Saturday, January 11, 2020

பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அருளிய சிறு கதைகளின் தமிழாக்கம். 'புல்லைத் தின்ற புலி'





மேய்ந்து கொண்டிருந்த ஆட்டு மந்தையை நோக்கி பாய்ந்து சென்ற ஒரு பெண் புலி, தனது வயிற்றில் இருந்த ஒரு புலிக் குட்டியை ஈன்று விட்டு இறந்தது. அந்த புலிக் குட்டி, ஆட்டு மந்தைகளின் நடுவிலேயே வளர்ந்து வந்தது. ஆடுகளைப் போலவே 'புற்களை சாப்பிட்டும்'... ஆடுகளைப் போலவே 'கத்திக் கொண்டும்'... தன்னை ஒரு ஆடாகவே நினைத்து வளர்ந்து வந்தது அந்தப் புலி.

ஒரு நாள் அந்த ஆட்டு மந்தையை ஒரு புலி வேட்டையாட வந்தது. அந்த மந்தையில், ஒரு புலி இருப்பதைப் பார்த்து... அது ஆடுகளைப் போலவே கத்துவதையும் பார்த்து... ஆச்சரியமடைந்து.

வேட்டையாடச் சென்ற புலி, மந்தையில் இருந்த புலியை இழுத்துச் சென்று, அதை ஆற்றங்கரையில் தண்ணீர் குடிக்க வைத்தது. தண்ணீரில் தனது உருவத்தைப் பார்த்த புலிக்கு, அப்போதுதான் தான் யார்...? என்ற உண்மை தெரிந்தது. புலி தனக்கு உண்ணக் கொடுத்த 'இறைச்சித் துண்டை' உண்ணும் போதுதான்... தனக்குள் இருந்த 'ரத்தத்தின் ருசியும்'... 'இறைச்சியின்' ருசியும்' உணர்வுக்கு வந்தது.

அந்த உணர்வைப் பெற்ற புலியைப் பார்த்து, 'இப்போது உனக்குப் புரியும், நீயும் நானும் ஒரே இனம்தான் என்று... வா என்னோடு, நமது இருப்பிடமான காட்டுக்குள் செல்லலாம். அதுதான் நமது வசிப்பிடம்...' என்று கூறி, அதைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றது.

ஆட்டு மந்தையில், தன்னை ஒரு ஆடு என்றே நினைத்துக் கொண்டிருந்த ஒரு புலியை, எவ்வாறு காட்டில் வாழும் புலி ஒன்று வந்து, அது ஆடு அல்ல... புலி என்று உணர வைத்து அழைத்துச் சென்றதோ...

அது போல, நாம் யார் என்ற உண்மையை நமக்கு உணரவைக்கவே... ஒரு 'சத்குரு' நமது வாழ்வில் பிரசன்னமாகிறார். அவர் வந்து, நாம் யார்... என்று உணர்வைத்ததும்தான், நாம் இந்த உடலல்ல... நமக்குள் இருந்து அருள் செய்யும் 'பிரம்ம சொரூபம்தான்' நாம் என்று உணர்ந்து கொள்கிறோம்.

நாம் செய்ய வேண்டியது ஒரு சிறிய ஆன்மீக முயற்சிதான்... மிகுதியை சத்குருவே பார்த்துக் கொள்வார்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...