Thursday, June 20, 2019

நதி மூலம்... ரிஷி மூலம்

நதி மூலம்... ரிஷி மூலம் :

எப்போதும் உள்ள ஒரு வழக்கமான மொழிதான்... 'நதி மூலமும்... ரிஷி மூலமும்... பார்க்கக் கூடாது...!' என்பது.

நதியின் உற்பத்தி... ஒரு மலைத் தொடரிலிருந்து நிகழ்கிறது.  அதன் பாதை மலையிலிருந்து ஆரம்பித்து... அதன் வழியே இறங்கி... பள்ளத்தாக்குகளில் பயணம் செய்து... காடுகள்... சமவெளிகள் என பயணித்து... உலகத்து ஜீவன்கள் அனைத்திற்கும் உணவாகி... இறுதியில் அதன் இலக்கான சாகரத்தில் சென்று சங்கமமாகிறது.

கடலில் சங்கமிக்கும் இடத்தில்... அந்த நதியின் பேரமைதியையும்... அதற்கு முன் அந்த நதியின் அகண்ட விரிவையும்... அதன் மீதமைந்த எண்ணற்ற பாலங்களையும்... பின்னோக்கிய சமவெளிகளில் அதன் ஆர்ப்பரிப்பையும்... காடுகளில் அதன் சளசளப்பையும்... மலையிலிருந்து இறங்கும் போது ஆர்ப்பரிப்புடனும் இறங்கும் நதியின் மூலம் அந்த மலைத் தொடரின் ஊடே... எவ்வாறு இருக்கும்...?

இந்தத் தேடுதல் நம்மை மலைகளின் ஊடே அழைத்துச் செல்லும். அது மெதுவாக உயர்ந்து... மலைஇடுக்குகளில் நம்மை அழைத்துச் சென்று... பாறைகளின் வழியைக் கடந்து... ஒரு 'சிறிய ஊற்றுக்கு' கொண்டு சேர்க்கும். அந்த ஊற்றிலிருந்து ... ஒரு சிறிய நீர் ஊற்று... தொடர்ந்து... ஊறிக் கொண்டு இருக்கும்.

அந்த நீர் ஊற்றை... பார்க்கும் போது... இந்த சிறிய ஊற்றா... இவ்வளவு நிகழ்வுகளையும்... நிகழ்த்தியிருக்கிறது...? என்ற ஆச்சரியமும்... இது நிஜமா...? என்ற சந்தேகமும் எழும். அதனால்தான்... நதி மூலத்தைப் பார்க்க வேண்டாம்... என்ற வழக்கம் எழுந்தது.



அது போலவேதான்... ஒரு ரிஷியின் மூலமும். நமக்கு முன் இருக்கும் ஒரு ரிஷியின் வாழ்வின் நிலையும்... நதியைப் போலவே... ஒரு சிறிய சூக்ஷுமத்திலிருந்துதான்... ஆரம்பித்திருக்கும்.

அது அவரின் பிறப்பின் ரகசியமாக இருக்கலாம். வளரும் பிராயத்தில் நிகழ்ந்த... ஒரு நிகழ்வின் மாற்றத்தால் இருக்கலாம். இறைவனின் இடைப்படல் அவரின் வாழ்வின் எந்த நிலையில் ஏற்பட்டது என்பதைப் பொருத்தும் இருக்கலாம்.

தற்போது நமக்கு முன் இருந்து... அருளும்... அந்த ரிஷி பகவானின் அருள் கருணையைப் பெற்றுக் கொள்வதே... புத்திசாலித்தனம். அதை விடுத்து அவரின் பூர்வத்தை நோக்கிப் பின்னோக்கி சென்றால்... நமக்கு மிஞ்சுவது... ஆச்சரியமாகவோ அல்லது சந்தேகமாகவோதான் இருக்கும்.



இந்த சூக்ஷுமத்தை உணர்ந்ததால்தான்... நதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் முழுப் பலனையும் அடந்து அனுபவிக்கலாம். அதைப் போலவே... ரிஷி பகவானின் முக்கியவத்தை உணர்ந்து... அவரின் வழிகாட்டுதல் படி நம் வாழ்வை அமைத்துக் கொண்டு... இறைவனின் இணையடி நிழலை அனுபவிக்கலாம்.

நதி மூலம்... ரிஷி மூலம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...