தனது குடும்பத்தின் நலனுக்காக... தனது வாழ்வையே அர்ப்பணித்த ஒருவன்... ஒரு நாள்... அனைத்தையும் இழந்து விட்டு... வீதிக்கு வந்து விட்டான்.
அது போலவே... தனது ஊருக்காக... தனது வாழ்வையே அர்ப்பணித்த ஒருவனும்... அனைத்தையும் இழந்து விட்டு... வீதிக்கு வந்து விட்டான்.
இந்த இருவரும்... ஊருக்கு வெளியே இருந்த, சத்திரம் ஒன்றில் தங்கியிருந்தனர். அவ்வழியே வந்த... ஞானி ஒருவர், அந்த சத்திரத்திற்கு அருகில் இருக்கும் மரத்தின் கீழ் ஓய்வெடுப்பதற்காக அமர்ந்தார். அவரிடம் சென்ற இந்த இருவரும்... தமது நிலைகளைக் கூறி... வருந்து அழுதனர். தாங்களும், அந்த ஞானியுடனேயே இருந்துவிடுவதாகக் கூற...
ஞானியோ... தமது வாழ்வு முறை, இவர்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்றும்... அது மிகவும் கடினமான, சோதனைகள் நிறைந்ததாக இருக்கும் என்றும்... அதில் பிரவேசம் செய்வதற்கு நிறைந்த வைராக்கியம் தேவை என்பதையும்... வலியுருத்தினார். இவர்களின் தொடர் வற்புறுத்தல்களுக்கும்... உறுதி மொழிகளுக்கும் இணங்கி, இவர்களைத் தனது பயணத்தில் இணைத்துக் கொண்டார்.
வெகு தூரம் நடந்த பின்... ஒரு ஊரின் எல்லையை இவர்கள் நெருங்கும் போது... ஒரு வீட்டிலிருந்து 'அழுகுரல்' ஒன்று கேட்டது. அதைக் கேட்ட உடன்... வீட்டிற்காக வாழ்வை அர்ப்பணித்து... வாழ்வை இழந்தவன்... 'சுவாமி...! அந்த அழு குரல் என்னை நோக்கித்தான் இருக்கிறது...! அவர்களுக்கு எனது உதவி தேவைப்படும் போல இருக்கிறது. நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்...!' என்று கூறி... குரல் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
இன்னும் கொஞ்சம் தூரம் சென்ற பின்... ஒரு ஊரே திரண்டு இவர்களை நோக்கி வந்தது. இதைக் கண்டதும்... கண் மலர்ந்த... உருக்கு உழைப்பவன்... 'சுவாமி...! இந்த ஊருக்கு எனது உதவி தேவைப்படும் போல் இருக்கிறது. நான் இந்த ஊரிலே தங்கி... இவர்களுக்கு உதவி செய்து விட்டு வருகிறேன்...!' என்று கூறி... கிராமத்தினரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
இந்தக் கதையை, என்னிடம் கூறிய குருநாதர்... 'பார்த்தாயா அப்பா...! இவர்கள் வைராக்கியத்தை. வீட்டிலிருந்த வந்த அழுகுரலும்... ஊரிலிருந்து திரண்டு வந்தவர்களும்... அந்த ஞானியைத்தான், தேடி வந்தார்கள். அந்த ஞானிக்குப் பின்னாலேயே இவர்கள் இருவரும் இருந்திருந்தால்... வந்தவர்களின் சோதனைகளும் தீர்ந்திருக்கும்... இவர்களின் வாழ்வும் மலர்ந்திருக்கும்...! வைராக்கியம் என்பது... அன்பு, பக்தி, நம்பிக்கை, பொறுமை... என்ற மரத்தின் காய்கள் அப்பா...! அதைக் கனிய விட்டால்... அது விவேகம் என்ற கனியாக கனிந்து... மடியிலேயே விழுந்து விடும்...!' என்றார்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment