம்' என்ற '10 ஆம் பாவமான'... 'ஜீவன் ஸ்தானத்திற்கு', இந்த '6 ஆம் பாவம்'... 'பாக்கியமாகவும்-தர்மமாகவும்' அமைகிறது.

- ஜீவன்... இந்தப் பிறவியில் மேற்கொள்ளும் 'கடமைகள்' என்ற ஜீவனப் பாதை... இந்த '6 ஆம் பாவம்' வெளிப்படுத்தும் 'வினைகளின் விளைவுகளை' ஒட்டியே அமைகிறது.

- '6 ஆம் பாவம்' வெளிப்படுத்தும் 'வினைகளின் விளைவுகளுக்கு' ஏற்ப... தனது செயல்களை,  வெளிப்படுத்தும் போதும்... எதிர்கொள்ளும் போதும்... அவை 'தர்மத்தை ஒட்டியதாக' இருக்க வேண்டும்.

- ஜீவன் வெளிப்படுத்தும் தர்மம் ஒன்றே, '6 ஆம் பாவம்' வெளிப்படுத்தும் 'வினைகள்' அனைத்தையும், பாக்கியமாக மாற்றக்கூடிய மந்திரமாக இருக்கும்.

# ஜீவனின்... 'சுக-சயனம்' மற்றும் 'விரய பாவமான'... 12 ஆம் பாவத்திற்கு, இந்த '6 ஆம் பாவம்'... 'தொடர்பு ஸ்தானமான', 7 ஆம் பாவமாகிறது.

- ஜீவனின் சுகமும், நிம்மதியும், அது எதிர்கொள்ளும் 'சூழல்களைப் பொருத்ததுதான்'.
- 12 ஆம் பாவம்... ஜீவனின் 'முற்பிறப்பை' வெளிப்படுத்தும் பாவமாகவும் அமையும்.
- இந்த '6 ஆம் பாவம்' வெளிப்படுத்தும் சூழல்களுக்கும், '12 ஆம் பாவம்' வெளிப்படுத்தும் சூழல்களுக்கும், இடையே... ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும்.
- ஜீவனின் முற்பிறப்பிற்கேற்பவே, இந்தப் பிறவியில், ஜீவன் எதிர்கொள்ளும் தொடர்புகளும் அமையும்.

இன்னும், எண்ணற்ற 'சூட்சுமங்களை' இந்த '6 ஆம் பாவம்' தன்னகத்தே புதைத்து வைத்துள்ளது.

ஸாய்ராம்.

-

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...