Tuesday, January 7, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 67. 'கல்வியும்... சுக போக வாழ்வும்...' பகுதி - 1.





இந்த உலக வாழ்வு... அதில் பங்கு பெறும்... ஒவ்வொரு ஜீவனின் 'கர்மவினைகளை' அடிப்படையாகக் கொண்டுதான்... படைப்பாளரால் நிர்வகிக்கப்படுகிறது.

இந்த 'கர்மவினைகளைச்' சுமந்து கொண்டு, இந்த புவி வாழ்வைக் கடக்கும் ஜீவர்களின் வாழ்வை... மேலோட்டமாகப் பார்க்கும் போது, மிகவும் 'விசித்திரமான கலவைகள்' கொண்டதாக இருப்பது போலத் தெரிந்தாலும்... உள்ளார்ந்து பார்க்கும் போது... அதன் 'தர்மமும் - கர்மமும்' எப்போதும் இணைந்திருப்பது தெரியும்.

அதன் சூட்சுமத்தை அறிந்து கொள்ளாமல், நாம் மேலோட்டமாக சில கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டு, 'காரியங்களை' மட்டும் பார்த்து 'காரணங்களை' அறியாமல் விட்டு விடுகிறோம். இந்தக் காரணங்களை... அதாவது, 'கர்மவினைகளின் முடிச்சுகளை', அறிய முற்படும் கலைதான் 'ஜோதிடக் கலை'.

~ 'கல்விக்கும்... செல்வத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது...!'
~ 'பணம் இருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை... குணம் இருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை...'
~ 'படித்தவர்களால்... பணம் பண்ண முடியாது...'
~ 'பணம் பண்ணுபவர்களால்... கல்வியின் சுவையை சுவைக்க முடியாது...'

இது போன்ற எண்ணற்ற சொல்லாடல்கள்... சமுதாயத்தில் உலவி வருவதை அறிவோம். ஆனால், இதன் உண்மை தாத்பரியங்களை ஜோதிடம் மிக எளிதாக விளக்கிவிடுகிறது.

உதாரணமாக... கல்வி, அதற்கு மூலமான அறிவு, அதிலிருந்து வெளிப்படும் புத்தி... என இவற்றை வெளிப்படுத்தும் கிரகமாக... 'புத பகவான்' அமைகிறார்.

சுக வாழ்விற்கு அடிப்படையான... பொருளாதார வளர்ச்சி, செல்வம், வீடு, வாகனம் என எண்ணற்ற சுகவாழ்வுச் சூழல்களுக்கு... 'சுக்கிர பகவான்' காரணமாக அமைகிறார். இவர்கள் இருவரும் 'மிகவும் நட்புக்கிரகங்கள்' என்பதை யாவரும் அறிவோம்.

'சுக்கிர பகவானை' லக்னமாகக் கொள்ளும் போது... 'புத பகவான்' ஒரு நிலையில், 'பூர்வ புண்ணியாதிபதியாகவும்'... இன்னொரு நிலையில், 'பாக்கியாதிபதியாகவும்' அமைந்துவிடுகிறார்.

இந்த அமைவு உணர்த்துவது...

* இந்தப் பிறவியில் ஒருவர் 'சுக போக வாழ்வை' அனுபவிப்பதற்கு... முன்ஜென்மத்தில், 'கல்வி - கேள்விகளில்'... சிறப்பை அடைந்திருந்து... செல்வச் சிறப்பை நுகராது இருந்திருக்க வேண்டும்.

* தற்போது, அனுபவிக்கும் 'சுக போகம்' நிலைத்திருப்பதற்கும், அதை அனுபவிப்பதற்கும், கல்வி - அறிவின் துணையைக் கொள்ள வேண்டும் என்ற நுட்பத்தை உணர்த்துவதுதான்.

அது போல, 'புத பகவானை' லக்னமாக கொள்ளும் போது... 'சுக்கிர பகவான்' ஒரு நிலையில் 'பூர்வ புண்ணியாதிபதியாகவும்'... இன்னொரு நிலையில், 'பாக்கியாதிபதியாகவும்' அமைந்துவிடுகிறார்.

இந்த அமைவு உணர்த்துவது...

* இந்தப் பிறவியில் ஒருவர் 'கல்வி - கேள்விகளில்' சிறந்து விளங்குவதற்கு, முன் ஜென்மங்களில், செல்வச் செழிப்பில் திளைத்திருந்து... செல்வம்தான் நிலையானது என்று எண்ணி... அதிலேயே நிலைத்திருந்து... தனது வாழ்வை கடந்திருப்பது.

* தற்போது, கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள்... அதன் பூரணத்துவத்தை அனுபவிக்க... தேவையான  செல்வத்தைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

தொடர்ந்து... இந்தப் பாதையில் பயணிப்போம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.




No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...