ஒரு ஜீவன் பிறந்ததிலிருந்து... அதன் மறைவு வரையிலான காலம் வரையில்... ஓயாமல்...செயல்களின் வழியேதான் பயணம் செய்கிறது.
தான் 'திட்டமிட்டு செயல்படுவது' ஒரு நிலை... தனக்கு 'நிகழும் நிகழ்வுகளை எதிர் கொள்வது' ஒரு நிலை என... இந்த இரண்டு நிலைகளிலும் தொடர்ந்து ஈடுபடும் ஜீவன்... அந்த செயல்கள், 'விளைவிக்கும் விளைவுகளுக்கான பலன்களையும்' சுமக்க வேண்டியிருக்கிறது.
இவ்வாறு சுமக்கும் வினைகளின் விளைவுகளே... 'கர்ம வினைகளாகிறது'. இந்தக் கர்ம வினைகள்... மீண்டும், மீண்டும் பிறப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு ஜீவனும் மொத்தமாக சேர்த்து வைத்துள்ள கர்ம வினைகளை... 'சஞ்சித கர்மா' என்றும்...
இந்தப் பிறவிக்காக சுமந்து கொண்டு வந்திருக்கும் கர்ம வினைகளை... 'பிராரப்த கர்மா' என்றும்...
இந்தப் பிறவியின் செயல்களால் சேர்த்து வைத்துக் கொண்டுள்ள கர்ம வினைகளை... 'ஆகாமிய கர்மா' என்றும் வருணிக்கிறது 'தர்ம சாஸ்திரம்'.
தோன்றாத நிலையில் இருக்கும் ஜீவன்... இந்த கர்ம வினைகளின் காரணமாகத்தான்... ஒரு ஜீவனாக உருப்பெருகிறது. ஜீவனாகப் பிறப்பெடுத்த பின்னரும் தொடர்ந்து செயல்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது. இந்த செயல்களின் விளைவே மீண்டும் பிறப்பெடுக்கக் காரணமாகவும் ஆகிறது.
இந்த பிறப்பு... இன்பம்-துன்பம்... சுகம்-துக்கம்... வெற்றி-தோல்வி... ஏற்றம்-இறக்கம்... என தொடர்ந்து... இறுதியில்... இறப்பு-பிறப்பு என்ற 'இரட்டைச் சூழலுக்குள்' கொண்டு செலுத்துகிறது. இதற்குத்தான் 'பிறவிப் பிணி' என்று பெயர்.
இந்தப் பிறவிப் பிணிக்குள் செலுத்தும்... கர்ம வினைகளின் கட்டுக்குள்ளிருந்து எவ்வாறு விடுபடுவது...?
செயல்களிலும் ஈடுபட வேண்டும்... அதன் மூலம் கர்ம வினைகளையும் களைந்து கொள்ள வேண்டும்... மீண்டும் கர்ம வினைகளைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது...
இந்த செயல் வடிவத்திற்கான பயிற்சிதான்... 'கர்ம யோகம்'... அதன் வழியேயும் பயணிப்போம்...இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment