Monday, January 27, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 78. 'ஆயுள்காரகரான' சனி பகவான்', வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'. பகுதி 2.





ஆயுளின் நிர்ணய காலத்தைப் பரிபாலனம் செய்பவரும்... ஜீவன் 'எதிர்கொள்ளும் அல்லது வெளிப்படுத்தும்' செயல்களின் விளைவுகளுக்கு சாட்சியாக இருப்பவரும்... 'தர்மத்தை' நிலைநிறுத்துபவருமான... 'சனி பகவான்', ஜோதிட இராசிச் சக்கரத்தில்...

# மேஷ இராசியில்... தனது பலத்தை இழந்து, 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார். அந்த வீடு, 'ஆற்றல் காரகரான'... 'செவ்வாய் பகவானுக்கு' ஆட்சி வீடாக அமைகிறது. அந்த வீட்டில், 'ஆத்மகாரகரரான'... 'சூரிய பகவான்' மிக பலம் பெற்று, 'உச்ச கதியில்' உலவுகிறார்.

இந்த அமைவு...

* ஜீவன் தனது உயிர்ப்பையும், அதற்கான ஆற்றலையும், 'கோடி சூரியப் பிரகாசம் உள்ள' ஆத்மாவிடம் இருந்துதான் பெறுகிறது. இந்த ஸ்தானத்தில், ஜீவன் அந்த ஆத்ம பலத்தை முழுவதுமாக பெற்று அதை அனுபவிக்கும் பாக்கியத்தையும் பெறுகிறது. (சூரிய பகவானின் உச்ச நிலை)

* அந்த 'ஆத்ம பலம்', ஜீவனது 'கர்மவினைக்கு ஏற்றபடி', அது அனுபவிப்பதற்கு ஏற்றவாறு, 'மட்டுப்பட்ட ஆற்றலாக' மாற்றம் பெறுகிறது. (செவ்வாய் பகவானின் ஆட்சி நிலை)

* ஜீவனின் 'கர்மவினை' உலக வாழ்வில் மூழ்கிப்போகுமாறு இருப்பின், அந்த 'ஆத்மபலம்' உலக வாழ்வின் இன்ப-துன்பங்களில் கரைந்து போவதும்... உள் வாழ்வில் மூழ்கிப்போகுமாறு இருப்பின், மீண்டும் பிறவாமையும்... ஜீவனுக்கு அமையும். (சனி பகவானின் நீச நிலை)

# 'துலா இராசியில்'... மிக பலம் பெற்று 'உச்ச கதியில்' சஞ்சரிக்கிறார். அந்த வீட்டில் 'ஆத்மகாரகரான' ... 'சூரிய பகவான்' தனது பலத்தை இழந்து, 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார். இந்த ஸ்தானம்... 'சுக வாழ்வு நாயகரான' சுக்கிர பகவான் ஆட்சி பெறும் வீடாக அமைகிறது.

இந்த அமைவு...

* எல்லையில்லாத ஆற்றலின் ஊற்றான 'ஆத்மா', அதன் வெளிப்பாட்டை ஜீவனின் கர்மவினைக்கு ஏற்ப, ஜீவனின் மனத் திரைக்குள் மறைத்துக் கொண்டிருக்கிறது. (சூரிய பகவானின் நீச நிலை)

* ஜீவன் தனது கர்மவினைக்கு ஏற்ப, இந்த உலக வாழ்வுச் சூழலுக்குள் கட்டுண்டு கிடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. (சுக்கிர பகவானின் ஆட்சி நிலை)

* ஜீவன் தனக்குண்டான வாழ்வுக் காலத்தை, எந்தத் தடங்கல்களும் இல்லாமல், உலக வாழ்வுச் சூழலிலேயே, மூழ்கி கடந்து போகிறது. அது இன்பமாக இருப்பினும்... துன்பமாக இருப்பினும்... 'ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்து, தமது வாழ்வு நிலை மாறிவிடும்...' என்ற எதிர்பார்ப்புடன், தனது வாழ்வுக் காலத்தை முழுமையாகக் கடந்து போகிறது. (சனி பகவானின்' உச்ச நிலை)

இறைவனின் அருளுடன்... தர்மத்தின் நாயகனின் வழியில்... தொடர்ந்து பயணிப்போம்.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...