Sunday, November 24, 2019

மனித வாழ்வினைப் பூரணப்படுத்தும், 'பக்தியும்... கர்மமும்...ஞானமும்' : பகுதி 1:





'அரிது... அரிது... மானிடராய்ப் பிறத்தல் அரிது...!'

வேதங்கள், பிறவிகளின் எண்ணிக்கையை 84 லட்சங்கள் என்று வகைப்படுத்துகிறது. இந்த பிறவிகளிலேயே... மனிதப் பிறவிக்கு மட்டும்... 'ஒரு விசேஷ அந்தஸ்த்தை' அளித்திருக்கிறார்... படைப்பாளர்.

ஏனைய பிறவிகளின் வாழ்வு, அவைகளின் 'கர்ம வினைகள் விளைவிக்கும் விளைவுகளுக்கு' ஏற்ப அமைகிறது. அதில், ஒரு சிறு நிகழ்வைக் கூட மாற்றுவதற்கு... அவை முயற்சிப்பதில்லை. அந்தப் பிரயத்தனத்தை எடுப்பதற்கான... 'வாய்ப்பை' இறைவன், அவற்றிற்கு வழங்கவில்லை. அதனால், அவைகள் தமது வாழ்வின் நிகழ்வுகளில்... சில நேரங்களில்
பங்காளாரகவும்...  சில நேரங்களில் பார்வையாளராகவும்  இருந்து கடந்து போகின்றன.

மனிதப் பிறவிக்கு மட்டும் அந்த விசேஷ அந்தஸ்த்தை... 'சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் வாய்ப்பை' வழங்கியிருக்கிறார் படைப்பாளர். மனிதனும், பிற உயிரினங்களைப் போல, 'கர்ம வினைகளின் விளைவுகளை' அனுபவிப்பதற்காகத்தான் பிறவியை எடுக்கிறான். ஆனால். அந்த விளைவுகளின்... ஒவ்வொரு நிகழ்வும் நிகழும் போது... அதில், அவனுக்கு 'தலையிடும்' அல்லது 'தலையிடாது செல்வதற்கான'  வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

உதாரணமாக... 'ஒரு சிறுவன், கடும் பசியோடு... ஒரு தேநீர் கடைக்கு முன் நிற்கிறான். அவனுக்கு முன்னால், ரொட்டிகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. தேநீர் கடைக்காரர், தனது பார்வையை உள்ளே திருப்புகிறார்...' இதுதான் காட்சி.

இந்தக் காட்சியின் இறுதியில் நடக்கப் போவதை... இரண்டு வெவ்வேறு கோணங்களில் அணுகலாம். அவை...சிறுவனுக்கு இரண்டு வாய்ப்புகளை வழங்குகிறது.

வாய்ப்பு 1 :

சிறுவனின் மனதில்... கடைக்காரரின் பார்வை திரும்புவதற்கு முன்... ஒரு ரொட்டியை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம்... என்ற எண்ணம் தோன்றுவது. அது தோன்றிய மறு கணம்... அவன் ரொட்டியை எடுக்க... கடைக்காரர் சப்தம் கேட்டுத் திரும்ப... சிறுவன் ஓட ஆரம்பிக்கிறான். அவனுக்குப் பின்னால்... 'திருடன்...! திருடன்...!!' என்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பிக்கின்றன. இந்த
திரைக்கதைக்குப் பெயர்...'திருடன்'.

வாய்ப்பு 2 :

சிறுவனின் மனதில்...  கடைக்காரர் திரும்பிய உடன்... அவரிடம் ஒரு ரொட்டியைக் கேட்டுப் பெறலாம்... என்ற எண்ணம் தோன்றுவது. இந்த எண்ணம் தோன்றிய மறு கணம்... தன்னை நோக்கித் திரும்பிய கடைக்காரரிடம்... 'அண்ணே...! எனக்குப் பசிக்குது. ஏதாவது ஒரு வேலை இருந்தா போட்டுக் கொடுங்கண்ணே...!' என்று சிறுவன் கேட்க... அவனின் கைகளில், ஒரு ரொட்டி... தேநீரோடு.  இந்த திரைக்கதைக்குப் பெயர்... 'தொழிலாளி'.

இந்த இரண்டு விதமான திரைகதைகளுக்கான மூலத்தையும்...அந்த சிறுவனின் 'பூரவ-கர்ம வினைகளின் தொகுப்பிலிருந்துதான்' இறைவன் எடுத்துக் கொள்கிறான். ஒன்றைப் 'பாபத்திலிருந்தும்' மற்றொன்றைப் புண்ணியத்திலிருந்தும்'.

இதுதான் இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கும் சிறப்புச் சலுகை... 'முடிவெடுப்பதற்கான வாய்ப்பு'.

இதைக் கொண்டு... மனிதன் உலக சுகங்களைத் தேடி... ஓடி... உழன்று... மீண்டும், மீண்டும் தன்னை பிறவிகளுக்கு உட்படுத்திக் கொள்ளலாம்.

அல்லது... மீண்டும் பிறவிகளுக்குள் செல்லாமல்... இந்த அரிய மனிதப் பிறவியைக் கொண்டு... மீண்டும் பிறவாது... இறைவனுடன் கலந்து நிரந்திர ஆனந்தத்தில் திளைக்கலாம்.

முதல் வாய்ப்பில், பந்தங்களுக்குள்ளும்... பற்றுகளுக்குள்ளும்... சிக்கித் தவிக்க வேண்டியிருக்கிறது.

இரண்டாவது வாய்ப்பில், பந்தங்களிலிருந்தும்... பற்றுகளுக்குள்ளுமிருந்து விடுவித்துக் கொள்ள முடிகிறது.

முதல் வாய்ப்பில்... மனிதனின் முயற்சி அனைத்தும், தனது சுகம்... நல்வாழ்வு... உறவுகள்... பொருள்கள் சார்ந்தே இருப்பதால்... கர்ம வினைகளின் சுமைகள் கூடிக் கொண்டே இருக்கும்.

இரண்டாவது வாய்ப்பில்... மனிதனின் முயற்சிகளுக்கு உறுதுணையாக... 'பக்தியும், கர்மமும், ஞானமும்... துணைக்கு வருவருவதால்'... இந்தப் பிறவியின் வாழ்வை மகிழ்வுடன் கடப்பது மட்டுமல்ல... மீண்டும் பிறப்பெடுக்காமல்... நிரந்தரமான ஆனந்தத்தில் திளைத்தும் விடுகிறான்.

தொடர்ந்து பயணிப்போம்... பக்தி... கர்மம்... ஞானம் இவற்றின் வழியே... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...