Tuesday, November 5, 2019

கவிஞர் கண்ணதாசன் - ஒரு பார்வை - பகுதி 4 :

கவிஞர் கண்ணதாஸன் - ஒரு பார்வை - பகுதி 3.




'படித்தால் மட்டும் போதுமா...?' இது அந்த திரைப்படத்திற்கான பெயர் மட்டுமல்ல... நன்கு படித்த, அழகான ஒரு பெண்ணிடம் கேட்கும் கேள்வியாகவும் மலரும்...

நன்கு படித்த... அழகான... செல்வ செழிப்பில் வளர்ந்த பெண் ஒருவர்... சூழ்நிலையின் சூழ்ச்சியால்... தான் விரும்பிய மணமகனை மணக்க முடியாமல்... அவரின் சகோதரனை மணக்க நேரிடுகிறது.

சகோதரனோ... அதிகம் படிக்காதவர். உலக நாகரீகத்திற்கு அனுபவப்படாதவர். தனது மனதில் படுவதைப் பேசுபவர். வேட்டையாடுவதில் பிரியமுள்ளவர். மிருகங்களின் குணாதிசியங்களை ரசிக்கத் தெரிந்தவர். ஆனால்... மனிதர்களின் உணர்வுகளுக்கு... அதிலும் பெண்களின் மென்மையான உணர்வுகளுக்கு அனுபவமில்லாதவர்.

தன்னை விரும்பித்தான்... அந்தப் பெண் தன்னை மணம் புரிகிறார்... என்று நினைத்தவர்க்கு... மண வாழ்வில் அதிர்ச்சிதான் காத்திருந்தது. அவரை, அந்தப் பெண் முற்றிலுமாக வெறுத்து ஒதுக்குகிறாள். குடும்பத்தினருக்கும்... சமூகத்தின் பார்வைக்கும்  மனைவியுடன் வலம் வரும் இவர்... தனிமையில் மனம் குமைந்து துடிக்கிறார்... இந்த சூழலுக்குத்தான்... இந்தப் பாடலை வடிக்கிறார்... கவிஞர்.

'பாடல்' என்பது, அந்த சூழலில், காட்சிகளாலும்... வசனங்களிலாலும்... நடிப்பினாலும்... வெளிக்காட்ட முடியாத...  பாத்திரத்தின் 'மனநிலையை' வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு. அதை எவ்வாறு, கவிஞர் தனது எளிய வார்த்தைகளைக் கொண்டு... உயரிய உதாரணங்களோடு... பாடலாக வரிக்கிறார்... பாருங்கள்...!

முதல் வரிகளில், தன்னை... ஒரு சாதரண மனிதன் என்றும்... தனக்கும் உணர்வுகள் உண்டு என்பதையும் வெளிப்படுத்த...

'நான் கவிஞனும் இல்லை...
நல்ல ரசிகனும் இல்லை...
காதலெனும் ஆசையில்லா, பொம்மையுமில்லை...!

இரவு நேரம் பிறரைப் போல... 
என்னையும் கொல்லும்...
துணை இருந்தும்... இல்லை... என்று போனால்...
ஊரென்ன சொல்லும்...?...'

...என்று கேட்கும் போதும்...

தொடரும் வரிகளில்... காடுகளில் சுலபமாக வேட்டையாடும் தனக்கு... வீட்டில் அமைந்த துணையின் மனதைத் தொடமுடியவில்லையே...! என்று ஏங்குவதும்... தனக்கும், தன் மனைவிக்கும் இருக்கும் நிலையையும்... அதனை வெளிப்படுத்த முடியாது... ஒரு கூட்டுக் குடும்பத்தில் இருந்து... தவிக்கும் நிலையையும்... கவிஞரையன்றி வேறொருவரால்... இவ்வளவு நயத்துடன் வெளிப்படுத்தியிருக்க முடியாது...!

'...காட்டு மானை வேட்டையாட தயங்கவில்லையே...
இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே...

கூட்டு வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை புரியவில்லையே...
நான்... கொண்டு வந்த பெண் மனதில் பெண்மையில்லையே...!'

என்று... கதாநாயகன் பாடும் போது...

கவிஞரின் கவிநயத்துடன்... கதாநாயகனின் நடிப்பும்... கதாநாயகியின் முக வெளிப்பாடுகளும்... இழைந்தோடும் இசையும்... இந்த காலத்தால் மறக்க முடியாத பாடலை... இன்றும் ரசிக்க வைக்கிறது... அந்த பாதிப்பில் இருக்கும் எண்ணற்ற மனங்களின் புரிதலுக்கும்... மாற்றங்களுக்கும் வழியும் வகுக்கிறது.

ஸாய்ராம்.






No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...