'யோகங்கள்'... ஜோதிடக் கலையின் வல்லுனர்களுக்கும்... ஆர்வலர்களுக்கும்... பயனாளர்களுக்கும்... மிகவும் பிடித்தமான ஒரு அங்கம்.
இந்த 'யோகங்களின் அமைவு'... ஜாதகரின் வாழ்வில்... அவரவர்களின் கர்ம வினைகளுக்கு உட்பட்டு... எவ்வாறு பயனளிக்கப் போகிறது...? என்பதைத்தான் இந்தத் தொடரில் ஆய்வதிற்கு முற்படுகிறோம்... இறைவனின் அருளோடு...
'குரு மங்கள யோகம்' (குரு - செவ்வாய் பகவான்களின் இணைவு)
'குரு பகவான்'... மங்களன் என்ற, 'செவ்வாய் பகவானுடன்' ஒன்றாக இணையும் போதும்... ஒருவருக்கு ஒருவர்... சம-சப்தமமாக அமையும் போதும்... இந்த 'குரு மங்கள யோகம்' அதன் பூரணத்துவத்தை அடைகிறது.
'குரு பகவான்'... ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். அவர் தனக்காரகனாகவும்... பூர்வ புண்ணியக்காரராகவும்... தனது பங்கை, இந்த ஜோதிடக் கலையில் ஏற்றுக் கொள்கிறார்.
ஞானத்தையும்... தர்மத்தையும்... அடிப்படையாகக் கொண்டு... அவரளிக்கும் அருளுக்கு பாத்திரமாகாத ஜீவர்களே... இவ்வுலகத்தில் இல்லையெனலாம்.
'செவ்வாய் பகவான்'... பூமிக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். சகோதரக்காரராகவும்... தைர்யத்தின் காரகத்துவத்துக்கும்... பொறுப்பேற்று... இவரின் பங்கை ஜோதிடக் கலைக்கு அளிக்கிறார்.
இவரின் மகத்துவமே... இவர் அளிக்கும் ஆற்றலில்தான் அடங்கியிருக்கிறது. ஆற்றலுக்குச் சொந்தக்காரரான இவர்... ஒழுங்கு... கட்டுப்பாடு... நிர்வாக மேலாண்மை... சீருடைப்பணி என்று... ஜீவர்களின் ஆற்றல்களை, ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வரும் பணியை ஜோதிடக் கலைக்கு அளிக்கிறார்.
இந்த 'ஞானக்காரகனும் - ஆற்றல் காரகனும்' இணையும் போது...
'ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்தை' தன்னுள் வைத்திருக்கும் பரமாத்ம சொரூபத்திலிருந்து... வெளிப்பட்டிருக்கும் இந்த ஜீவன்... அதன் 'கர்ம வினைகள் வெளிப்படுத்தும்... வினைகளின் ஆற்றலை, 'செவ்வாய் பகவானின்' மூலமாகவே வெளிப்படுத்துகிறது.
இந்த செவ்வாய் பகவானுடன்... ஞான சொரூபமான... 'குரு பகவான்' இணையும் போது...
... இந்த ஆற்றலின் வெளிப்பாடுகளால்... ஜீவன் அடையும் இன்ப-துன்பங்களின் அனுபவங்களை... அனுபவப் பாடங்களாக மாற்றி... படிபடியாக... ஜீவனை உறுதிப்படுத்தி... ஞானத்தின் வழியே அழைத்துச் செல்லும்... பணியையே...இந்த 'குரு-செவ்வாய் இணைவுகள்' அமைத்துக் கொடுக்கிறது.
மேலும்... உலக வாழ்வில்... எவ்வாறு... ஒரு தீபத்தின் ஒளியை... ஒரு பூதக் கண்ணாடி... ஒருமைப்படுத்தி... ஒற்றை ஒளிக் கீற்றாக்குகிறதோ...! அது போல, இந்த ஜீவனின் ஆற்றலை... ஒழுங்குபடுத்தி, அதன் கடமைகளில் கொண்டு செலுத்தி... நேர்மையான... ஒழுங்கான... சீரான வாழ்வை மேற்கொள்ள அந்த ஜீவனுக்கு அருள் செய்கிறது.
இந்த அமைவு ஏற்படும் ஸ்தானங்களைப் பொருத்து... அவை விளைவிக்கும் கர்ம வினைகளின் விளைவுகளுக்கேற்ப... இந்த யோகத்தின் பலனை... ஜாதகர் அனுபவிப்பர்.
உதாரணமாக... 'கடக லக்னத்தில்' பிறந்திருக்கும் ஒரு ஜாதகருக்கு... இந்த 'குரு மங்கள யோகம்'... 10 ஆமிடமான... ஜீவனம் என்ற கர்ம ஸ்தானத்தில் அமைவதாக வைத்துக் கொள்வோம். நிறைந்த பூர்வத்தில் பிறந்திருப்பவரான இந்த ஜாதகர், தர்மத்துடன் வாழும் குடும்பப் பின்னனியில்... நன்கு படித்து... தனது பூர்வமான தொழிலிலேயே ஈடுபட்டிருப்பார். அதை தர்மத்துடனும்... ஒழுங்குடனும்... சிறந்த மேலாண்மையுடன் நிர்வகித்து வருவார். சிறுவயது முதல்... தனது வாழ்வு முழுவதும் அனைத்து பாக்கியங்களையும் அனுபவிப்பார். தனது குடும்பத்தின் பாரம்பரியத்தையும்... பெருமையையும்... பல மடங்குகளாகப் பெருக்கி... அதைச் சிந்தாது, சிதறாது தனது தலைமுறையினர் அனுபவிப்பதற்கு... விட்டுச் செல்வார். குலம்-குடி-குடும்பம் என்ற பெருமையை நிலைநாட்டும் மனிதராக இவரின் வாழ்வு மலரும்.
அதுவே... இந்த ஜாதகர்... 'கடக லக்னத்தில்' பிறந்து, இந்த 'குருமங்கள யோக இணைவு'... 11 ஆமிடமான 'பாதகஸ்தானத்தில்' அமைவதாக வைத்துக் கொள்வோம். மேலே குறிப்பிட்ட அனைத்து அமைப்புகளுடன் பிறந்த இந்த ஜாதகர்... குடும்பத்தின் பொறுப்புகளை... ஏற்றுக் கொள்ளும் போது... 'தர்ம சிதனைகளிலிருந்து' விலகி... 'உலக லாப சிந்தனைகளில்' மூழ்கி... லாபம் ஒன்றையே முக்கியமாகக் கருதுவதும்... தனதும், தனது குடும்பத்தின் சுக வாழ்வு மட்டுமே முக்கியம் என்பதைக் கருதுவதுமாக... உலக வாழ்வின், சுக-போகங்களில் மூழ்கிவிடுவார். அதனால்... தர்மத்திலிருந்து விலகி... தனது வாழ்வை மட்டுமல்ல... தனது பூர்வத்தையும் அதன் பெருமையையும்... வரும் சந்ததியினரின் சுக வாழ்வையும் இழந்துவிடுவதற்கு இவரே காரணமும் ஆகிவிடுவார்.
இதைப் போல...ஏனைய யோகங்களையும் ஆய்வதர்கு முற்படுவோம்.... ஒவ்வொன்றாக... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment