Thursday, January 30, 2020

'பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்' அருளிய... சிறு கதைகளின் தமிழாக்கம். 'புத்தக அனுபவம்'





 இறைவனைப் பற்றிய அறிதல் வெறும் ஏடுகளில் இல்லை. ஆதலால், புத்தகங்களின் வாயிலாக இறைவனை அடைந்துவிடமுடியாது. ஏடுகளைத் தாண்டி, அந்த இறைவனை, அனுபவத்தால்தான் உணர்ந்து கொள்ள முடியும்.

இறைவனை, அறிந்துணர்ந்த குருநாதர்களைத் தவிர வேறு யாராலும் அந்த அனுபவத்தை நமக்குக் கொடுத்துவிட முடியாது. நமது குருவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு, உழைத்து அந்த இறையருளின் கருணையைப் பெற வேண்டும். குருவை அடைய முடியாதவர்கள், நேரடியாக இறைவனிடம் மன்றாடி, வேண்டி, அவன் கருணையைப் பெறவேண்டும்.

புத்தகங்கள்... அவை, இறைவனின் கருணையைப் பற்றியதாக இருந்தாலும், அவரை நிர்த்தாரணம் செய்யக் கூடிய மெய்ஞான வடிவங்களாக இருந்தாலும், அல்லது, விஞ்ஞானமாக இருந்தாலும், அவற்றின் வழியாக இறை அனுபவத்தைப் பெற முடியாது.

இறை அனுபவத்தை உணர்ந்து கொள்ள, உண்மையான முயற்சியை மேற்கொள்ளும் போது, அவரின் கருணை நமக்கு பூரணப்படும் போது, புத்தக வடிவங்கள் நமக்குத் தேவையிலாததாகப் போய் விடுகிறது.

ஒரு சந்தையை வெகு தூரத்திலிருந்து, அங்கிருந்து வரும் சப்தங்களை மட்டும் வைத்து பார்த்துவிட முடியாது. சந்தைக்கு நேரில் செல்லும் போதுதான், அங்கிருந்து எழுந்த சப்தங்கள் ஒவ்வொன்றையும்... தனித்தனியாக பிரித்து அறிந்து கொள்ள முடியும்.

அது, 'இந்தாருங்கள், உருளைக் கிழங்கு... வாங்கிக் கொள்ளுங்கள்...!' என்றும், 'எடுத்துக் கொண்டு, பணம் கொடுங்கள்...!' என்றும், தனித்தனியாக இருக்கும். தூரத்தில் சப்தமாக இருந்தது. அருகில் தெளிவான வார்த்தைகளாக இருக்கும். அதுபோலத்தான், புத்தகத்திலிருந்து மீண்டு... முயற்சியால் இறைவனைத் தேடுவதும்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...