Saturday, November 30, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 46. ஸ்தானங்கள் வழியேயான ஜீவனின் வாழ்வு. பகுதி-2.






... 12 ராசிகளைக் கொண்ட இந்த ஜோதிடச் சித்திரத்தில்... ஜீவன் பிறப்பெடுத்த நேரம் 'லக்னமாக' அமைகிறது. இந்த லக்னத்தை மூலமாகக் கொண்டுதான்... ஏனைய 'ஸ்தானங்கள்' வகைப்படுத்தப்படுகின்றன.

ஸ்தானங்களின் வகைகள் :

~ திரிகோண ஸ்தானங்கள்

~ கேந்திர ஸ்தானங்கள்

~ பண பர ஸ்தானங்கள்

~ மறைவு ஸ்தானங்கள்

இந்த ஸ்தானங்கள் உணர்த்தும் 'ஜீவ வாழ்வின் இரகசியங்கள்' என்ற 'கர்ம வினைகளின் விளைவுகளை... ஒவ்வொன்றாக ஆய்வோம்.

திரிகோண ஸ்தானங்கள் :

லக்னம் (1), பூர்வ புண்ணியம் (5) மற்றும் பாக்கியம் (9) என்ற இந்த மூன்று ஸ்தானங்களையும்தான் 'திரிகோண ஸ்தானங்கள்' என்று அழைக்கிறோம். இந்த முக்கோண அமைவே... ஒரு ஜீவனின் வாழ்வின் நிலையை உணர்த்தும் முதல் ஸ்தானங்களாக அமைகிறது.

லக்னம் :

ஒரு ஜீவனின் பிறப்பில்... அது, இந்த உலகம் என்ற நாடக மேடையில்... தான் ஏற்றுக் கொண்டு நடிக்கப் போகும் தனது... 'வாழ்வு' என்ற நாடகத்தில்... தான் பங்கு பெறும் 'பாத்திரம்' பற்றிய வருணனையைத்தான்... 'லக்னம்' என்ற ஸ்தானம் விவரிக்கிறது.

பூர்வ புண்ணியம் :

அந்தப் பாத்திரத்திற்கு ஏற்றவாறு... இந்த நாடகத்தில் தான் பங்கு பெறுவதற்கு... தான் சுமந்து கொண்டு வந்திருக்கும்... அனுபவங்களைத்தான், இந்த 'பூர்வ புண்ணியம்' என்ற ஸ்தானம் விவரிக்கிறது.

பாக்கியம் :

இந்த நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது... தனது வெளிப்பாடுகளால் ஏற்படும் விளைவுகளிலிருந்தும், தான் எதிர்கொள்ளும் பாத்திரங்களின் வெளிப்பாடுகளுக்கு ஏற்றவாறு... தான் வெளிப்படுத்தும் வெளிப்பாடுகளும்தான்... அனுபவமாக மலர்கிறது. இதைத்தான்... இந்த 'பாக்கியம்' என்ற ஸ்தானம் விவரிக்கிறது.

இவற்றை... உதாரணங்களோடு அணுகுவோம்... தொடர்ந்து... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.


ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 45. ஸ்தானங்கள் வழியேயான ஜீவனின் வாழ்வு. அறிமுகம் : பகுதி-1.





அடுத்த நொடி என்ன நடக்கப் போகிறது...? என்ற எதிர்பார்ப்புதான் வாழ்வை சுவாரஸ்யமாக்குகிறது. அதை முன்பே தெரிந்து கொள்வதிலும் ஒரு சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது.

அதையும் கடந்து... ஒரு ஜீவனின் வாழ்வின் இலக்கு எது என்பதை... அந்த ஜீவனே அறியமுடியாதவாறு வாழ்வு அமைந்திருக்கும் போது... அது எதை நோக்கியது... என்பதை அறிவிக்க ஒரு உபாயம் தேவைப்படுகிறது.

நாம் எதை விரும்புகிறோமோ... அது கிடைக்காத போதும், நாம் எதை வெறுக்கிறோமோ... அதன் வழியே கடந்து போகும் போதும், நமது விருப்பங்களுக்கும்... வெறுப்புகளுக்குமிடையே வாழ்வு கடந்து போகும் போதும்... ஏன் எனக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது...? என்ற கேள்வி எழுவது இயற்கைதான்.

ஆனால்... உலகியல் வாழ்வில் இது போன்றே, அனைவருக்கும் நடப்பதை அறிந்து கொள்ளும் போதுதான்... தற்போதைய வாழ்வின் வழிமுறைகள் அனைத்தும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும்...

தற்போதைய வாழ்வின் வழிமுறைகள் யாவற்றையும்... அந்தந்த ஜீவர்களே தமது முந்தைய வாழ்வின் செயல்களிலிருந்தும்... அவை விளைவித்த விளைவுகளிலிருந்தும்... எடுத்துக் கொண்டு வருகிறார்கள் என்ற உண்மையையும்... தெரிந்து கொள்கிறார்கள். இதைத்தான்... 'கர்ம வினைகள்' என்று அழைக்கிறோம்.

இந்த கர்ம வினைகளின் சுழற்சியால் பிறப்பெடுக்கும் ஜீவன்... தனது வாழ்வை எவ்வாறு கடந்து போகிறது...? என்பதை அறிந்து கொள்வதற்கு... ரிஷி புங்கவர்களால்... வேதத்தின் அங்கமான ஜோதிடத்திலிருந்து... விதிகளாகவும், பலன்களாகவும், எளிமையாக்கப்பட்டு... வழங்கப்பட்டிருப்பதுதான் இந்த அரிய 'ஜோதிடக் கலை'.

ஒரு ஜீவன் பிறப்பெடுக்கும் நேரத்தையும்... இடத்தையும்... மூலமாகக் கொண்டு பஞ்சாங்கத்தின் வழியே... அன்றைய நாளின் சூரிய பகவானின் உதயம்... சந்திர பகவான் பிரபஞ்சத்தில் உலவும்  நட்சத்திரக் கூட்டங்களின் அன்றைய நாளின் நட்சத்திரம்... சூரிய பகவானை வலம் வந்து கொண்டிருக்கும் கிரகங்களின் அன்றைய நிலை... இவற்றை ஒரு 'ஜாதகச் சித்திரத்தில்' குறிப்பிட்டு... அதன் வழியே ஒரு ஜீவனின் வாழ்வு இரகசியத்தை அறியும் கலையே... ஜோதிடக் கலை.

12 இராசிகளைக் கொண்ட இந்த ஜோதிடச் சித்திரத்தில்... ஜீவன் பிறப்பெடுத்த நேரம் 'லக்னமாக' அமைகிறது. இந்த லக்னத்தை மூலமாகக் கொண்டுதான்...ஏனைய 'ஸ்தானங்கள்' வகைப்படுத்தப்படுகின்றன.

லக்னத்தையும்... ஏனைய ஸ்தானங்களையும் கொண்டு... ஜீவ வாழ்வின் வழியையும், அதன் இலக்கையும் தொடர்ந்து  கண்டறிய முற்படுவோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

மனித வாழ்வினைப் பூரணப்படுத்தும், 'பக்தியும்... கர்மமும்...ஞானமும்' : பகுதி 7 : கர்ம யோகம்





ஒரு செயலை செய்யும் வல்லமை மட்டுமே நம் வசம் இருக்கிறது. ஆனால் அது விளைவிக்கும் விளைவான பலன்கள் நம் கைவசம் இல்லை.

உதாரணமாக... ஒரு கல்லை எடுத்து... ஒரு இலக்கை நிர்ணயம் செய்து வீசுகிறோம். ஆனால், அந்தக் கல் அந்த இலக்கை நோக்கி செலவதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

அது இலக்கையயும் அடையலாம்... அல்லது இலக்கை விட்டும் நகரலாம்... அல்லது வேறு ஏதாவது ஒன்றின் மீது பட்டு, அந்த இலக்குக்கு ஆபத்தையும் ஏற்படுத்தலாம். இந்த ஒரு வினைக்கு... மூன்று விதமான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அமைந்து போகிறது.

இது போலத்தான்... நாம் வாழ்வில் மேற்கொள்ளும் செயல்களும்... நாம் எதிர் கொள்ளும் நிகழ்வுகளும். 

செயல்களை செய்யும் வல்லமை மட்டுமே நம் வசம் இருக்கிறது. அது ஏற்படுத்தும் விளைவுகளை... நமது 'பூர்வ கர்ம வினைகளே' தீர்மானிக்கின்றன.

இவ்வாறு செயல்கள்... நமது 'பூர்வ கர்ம வினைகளை' தீர்மானிப்பதால்... இந்தப் பிறவிப் பிணி விளைவிக்கும் விளைவுகளிலிருந்து... நாம் விடுபட வேண்டுமெனில்... இந்த செயல்களில் ஈடுபடும் நமது 'மனோ நிலையில்தான்' மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமே தவிர... செயல்களிலிருந்து விடுபட்டுவிட முடியாது. 'மனோ நிலை' மாற்றம் என்பது... செயல்களைக் 'கடமையாகக்' கருதுவது.

நாம் செயல்படும் செயல்களில் 'கடமையுணர்வுடன் ஈடுபடுவது' ஒன்றே... இந்த 'கர்ம வினைச் சுழற்சியிலிருந்து விடுபடும் உபாயம்'.

ஏனெனில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் 'ஒரு நோக்கம்' இருக்கும். 'ஒரு எதிர்பார்ப்பும்' இருக்கும். அந்த நோக்கத்தையும், எதிர்பார்ப்பையும் நாம் விட்டு விட முடியாது. ஆனால்... அது 'விளைவிக்கும் விளைவிலிருந்து' நம்மால் 'விடுபட்டு விட முடியும்'. அதாவது அந்த 'எதிர்பார்ப்பிலிருந்து' நம்மை விடுவித்துக் கொள்ள முடியும்.

இந்த நுட்பத்தை அறிந்து கொண்டால்... எந்த எதிர்பார்ப்பும் இல்லாது நம்மால் ஒரு செயலைச் செய்ய முடியும். அதன் விளைவைப் பற்றிய எதிர்பார்ப்பு இல்லாததால்... அந்த செயலின் வடிவமும் முழுமையாக இருக்கும்.

இந்த செயல் வடிவத்தைத்தான்... 'கர்ம யோகம்' என்கிறோம். இவ்வாறான கர்ம யோகம்... கர்ம வினைகளின் தொகுப்பிலிருந்து மட்டுமல்ல... பிறவிப் பிணியான சுழற்சியிலிருந்தே... நம்மை விடுவித்து விடும்.

இதுவரையில்... ஜீவன் கடைத் தேற்றம் பெரும் வழிகளான... பக்தியோகம்-ஞான யோகம்-கர்ம யோகம்... என்ற 'ஸ்மிருதி' என்ற வாழ்வியல் வழி முறைகளிலிருந்து... சிறிய, எளிய விளக்கங்களுக்குள் பிரவேசித்தோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

மனித வாழ்வினைப் பூரணப்படுத்தும், 'பக்தியும்... கர்மமும்...ஞானமும்' : பகுதி 6 : கர்மம்





ஒரு ஜீவன் பிறந்ததிலிருந்து... அதன் மறைவு வரையிலான காலம் வரையில்... ஓயாமல்...செயல்களின் வழியேதான் பயணம் செய்கிறது.

தான் 'திட்டமிட்டு செயல்படுவது' ஒரு நிலை... தனக்கு 'நிகழும் நிகழ்வுகளை எதிர் கொள்வது' ஒரு நிலை என... இந்த இரண்டு நிலைகளிலும் தொடர்ந்து ஈடுபடும் ஜீவன்... அந்த செயல்கள், 'விளைவிக்கும் விளைவுகளுக்கான பலன்களையும்' சுமக்க வேண்டியிருக்கிறது.

இவ்வாறு சுமக்கும் வினைகளின் விளைவுகளே... 'கர்ம வினைகளாகிறது'. இந்தக் கர்ம வினைகள்... மீண்டும், மீண்டும் பிறப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு ஜீவனும் மொத்தமாக சேர்த்து வைத்துள்ள கர்ம வினைகளை... 'சஞ்சித கர்மா' என்றும்...

இந்தப் பிறவிக்காக சுமந்து  கொண்டு வந்திருக்கும் கர்ம வினைகளை... 'பிராரப்த கர்மா' என்றும்...

இந்தப் பிறவியின் செயல்களால் சேர்த்து வைத்துக் கொண்டுள்ள கர்ம வினைகளை... 'ஆகாமிய கர்மா' என்றும் வருணிக்கிறது 'தர்ம சாஸ்திரம்'.

தோன்றாத நிலையில் இருக்கும் ஜீவன்... இந்த கர்ம வினைகளின் காரணமாகத்தான்... ஒரு ஜீவனாக உருப்பெருகிறது. ஜீவனாகப் பிறப்பெடுத்த பின்னரும் தொடர்ந்து செயல்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது. இந்த செயல்களின் விளைவே மீண்டும் பிறப்பெடுக்கக் காரணமாகவும் ஆகிறது.

இந்த பிறப்பு... இன்பம்-துன்பம்... சுகம்-துக்கம்... வெற்றி-தோல்வி... ஏற்றம்-இறக்கம்... என தொடர்ந்து... இறுதியில்... இறப்பு-பிறப்பு என்ற 'இரட்டைச் சூழலுக்குள்' கொண்டு செலுத்துகிறது. இதற்குத்தான் 'பிறவிப் பிணி' என்று பெயர்.

இந்தப் பிறவிப் பிணிக்குள் செலுத்தும்... கர்ம வினைகளின் கட்டுக்குள்ளிருந்து எவ்வாறு விடுபடுவது...?

செயல்களிலும் ஈடுபட வேண்டும்... அதன் மூலம் கர்ம வினைகளையும் களைந்து கொள்ள வேண்டும்... மீண்டும் கர்ம வினைகளைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது...

இந்த செயல் வடிவத்திற்கான பயிற்சிதான்... 'கர்ம யோகம்'... அதன் வழியேயும் பயணிப்போம்...இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

மனித வாழ்வினைப் பூரணப்படுத்தும், 'பக்தியும்... கர்மமும்...ஞானமும்' : பகுதி 5 : ஞான யோகம்





'இரண்டுண்டு' என்ற எண்ணம் இருக்கும் வரை 'ஞானத் தேடலின்' பயணம் தொடர்வதில் தடங்கல்கள் இருக்கும்.

'நான் வேறு...உள்ளிருந்து அருள் செய்யும் இறைவன் வேறு...' என்ற எண்ணமே தடை. இந்தத் தடையை நீக்குவதுதான் முதல் முயற்சி. இதை நமது மனம் ஏற்றுக் கொள்வதில் இருக்கும் சிக்கல்கள்தான்... அஞ்ஞானம்.

'எல்லோருக்குள்ளும் இருந்து அருள் செய்யும் பரமாத்ம சொரூபம்... எனக்குள்ளும் இருந்து அருள் செய்கிறது....' என்ற நிலையை ஏற்றுக் கொள்ளும் மனம்... 'எல்லா உயிர்களுக்குள்ளும் சமமாக இருந்து அருள் செய்யும் பரமாத்ம சொரூபம்... ஏன் ஒவ்வொரு உயிரினத்திற்கும் இடையில் இவ்வளவு மாறுபட்ட வாழ்வியல் முறைகளை வைத்திருக்கிறது...?' என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

இந்தக் கேள்வி... 'ஒவ்வொரு ஜீவனுக்குமான கர்ம வினைகள்தான்... அதற்கேற்ப ஜீவனின் பிறப்புகளுக்குக் காரணமாகிறது... என்ற ஜீவ சுழற்சியின் உண்மையை வெளிப்படுத்துகிறது'. இதை உணர்ந்து கொண்ட ஜீவன்... அதன் சுழற்சியை நிறுத்திக் கொள்வதற்கு, தனது கர்ம வினைகளைக் களைவது ஒன்றுதான் வழி... என்ற உண்மையை உணர்ந்து கொள்கிறது.

~ பிறப்பெடுக்கும் ஜீவ வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும்... அதன் 'கர்ம வினைகளின் விளைவுகளே' தீர்மானம் செய்கின்றன.

~ இந்த கர்ம வினைகள்... எண்ணங்களாக எழுவது மனதில்தான்.

~ ஜீவனிலிருந்துதான்... இந்த மனம் உற்பத்தியாகிறது.

~ ஜீவன்... ஆத்மாவிலிருந்து உற்பத்தியாகிறது.

~ ஆத்மா... பரமாத்ம சொரூபத்திலிருந்து, ஜீவன் பிறப்பெடுக்கும் போது, ஜீவனுக்கு ஆதாரமாகிறது.

'ஞானத் தேடலில்' இந்த இரகசியங்களை... ஒவ்வொன்றாக அறிந்து கொண்டு... தனது அஞ்ஞானத்தில் இருந்து விடுபடும் ஜீவன்... இதன் வழியே சென்று... தனது 'கர்ம வினைகளைக் களைந்து கொள்வது' மட்டுமல்ல... தனது ஜீவனை ஆத்மாவில் சங்கமிப்பதற்குமான முயற்சியிலும் ஈடுபடுகிறது.

எண்ணங்களை... அதன் உற்பத்தி ஸ்தானமான மனதில் நிறுத்துவதும்... மனதை... அதன் மூலமான ஆத்மாவில் நிலைப்படுத்துவதுமான முயற்சியான... தியானத்தில் ஈடுபடுகிறது.

தியானத்தின் வழியே மனதில் தோன்றும் எண்ணங்களை அதன் மூலத்தில் கொண்டு சேர்க்க முடிகிறது. அந்த எண்ணங்களின் மூலமான ஜீவனை... அதன் உற்பத்தி ஸ்தானமான ஆத்மாவில் நிலைக்க வைக்கும் முயற்சியை... உள்ளிருந்து அருளும் அந்த ஆத்ம சொரூபம்... 'அவனருளாலே அவன் தாள் வணங்கி...' என்ற... தனது கருணையினால்... ஜீவனுக்கு வெளிப்படுத்துகிறது.

தியானம் கைகூடும் போது... ஞானம்... 'ஞான யோகமாக' மலர்கிறது. கர்ம வினைகள் களைந்து... ஜீவன்... ஜீவ முக்தியான... ஆத்ம சங்கமத்தில் திளைத்து விடுகிறது.

பக்தி யோகம்... ஞான யோகம்... என்ற வழியில், 'கர்ம யோகத்தின்' வழியேயும் பயணம் செய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

Friday, November 29, 2019

மனித வாழ்வினைப் பூரணப்படுத்தும், 'பக்தியும்... கர்மமும்...ஞானமும்' : பகுதி 4 : ஞானம்





ஞானம் என்பது தேடி அறிந்து கொள்ளும் விடயமல்ல... என்பதுதான், இந்தத் ஞானத் தேடலில் ஈடுபடும் ஒரு சாதகன் அறிந்து கொள்ள வேண்டிய முதல் பாடம்.

ஒரு விளக்கு நாள்பட... நாள்பட அழுக்கேறி பிசு பிசுத்துப் போகிறது. அந்த விளக்கின் தூய்மையை மீண்டும் கொண்டு வரவேண்டுமெனில்... அதை நன்றாகத் தேய்த்துக் கழுவி... படிப்படியாகப் படிந்த பிசு பிசுப்பை நீக்கினால்... அந்த விளக்கு மீண்டும் அது முதல் இருந்த நிலையை அடைகிறது.

அதுபோல... காலம் காலமாக... பிறவிகள் தோறும்... நாம் வாழும் இந்த உடம்புதான், 'நான்' என்ற எண்ணம் இருக்கும் வரையிலும்...

இந்த பூமியில் நாம் காணும் அத்தனை அசையும்... அசையா வஸ்துகளும் நிலையானது என்ற எண்ணம் இருக்கும் வரையிலும்...

எல்லோருக்கும் வரும் மரணம் என்ற நிகழ்வு... எனக்கு இப்போது வந்துவிடாது என்ற எண்ணம் இருக்கும் வரையிலும்... 'ஞானத் தேடலில்' மனம் ஈடுபடாது.

வாழ்வில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வந்து... நாம் தேடும் இந்த உலக சுகங்கள் யாவும் ஒரு நொடியில் தோன்றி... அடுத்த நொடியில் மறையும் மின்னலைப் போன்றதுதான்... என்ற அனுபவம் எப்போது ஒருவருக்கு ஏற்படுகிறதோ... அப்போதுதான் 'தேடுதல்' துவங்குகிறது.

அந்தத் தேடுதல் நம்மை பல கேள்விகளுக்குள் இட்டுச் செல்கிறது...

~ நான் யார்...?

~ நான் என்பது தோன்றி மறையும் இந்த உடல் மட்டும்தானா...?

~ நான் இந்த உடல் அல்ல... என்றால் நான் என்பது எது...?

~ விழிப்பின் போது நாம் பார்க்கும் ஒவ்வொரு மானிதருக்குள்ளும் இருக்கும் அந்த 'நானுக்கும்'... எனக்குள் இருக்கும் 'நானுக்கும்' இருக்கும் தொடர்பு என்ன...?

~ விழித்துக் கொண்டிருக்கும் போது... இருக்கும் 'நான் என்ற உணர்வு'... தூக்கத்தின் போது... எங்கு இருக்கிறது...?

~ தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளும் போது... அந்த உணர்வு எங்கிருந்து வெளிப்படுகிறது...?

இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதிலகள் மலர மலர... எவ்வாறு ஒரு விளக்கின் பிசு பிசுப்புத் தன்மை படிப்படியாக நீங்குகிறதோ... அது போல, 'அஞ்ஞானம்' என்ற திரைகள் படிப்படியாக விலகுகின்றன.

இவ்வாறு, படிப்படியாக விலகும் அஞ்ஞானத் திரைகளின் பின்னே ஒளிர்ந்து கொண்டிருக்கும் 'ஞானம்' என்ற 'விளக்கின் தூய்மை' நமது மனத்திற்கு புலப்படும் போது... இந்த உடல் 'நான் அல்ல' என்ற உண்மையும் புலப்படும்.

'நான் இந்த உடல் இல்லை...' என்ற  உண்மை எப்போது நமது மனதில் எழுகிறதோ... அப்போதுதான், நாம் ஞானத்தின் பாதையில் பயணப்பட ஆரம்பிக்கிறோம்.

இறைவனின் அருளோடு... பயணத்தைத் தொடர்வோம்...

ஸாய்ராம்.


Monday, November 25, 2019

மனித வாழ்வினைப் பூரணப்படுத்தும், 'பக்தியும்... கர்மமும்...ஞானமும்' : பகுதி 3 : பக்தி யோகம்





'... அந்த 'மகா சக்தியின்' மீது கொள்ளும் வியப்பு... பயத்துடன் கூடிய 'பக்தியாக மலர்கிறது'. எண்ணற்ற மாந்தர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப... எண்ணற்ற முறைகளில் இந்த பக்தியின் வெளிப்பாடும்... வழிபாடும்... நிகழ்கிறது...'

படைப்பாளரின் முன் நின்று தனது பக்தியை வெளிப்படுத்தும் போது... அவரின் படைப்புகளையே முதலில் வணங்கத் துவங்கினான்... மனிதன்.

தானும் அவரின் படைப்புகளில் ஒன்றுதான் எனத்தெரிந்திருந்த அவனுக்கு... 'தனக்குள்ளும் அவர்தான் இருந்து இயக்குகிறார்... ' என்ற உண்மை மட்டும் தெரியாதிருந்தது. இந்த உண்மையை அவனுக்கு உணரவைக்க... அவரின் உந்துதாலால்... அவரை உணர்ந்திருந்த 'ரிஷி புங்கவர்களின்' வழியாக... வேதங்களிலிருந்தும்... வேதத்தில் உள்ளுறையும் ஆகமங்களிலிருந்தும்... தனக்கான ஒரு இருப்பிடத்தையும் படைத்துக் கொண்டார்... படைப்பாளர்.
அந்த இருப்பிடம்... 'நம்மை ஆள்பவன்' உறையும்... இடமாக அமைந்தது. அதைத்தான் 'ஆலயங்கள்' என்ற அழைக்கிறோம்.

'பிரபஞ்சம் முழுவதுமாகவும்... அதைக் கடந்தும்... இருக்கும் படைப்பாளன்தான்... பிரபஞ்சத்திற்குள்ளும்... அதன் படைப்புகளுக்கு உள்ளும்... இருக்கிறான்'... என்ற பேருண்மையை ஒட்டியே... ஆலயத்தின் நிர்மாணமும் இருந்தது.

'அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது...' என்பதன் படி, பிரபஞ்சத்தின் உள்ளும் புறமும் விரவியுள்ள... அந்த மகா சக்திதான்... மனிதனின் உள்ளுறையும் 'ஆத்மாவாக' இருக்கிறது என்ற உண்மையை உணர்த்தும் வண்ணமாக... மனிதனின் உடலின் வடிவத்திற்கு ஒப்ப ஆலயத்தின் நிர்மாணம்... ஆகமங்களில் விவரிக்கப்பட்டபடி.. அமைக்கப்பட்டது.

'எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்...' என்பதன் படி... ஒரு மனிதனின் உடலின் வடிவத்திற்கு ஒப்ப... நீண்டு படுத்திருக்கும் மனிதனின் பாதங்களிருக்கும் இடம், 'ராஜ கோபுரமாகவும்'... அவனின் தொப்பூள் என்ற மையப்பகுதி இருக்கும் இடம், 'கொடிக்கம்பமாகவும்'... அவன் சிரசு இருக்கும் இடம், 'கருவறையாகவும்' அமைக்கப்பட்டது. அந்தக் கருவறையில்... ஆண்டவனின் உருவங்களும் அதற்கேற்ப ஸ்தாபனமும் செய்யப்பட்டது.

அவ்வாறு உருவாக்கப்பட்ட ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் மனிதன்... ஆலயத்திற்குள் இருக்கும் போது... தனக்குள் இருந்து அருள் செய்யும் 'ஆத்மாவுக்குள்'  தான் இயல்பாகவே...லயமாவதை... 'ஆலயங்கள்... ஆன்மா லயமாகும் இடங்களாக இருக்கின்றன' என்ற பேருண்மைய உணர்ந்தான்.

இங்கிருந்து பக்தியின் ஆரம்பம் உதயமானது. தனது சுக-துகங்களை இறைவனிடம் பகிர்ந்து கொள்வதிலிருந்து... அவற்றிற்கான நிவாரணம் கிடைக்கும் வரையிலான காலத்தில், மனதை ஒரு நிலைபடுத்திக் கொள்ளவதும்... அவற்றிலிருந்து விடுபட்ட பின் நன்றி சொல்வதும் என... 'இறைவனுக்கும்... பக்தனுக்குமான பந்தம்' உருவாவதற்கு... பக்தி ஆதாரமாக இருந்தது.

தான் வேறு... ஆலயத்திற்குள் இருந்து அருள் செய்யும் ஆண்டவன் வேறு... என்ற இரு நிலைகள் இருக்கும் வரையில்...பக்தி... ஆலயங்களிலும்... வீட்டின் பூஜை அறைகளில் மட்டுமே... குடிகொண்டிருந்தது.

ஆலயங்களிலிருந்து உருவான ஆன்மலயத்தின் ஈர்ப்பினால்... தனக்குள் இருக்கும் ஆன்மாவுடன் எளிதில் லயிக்கும் வாய்ப்பைப் பெற்ற பக்தன்... 'எல்லா நிலைகளிலும்... எல்லா இடங்களிலும்... இறைவன் தனக்குள்ளே இருந்து... சாட்சியாய்... என்றென்றும் அருள் செய்கிறான்...' என்ற உணர்வை இயல்பாகவே பெற்று விடுகிறான்.

இந்த நிலையை அவன் அடைவதே பக்தியின் நோக்கம். இதை அடைந்து விட்டால்... 'பக்தி ஒரு யோகமாக' மாறிவிடுவதை அவன் உணர்ந்து விடுகிறான். சங்கல்ப்பங்கள் என்ற வேண்டுதல்களிலிருந்து அவன் விடுதலை பெற்று விடுகிறான்.

ஆண்டவனின் மீது கொள்ளும் பக்தி... யோகமாக மாறி... தனது ஜீவன் ஆத்ம சங்கமத்தில் திளைக்கும் போது... தனது கர்ம வினைகள் மெல்ல மெல்ல கரைந்து போவதை உணர்கிறான்.

இப்போது... அவன் ஆலயத்திற்கு ஆண்டவனின் தரிசனத்திற்காக மட்டும் செல்வதில்லை... 'தனது ஆன்மாவுக்குள் பிரவேசிக்கும்' அற்புத அனுபவத்தை... ஆனந்தத்தை அனுபவிக்கவும் செல்கிறான். இதுதான் 'ஆலயப் பிரவேசம்' என்பதை உணர்ந்து கொள்கிறான்.

பக்தி என்ற இறையன்பு அனுபவத்தின் சிறு துளிகளைப் பருக வாய்ப்பளித்த ஆண்டவனைப் பணிந்து... ஞானம் மற்றும் கர்மத்தின் பாதைகளிலும் தொடர்ந்து பயணிப்போம்... அவனருளாலே...

ஸாய்ராம்.

மனித வாழ்வினைப் பூரணப்படுத்தும், 'பக்தியும்... கர்மமும்...ஞானமும்' : பகுதி 2 : பக்தி





தான் விரும்புவது நடவாத போதும்... தனக்கு விருப்பம் இல்லாத நிகழ்வுகள் வாழ்வில் நிகழும் போதும்...  நமது வாழ்வு, நமது வசம் இல்லை என்பதை மனித குலம் உணர்ந்து கொள்கிறது.

அதற்கான காரணங்களை உலக வாழ்வில் தேடும் போது... விரக்தியை அடைகிறது. தனது வாழ்வின் போராட்டங்களுக்கு,,, இந்த உலகத்தில் வாழும் ஏனைய மாந்தர்கள்தான் காரணம், என்று குற்றம் சாற்றத் தோன்றுகிறது. பின், அவர்களின் வாழ்வையும் உற்று நோக்கும் போது... அனைவருக்குமே இது பொதுவான போராட்டம்தான்... ஒவ்வொருவரது வாழ்வும் அவரவர்களின் 'கர்ம வினைகளுக்கு ஏற்பவே' அமைகிறது... என்ற உண்மையும் புலப்படுகிறது.


இிந்த உண்மைகள் மனதில்... இதையெல்லாம் யார் நிர்வகிக்கிறார்கள்...? இந்த ஜனன - மரண சுழல்களின் பதிவுகளை யார் கண்காணிக்கிறார்கள்...? இந்த ஜீவ வாழ்வின்... வாழ்க்கைப் போராட்டங்களை யார் முடிவுக்குக் கொண்டு வரப் போகிறார்கள்...?  என்ற, எண்ணற்ற கேள்விகளை எழுப்புகிறது. அந்தக் கேள்விகள் மனதில் ஆவலுடன் எழும் போது... அவை, நம்மை படைப்பவரின் படைப்புகளுக்கு... முன், கொண்டுபோய் நிறுத்துகிறது.

அவரது படைப்புகளின் நுட்பத்திலிருந்தே... அந்த படைப்பாளரின் 'சக்தி' புலப்படுகிறது. இந்த மாபெரும் பிரபஞத்தை உருவாக்கி... எண்ணற்ற ஜீவராசிகளைப் படைத்து... அவையனைத்துக்கும், வாழ்வதற்கு வழியும்... வசதியும் செய்து கொடுத்து... ஒவ்வொரு நொடியும் காத்து, இயக்கி. இரட்சிக்கும் 'ஒரு மகா சக்தி' இருப்பதை... அந்த படைப்புகளிலிருந்தே... உணர முடிகிறது.

அந்த 'மகா சக்தியின்' மீது  கொள்ளும் வியப்பு... பயத்துடன் கூடிய 'பக்தியாக மலர்கிறது'. எண்ணற்ற மாந்தர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப... எண்ணற்ற முறைகளில் இந்த பக்தியின் வெளிப்பாடும்... வழிபாடும்... நிகழ்கிறது.

எவ்வாறான பக்தி வழிபாடானாலும்... அது படைப்பவரிடமே நம்மைக் கொண்டு சேர்க்கும் என்ற நிதரிசனம் மட்டும் மாறாதிருக்கிறது. அதுதான் பக்தியின் சக்தி.

அந்த பக்தி-சக்தியின் வழியே பயணிப்போம்.. படைப்பாளரின் கருணையோடு..

ஸாய்ராம்.

Sunday, November 24, 2019

மனித வாழ்வினைப் பூரணப்படுத்தும், 'பக்தியும்... கர்மமும்...ஞானமும்' : பகுதி 1:





'அரிது... அரிது... மானிடராய்ப் பிறத்தல் அரிது...!'

வேதங்கள், பிறவிகளின் எண்ணிக்கையை 84 லட்சங்கள் என்று வகைப்படுத்துகிறது. இந்த பிறவிகளிலேயே... மனிதப் பிறவிக்கு மட்டும்... 'ஒரு விசேஷ அந்தஸ்த்தை' அளித்திருக்கிறார்... படைப்பாளர்.

ஏனைய பிறவிகளின் வாழ்வு, அவைகளின் 'கர்ம வினைகள் விளைவிக்கும் விளைவுகளுக்கு' ஏற்ப அமைகிறது. அதில், ஒரு சிறு நிகழ்வைக் கூட மாற்றுவதற்கு... அவை முயற்சிப்பதில்லை. அந்தப் பிரயத்தனத்தை எடுப்பதற்கான... 'வாய்ப்பை' இறைவன், அவற்றிற்கு வழங்கவில்லை. அதனால், அவைகள் தமது வாழ்வின் நிகழ்வுகளில்... சில நேரங்களில்
பங்காளாரகவும்...  சில நேரங்களில் பார்வையாளராகவும்  இருந்து கடந்து போகின்றன.

மனிதப் பிறவிக்கு மட்டும் அந்த விசேஷ அந்தஸ்த்தை... 'சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் வாய்ப்பை' வழங்கியிருக்கிறார் படைப்பாளர். மனிதனும், பிற உயிரினங்களைப் போல, 'கர்ம வினைகளின் விளைவுகளை' அனுபவிப்பதற்காகத்தான் பிறவியை எடுக்கிறான். ஆனால். அந்த விளைவுகளின்... ஒவ்வொரு நிகழ்வும் நிகழும் போது... அதில், அவனுக்கு 'தலையிடும்' அல்லது 'தலையிடாது செல்வதற்கான'  வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

உதாரணமாக... 'ஒரு சிறுவன், கடும் பசியோடு... ஒரு தேநீர் கடைக்கு முன் நிற்கிறான். அவனுக்கு முன்னால், ரொட்டிகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. தேநீர் கடைக்காரர், தனது பார்வையை உள்ளே திருப்புகிறார்...' இதுதான் காட்சி.

இந்தக் காட்சியின் இறுதியில் நடக்கப் போவதை... இரண்டு வெவ்வேறு கோணங்களில் அணுகலாம். அவை...சிறுவனுக்கு இரண்டு வாய்ப்புகளை வழங்குகிறது.

வாய்ப்பு 1 :

சிறுவனின் மனதில்... கடைக்காரரின் பார்வை திரும்புவதற்கு முன்... ஒரு ரொட்டியை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம்... என்ற எண்ணம் தோன்றுவது. அது தோன்றிய மறு கணம்... அவன் ரொட்டியை எடுக்க... கடைக்காரர் சப்தம் கேட்டுத் திரும்ப... சிறுவன் ஓட ஆரம்பிக்கிறான். அவனுக்குப் பின்னால்... 'திருடன்...! திருடன்...!!' என்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பிக்கின்றன. இந்த
திரைக்கதைக்குப் பெயர்...'திருடன்'.

வாய்ப்பு 2 :

சிறுவனின் மனதில்...  கடைக்காரர் திரும்பிய உடன்... அவரிடம் ஒரு ரொட்டியைக் கேட்டுப் பெறலாம்... என்ற எண்ணம் தோன்றுவது. இந்த எண்ணம் தோன்றிய மறு கணம்... தன்னை நோக்கித் திரும்பிய கடைக்காரரிடம்... 'அண்ணே...! எனக்குப் பசிக்குது. ஏதாவது ஒரு வேலை இருந்தா போட்டுக் கொடுங்கண்ணே...!' என்று சிறுவன் கேட்க... அவனின் கைகளில், ஒரு ரொட்டி... தேநீரோடு.  இந்த திரைக்கதைக்குப் பெயர்... 'தொழிலாளி'.

இந்த இரண்டு விதமான திரைகதைகளுக்கான மூலத்தையும்...அந்த சிறுவனின் 'பூரவ-கர்ம வினைகளின் தொகுப்பிலிருந்துதான்' இறைவன் எடுத்துக் கொள்கிறான். ஒன்றைப் 'பாபத்திலிருந்தும்' மற்றொன்றைப் புண்ணியத்திலிருந்தும்'.

இதுதான் இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கும் சிறப்புச் சலுகை... 'முடிவெடுப்பதற்கான வாய்ப்பு'.

இதைக் கொண்டு... மனிதன் உலக சுகங்களைத் தேடி... ஓடி... உழன்று... மீண்டும், மீண்டும் தன்னை பிறவிகளுக்கு உட்படுத்திக் கொள்ளலாம்.

அல்லது... மீண்டும் பிறவிகளுக்குள் செல்லாமல்... இந்த அரிய மனிதப் பிறவியைக் கொண்டு... மீண்டும் பிறவாது... இறைவனுடன் கலந்து நிரந்திர ஆனந்தத்தில் திளைக்கலாம்.

முதல் வாய்ப்பில், பந்தங்களுக்குள்ளும்... பற்றுகளுக்குள்ளும்... சிக்கித் தவிக்க வேண்டியிருக்கிறது.

இரண்டாவது வாய்ப்பில், பந்தங்களிலிருந்தும்... பற்றுகளுக்குள்ளுமிருந்து விடுவித்துக் கொள்ள முடிகிறது.

முதல் வாய்ப்பில்... மனிதனின் முயற்சி அனைத்தும், தனது சுகம்... நல்வாழ்வு... உறவுகள்... பொருள்கள் சார்ந்தே இருப்பதால்... கர்ம வினைகளின் சுமைகள் கூடிக் கொண்டே இருக்கும்.

இரண்டாவது வாய்ப்பில்... மனிதனின் முயற்சிகளுக்கு உறுதுணையாக... 'பக்தியும், கர்மமும், ஞானமும்... துணைக்கு வருவருவதால்'... இந்தப் பிறவியின் வாழ்வை மகிழ்வுடன் கடப்பது மட்டுமல்ல... மீண்டும் பிறப்பெடுக்காமல்... நிரந்தரமான ஆனந்தத்தில் திளைத்தும் விடுகிறான்.

தொடர்ந்து பயணிப்போம்... பக்தி... கர்மம்... ஞானம் இவற்றின் வழியே... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.


Saturday, November 23, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 44. 'கேது பகவான் வெளிப்படுத்தும் கர்ம வினைப் பலன்கள்' - பகுதி 7.






'கேது பகவானின்' அமைவு உணர்த்தும் கர்ம வினைப் பலன் :

'ரிஷப லக்னத்தில்' பிறந்திருக்கும் ஜாதகருக்கு கீழ்கண்டவாறு கிரக நிலைகள் அமைந்திருப்பதாகக் கொள்வோம்...

- 3 ஆமிடத்தில் 'புத பகவான்'... பூசம் நட்சத்திரத்தில்...

- 4 ஆமிடத்தில் 'கேது பகவான்'... மகம் நட்சத்திரத்தில்...

- 4 ஆமிடத்தில் 'சுக்கிர பகவான்'... மகம் நட்சத்திரத்தில்...

- 6 ஆமிடத்தில் 'சனி பகவான்' ... சுவாதி நட்சத்திரத்தில்...

- 7 ஆமிடத்தில் 'சந்திர பகவான்' ... அனுஷ நட்சத்திரத்தில்...

- 10 ஆமிடத்தில் 'ராகு பகவான்'... பூரட்டாதி நட்சத்திரத்தில்...

இந்த ஜாதகருக்கு... ஜனன காலத்தில் 'சனி பகவானது தசா' ஏறத்தாள 14 வருடங்கள் எனக் கொண்டால், 'புதன் பகவானது' தசாவை (17 வருடங்கள்) தனது 31 வயதில் கடந்திருப்பார். இவருக்கு 'கேது பகவானது' தசா (7வருடங்கள்)... 31 ஆவது வயதிலிருந்து - 38 வயது வரை கடக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.

'கேது பகவான்' ஒருவரை தனது 'பூர்வ புண்ணிய கர்ம வினைகளிலிருந்து' விடுவித்து... ஜீவ வாழ்வின் நோக்கத்தைப் புரிய வைத்து... அவரை உலக வாழ்வின்... பந்தங்களிலிருந்தும், பற்றுகளிலிருந்தும் விடுவித்துவிடுவார்.

இந்த ஜாதகருக்கு, அந்த வாய்ப்பை தக்கத் தருணத்தில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது...'கேது பகவானின்' அமைவு.

இவரது முந்தைய பிறவிகளில்...

- இவர்,  கடும் துன்பத்தை அனுபவிக்கும் குடும்ப சூழலில் பிறந்திருப்பார். அதனால்... சுக-போகங்களுக்கு ஏங்கிய வாழ்வை வாழ்ந்திருப்பார். அதை, 3 ஆமிடத்தில் அமைந்த 'புத பகவானும்'... 4 ஆமிடத்தில் அமைந்த 'சுக்கிர - கேது பகவான்களும்' சுட்டிக் காட்டுகின்றனர்.

- பிறந்த சூழலில் தான் அனுபவிக்க முடியாத சுக போகங்களை... வெளி சூழல்களில் முறையற்ற வழியில் அனுபவித்திருப்பார். இதை 6 ஆமிடத்தில் அமைந்த 'சனி பகவானும்'... 7 ஆமிடத்தில் அமைந்திருக்கிற 'சந்திர பகவானும்' சுட்டிக் காட்டுகின்றனர்.

- எவ்வளவு அனுபவித்தாலும் போதாது... போதாது... என்ற நிலையில்... தனது சுகத்துக்காக எந்தந்த வழிகளெல்லாம் கிடைக்கிறதோ... அந்தந்த வழிகளில்... தர்ம - நியாயம் சீர் தூக்கிப் பாராமல்... தனது சுகம் மட்டுமே முக்கியம் என்ற நிலையில் வாழ்ந்தவராக இருப்பார். இதை 3 ஆமிடத்தில் அமைந்த 'புத பகவானும்'... 10 ஆமிடத்தில் அமைந்த 'ராகு பகவானும்'... 7 அமிடத்தில் அமைந்த 'சந்திர பகவானும்' சுட்டிக் காட்டுகின்றனர்.

ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு பிறவி அமைவதைப் போல... ஒவ்வொரு செயலின் விளைவுக்கும், அது நன்மையென்றாலும்... தீமையென்றாலும்... அதற்கும் பிறவி உண்டு.

ஜாதகர்... தனது இந்தப் பிறவியில்... சென்ற, பூர்வ புண்ணிய - கர்ம வினைகளின் விளைவுகளை... ஜனன காலம் முதல்... தனது 31 ஆவது வயது வரை... தொடர்ந்திருப்பார்.

-  முதல் 14 வயது வரை நடந்த 'சனி பகவானின்' தசாவும்...

- 31 வயது வரை நடந்த 'புத பகவானின்' தசாவும்... இதனை சுட்டிக் காட்டுகின்றன.

- 31 ஆவது வயதில் ஆரம்பித்த 'கேது பகவானின்' தசாக் காலமான 7 வருடங்கள்... இவரது வாழ்வின் பாதையை 'திருப்பி விடும் வண்ணமாக' அமைந்திருப்பதை... அவரது அமைவு சுட்டிக் காட்டுகின்றது.

... சுக ஸ்தானத்தில்... லக்னாதிபதியுடன் இணைந்து மட்டுமல்ல... அவரை தனது நட்சத்திரத்திலும் இயக்கி... இதுவரை தான் அனுபவித்த வந்த ஒவ்வொரு சுச்கத்திற்கும் தடையை ஏற்படுத்துவார்.

... இதுவரை தான் விரும்பியவாறெல்லாம் வாழ்ந்த ஜாதகரின் மனதில்... ஒரு வெறுமையை உண்டாக்குவார். அந்த வெறுமையில் தோன்றும் விரக்தி... இவரின் வாழ்வை மாற்றும்.

... சுக-போகங்கள் மட்டும் வாழ்வு அல்ல... வாழ்வின் நோக்கம்... கடமைகளைக் கடந்து போவதுதான்... என்ற ஞானம் உருவாகும். அந்த ஞானத்தை 'லக்னாதிபதிக்கு' (சுக்கிர பகவான்) அளித்து... இதுவரை மனம் போன போக்கில் பயணித்த அவரின் வாழ்வு... இலக்கை நோக்கி பயணிக்கும்.

38 ஆவது வயதில் இருந்து 58 ஆவது வரையில், நடக்கப் போகும் 'சுக்கிர பகவானின்'(20வருடங்கள்) தசாக் காலத்தில்... சுக - போக வாழ்வை விடுத்து... கடமைகளைச் செவ்வனே செய்யும் பாதைக்குத் திரும்புவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார்... 'கேது பகவான்'.

உலக வாழ்வில் இருந்து... உள் வாழ்வுக்குத் திருப்பும், இந்த அற்புத மாற்றத்தைத்தான்... 'கேது பகவான்' நிகழ்த்துகிறார்.

அதற்காகத்தான்... 'மோக்ஷக்காரகன்' என்ற நாமத்தையும் சுமக்கிறார்.

இதுவரையில்... 'ராகு - கேது பகவான்களைப் பற்றிய சூட்சும ஆய்வின்'... ஒரு சிறு பகுதியில் பிரவேசம் செய்வதற்கு அருளிய... ஸ்ரீ துர்க்கை அன்னையின் திருவடிகளுக்கும்... மஹா கணபதி நாதரின் திருவடிகளுக்கும்... எளியேனின் பணிவான வணக்கங்கள்.

ஸாய்ராம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 43. 'ராகு பகவான் வெளிப்படுத்தும் கர்ம வினைப் பலன்கள்' - பகுதி 6.





'ராகு பகவானின்' அமைவு உணர்த்தும் கர்ம வினைப் பலன்கள் :

'ரிஷப லக்னத்தில்' பிறந்திருக்கும் ஒரு ஜாதகருக்கு கீழ்கண்டவாறு கிரகங்கள் அமைந்திருப்பதாகக் கொள்வோம்...

- லக்னத்தில் 'சந்திர பகவான்'... ரோகிணி நட்சத்திரத்தில்...

- 4 ஆமிடத்தில் 'சுக்கிர பகவான்'... பூரம் நட்சத்திரத்தில்...

- 4 ஆமிடத்தில் 'கேது பகவான்'... பூரம் நட்சத்திரத்தில்...

- 6 ஆமிடத்தில் 'சனி பகவான்'... சுவாதி நட்சத்திரத்தில்...

- 10 ஆமிடத்தில் 'ராகு பகவான்'... சதய நட்சத்திரத்தில்...

இந்த ஜாதகருக்கு... ஜனன காலத்தில் 'சந்திர பகவானின்' தசா...  ஏறத்தாள 9 வருடங்கள் எனக் கொண்டால்... இவர்... 'செவ்வாய் பகவானின்' 7 வருடங்களைக் கடந்து...  ஏறத்தாள தனது 16 ஆவது வயதிலிருந்து, 34 வயது வரை 'போகக்காரகன்' என்ற 'ராகு பகவானின்' 18 வருடங்களை அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

'ராகு பகவான்' ஒருவரது 'பூர்வ புண்ணியமான - கர்ம வினைகளைச் சுமப்பவர்' என்பதன் படி... இந்த ஜாதகர், தனது முந்தைய பிறவிகளில்...

- தனது சுக வாழ்வுக்காக ஏங்கியவராக இருந்திருப்பார். கலைகளில் ஈடுபாடு கொண்டவராக இருந்து... அதற்கான வாய்ப்புகள் அமையாது தவித்திருப்பார். இதை சுக ஸ்தானத்தில் இருக்கும் 'சுக்கிர-கேது பகவான்களின்' இணைவு சுட்டிக் காட்டுகிறது.

- கடினமான சூழலில் பிறந்து...  தனது வாழ்வைக் கடந்திருப்பார். மனதில் கனவுகளுடனும்... கற்பனைகளுடனும் இருந்திருந்த அவருக்கு... அவையெல்லாம் நிறைவேறாது போயிருப்பதை... 6 ஆமிடத்தில் அமர்ந்திருக்கும் 'சனி  பகவானும்', லக்னத்தில் அமர்ந்திருக்கும் 'சந்திர பகவானும்' சுட்டிக் காட்டுகின்றனர்.

- பிறவிகளப் பற்றிக் கூறும் போது... ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு பிறவி உண்டு... என்று வேதம் கூறுகிறது. இவ்வாறு, இத்தனை கற்பனைகளுடனும், ஏக்கத்திலும் இருந்த இந்த ஜாதகரின் இந்தப் பிறவியில்...இந்த 'கர்ம வினைகளின் விளவுகளைத்தான்...' ராகு பகவான் 10 ஆமிடத்தில் இருந்து பிரதிபலிக்கிறார்.

இந்த 18 வருடங்களைக் கொண்ட 'ராகு பகவானின்' காலம் ஜாதகரின் தக்க வயதில் வருவதால்... 16 வயதிலிருந்து, 34 வயது வரையிலான... இந்தப் பிறவியில்... 'சென்ற பிறவிகளின் ஏக்கங்களையெல்லாம்... தீர்த்துக் கொள்ளும் காலமாக இவருக்கு அமையும்'.  அதற்கு ஏற்றபடி... 'ராகு பகவான்'...

- தனது 'நட்சத்திர சாரத்தில்'(சதயம்) அமர்கிறார்.

- லக்னத்திற்கு 'தர்ம-கர்மாதிபதிகள்' என்ற 'சனி பகவானின்' வீட்டில்...                  கேந்திரத்தில் அமர்கிறார்.

- தனது நட்சத்திரமான 'சுவாதி நட்சத்திரத்தைக்' கொண்டு, தனக்கு வீடு                கொடுத்திருக்கும் 'சனி பகவானை' இயக்குகிறார்.

- இந்த 'சனி பகவானோ' 6 அமிடத்தில் அமர்ந்தாலும்... 'உச்ச பலத்தைப்'                  பெருகிறார்.

- லக்னாதிபதியாகிய... 'சுக்கிர பகவானால்' பார்க்கப்படுகிறார். சுக்கிர                      பகவானோ, தனது சுய நட்சத்திரத்திலேயே (பூரம்) அமைந்திருக்கிறார்.

- மேலும், இந்த ஜாதகரின் வாழ்வில்... 'சனி பகவானின் தசா' (19 வருடங்கள்)... 50 வயதிற்கு மேல் வருகிறது. 'சனி பகவான்' தர்ம கர்மாதிபதியாகி... இவருக்கு அனைத்து பாக்கியங்களையும் வழங்க வேண்டிய ஆதிபத்திய நாயகானாகிறார். ஆதலால்... தனது வீட்டில் அமர்ந்திருக்கிற...  'ராகு பகவான்' அவரது தசாக் காலத்தில் (18 வருடங்கள்)... தான் அளிக்க வேண்டிய அனைத்து 'சுக-பாக்கியங்களையும்' இவருக்கு அனுபவமாக்குகிறார்.

இந்த 'போகக்காரகரான'... 'ராகு பகவான்' அளிக்கும் சுக-போகங்கள் அனைத்தும் அவரை மேலும், மேலும் உலகவாழ்வுக்குள்தான், இழுத்துச் செல்லும். போதும் என்ற மனமின்றி, தொடர்ந்து... செல்வத்தை தேடுபவராகவும்... பெரும் தனவந்தரான பின்...'கனவுத் தொழிற்சாலை' என்ற 'திரைத்துறையிலும்'... அரசியலில் 'ஒரு பின்புலமாக' இருப்பவராகவும் இருப்பார்.

'ராகு பகவானின்' அமைவு... ஜாதகரின் 'புண்ணிய பலன்கள்' என்ற ஏக்கங்களைத் தீர்க்க வேண்டியிருப்பதால்... இந்த அமைவின் முலம்... அதைத் தீர்த்து வைக்கின்றார்.

தொடர்ந்து... 'கேது பகவானின்' அமைவு... ஒரு ஜாதகரை எவ்வாறு... உலக வாழ்விலிருந்து மீட்டு... உள் வாழ்விற்கு அழைத்துச் செல்கிறது என்பதை... இறைவன் அருளோடு... பார்ப்போம்...

ஸாய்ராம்.




ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 42. 'ராகு - கேது பகவான்களின அமைவு' - பகுதி 5.






'ராகு பகவான்' ஒரு ஜீவனின் 'கர்ம வினைகளின் விளைவுகளை' சுட்டிக்காட்டுகிறது... என்பதை முந்தைய பகுதிகளில் பார்த்தோம்.

கர்ம வினைகளின் தொகுப்பில்... புண்ணிய வினைகளும் - பாப வினைகளும் நிறைந்திருக்கும். அதற்கேட்ப இன்பத்தையும் - துன்பத்தையும் ஜீவர்கள், தமது பிறவிகளில் அனுபவிக்கிறார்கள்.

அதில்... ஒரு பிறவியை அடையும் ஜீவனுக்கு. அதன் 'மொத்தக் கர்ம வினைத் தொகுப்பிலிருந்து' (சஞ்சித கர்மா) இந்தப் பிறவிக்கான பூர்வ புண்ணியத்தை (பிராரப்தக் கர்மா)... 'புண்ணியமும் - பாபமும்', சரி-சமமாகக் கலந்த கலவையாக அளிக்கிறார்... இறைவன். அதனால்தான் ஒரு ஜீவன், அதன் வாழ்வில் இன்பத்தையும் - துன்பத்தையும்... மாறி, மாறி அனுபவித்து வருகிறது. அந்த 'பிராரப்த கர்மாவைத்தான்' ஒரு ஜாதகத்தில் 'ராகு பகவான்' பிரதிபலிக்கிறார்.

ஆதால்தான்... 'ராகு பகவானைப் போல் கொடுப்பார் இல்லை...!' என்ற பதம் உருவானது.

'கேது பகவான்'... இந்த வினைத் தொகுப்பிலிருந்து... இந்த ஜீவனை எவ்வாறு விடுவித்துக் கொள்வது...? என்ற நுட்பத்தை அளிக்கிறார்.  அதாவது 'பூர்வ வினைகளைக்' களைந்து போகச் செய்கிறார். ஆதலால்தான்... 'கேது பகவானைப் போல் கெடுப்பார் இல்லை...!' என்ற பதம் உருவானது.

'சுவர்பாணு' என்ற அசுரன் அருந்திய அமிர்தத்திலிர்ந்து சாகாவரம் பெற்றதனால்... 'அசுர குணமும், தேவ குணமும்' நிறைந்திருக்கும் வடிவமாக 'ராகு-கேது பகவான்கள்' அமைகிறார்கள். இதில் 'ராகு பகவான்' அசுர குணத்தையும்... கேது பகவான்' தேவ குணத்தையும் பிரதிபலிக்கிறார்கள்.

இதில் 'அசுர குணம்' என்பது 'உலக சுகத்தில் மூழ்கித் திளைப்பதைக்' குறிக்கிறது. அதானால்தான்... 'ராகு பகவானை போகக்காரகன்...' என்று கூறுகிறோம்.

'தேவ குணம்' என்பது உலக சுகத்திலிருந்து மீண்டு... உள் வாழ்வு என்ற இறைவனை நோக்கிய வாழ்வு என்பதைக் குறிக்கிறது. அதனால்தான்... 'கேது பகவானை மோக்ஷக்காரகன்...' என்று கூறுகிறோம்.

'சூரிய - சந்திர பகவான்களை' நீக்கி... எஞ்சிய கிரகங்களில்... புதன் - சுக்கிரன் - சனி பகவான்களை... ஜீவனின் உலக வாழ்வில் பங்குபெறும் கிரகங்களாகக் கொண்டால்... இந்த கிரகங்களுடன் இணைந்து பார்க்கப்படுவர்... 'ராகு பகவான்'.

'குரு பகவான், செவ்வாய் பகவான்'... இருவரும், ஒரு ஜீவனின் உள் வாழ்வுப் பயணத்திற்கு வழிகாட்டும் கிரகங்களாக பார்க்கப்படுவதால்... 'கேது பகவான்'... இந்தக் கிரகங்களுடன் இணைத்துப் பார்க்கப்படுகிறர்.

இவர்களின் அமைவு... ஒரு ஜாதகரின் வாழ்வை எவ்வாறு மாற்றி அமைக்கிறது...? என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

Friday, November 22, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 41. 'ராகு - கேது பகவான்கள்' அறிமுகம் - பகுதி 3.





முன் பதிவுகளின் தொடர்ச்சி...

( ... இந்த இரண்டு 'நிழல் கிரகங்களும்'... வலமிருந்து இடமாக (Anti Clock-wise) சுற்றி வருவதாக ரிஷிகள் அமைத்திருப்பதற்கான காரணமே... 'அவை அந்த ஜீவனின் வாழ்வைப் பின்னோக்கிப் பார்க்கிறது...' என்பதை உணர்த்துவதற்காகவே...)

( ... 'அவை ஜீவனின் வாழ்வை பின்னோக்கிப் பார்க்கிறது...' என்பதற்கு ஆதாரமாக 'புராணத்திலும்... கோவிலின் ஆகம விதிகளிலும்' இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன...)

இவற்றிலிருந்து... ஒவ்வொரு ஜீவனின் வாழ்வை பின்னோக்கிப் பார்ப்பதுதான் 'ராகு-கேது பகவான்களுக்கான' பணி என்பது உறுதியாகிறது. அவை பார்ப்பது... அந்த ஜீவனின் 'கர்ம வினைகளின் தொகுப்பைத்தான்'.

ஒவ்வொரு ஜீவனும்... தனது மொத்தக் கர்மவினைகளான 'சஞ்சித கர்மா' விலிருந்து, இந்தப் பிறவிக்கான 'பிராரப்த கர்மாவை' சுமந்து கொண்டு இந்தப் பிறவியை அடைகிறது. அதை எதிர்கொள்ளும் போது விளையும் விளவுகளை 'ஆகாமிய கர்மாவாக' ஏற்றுக்  கொண்டு, இந்தப் பிறவியை கடந்து போகிறது.

இவ்வாறு, தொடர்ந்து... தான் சேர்த்துக் கொள்ளும் 'வினைகளின் விளைவுகளைத்தான்'... அந்த ஜீவனுக்கான 'கர்ம வினைகள்' என்கிறோம்.

இந்த 'கர்ம வினைகளின் தொகுப்பைத்தான்'..'ராகுபகவான்' சுமக்கின்றார்.

இந்தக் 'கர்ம வினைகளிலிருந்து' மீள்வதற்கான உபாயங்களை... 'கேது பகவான்' ஏற்றுக்கொள்கிறார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில்தான்... ஜோதிடச் சித்திரத்தில், 'ராகு பகவானுக்கு' நேரெதிரான... 7 ஆமிடத்தில்... 'கேது பகவான்' அமைகிறார்.

ஒவ்வொரு ஜீவனின் வாழ்வின் நோக்கமும், அது... தனது மூலமான படைப்பினிடத்தில் சென்று சேர்வதுதான். அதற்குத் தடையாக இருப்பது... அந்தந்த ஜீவனின் 'கர்ம வினைகள்தான்'. 'கர்ம வினைகள' களைந்து விட்டால்... ஜீவனுக்கு 'முக்தி' என்ற ' மீண்டும் பிறவாமை' சித்தியாகிவிடும்.

ஒரு ஜீவனின் பிறவிக்கான சூழலை, அதன் கர்ம வினைகள்தான் தீர்மானிக்கின்றன. அந்த வினைச் சூழலுக்கு ஏற்ப பிறக்கும் ஜீவனது வாழ்வை சாட்சியாக இருந்து பார்ப்பது மட்டுமே.... இறைவனின் பணியாக இருக்கிறது. அந்த ஜீவன் எந்த 'கர்ம சூழலில்' பிறந்திருக்கிறது...? என்பதை 'ராகு பகவான்' அந்த ஜாதகத்தில்... எங்கு அமைந்திருக்கிறார்... என்பதைக் கொண்டும், எவ்வாறு, இந்தக் கர்ம வினைகளிலிருந்து விடுபடுவது...? என்பதை 'கேது பகவானின்' அமைவைக் கொண்டும்... அறிந்து கொள்ளும் நுட்பத்தைத்தான்... ஜோதிடம் என்ற அரிய கலை கற்றுத்தருகிறது.

இந்த நுட்பத்தைத்தான்... ஒவ்வொரு ஜீவனின் ஜோதிட சித்திரத்திலும்... 'ராகு பகவானும்'... 'கேது பகவானும்'... சுட்டிக் காட்டுகிறார்கள்.

இந்த நுட்பத்தின் வழியாக தொடர்ந்து பயணித்து... ராகு - கேது பகவான்களின் அமைவுகளை... உதாரண ஜாதக அமைவுகளின் மூலம் ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

Thursday, November 21, 2019

About...'Sathguru' (Preacher or Practitioner...?)





There is a small difference between the Preacher and the Practitioner.

Preacher... is also a Guru, He preaches about the values.

Practitioner... is a 'Sathguru', He, not only preach, but practice what he preaches.

If a Disciple asks... ' What is Sugar...?'

To the above... the Preacher defines it... 'It is white in colour. It is produced from sugar cane. It tastes Sweet. It is in the form of little particles'. These definitions are true. And it is knowledgeable too.

But a Sathguru's definition would be different. He asks the Disciple to open his mouth. and put a spoon full of Sugar into his mouth. The disciple never forgets this experience in his life.

The Guru's knowledge and the Sathguru's experience... leads the Disciple to his Wisdom and Bliss.

Sairam.



About...'Sathguru'.






The world we are seeing is nothing but our karma.

It evolves every second when the time of our waking, and spread in the space screen, like a movie. Sometime we are enjoying it... in another time we are depressing. We have never been peaceful throughout the day. These tiring experience leads us to sleep.

In the deep sleep. the 'karma' dissolves is 'Athma'. We are in the state of  'continuous enjoyment'. This happens without any effort.

So, we try to experience this 'continuous enjoyment' throughout the waking time of our life. This process of effort starts from Devotion and ens in Mukthi.

This whole act of 'Uniting process' is observed by Athma, monitoring and directing by Sathguru.

Sathguru... He is another form of Athma.

Sairam.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 40. 'ராகு - கேது பகவான்கள்' அறிமுகம் - பகுதி 2.





முன் பதிவின் தொடர்ச்சி...

('...  இந்த இரண்டு 'நிழல் கிரகங்களும்'... வலமிருந்து - இடமாக (Anti Clock-Wise) சுற்றி வருவதாக ரிஷிகள் அமைத்திருப்பதற்கான காரணமே... 'அவை அந்த ஜீவனின் வாழ்வை பின்னோக்கிப் பார்க்கிறது...' என்பதை உணர்த்துவதற்காகவே...')

'அவை ஜீவனின் வாழ்வை பின்னோக்கிப் பார்க்கிறது...' என்பதற்கு ஆதரமாக, 'புராணத்திலும்... கோவில் ஆகமவிதிகளிலும்' இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன.

இந்த நிழல் கிரகங்களுக்கு, கிரகங்களுக்கு உண்டான அதிகாரம் வழங்கியது பற்றிய... 'புராண வழியான கதை' உலவிவருவதை... அனைவரும் அறிவோம்.



அதன்படி, பால்கடலைக் கடைந்து 'அமிர்தம்' பெற்ற நிலையில்... அதை 'தேவர்களுக்கும்'... 'அசுரர்களுக்கும்' பிரித்துக் கொடுக்கும் பொறுப்பை... 'மஹா விஷ்ணு பகவான்' ஏற்றுக் கொண்டார். 'மோகினியின்' ரூபத்தில், பகவான் தேவர்களை ஒருபுறமும்... அசுரர்களை மறுபுறமும் அமரவைத்து... முதலில் தேவர்களுக்குப் பறிமாறுகிறார். 'சுவர்பாணு' என்ற அசுரன், தேவர்களின் உருவத்தை எடுத்துக் கொண்டு... அமிர்த்தை வாங்கி பருகி... அமர வாழ்வை அடைந்தான். இதனைக் கண்ட 'சூரிய-சந்திர பகவான்கள்'... 'விஷ்ணு பகவானிடம்' தெரிவிக்க, அவர் தனது கையில் வைத்திருக்கும் மத்தைக் கொண்டு அடித்ததால், தலை வேறு - உடல் வேறாக சுவர்பாணுவின் உடல் பிரிந்து போனது. அமிர்தத்தை உண்ட காரணத்தால், மரணிக்காமல்... 'பிரம்ம தேவரிடம்' வரமிருந்து... தன்னைத் தண்டிக்கக் காரணமாகவிருந்த... 'சூரிய-சந்திர பகவான்களை' பீடிக்க... 'நவக்கிரக பரிபாலனத்தில்'... 'ராகு - கேது பகவான்கள்' என்ற 'நிழல் கிரகங்களாக' பொறுப்பேற்றுக் கொண்டனர். 

'இடமிருந்து, வலமாக' சுற்றி வரும் 'சூரிய - சந்திர பகவான்களை'... 'ராகு-கேதுக்கள்' பீடிக்க வேண்டுமெனில்... அவர்கள், 'வலமிருந்து, இடமாகத்தானே' சுற்றி வர வேண்டும். இதைத்தான்... இந்த புராண வரலாறு உறுதிப்படுத்துகிறது.

கோவில்கள், அவற்றிற்கான 'ஆகம விதிகளின்' படியே நிர்மாணம் செய்யப் படுகின்றன. 'ராஜ கோபுரம் முதல் கருவறை வரையிலும்'... 'சிலா ருபங்கள் முதல் சித்திரங்கள் வரையிலும்'... அனைத்தும் 'ஆகம விதிகளுக்கு' உடபட்டே அமைகின்றது.

அதன்படி... சிவாலயங்களில், பிரகாரச் சுற்றில்... 'சண்டிகேஸ்வரருக்கு' முன்பாக... 'நவக்கிரகங்கள் சந்நதி' அமைக்கப் படுகிறது.




இந்த அமைவின்படி... 'மேற்கு திசையை' நோக்கியிருக்கும் 'சனி பகவானுக்கு' வலது புறமாக (வட-மேற்கு திசையில்), 'சர்ப்பத்தின் தலையுடன்' கூடிய 'கேது பகவானும்'... இடது புறமாக (தென்-மேற்கு திசையில்), 'சர்ப்பத்தின் உடல் பகுதியுடன்' கூடிய 'ராகு பகவானும்' அமைந்திருப்பதைக் காணலாம். ஆயுள் காரகரான... 'சனி பகவானைன்' வலது புறம் தனது தலையை வைத்து... இடது புறமாக உடல் பகுதி அமைந்திருப்பதிலிருந்தே... இந்த 'சர்ப்பம்' வலமிருந்து - இடமாகச் சுற்றி வருவதை' நவக்கிரக அமைப்பிலிருந்து உறுதி செய்யலாம்.

இந்த 'ராகு - கேது பகவான்களின்'... ஏனைய சூட்சுமங்களைத் தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 39. 'ராகு - கேது பகவான்கள்' அறிமுகம் - பகுதி 1.





வேதம் இறைவனால் அருளப்பட்டது. அதன் காலம் அனாதியானது. அதைப் படைத்த இறைவனும் அனாதியானவன். 'வாய் மொழியாக கேட்டு, மனதில் பதியவைத்துக் கொள்வதால்தான்...' அதனை 'சப்த பிரம்மம்' என்று அழைக்கிறோம். அந்த வேதத்தின் ஒரு அங்கம்தான்... ஜோதிடம்.

இப்புவியில் உள்ள அனைத்துப் படைப்புகளும் இறைவனால் படைக்கப்பட்டு... அவரின் கண்காணிப்பிலேயே வாழ்ந்து... இறுதியில், அவருக்குள்ளே கலந்தும் விடுகின்றன. இந்தப் படைப்புகளிலேயே வித்தியாசமானது  மனிதனின் படைப்புதான்.

ஏனைய, எண்ணிறந்த (84 லட்சம் படைப்புகள்) படைப்புகளில்... மனிதனைத் தவிர்த்து... ஏனைய எந்த உயிரினங்களுக்கும், 'பகுத்து அறியும்' ஆற்றல் வழங்கப்படவில்லை. அவையனைத்தும், இறைவனின் திட்டப்படியே உருவாக்கம் பெற்று... தோன்றி, வாழ்ந்து அவனுள் கலந்தும் விடுகிறது.

ஆனால், மனிதனுக்கு மட்டுமே... அந்த சுதந்திரம் வழங்கப்பட்டு இருக்கிறது. அவனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்... தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும்... மறுக்கும் வாய்ப்பும் (CHOICE & CHANCE) வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த வாய்ப்பை 'கிருத யுகம்' என்ற 'தர்மத்தை' பிரதானமாகக் கொண்ட யுகத்தில்... அனைவரும் தக்கப்படி பயன்படுத்திக் கொண்டார்கள்.  வேதம் உணர்த்திய தர்மத்தின் வழியில் வாழ்ந்து.. இறுதியில், இறைவனின் திருவடியில் ஒன்றெனக் கலந்தனர்.

தொடர்ந்த, 'திரேதா... துவாபர... கலியுகங்களில்'... மனிதர்களிடையே, தர்ம நெறியின் வழியிலான வாழ்வு படிபடியாகக் குறைந்து... மீண்டும், மீண்டும் பிறப்பெடுப்பதற்கான... 'கர்ம வினைகளைத்' தாமே உருவாக்கிக் கொண்டார்கள்.

இவ்வாறு, மீள முடியாத 'கர்ம வினைகள்' என்ற... மீண்டும், மீண்டும் பிறப்பெடுக்கும்... 'பிறவிப் பிணியிலிருந்து' இந்த மனித ஜீவனை மீட்பதற்கு... அந்த ஜீவர்களுக்கு, பிறவியின் நோக்கத்தையும்... அது சென்று சேர வேண்டிய இலக்கையும் சுட்டிக் காட்ட... வேதத்தின் அங்கமான 'ஜோதிடத்தை' ஒரு கருவியாகக் கொண்டனர்... கருணையாளர்களான... 'ரிஷி புங்கவர்கள்'.

அவர்கள் வேதத்தின் வழியேயான ஜோதிடத்தை எளிமையாக்கி... அதன் வழி முறைகளை வகுத்து... தொடரும் சந்ததிகளுக்கு... ஒரு வரப்பிரசாதமாக அளித்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.

'கிருத யுகத்தில்' தர்மம் மேலோங்கி இருந்ததால்... 'சூரிய பகவான் முதல் சனி பகவான்' வரையிலான 7 கிரகங்கள் மட்டுமே... ஒரு ஜீவனுக்கு வழிகாட்டும் கிரகங்களாக இருந்தது. அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி, அனைத்து ஜீவர்களும் தர்மத்திற்குள் கட்டுப்பட்டு நின்றனர்.

'திரேதா - துவாபர - கலி யுகங்களில்'... தர்மம் முறையே... ஒரு நாற்காலியின் கால்களைப் போல... 'நான்கு - மூன்று - இரண்டு' என்று படிப்படியாகக் குறைந்து இன்று 'ஒற்றைக் காலில்' நிற்க வேண்டிய சூழலில் தத்தளிக்கிறது. இதற்குக் காரணமான... அந்தந்த ஜீவர்கள் சேர்த்துக் கொண்ட... 'கர்ம வினைகளின் தொகுப்பை' சுட்டிக் காட்டுவதற்காக... ரிஷிகளால் உருவாக்கப்பட்டதுதான் 'ராகு - கேது பகவான்கள்' என்ற 'நிழல் கிரகங்கள்'.

ஏனைய கிரகங்கள் அனைத்தும், 'சூரிய பகவானை' மூலமாகக் கொண்டு... அதனை 'இடமிருந்து - வலமாக (Clock Wise) சுற்றி வருகின்றன. இந்த இரண்டு 'நிழல் கிரகங்களும்' வலமிருந்து - இடமாக (Anti - Clock Wise) சுற்றி வருவதாக ரிஷிகள் அமைத்திருப்பதற்கான காரணமே... 'அவை அந்த ஜீவனின் வாழ்வை பின்னோக்கிப் பார்க்கிறது'... என்பதை உணர்த்துவதற்காகவே...!

இந்த 'ராகு - கேது பகவான்களின்' எனைய சூட்சுமங்களைத் தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளால்...

ஸாய்ராம்.



Wednesday, November 20, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 38. 'யோகங்களும் அதை வழி நடத்தும் பூர்வ வினைகளும்' - 'பரிவர்த்தனை யோகம்'







'யோகங்கள்'... ஜோதிடக்கலையின் வல்லுனர்களுக்கும்... ஆர்வலர்களுக்கும்... பயனாளர்களுக்கும்...மிகவும் பிடித்தமான ஒரு அங்கம்.

இந்த யோகங்களின் அமைவு... ஜாதகர்களின் வாழ்வில்... அவரவர்களின் கர்ம வினைகளுக்கு உட்பட்டு... எவ்வாறு பயனளிக்கப் போகிறது...? என்பதைத்தான் இந்தத் தொடரில் ஆய்வதற்கு முற்படுகிறோம்.... இறைவனின் அருளோடு...

'பரிவர்த்தனை யோகம்'

ஒரு ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் என ஸ்தானங்கள் இருக்கின்றன. அந்தந்த 'ஸ்தானங்கள்' அந்தந்தக் கிரகத்திற்கு 'ஆட்சி வீடுகளாகிறது'. இரண்டு 'ஆட்சி வீட்டுக் கிரகங்கள்' தமது வீடுகளுக்குள்... ஒன்றுக்கொன்று மாறி அமர்ந்து கொள்வதை...'பரிவர்த்தனை' என்றும்...அந்த அமைவை... 'பரிவர்த்தனை யோகம்' என்று வருணிக்கிறது ஜோதிடம்.

இந்த யோகம் அளிக்கும் பலன்கள்... 'பரிவர்த்தனை பெற்ற கிரகங்களின் ஆதிபத்தியங்களைப் பொருத்தும்'... 'ஜாதகரின் பூர்வ வினைகளின் விளைவுகளைப் பொருத்தும் அமையும்'.

உதாரணமாக... 'மேஷ லக்னத்தில்' பிறந்திருக்கும் ஒருவருக்கு... லக்னாதிபதியாகிய 'செவ்வாய் பகவான்' 9 ஆம் இடமான 'பாக்கிய ஸ்தானத்தில்' அமைந்தும், அந்த பாக்கியாதிபதியாகிய 'குரு பகவான்' லக்னத்தில் அமைந்தும்... ஒருவருக்கு ஒருவர் பரிவர்த்தனை பெற்று அமைந்திருக்கிறார்கள். இந்தப் பரிவர்த்தனையில் ஜாதகர்... பிறக்கும் போதே, அனைத்து பாக்கிய சூழல்களுடன் பிறந்திருப்பார். மேலும் தனது தந்தையைப் போலவே... இவரும் தனது குடும்பத்திற்கு அனைத்து பாக்கியங்களையும் அளிக்கக் கூடியவராக இருப்பார். குடும்பத்தால் இவருக்கும்... இவரால் குடும்பத்திற்கும் பெருமையும்... புகழும் வந்து சேரும். இவர் எதிர்கொள்ளும் மற்றும் ஈடுபடும் காரியங்கள் அனைத்தும் தர்மத்திற்கும், நியாயத்திற்கும் உட்பட்டே இருக்கும்.

அதுவே... ஒரு ஜாதகர், 'விருச்சிக லக்னத்தில்' பிறப்பதாகக் கொள்வோம். அந்த லக்னாதிபதியாகிய 'செவ்வாய் பகவான்' 9 ஆம் இடமான 'பாக்கிய ஸ்தானத்தில்' அமைந்தும், அந்த பாக்கியாதிபதியாகிய 'சந்திர பகவான்' லக்னத்தில் அமைந்தும்... ஒருவருக்கு ஒருவர் 'பரிவர்த்தனை' பெறுகிறார்கள். இந்த இரண்டு கிரகங்களுக்கும் சிறந்த ஆதிபத்தியங்கள் அமைகிறது... ஒன்று 'லக்னாதிபதி' மற்றொன்று 'பாக்கியாதிபதி'. ஆனால் இந்தப் பரிவர்த்தனையில் இந்த இரண்டு கிரகங்களும்... தங்களது பலத்தை இழக்கின்றன. ஏனெனில்... 'விருச்சிக லக்னம்'... 'சந்திர பகவானுக்கு 'நீச நிலையை' அளிக்கிறது. அது போல, லக்னத்திற்கு 'பாக்கிய ஸ்தானமான'... 'கடகம்', செவ்வாய் பகவானுக்கு 'நீச நிலையை' அளிக்கிறது. இவ்வாறு, லக்னாதிபதியும்... பாக்கியாதிபதியும், ஒருவருக்கு ஒருவர் தங்களது பலத்தை இழக்கிறார்கள். இதனால், ஜாதகர் பிறக்கும் போது சுக சௌகரியங்களை அனுபவிக்க முடியாமலும்... தான் முயன்று தனது வாழ்வையும், தன் குடும்பத்தையும் வழி நடத்தும் கடமைகளை ஏற்றுக் கொள்ளும் சூழல் உருவாவதால்... தான் அனுபவிக்க வேண்டிய பாக்கியங்களை... தக்க காலங்களில் அனுபவிக்க முடியாத சூழல் ஏற்படும்.

இதைப் போலவே... ஏனைய யோகங்களையும்... ஆய்வுக்கு உட்படுத்துவோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்

Tuesday, November 19, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 37. 'யோகங்களும் அதை வழி நடத்தும் பூர்வ வினைகளும்' - 'நீசபங்க ராஜயோகம்'





'யோகங்கள்'... ஜோதிடக் கலையின் வல்லுனர்களுக்கும்... ஆர்வலர்களுக்கும்... பயனாளர்களுக்கும்... மிகவும் பிடித்தமான ஒரு அங்கம்.

இந்த 'யோகங்களின் அமைவு'... ஜாதகர்களின் வாழ்வில்... அவரவர்களின் கர்ம வினைகளுக்கு உட்பட்டு... எவ்வாறு பயனளிக்கப் போகிறது...? என்பதைத்தான் இந்தத் தொடரில் ஆய்வதற்கு முற்படுகிறோம்... இறைவனின் அருளோடு...


நீசபங்க ராஜயோகம் :

ஒரு ஜாதகச் சித்திரத்தில்... ஒரு கிரகம் நீசமடைந்து, பலமிழந்து நிற்கும் போது... அந்த கிரகம் நீசமடைந்த ஸ்தானத்தின் அதிபதி ஆட்சி, உச்சம் என்ற நிலையில் பலம் பெறும் போது... அந்த அமைவை, 'நீசபங்கம்' என்றும், இந்த அமைவின் மூலம் ஜாதகர் அடையும் பலன்களை... 'நீசம் நின்ற இராசிநாதன் ஆட்சி உச்சம் ஏறிடில்... நீச பங்க ராஜயோகமே...!' என்று வருணிக்கிறது... ஜோதிடக்கலை.

'ஒரு ஜாதகர் தனது பூர்வ புண்ணிய பலன்களை அனுபவிக்கத் தகுந்த காலத்தில்... எல்லாம் இருந்தும் அதை அனுபவிக்க முடியாத சூழலில்... தனது முயற்சிகள் அனைத்தும் தோற்றதற்குப் பின்... தன்னால் எதுவுமே செய்ய முடியாத சூழலில்... அந்த சூழல் தானாகவே சரியாகி... அனைத்து அனுபவங்களும் கூடி வருவதை அனுபவிக்கும் நிலையைத்தான்... 'நீசபங்க ராஜயோகம்' என்ற அமைவு உணர்த்துகிறது'.

'அதே நேரத்தில்... அந்த சூழல் மிகவும் இறுக்கமடைந்து... தனது பூர்வ புண்ணிய பலன்கள் அனைத்தையும் இழக்கும் சூழலும்... இந்த அமைவால் ஏற்பட வாய்ப்புகள் உண்டு'.

இந்த இரண்டு நிலைகளும்... ஜாதகரின் 'கர்ம வினைகளின் விளைவுகளைப்' பொருத்ததே.

உதாரணமாக... 'மீன லக்னத்தில்' பிறந்த ஜாதகர் ஒருவருக்கு... பூர்வ புண்யாதிபதியாகிய... 'சந்திர பகவான்' 9 ஆமிடமான பாக்கிய ஸ்தானத்தில்... 'நீச நிலையில் அமைந்து... அந்த பாக்கியாதிபதியாகிய... 'செவ்வாய் பகவான்'... 11 ஆமிடமான 'லாப ஸ்தானத்தில்' உச்ச பலம் பெறுவதாகக் கொள்வோம். அவருக்கு 'சந்திர பகவானின்' தசா நடக்கும் காலத்தில்... அந்த ஜாதகர், தனது பூர்வத்தின் பாக்கியங்களை... அனுபவிக்க முடியாது, தொழில் மற்றும் ஜீவனத்திற்காக பூர்வத்தை விட்டு விலகி இருக்கும் சூழல் ஏற்படும். ஆனால்... இந்த நீசபங்க ராஜயோகத்தின்' அமைவினால்... அவரின் பூர்வத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல்... அவரின் சகோதர உறவுகளால்... அவை பன்மடங்காகப் பெருகுவதும்... அதன் பாக்கியங்கள்... இந்த ஜாதகரைத் தேடி வந்து சேருவது... இவரின் உழைப்புகளுக்கான பலன்களும் முழுமையாக இவருக்கு அனுபவமாகும்... என்பதும் நிகழ்ந்தே தீரும். இந்த ஜாதகரின் பாக்கியங்கள் என்றும் குன்றாது வளரும்.

அதே நேரத்தில்... இந்த அமைவு... 'தனுர் லக்னத்தில்' பிறந்த ஒருவருக்கு... 8 ஆம் அதிபதியான... 'சந்திர பகவான்'... 'விரய ஸ்தானமான' 12 ஆம் இடத்தில் மறைந்தும்... 'நீச நிலையில்' சஞ்சரித்து பலமிழந்தும்... அந்த ஸ்தானாதிபதியாகிய 'செவ்வாய் பகவான்'... 'பூர்வத்தில்'... 5 ஆம் இடத்தில் அமைந்து, ஆட்சி பெற்று... 'நீசபங்கம்' அடைந்த  சூழலில்... அவருக்கு 'சந்திர பகவானின்' தசா நடப்பதாகக் கொள்வோம். இந்த 'நீசபங்க ராஜயோக' அமைவினால்... இந்த ஜாதகர் தனது பூர்வத்தின் பாக்கியங்களை அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். தன் ஜீவனத்திற்காக பூர்வத்த விட்டு வெளியேறிய இவரின் பூர்வத்தை... நிர்வகிக்க ஆளில்லாத சூழலில்... அவற்றை மிகச் சொற்பமான விலைக்கு விற்பது மட்டுமல்ல... தான், தனது உழைப்பினால் உருவாகியவைகளையும் இழக்கும் சூழல் ஏற்படும்.

இதை போலவே... ஏனைய யோகங்களையும்... ஆய்வுக்கு உட்படுத்துவோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

வேதியரையும், வேடரையும்... ஒருங்கே ஆட்கொண்ட ஈசனின் சூட்சுமம் (அன்பும்-பக்தியும்) :





'சிவ கோசரியார்'... உயர்ந்த அந்தணகுலத்தவர். ஈசனுக்கே பணி செய்வது என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டவர். தனது பிறவியின் பயனே... 'சர்வேஸ்வரனின்' திருவடித் தொண்டு... என வாழ்ந்த, வேதம் உணர்ந்த வேதியர்.

'திண்ணனார்'... வேட்டுவ குலத்தில் பிறந்தவர். கொடிய காட்டு மிருகங்களை வேட்டையாடும் 'வேட்டுவக் குலத்து' தலைவரின் மகனாகப் பிறந்தவர். தனது தந்தைக்குப் பின்... அந்த வேட்டுவ குலத்தை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்.

முற்றிலும் வேறுபட்ட சூழல்களில் வாழும், இந்த 'இரண்டு ஜீவர்களையும்'... சர்வேஸ்வரன்... தமது அருள் பொங்கும் 'லீலையைக்' கொண்டு... எவ்வாறு ஆட்கொள்கிறான் என்பதில்தான்... அவனின் அன்பும், கருணையும் நிறைந்திருக்கிறது.

அதற்காக, சர்வேஸ்வரன் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஸ்தலம் 'காளத்தி மலை'. அந்த திருமலையில்... 'குடுமித்தேவர்' என்ற நாமத்துடன்.. எவரும் எளிதில் நெருங்கமுடியாத நிலையில் அமர்ந்திருந்தான் ஈசன்.

அவரின் அருள் லீலையால் ஈர்க்கப்பட்ட முதலாமவர்... 'சிவ கோசரியார்'.

அவர், தினமும் தலையில் நீர்க்குடம்... தோள்களில் தொங்கும் பைகளில்... தூய நெய், சந்தனாதி வாசனைத் திரவியங்கள், வாசனையான மலர்கள், வஸ்திரம், சுவாமிக்கான நிவேதனம்...என்று ஏந்தி வந்து... சுவாமியின் இருப்பிடத்தைச் சுத்தம் செய்து... புனித நீரால் நீராட்டி... நெய், சந்தானாதி வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்வித்து...வஸ்திரம் சாற்றி... வாசனை மலர்கள் தூவி... தூப தீபங்களுக்குப் பின் நிவேதனம் சமர்ப்பித்து... வேத மந்திரங்கள் ஓதி... 'குடுமித் தேவருக்குத்'... தனது  நித்திய பூஜையை  சமர்ப்பணம் செய்வார்... பக்தியோடு.

இதற்கு முற்றிலும் வேறான, குணநலன்களை உடைய, வேட்டுவக் குலத் தலைவன்... கொடிய மிருகங்களின் இரத்தத்தையும்,. இரைச்சியையும் சுவைத்து உண்ணும் குலத்தில் பிறந்த... 'திண்ணன்' என்ற வேடன்தான்... ஈசனால் இரண்டாவதாக ஈர்த்துக் கொள்ளப்பட்டவர்.

இந்த வேடனும் நீரைக் கொண்டு வந்தான்... அவனது வாயில் கொப்பளித்தபடி. இந்த வேடனும் பூக்களைக் கொண்டு வந்தான்... தனது தலைப்பாகையில் செருகிக் கொண்டபடி. இந்த வேடனும் நிவேதனத்தைக் கொண்டு வந்தான்... வேட்டையாடப்பட்ட... பக்குவமாக வேக வைக்கப்பட்ட... பன்றியின் இறைச்சித் துண்டுகளாக.

தனது வாயில் இருக்கும் நீரைக் கொப்பளித்து 'குடுமித் தேவருக்கு' அபிஷேகத்தையும், காட்டுப் பூக்களால் ஆராதனையயும்... இறச்சியைக் கொண்டு நிவேதனத்தையும் சமர்ப்பித்து... அதை ஈசன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மன்றாடி... ஆனந்தக் கூத்தாடுவான் திண்ணன்... அன்போடு.

இருவரது பூஜா முறைகளும்  முற்றிலும் வேறானவை. ஒன்றுக்கொன்று நேரெதிரானவை. ஆனால்... இருவரது மனதில் இருந்ததும் ஒன்றுதான். அது அவர்கள், 'குடுமி நாதரின்' மேல் வைத்த 'பக்தியும்-அன்பும்'.

இந்த 'அன்பையும் - பக்தியையும்'... நமக்கு உணர்த்துவதற்காக 'குடுமி நாதனான'... ஈசன் நடத்திய நாடகத்தில் விளைந்ததுதான்... 

'சிவகோசரியாருக்கு' ஏற்பட்ட, கலக்கமும்... கவலையும்... வருத்தமும்.

திண்ணனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும்... அழுகையும்... தியாகமும்.

'நமக்கு கண்கள் இரண்டு. ஆனால்... காட்சி ஒன்றுதான்'. அதுபோல, 'அன்புக்கு இலக்கணமான திண்ணரும்'... 'பக்திக்கு இலக்கணமான சிவ கோசரியாரும்'... கண்டது... 'குடுமி நாதரான' ஒருவரைத்தான்... என்ற உண்மையை... இந்த... 'கண்ணுக்கு கண் கொடுக்கும் லீலை' மூலமாக... ஈசன், சூட்சுமமாக உணர்த்துகிறான்.

ஸாய்ராம்.

Sunday, November 17, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 36. 'யோகங்களும் அதை வழி நடத்தும் பூர்வ வினைகளும்' - 'விபரீத ராஜ யோகம்'





'யோகங்கள்'... ஜோதிடக் கலையின் வல்லுனர்களுக்கும்... ஆர்வலர்களுக்கும்...பயனாளர்களுக்கும்... மிகவும் பிடித்தமான ஒரு அங்கம்.

இந்த 'யோகங்களின் அமைவு'... ஜாதகர் வாழ்வில்... அவரவர்களின் கர்ம வினைகளுக்கு உட்பட்டு... எவ்வாறு பயனளிக்கப் போகிறது...? என்பதைத்தான் இந்தத் தொடரில் ஆய்வதற்கு முற்படுகிறோம்... இறைவனின் அருளோடு...

'விபரீத ராஜ யோகம்' :

'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்...' என்ற புகழ் மிக்க சொல்லாடல்... இந்த யோகத்தை எளிதாக விளக்கிவிடும்.

ஒரு ஜாதகச் சித்திரத்தில்... ஆதிபத்திய ரீதியான இடங்களான... 3, 6, 8, 12 என்பவை 'மறைவு ஸ்தானங்களாக' அமைகிறது. இதில் 6, 8, 12 என்ற இடங்களை 'துர் ஸ்தானங்கள்' என்று வகைப் படுத்துகிறது இந்தக் கலை.

ஏனெனில்... ஒரு ஜீவன் இந்தப் பிறவியில் தான அனுபவிக்கப் போகும்... 'கர்ம வினைகளின் விளைவுகளான' இன்பங்களையும், துன்பங்களையும்... இந்த 6 என்ற 'ருண - ரோக - சத்ரு' என்ற ஸ்தானத்தின் வழியாகவும், 8 என்ற 'அட்டமாதிபதி' என்ற தனது ஆயுள் நாட்களைக் கொண்டும்... தான்... தன்னிடமிருந்து இழக்கப் போகும் 'இழப்புகளை' 12 ஆமிடம் என்ற 'விரய ஸ்தானத்தின்' வழியாகவும்தான்... அனுபவிக்கப் போகிறது.

அதனால்தான்... இந்த 6, 8, 12 ஆமிடங்களை 'துர் ஸ்தானங்கள்' என்றும்... அந்த ஸ்தானாதிபதிகளை, 'துர் ஸ்தானாதிபதிகள்' என்றும் ஜோதிடம் வருணிக்கிறது.

'இந்த ஸ்தானாதிபதிகள், ஒரு ஜாதகத்தில் மறையும் போதும்... தனது பலத்தை இழக்கும் போதும்...தனது வீடுகளிலேயே பரிவர்த்தனை பெற்றுக் கொள்ளும் போதும்... இந்த 'விபரீத ராஜ யோகம்' ஏற்படுகிறது'.

இந்த யோகத்தை அனுபவிக்கும் ஜாதகர்கள்... தனது பூர்வபுண்ணிய பலத்தால்... தனக்கு நேரும் எதிர் வினைகளையும் ... தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் பாக்கியத்தை அடைவர்.

இந்த யோகத்தை பெரும்பாலும் உலகவாழ்வில் போட்டி போட்டுக் கொண்டு... முன்னேறத் துடிக்கும், ஜீவர்களின் ஜாதகத்திலும்... தனது முயற்சியாலும், உழைப்பாலும் கிடைக்காமல் போன அங்கீகாரத்திற்காக ஏங்கித் தவிக்கிற தர்மமான வாழ்வை நடத்தும், ஜீவர்களின் ஜாதகத்திலும் காணலாம்.

பெரும் வியாபாரிகளின் ஜாதகத்திலும்... சிறந்த அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை ஏற்படுத்திய தலைவர்களின் ஜாதகத்திலும் இந்த அமைவைக் காணலாம்.

முன்னவர்கள் இந்த யோகத்தின் பலனால் சுயலாபம் அடைவர். பின்னவர்களுக்கு அமையும் இந்த யோகத்தினால்... சமூகம் நலன் பெறும்.

உதாரணமாக... 'துலா லக்னத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு... 3 மற்றும் 6 ஆமிடத்திற்கு அதிபதியாகிய 'குரு பகவான்'... 12 ஆமிடத்தில் மறைந்து, அந்த மறைவு ஸ்தானத்திற்கு அதிபதியாகிய 'புத பகவான்' அதே ஸ்தானத்தில் அமைந்து, பலம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். 'கெட்டவன் கிட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்' என்ற நிலையில்... 'குரு பகவானது' தசை இவருக்கு நடக்கும் பட்சத்தில்... தர்மத்தைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல்... அவர் ஈடுபடும் எந்தத் துறையாக இருந்தாலும்... அது பெரும்பாலும் வியாபாரத் துறையாகத்தான் இருக்கும்... அந்தத் துறையில், பெரும் செல்வத்தைக் குவித்துவிடுவார். பொருள் தேடும் பாதையில்... நியாய-அநியாயங்களை புறம் தள்ளி... தனது சுய நலம் ஒன்றையே குறியாகக் கொள்பவராக இருப்பார்.

அதுவே... 'மேஷ லக்னத்தில்' பிறக்கும் ஒருவருக்கு... 3 மற்றும் 6 ஆமிடங்களுக்கு அதிபதியாக இருக்கும் 'புத பகவான்' 12 ஆமிடத்தில் மறைந்து... நீச நிலையில் சஞ்சரித்து, அந்த ஸ்தானாதிபதியான 'குரு பகவான்' அவருடன் இணைந்திருப்பதாகக் கொள்வோம். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்' என்ற நிலையில்... இவருக்கு 'புத பகவானின்' தசா நடக்கும் காலத்தில்... தனது விரிவாக்கங்கள்... திட்டங்கள்... பொருளாதார மாற்றங்கள் என அரசு, அரசு சார்ந்த துறை, அரசியல். பெரும் நிர்வாக மேலாண்மை, தொழில் குழுமங்களின் நிர்வாகம்... என்ற எந்த பொது துறைகள் சம்பந்தப்பட்டதாக் இருந்தாலும்... தர்மத்தையும், நியாயத்தையும், பொது நலன்களையும் கருத்தில் கொண்டு... மிகச் சிறந்த நிர்வாகத்தை அளிக்கும் ஜாதகராக இருப்பார்.

இதைப் போலவே... ஏனைய யோகங்களையும்... ஆய்வுக்கு உட்படுத்துவோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

Saturday, November 16, 2019

அண்ணாமலையாரும்... கார்த்திகை தீபமும்




சர்வேஸ்வரன்... தியாகராஜ சுவாமிகளாக எழுந்தருளி அருள் பாலிக்கும், 'திருவாரூர் நகரில்' பிறக்கும் பாக்கியம் பெற்றவர்களுக்கு... முக்தி, என்ற 'தன்னுள் கலந்து விடும்' பாக்கியத்தை அருள்கிறான்.

ஏகாம்பரேஸ்வர சுவாமிகளாக எழுந்தருளி அருள் பாலிக்கும் 'காஞ்சி மாநகரில்' வாழும் பாக்கியம் பெற்றவர்களுக்கும்... அந்த பாக்கியத்தை அருள்கிறான் சர்வேஸ்வரன்.

காசி விஸ்வநாதராக சுவாமிகளாக, எழுந்தருளி அருள் பாலிக்கும் புனிதமான 'காசி மாநகரில்' ... தனது இறுதிப் பயணத்தில்... தவித்து நிற்கும் ஜீவர்களை... விசாலாட்சித் தாயாரின் மடியில் கிடத்தி... அதனை ஆசுவாசப்படுத்தி... தனது திருவடியில் இணைத்துக் கொள்கிறான்.

இந்த ஒவ்வொரு ஸ்தலத்திலும்... அந்தந்த ஜீவன்...  தனது உடலொடு இருக்கும் நிலையில்தான்... ஈசனுடன் ஒன்று கலக்கும் பாக்கியம் ஏற்படுகிறது. ஒன்றில் பிறக்கவேண்டும்... இன்னொன்றில் வாழ வேண்டும்... மற்றொன்றில் மரிக்க வேண்டும்.

ஆனால்... ஒரு ஸ்தலத்தில் சர்வேஸ்வரன் எழுந்தருளியிருக்கிறான்... ஜோதி வடிவாக. கிருத யுகத்தில்... இந்த ஜோதி வடிவமே நிலைத்திருந்தது. இந்த கலியுகத்தில், அந்த ஜோதி வடிவம்... பகதர்களுக்கு அருள் செய்யும்... குளிர்ந்த கிரி உருவமாகி... அண்ணாமலையாராக... திருவண்ணாமலையில் எழுந்தருளி... இந்த புவியில் வாழும் அனைத்து ஜீவர்களும்... இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு... மனதால், மனதாற நினைத்தலே போதும்... என்றும் பிறப்பில்லா உன்னத நிலையான... ஒன்று கலத்தல் என்ற முக்தியை அளித்து அருள் புரிகிறான்.

இது போன்ற ஒரு கார்த்திகை மாதத்தில்தான்... இந்த அருள் ஜோதி வடிவத்தின் அருள் மழை பொழிந்தது.

அதே கார்த்திகை மாதத்து முதல் நாளில்... அந்த அருளாளனது திருவடியை நினைத்து உருகி நிற்கிறோம்.

இன்றிலிருந்து, நாங்கள் அன்புடன் ஏற்றி வைக்கும் தீபத்தில் என்றும் போல எழுந்தருளி... எங்களைப் பக்குவப்படுத்தி... வரும் கார்த்திகைத் தீபத்திருநாளன்று... 'சர்வேஸ்வரா...! உங்களுடன் மனதாலும், உடலாலும்... கலந்து விடும்... அந்த அருள் பாக்கியத்தை அருளிடுங்கள் சுவாமி...!! என்று பிரார்த்திக்கின்றோம்.

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்...!!!

ஸாய்ராம்.


Wednesday, November 13, 2019

எது... வைராக்கியம்...?




தனது  குடும்பத்தின் நலனுக்காக... தனது வாழ்வையே அர்ப்பணித்த ஒருவன்... ஒரு நாள்... அனைத்தையும் இழந்து விட்டு... வீதிக்கு வந்து விட்டான்.

அது போலவே... தனது ஊருக்காக... தனது வாழ்வையே அர்ப்பணித்த ஒருவனும்... அனைத்தையும் இழந்து விட்டு... வீதிக்கு வந்து விட்டான்.

இந்த இருவரும்... ஊருக்கு வெளியே இருந்த, சத்திரம் ஒன்றில் தங்கியிருந்தனர். அவ்வழியே வந்த... ஞானி ஒருவர், அந்த சத்திரத்திற்கு அருகில் இருக்கும் மரத்தின் கீழ் ஓய்வெடுப்பதற்காக அமர்ந்தார். அவரிடம் சென்ற இந்த இருவரும்... தமது நிலைகளைக் கூறி... வருந்து அழுதனர். தாங்களும், அந்த ஞானியுடனேயே இருந்துவிடுவதாகக்  கூற...

ஞானியோ... தமது வாழ்வு முறை, இவர்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்றும்... அது மிகவும் கடினமான, சோதனைகள் நிறைந்ததாக இருக்கும் என்றும்... அதில் பிரவேசம் செய்வதற்கு நிறைந்த வைராக்கியம் தேவை என்பதையும்... வலியுருத்தினார். இவர்களின் தொடர் வற்புறுத்தல்களுக்கும்... உறுதி மொழிகளுக்கும் இணங்கி, இவர்களைத் தனது பயணத்தில் இணைத்துக் கொண்டார்.

வெகு தூரம் நடந்த பின்... ஒரு ஊரின் எல்லையை இவர்கள் நெருங்கும் போது... ஒரு வீட்டிலிருந்து 'அழுகுரல்' ஒன்று கேட்டது. அதைக் கேட்ட உடன்... வீட்டிற்காக வாழ்வை அர்ப்பணித்து... வாழ்வை இழந்தவன்... 'சுவாமி...! அந்த அழு குரல் என்னை நோக்கித்தான் இருக்கிறது...! அவர்களுக்கு எனது உதவி தேவைப்படும் போல இருக்கிறது. நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்...!' என்று கூறி... குரல் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

இன்னும் கொஞ்சம் தூரம் சென்ற பின்... ஒரு ஊரே திரண்டு இவர்களை நோக்கி வந்தது. இதைக் கண்டதும்... கண் மலர்ந்த... உருக்கு உழைப்பவன்... 'சுவாமி...! இந்த ஊருக்கு எனது உதவி தேவைப்படும் போல் இருக்கிறது. நான் இந்த ஊரிலே தங்கி... இவர்களுக்கு உதவி செய்து விட்டு வருகிறேன்...!' என்று கூறி... கிராமத்தினரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

இந்தக் கதையை, என்னிடம் கூறிய குருநாதர்... 'பார்த்தாயா அப்பா...! இவர்கள் வைராக்கியத்தை. வீட்டிலிருந்த வந்த அழுகுரலும்... ஊரிலிருந்து திரண்டு வந்தவர்களும்... அந்த ஞானியைத்தான், தேடி வந்தார்கள். அந்த ஞானிக்குப் பின்னாலேயே இவர்கள் இருவரும் இருந்திருந்தால்... வந்தவர்களின் சோதனைகளும் தீர்ந்திருக்கும்... இவர்களின் வாழ்வும் மலர்ந்திருக்கும்...! வைராக்கியம் என்பது... அன்பு, பக்தி, நம்பிக்கை, பொறுமை... என்ற மரத்தின் காய்கள் அப்பா...! அதைக் கனிய விட்டால்... அது விவேகம் என்ற கனியாக கனிந்து... மடியிலேயே விழுந்து விடும்...!' என்றார்.

ஸாய்ராம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 35. 'யோகங்களும் அதை வழி நடத்தும் பூர்வ வினைகளும்' - 'சந்திர-மங்கள யோகம்'





'யோகங்கள்'... ஜோதிடக்கலையின் வல்லுனர்களுக்கும்... ஆர்வலர்களுக்கும்... பயனாளர்களுக்கும்... மிகவும் பிடித்தமான ஒரு அங்கம்.

இந்த 'யோகங்களின் அமைவு'... ஜாதகர்களின் வாழ்வில்... அவரவர்களின் கர்ம வினைகளுக்கு உட்பட்டு... எவ்வாறு பயனளிக்கப் போகிறது...? என்பதைத்தான் இந்தத் தொடரில் ஆய்வதற்கு முற்படுகிறோம்.... இறைவனின் அருளோடு...

'சந்திர மங்கள யோகம்' ( சந்திர - செவ்வாய் பகவான்களின் இணைவு) :

பொதுவாக ... 'சந்திர பகவானுக்குக்' கேந்திரங்களில் (லக்னம்-சுகம்-களத்திரம்-ஜீவனம் என்ற 1-4-7-10) 'செவ்வாய் பகவான்' அமைவதைக் குறிப்பிட்டாலும்...

'சந்திர பகவானுடன்... செவ்வாய் பகவான்' இணையும் போதும், 'சந்திர பகவானுக்கு சம-சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் பகவான்' அமையும் போதும்... இந்த யோகத்தின் அமைவு பூரணம் பெறுவதை அனுபவத்தில் உணரலாம்.

ஒரு ஜீவனின் 'கர்ம வினைகள்' என்ற 'பூர்வ வினைகளின் விளைவுகள்தான்'... 'மனம்' என்ற இடத்திலிருந்து 'எண்ணங்களாக' உற்பத்தியாகிறது. இந்த எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படும் ஜீவன்... அதை வெளிப்படுத்தும் போதும்... எதிர்கொள்ளும் போதும்... ஏற்படும் இன்ப-துன்ப அனுபவங்களை... மனோகாரகராக இருந்து 'சந்திர பகவான்' பிரதிபலிக்கிறார்.

மனதில் தோன்றும் எண்ணங்கள் யாவும் செயல் வடிவமாவதில்லை. அவை 'மண்ணில் தூவப்பட்ட விதைகளைப் போல' உயிருடன்தான் இருக்கும். அதில் எந்த விதை இப்போது முளை விட வேண்டுமோ, அதை, நமது 'பூர்வ வினைகள்தான்' தீர்மானிக்கின்றன. அந்த தீர்மானிக்கப்பட்ட எண்ணத்திற்கான... செயல் வடிவத்தையும்... அதற்கான ஆற்றலையும் தருபவர்தான்... 'செவ்வாய் பகவான்'.

பூமிக்காரகன்... சகோதரக்காரகன்... தைரியக்காரகன் என்று அழைக்கப் பட்டாலும்... 'செவ்வாய் பகவானின்' மகத்துவமே, இவர் அளிக்கும் 'ஆற்றலில்தான்' அடங்கியிருக்கிறது. ஒழுங்கு... கட்டுப்பாடு... சீருடைப் பணி... சிறந்த நிர்வாக மேலாண்மை... என, எண்ணற்ற குணங்களுக்கு இவர் காரணகர்த்தாவாக இருக்கிறார்.

இந்த 'மனோகாரகரான' சந்திர பகவானுடன்... 'ஆற்றல்காரகரான' செவ்வாய் பகவான் இணையும் போது...

மனதில் தோன்றும் எண்ணங்கள் யாவும் வலிமை பெறுகிறது. 'நினைத்ததை... நடத்தியே... முடிப்பவன், நான் ! நான்!...' என்ற வரிகளுக்கு ஏற்ப... நினைத்த காரியங்களை... நினைத்தபடி செயல்படுத்தும் ஆற்றல் ஒருவருக்கு வந்து சேருகிறது. 'எண்ணங்கள் சொல்லாவதும்... பிறகு அது போலவே செயலாவதும்...' எவ்வாளவு மகிழ்ச்சியான அமைவு.

ஆனால், இந்த அமைவு ஒருவரின் ஜாதகத்தில் அமையும் 'ஸ்தானங்களுக்கு ஏற்பவும்'... 'அவரவரின் கர்ம வினைகளுக்கு ஏற்பவுமே'... இந்த யோகத்தை ஜாதகர்கள் அனுபவிப்பர்.

உதாரணமாக... 'மேஷ லக்னத்தில்' பிறந்த ஒருவருக்கு... 'சந்திர- செவ்வாய் பகவான்களின் இணைவு'... 5 ஆமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமைவதாகக் கொள்வோம். 'பழம் நழுவிப் பாலிலும்... அதுவும் நழுவி வாயிலும் விழுந்ததைப் போல...' இந்த அமைவைப் பெற்ற ஜாதகர்... பெயரும், புகழும் பெற்ற குடும்பத்தில் ஒரு வாரிசாகப் பிறப்பார். 'Baby born with Silver Spoon'... என்று இவரது வாழ்வை வருணிக்கலாம். தந்தையின் புகழே... இவரது வாழ்வை நடத்திக் கொண்டு போகும். பின், இவரது எண்ணங்கள் ஈடேற இவருக்கு ஏது தடை...!  தந்தையைப் போலவே... இவரும் ஒரு பிரபலமான நிலையை அடைவார். அவரையும் கடந்து இவர் புகழ் பெறுவார்.

இதே அமைவு... இந்த 'மேஷ லக்னத்தில்' பிறந்தவருக்கு... 11 ஆமிடமான 'பாதக ஸ்தானத்தில்' அமைவதாகக் கொள்வோம். இந்த 'சந்திர மங்கள யோகமே' இவரை அதள பாதாளத்தில் தள்ளி விடும்.

மேற்கூறிய... அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக இருந்த, இவரது வாழ்வு... இவரின்  பொறுப்பேற்பிற்குப் பின்... பெரும் சரிவை நொக்கிச் செல்லும். இவரின் எண்ணங்கள் எல்லாம் மறைமுகமான... திரை மறைவான...  அதர்மத்தை நோக்கி நகர வாய்ப்பு கூடிவருமாதலால்... அவையாவும் இவருக்கு எதிராகி... புகழ்ச்சியிலிருக்கும் இவரை... இவரின் செயல் பாடுகளாலும்... பிடிவாதத்தினாலும்... கீழ் நிலைக்கு தள்ளி விடும் அளவிற்கான அபாயம் நிறைந்ததாகிவிடும்.

இதைப் போலவே...ஏனைய யோகங்களையும்... இறைவனின் அருளோடு... ஆய்வதற்கு முற்படுவோம்...

ஸாய்ராம்.


Tuesday, November 12, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 34. 'யோகங்களும் அதை வழி நடத்தும் பூர்வ வினைகளும்' - 'குரு-மங்கள யோகம்'




'யோகங்கள்'... ஜோதிடக் கலையின் வல்லுனர்களுக்கும்... ஆர்வலர்களுக்கும்... பயனாளர்களுக்கும்... மிகவும் பிடித்தமான ஒரு அங்கம்.

இந்த 'யோகங்களின் அமைவு'... ஜாதகரின் வாழ்வில்... அவரவர்களின் கர்ம வினைகளுக்கு உட்பட்டு... எவ்வாறு பயனளிக்கப் போகிறது...? என்பதைத்தான் இந்தத் தொடரில் ஆய்வதிற்கு முற்படுகிறோம்... இறைவனின் அருளோடு...

'குரு மங்கள யோகம்' (குரு - செவ்வாய் பகவான்களின் இணைவு)

'குரு பகவான்'... மங்களன் என்ற, 'செவ்வாய் பகவானுடன்' ஒன்றாக இணையும் போதும்... ஒருவருக்கு ஒருவர்... சம-சப்தமமாக அமையும் போதும்... இந்த 'குரு மங்கள யோகம்' அதன் பூரணத்துவத்தை அடைகிறது.

'குரு பகவான்'... ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். அவர் தனக்காரகனாகவும்... பூர்வ புண்ணியக்காரராகவும்... தனது பங்கை, இந்த ஜோதிடக் கலையில் ஏற்றுக் கொள்கிறார்.

ஞானத்தையும்... தர்மத்தையும்... அடிப்படையாகக் கொண்டு... அவரளிக்கும் அருளுக்கு பாத்திரமாகாத ஜீவர்களே... இவ்வுலகத்தில் இல்லையெனலாம்.

'செவ்வாய் பகவான்'... பூமிக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். சகோதரக்காரராகவும்... தைர்யத்தின் காரகத்துவத்துக்கும்... பொறுப்பேற்று... இவரின் பங்கை ஜோதிடக் கலைக்கு அளிக்கிறார்.

இவரின் மகத்துவமே... இவர் அளிக்கும் ஆற்றலில்தான் அடங்கியிருக்கிறது. ஆற்றலுக்குச் சொந்தக்காரரான இவர்... ஒழுங்கு... கட்டுப்பாடு... நிர்வாக மேலாண்மை... சீருடைப்பணி என்று... ஜீவர்களின் ஆற்றல்களை, ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வரும் பணியை ஜோதிடக் கலைக்கு அளிக்கிறார்.

இந்த 'ஞானக்காரகனும் - ஆற்றல் காரகனும்' இணையும் போது...

'ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்தை' தன்னுள் வைத்திருக்கும் பரமாத்ம சொரூபத்திலிருந்து... வெளிப்பட்டிருக்கும் இந்த ஜீவன்... அதன் 'கர்ம வினைகள் வெளிப்படுத்தும்... வினைகளின் ஆற்றலை, 'செவ்வாய் பகவானின்' மூலமாகவே வெளிப்படுத்துகிறது.

 இந்த செவ்வாய் பகவானுடன்... ஞான சொரூபமான... 'குரு பகவான்' இணையும் போது...

... இந்த ஆற்றலின் வெளிப்பாடுகளால்... ஜீவன் அடையும் இன்ப-துன்பங்களின் அனுபவங்களை... அனுபவப் பாடங்களாக மாற்றி... படிபடியாக... ஜீவனை உறுதிப்படுத்தி... ஞானத்தின் வழியே அழைத்துச் செல்லும்... பணியையே...இந்த 'குரு-செவ்வாய் இணைவுகள்' அமைத்துக் கொடுக்கிறது.

மேலும்... உலக வாழ்வில்... எவ்வாறு... ஒரு தீபத்தின் ஒளியை... ஒரு பூதக் கண்ணாடி... ஒருமைப்படுத்தி... ஒற்றை ஒளிக் கீற்றாக்குகிறதோ...! அது போல, இந்த ஜீவனின் ஆற்றலை... ஒழுங்குபடுத்தி, அதன் கடமைகளில் கொண்டு செலுத்தி... நேர்மையான... ஒழுங்கான... சீரான வாழ்வை மேற்கொள்ள அந்த ஜீவனுக்கு அருள் செய்கிறது.

இந்த அமைவு ஏற்படும் ஸ்தானங்களைப் பொருத்து... அவை விளைவிக்கும் கர்ம வினைகளின் விளைவுகளுக்கேற்ப... இந்த யோகத்தின் பலனை... ஜாதகர் அனுபவிப்பர்.

உதாரணமாக... 'கடக லக்னத்தில்' பிறந்திருக்கும் ஒரு ஜாதகருக்கு... இந்த 'குரு மங்கள யோகம்'... 10 ஆமிடமான... ஜீவனம் என்ற கர்ம ஸ்தானத்தில் அமைவதாக வைத்துக் கொள்வோம். நிறைந்த பூர்வத்தில் பிறந்திருப்பவரான இந்த ஜாதகர், தர்மத்துடன் வாழும் குடும்பப் பின்னனியில்... நன்கு படித்து... தனது பூர்வமான தொழிலிலேயே ஈடுபட்டிருப்பார். அதை தர்மத்துடனும்... ஒழுங்குடனும்... சிறந்த மேலாண்மையுடன் நிர்வகித்து வருவார். சிறுவயது முதல்... தனது வாழ்வு முழுவதும் அனைத்து பாக்கியங்களையும் அனுபவிப்பார். தனது குடும்பத்தின் பாரம்பரியத்தையும்... பெருமையையும்... பல மடங்குகளாகப் பெருக்கி... அதைச் சிந்தாது, சிதறாது தனது தலைமுறையினர் அனுபவிப்பதற்கு... விட்டுச் செல்வார். குலம்-குடி-குடும்பம் என்ற பெருமையை நிலைநாட்டும் மனிதராக இவரின் வாழ்வு மலரும்.

அதுவே... இந்த ஜாதகர்... 'கடக லக்னத்தில்' பிறந்து, இந்த 'குருமங்கள யோக இணைவு'... 11 ஆமிடமான 'பாதகஸ்தானத்தில்'  அமைவதாக வைத்துக் கொள்வோம். மேலே குறிப்பிட்ட அனைத்து அமைப்புகளுடன் பிறந்த இந்த ஜாதகர்... குடும்பத்தின் பொறுப்புகளை... ஏற்றுக் கொள்ளும் போது... 'தர்ம சிதனைகளிலிருந்து' விலகி... 'உலக லாப சிந்தனைகளில்' மூழ்கி... லாபம் ஒன்றையே முக்கியமாகக் கருதுவதும்... தனதும், தனது குடும்பத்தின் சுக வாழ்வு மட்டுமே முக்கியம் என்பதைக் கருதுவதுமாக... உலக வாழ்வின், சுக-போகங்களில் மூழ்கிவிடுவார். அதனால்... தர்மத்திலிருந்து விலகி... தனது வாழ்வை மட்டுமல்ல... தனது பூர்வத்தையும் அதன் பெருமையையும்... வரும் சந்ததியினரின் சுக வாழ்வையும் இழந்துவிடுவதற்கு இவரே காரணமும் ஆகிவிடுவார்.

இதைப் போல...ஏனைய யோகங்களையும் ஆய்வதர்கு முற்படுவோம்.... ஒவ்வொன்றாக... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.


Sunday, November 10, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 33. 'யோகங்களும் அதை வழி நடத்தும் பூர்வ வினைகளும்' - 'குரு-சந்திர யோகம்'




'யோகங்கள்'... ஜோதிடக் கலையின் வல்லுனர்களுக்கும், ஆர்வலர்களுக்கும், பயனாளர்களுக்கும்... மிகவும் பிடித்தமான ஒரு அங்கம்.

இந்த 'யோகங்களின் அமைவு'... ஜாதகர்களின் வாழ்வில்... அவரவர்களின் கர்ம வினைகளுக்கு உட்பட்டு... எவ்வாறு பயனளிக்கப் போகிறது...? என்பதைத்தான் இந்தத் தொடரில் ஆய்வதற்கு முற்படுகிறோம்.இறைவனின் அருளோடு...


'குரு-சந்திர யோகம்' :

இந்த யோகத்தை... 'குரு சந்திர யோகம்' என்றும், 'கஜ கேசரி யோகம்' என்றும் குறிப்பிடும் வழக்கம் ஜோதிடக் கலையில் உள்ளது.

பொதுவாக... 'சந்திர பகவானுக்குக்' கேந்திரங்களில் ( லக்னம்-சுகம்-களத்திரம்-ஜீவன்ம என்ற 1-4-7-10) 'குரு பகவான்' அமைவதைக் குறிப்பிட்டாலும்...

'சந்திர பகவானுடன், குரு பகவான்' இணையும் போதும், 'சந்திர பகவானுக்கு' நேரெதிரில்... சம-சப்தம ஸ்தானத்தில் அமையும் போதும்... இந்த யோகத்தின் அமைவு பூரணம் பெறுவதை... அனுபவத்தில் உணரலாம்.

கர்ம வினைகள் என்ற பூர்வ வினைகள், எண்ணங்களாக உற்பத்தியாவது... மனத்தில்தான். இந்த பூர்வ வினைகளுக்கு ஏற்ப, உருவாகும் எண்ணங்களைத்தான்...'சந்திர பகவான்' பிரதிபலிக்கிறார். அதனால்தான் இவரை 'மனோகாரகன்' என்று அழைக்கிறோம்.

பூர்வ வினைகள் உருவாக்கும் எண்ணங்களை... அதனதன் தகுதிக்கேற்ப... தக்க 'ஞானத்துடன்' அணுகும் பக்குவத்தை அளிக்கும் பணியைத்தான்... 'குரு பகவான்' அருள்கிறார். அதனால்தான் இவரை 'ஞானக்காரகன்' என்று அழைக்கிறோம்.

இந்த 'மனோகாரகனும் - ஞானக்காரகனும்' இணையும் போது... அந்த ஜாதகர். தனது வாழ்வில்... 'விளையும் அல்லது எதிர்கொள்ளும்' வினைகளை ஞானத்துடன் அணுகுவார். அதனால்... அந்த வினைகள் ஏற்படுத்தும் விளைவுகளான இன்ப - துன்பங்களால்... இவர் பாதிக்கப்படுவதில்லை. எதையும் எதிர் கொள்ளும் பக்குவத்தை இவர் அடைவார்.

இந்த அமைவு ஏற்படும் ஸ்தானங்களைப் பொருத்து... அவை விளைவிக்கும் கர்ம வினைகளின் விளவிகளுக்கேற்ப... இந்த யோகத்தின் பலனை... ஜாதகர்கள் அனுபவிப்பர்.

உதாரணமாக, 'விருச்சிக லக்னத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு... 'குரு-சந்திர பகவான்களின் இணைவு'... 5 ஆமிடமான, 'பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்' அமைவதாக வைத்துக் கொள்வோம். இந்த ஜாதகர், வழி வழியாக தளைத்தோங்கும் குடும்பத்தில் பிறந்தவராகவும்... நிறைவான குடும்பத்தில், வசதியான, சுகமான வாழ்வை அனுபவிப்பராகவும்... எந்த செயல்களையும் தர்மத்துடன் அணுகுபவராகவும்... 'தொட்டதெல்லாம் துலங்கும்' என்ற நிலையில் வாழ்பவராகவும் இருப்பார்.

அதுவே... 'விருச்சிக லக்னத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு... இந்த இணைவு... 6 ஆமிடமான 'ருண-ரோக-சத்ரு ஸ்தானத்தில்' அமைவதாகக் கொள்வோம். இந்த ஜாதகர், தனது 'எதிர் வினைகளின்' விளைவுகளால்... மேற்சொன்ன அனைத்து 'பாக்கியங்களையும்'  இழப்பது மட்டுமல்ல... தான் மேற்கொள்ளும் அல்லது எதிர்கொள்ளும் வினைகளின் விளவுகளால்... தனது பூர்வீகச் சொத்துக்களை இழப்பதும்... பூர்வீகத்தை விட்டு விலகிச் செல்வதும்... மறைந்து வாழும்... துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப் படுவதுமாக இருப்பார். ஆனால்... ஒரு நிலையிலும் நேர்மை தவறாமல் இருப்பார். அந்த நேர்மைக்கும் தர்மத்துக்காகவும்தான்... தன்னுடையது அனைத்தையும் இழந்தாலும்... தர்மம் வழுவாது வாழ்வார். 'கெட்டாலும் மேன்மக்கள்... மேன்மக்களே...!' என்ற சொல்லுக்கு ஏற்றற்போல் இவர்கள் வாழ்வு அமையும்.

இதைப் போல... ஏனைய யோகங்களையும் ஆய்வதற்கு முற்படுவோம். ஒவ்வொன்றாக... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

Saturday, November 9, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 32. 'யோகங்களும் அதை வழி நடத்தும் பூர்வ வினைகளும்' - 'புதாத்திய யோகம்'

யோகங்கள்... ஜோதிடக் கலையின் வல்லுனர்களுக்கும், ஆர்வலர்களுக்கும், பயனாளர்களுக்கும்... மிகவும் பிடித்தமான ஒரு அங்கம்.

தனது ஜாதகத்தில் யோகங்கள் ஏதும் அமைந்துள்ளதா...? என்ற கேள்வி எல்லா ஜாதகர்களுக்கும் எழுவது இயற்கைதான். அதற்கு முன், யோகம் என்றால் என்ன என்பதை... சற்று ஆய்வோம்.

ஒவ்வொரு ஜீவனுடைய வாழ்வும் இரகசியமானது. அந்த ஜீவனின் 'பூர்வ புண்ணிய வினைகளின் விளைவுகளை' அனுபவிப்பதற்காகவே... பிறவியை அடைகிறது. அந்த இரகசியத்தை... அந்த ஜீவனுக்கே... அடுத்தடுத்து மலரும் நொடிகளில்தான்... மலர வைக்கிறான்... படைப்பாளன்.

அந்த வாழ்க்கை இரகசியத்தை... பிரபஞ்சத்தில் உலவி வரும் கிரகங்களின் மூலமாக அறிந்து கொள்ளும் ஞானம்தான்.. ஜோதிடக் கலை. அவ்வாறு அமையும், 'கிரகங்களின் இணைவைத்தான்'... 'யோகம்' என்று கூறுகிறோம்.

இந்த 'யோகங்களின் அமைவு' ஜாதகரின் வாழ்வில்... அவரவர்களின் கர்ம வினைகளுக்கு உட்பட்டு... எவ்வாறு பயனளிக்கப் போகிறது...? என்பதைத்தான் இந்தத் தொடரில் ஆய்வதற்கு முற்படுகிறோம்... இறைவனின் அருளோடு...

'புதாத்திய யோகம்' :

அறிவுக்கும், புத்திக்கும் காரகத்துவம் வகிக்கும் 'புத பகவான்'... அங்கீகாரத்தை அளிக்கும் 'சூரிய பகவானுடன்' இணைந்திருப்பதே...'புதாத்திய யோகம்'.

இந்த யோகத்தை பெற்றிருக்கும் ஜீவனுக்கு... இந்தப் பிறவியில் அறிவும்... புத்தியும்... அதை பயன் படுத்தத் தேவையான அங்கீகாரமும் கிடைக்கும்... என்பதுதான், இந்த யோகம் அளிக்கும் பலன்.

ஆனால், இந்த யோகம் அமைந்த எல்லோருக்குமே... இதன் பூரண அனுபவம் கிடைத்துவிடுவதில்லை. அவரவர்களின் 'பூர்வ வினைகளுக்கு' ஏற்பவே இந்த அனுபவம் கிடைக்கிறது. இதை... அந்தந்த 'ஜாதகத்தில்' இந்த இணைவு அமைந்திருக்கும் நிலையைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

உதாரணமாக... 'தனுர் லக்னத்தில்' பிறந்திருக்கும் ஜாதகருக்கு... 'சூரிய - புத பகவான்கள்' இணைந்து... பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆமிடத்தில் அமைந்திருப்பதாகக் கொள்வோம். இந்த ஜாதகர் சிறந்த கல்விமானாக இருப்பார். தனது துறையில்... உயர் பட்டப் படிப்பை முடித்திருப்பார். அந்தத் துறையிலேயே... அரசு மற்றும் அரசு சார்ந்த துறையில்... உயர்  பதவியையும்  அடைவார். அறிவு சார்ந்த நிலையில்தான் இவரது வாழ்க்கைப் பயணம் அமையும்.

அதுவே... 'தனுர் லக்னத்தில்' பிறந்து... இந்த 'சூரிய-புத பகவான்களின்' இணைவு... 3 ஆமிடத்தில் அமைவதாகக் கொள்வோம். இந்த இடத்தில் 'மறைவைப்' பெறும் இந்த யோக அமைவு... ஜாதகருக்கு 'நிறைந்த கல்வி' என்ற அறிவுடன், புத்தியும் கூடியதுமான... நுட்பமான 'கலை' சார்ந்த கல்வி அனுபவத்தைக் கொடுப்பதாக இருக்கும். அந்தக் கலையில் நிபுணத்துதவத்தையும்... அதன் முலமாக ஜீவனத்தையும் அளிக்கும். ஆனால்... அதன் அங்கீகாரத்திற்காக போராட வேண்டியிருக்கும்.

இதைப் போல... ஏனைய யோகங்களையும் ஆய்வதற்கு முற்படுவோம்... ஒவ்வொன்றாக... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.



Friday, November 8, 2019

'தவறுகளும், தண்டணைகளும்' - சூட்சும இரகசியம் :

'தவறுகளும், தண்டனைகளும்' - சூட்சும இரகசியம் :





சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ராஜா ஒருவன்... தன்னை விமரிசிப்பவர் எவராக இருந்தாலும்... விமரிசனத்தின் தன்மையைக் கூட ஆராயாமல் உடனடியாக தணடனை வழங்கிவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.

அவனது தண்டனையும் வினோதமானதாகத்தான் இருந்தது. தனது கையில் வைத்திருக்கும் சவுக்கைக் கொண்டு... தான் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் இருந்து எழுந்து நின்று... தனது கோபம் தீரும் வரையில் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்துவதாக இருந்தது.

இந்தத் தண்டனையால்... எண்ணற்ற நல்லெண்ணம் கொண்டோரும் பாதிப்புக்கு உள்ளாயினர். அமைச்சர்கள் அடங்கிய அரசவையினரும்... இது விடயமாக ராஜாவிடம் ஏதும் பேச முடியாது தவித்தனர்.

காலம் கடந்தது... ஒரு நாள் ராஜாவின் வாழ்வும் முடிந்து போனது. நிம்மதியடைந்த மக்களும்... இராஜ்ஜியத்தினரும் இறுதி கிரியைகளுக்காக ராஜாவின் உடலை மயான பூமிக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். கிரியைகள் அனைத்தும் நடந்து... இறுதியாக அக்னியும் மூட்டப்பட்டது. அனைவரும் மயான பூமிய விட்டு வெளியேறினர். இடுகாட்டை ஆளும்... காவலன் மட்டுமே... எரிந்து கொண்டிருக்கும் ராஜாவின் உடலுக்குக் காவலாக நின்று கொண்டிருந்தான்.

எரிந்து கொண்டிருந்த ராஜாவின் உடல்...வழக்கமாக அவன் உயிருடன் இருக்கும் போது... தண்டனையளிப்பதற்கு எழுந்து நிற்பதைப் போல... எழுந்து, எழுந்து... நின்றது. இது வழக்கத்திற்கு மாறாக இருக்கிறதே... என்று எண்ணிய காவலன்... ஒவ்வொரு முறை எழும்போதும்... தனது கையில் வைத்திருக்கும் எரியூட்டும் கம்பினால் அடித்து, அடித்து படுக்க வைத்தான்.

இந்தக் கதையைக் கூறிய... அடியவனின் 'சத்குரு', ' பார்த்தாயா, அப்பா...! அவன் உயிருடன் இருக்கும் போது, செய்த தவறுகளுக்கு... இப்போது தண்டனை கிடைத்துக் கொண்டிருக்கிறது...! என்ன...! அவன் அன்று செய்த தவறுகளை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர்...! இன்று... அவன் அடையும் தண்டனையை பார்ப்பதற்கு ஆளில்லை. பொதுவில் அவன் செய்த தவறுகளுக்கு... தனியேதான் அவன்  தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அவனுக்குத் தண்டனை கொடுக்கும்... காவலனோ... தனது கடமையைத்தானே செய்கிறானப்பா...! புரிந்து கொள்... இதுதான் 'தவறுக்கும் - தண்டனைகளுக்கும்' இடையேயான 'சூட்சும இரகசியம்'...' என்றார்.

ஸாய்ராம்.

Tuesday, November 5, 2019

கவிஞர் கண்ணதாசன் - ஒரு பார்வை - பகுதி 4 :

கவிஞர் கண்ணதாஸன் - ஒரு பார்வை - பகுதி 3.




'படித்தால் மட்டும் போதுமா...?' இது அந்த திரைப்படத்திற்கான பெயர் மட்டுமல்ல... நன்கு படித்த, அழகான ஒரு பெண்ணிடம் கேட்கும் கேள்வியாகவும் மலரும்...

நன்கு படித்த... அழகான... செல்வ செழிப்பில் வளர்ந்த பெண் ஒருவர்... சூழ்நிலையின் சூழ்ச்சியால்... தான் விரும்பிய மணமகனை மணக்க முடியாமல்... அவரின் சகோதரனை மணக்க நேரிடுகிறது.

சகோதரனோ... அதிகம் படிக்காதவர். உலக நாகரீகத்திற்கு அனுபவப்படாதவர். தனது மனதில் படுவதைப் பேசுபவர். வேட்டையாடுவதில் பிரியமுள்ளவர். மிருகங்களின் குணாதிசியங்களை ரசிக்கத் தெரிந்தவர். ஆனால்... மனிதர்களின் உணர்வுகளுக்கு... அதிலும் பெண்களின் மென்மையான உணர்வுகளுக்கு அனுபவமில்லாதவர்.

தன்னை விரும்பித்தான்... அந்தப் பெண் தன்னை மணம் புரிகிறார்... என்று நினைத்தவர்க்கு... மண வாழ்வில் அதிர்ச்சிதான் காத்திருந்தது. அவரை, அந்தப் பெண் முற்றிலுமாக வெறுத்து ஒதுக்குகிறாள். குடும்பத்தினருக்கும்... சமூகத்தின் பார்வைக்கும்  மனைவியுடன் வலம் வரும் இவர்... தனிமையில் மனம் குமைந்து துடிக்கிறார்... இந்த சூழலுக்குத்தான்... இந்தப் பாடலை வடிக்கிறார்... கவிஞர்.

'பாடல்' என்பது, அந்த சூழலில், காட்சிகளாலும்... வசனங்களிலாலும்... நடிப்பினாலும்... வெளிக்காட்ட முடியாத...  பாத்திரத்தின் 'மனநிலையை' வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு. அதை எவ்வாறு, கவிஞர் தனது எளிய வார்த்தைகளைக் கொண்டு... உயரிய உதாரணங்களோடு... பாடலாக வரிக்கிறார்... பாருங்கள்...!

முதல் வரிகளில், தன்னை... ஒரு சாதரண மனிதன் என்றும்... தனக்கும் உணர்வுகள் உண்டு என்பதையும் வெளிப்படுத்த...

'நான் கவிஞனும் இல்லை...
நல்ல ரசிகனும் இல்லை...
காதலெனும் ஆசையில்லா, பொம்மையுமில்லை...!

இரவு நேரம் பிறரைப் போல... 
என்னையும் கொல்லும்...
துணை இருந்தும்... இல்லை... என்று போனால்...
ஊரென்ன சொல்லும்...?...'

...என்று கேட்கும் போதும்...

தொடரும் வரிகளில்... காடுகளில் சுலபமாக வேட்டையாடும் தனக்கு... வீட்டில் அமைந்த துணையின் மனதைத் தொடமுடியவில்லையே...! என்று ஏங்குவதும்... தனக்கும், தன் மனைவிக்கும் இருக்கும் நிலையையும்... அதனை வெளிப்படுத்த முடியாது... ஒரு கூட்டுக் குடும்பத்தில் இருந்து... தவிக்கும் நிலையையும்... கவிஞரையன்றி வேறொருவரால்... இவ்வளவு நயத்துடன் வெளிப்படுத்தியிருக்க முடியாது...!

'...காட்டு மானை வேட்டையாட தயங்கவில்லையே...
இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே...

கூட்டு வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை புரியவில்லையே...
நான்... கொண்டு வந்த பெண் மனதில் பெண்மையில்லையே...!'

என்று... கதாநாயகன் பாடும் போது...

கவிஞரின் கவிநயத்துடன்... கதாநாயகனின் நடிப்பும்... கதாநாயகியின் முக வெளிப்பாடுகளும்... இழைந்தோடும் இசையும்... இந்த காலத்தால் மறக்க முடியாத பாடலை... இன்றும் ரசிக்க வைக்கிறது... அந்த பாதிப்பில் இருக்கும் எண்ணற்ற மனங்களின் புரிதலுக்கும்... மாற்றங்களுக்கும் வழியும் வகுக்கிறது.

ஸாய்ராம்.






ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...