Saturday, January 4, 2020

'குடை ரிப்பேர்' - சிறுகதை'




1985, அந்தக் காலத்தில்தான் 'மடக்கும் நவீன குடைகள்' வர ஆரம்பித்த காலம். அப்போதெல்லாம், பெருமளவில் பழைய நீண்ட கருப்பு நிறக் குடைகளே நடைமுறையில் பயன்படுத்தப்பட்டன.

குடை ரிப்பேர் செய்யும் நபர்களும், மடக்கும் குடைகளுக்கான தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ளாத காலம்.

ஒரு நாள் மதிய நேரத்தில்... வீட்டு வாசல் நிழலில்... ஒரு குடை ரிப்பேர் செய்பவர், ஒரு மடக்கும் குடையை பழுது நீக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். நான் வீட்டுக்குள் நுழைந்ததும், அம்மாவிடம்...' மடக்கும் குடையை இவரிடம் ரிப்பேர் செய்யக் கொடுத்திருக்கிறார்களே... இவரால் அது முடியுமா... சந்தேகம்தான்...' என்று கூறியபடியே உள்ளே சென்றேன்.

அம்மாவோ. 'அது நமது குடைதான். ஏன்... அவர் அதை சரிசெய்ய மாட்டாரா...?' என்று கேட்க... நான் வெளியே வந்து அவரிடம், ' உங்களுக்கு இந்த மடக்கும் குடையை சரி செய்யத் தெரியுமா...?' என்று கேட்டேன். ஏனெனில், அந்தக் குடையை இரண்டாக மடக்கும் இடத்தில் மட்டும்தான் ஒரு இணைப்புக் கம்பி உடைந்திருந்தது. மற்ற படி குடையை விரிப்பதிலோ... பயன்படுத்துவதிலோ எந்த சிக்கலும் இல்லை. அவர்...'சார்... நான் பார்க்காத குடைகளா  ! இதை ஒரு கால் மணி நேரத்தில் சரி செய்து கொடுக்கிறேன்...' என்றார்.

நான் சாப்பிட அமர்ந்த நேரம், அம்மா அவருக்கு ஒரு கப் தேநீரைக் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்து உட்கார்ந்தார். 'சார்.. !' என்ற குரல் கேட்டு, வெளியில் வந்த போது...' சரி செய்துவிட்டேன். இப்போது பாருங்கள் ' என்றார். நானும் ஆச்சரியத்துடன் குடையை வாங்கிப் பார்த்தேன்.

கம்பியின் இணைப்பு உடைந்திருந்த இடத்தில்... ஒரு சிறு கம்பியொன்றை வளைத்து இறுக்கிக் கட்டியிருந்தார். அந்த இடம்... குடைக்கு வெளியே முட்டிக் கொண்டிருந்தது. சரி, பரவாயில்லை என்று குடையை மடக்க முயற்சித்தேன். 'சார்... அது இரண்டாக மடங்காது. இப்போது நீங்கள் அதை நேராகத்தான் பிடிக்க வேண்டியிருக்கும்...' என்றார். நானும் சிரித்துக் கொண்டே... ' இதை மடக்கிக் காட்டுங்கள்...' என்றேன். அவர் சற்று சிரமம்பட்டு மடக்கினார்.

இப்பொது குடை 'ஒரு மத்தளத்தைப் போல' இரு முனைகள் சிறுத்தும்... நடுவில் பருத்தும் இருந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு... 'இதைக் கொஞ்சம் விரித்துக் காட்டுங்கள்...' என்றேன். மேலும் சிரமத்துடன் அதை விரித்தார். ஆனால் விரிந்த குடை இப்பொது அதன் இடத்தில் நிற்க முடியாது வழுக்கிக் கொண்டே  வந்தது. 'இது விரிந்த படி நிற்காதா...  ?' என்றேன்.

'சார்... நிற்கும் சார். இந்த ஸ்பிரிங்க் கொஞ்சம் வேலை செய்யாமல் இருக்கிறது. அதை வெளிக்கொண்டுவர... நான் நுனியில் வளைத்த ஒரு சிறிய கம்பியை தருகிறேன். குடையை விரித்தபடி... இந்தக் கம்பியைக் கொண்டு, அந்த ஸ்பிரிங்கை இழுத்து விட்டால், குடை விரிந்தபடி இருக்கும்...' என்றார். 'ஓ... நான் இந்தக் கம்பியையும் எப்போதும் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் இல்லையா...?' என்றேன். அவர் அதற்கும் சளைக்காமல்... 'சார்... நான் இன்னொரு வளைத்த கம்பியையும் வைத்திருக்கிறேன். அதையும் தருகிறேன், சார்...!' என்றார். "ஓ ! இன்னொரு ஸ்பேரா...!!' என்ற போது... உண்மையில் என்னால் சிரிப்பை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை.

மடக்கிய கம்பியின் உதவியுடன் விரித்த குடையுடன் நிற்கும் என்னை வந்து பார்த்த அம்மா... 'பார்த்தாயா... குடையை எப்படி சரி செய்துவிட்டார். யாரையும் ஆளைப் பார்த்து எடை போடாதே...!' என்றார். நானும் எதுவும் சொல்லாமல்... 'அவருக்கு உண்டானதைக் கொடுத்துவிடுங்கள்...' என்று கூறியபடியே உள்ளே வந்துவிட்டேன்.

அம்மாவும் அவருக்கு பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளே வந்து, 'எங்கே... குடையைக் கொடு பார்க்கலாம்...' என்றார்கள். நான் குடையை விரித்தபடியே.. 'இரண்டு நுனி வளைந்த கம்பிகளையும்' கொடுத்தேன். இது என்னப்பா...?' என்றதற்கு... 'அது குடையை விரிப்பதற்கான ஸ்பேர் கம்பிகள். தொலைத்து விடாமல், பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்...' என்றேன்.

நான் உள்ளிருந்து... அம்மா, அந்த குடையை மடக்க முயற்சி செய்ததையும்... அதை மடக்கிய பின்... 'அந்த மத்தளக் குடையை' மறைத்து வைக்கத் தவித்ததையும்... குலுங்கிக் குலுங்கி சிரித்தபடி ரசித்துக் கொண்டிருந்தேன்.

இன்று அம்மா என்னுடன் இல்லை. ஆனால்... 'குடை ரிப்பேர்... குடை ரிப்பேர்...!!' என்ற குரல் மட்டும் என் காதுகளில் இப்பொதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...