Monday, November 25, 2019

மனித வாழ்வினைப் பூரணப்படுத்தும், 'பக்தியும்... கர்மமும்...ஞானமும்' : பகுதி 3 : பக்தி யோகம்





'... அந்த 'மகா சக்தியின்' மீது கொள்ளும் வியப்பு... பயத்துடன் கூடிய 'பக்தியாக மலர்கிறது'. எண்ணற்ற மாந்தர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப... எண்ணற்ற முறைகளில் இந்த பக்தியின் வெளிப்பாடும்... வழிபாடும்... நிகழ்கிறது...'

படைப்பாளரின் முன் நின்று தனது பக்தியை வெளிப்படுத்தும் போது... அவரின் படைப்புகளையே முதலில் வணங்கத் துவங்கினான்... மனிதன்.

தானும் அவரின் படைப்புகளில் ஒன்றுதான் எனத்தெரிந்திருந்த அவனுக்கு... 'தனக்குள்ளும் அவர்தான் இருந்து இயக்குகிறார்... ' என்ற உண்மை மட்டும் தெரியாதிருந்தது. இந்த உண்மையை அவனுக்கு உணரவைக்க... அவரின் உந்துதாலால்... அவரை உணர்ந்திருந்த 'ரிஷி புங்கவர்களின்' வழியாக... வேதங்களிலிருந்தும்... வேதத்தில் உள்ளுறையும் ஆகமங்களிலிருந்தும்... தனக்கான ஒரு இருப்பிடத்தையும் படைத்துக் கொண்டார்... படைப்பாளர்.
அந்த இருப்பிடம்... 'நம்மை ஆள்பவன்' உறையும்... இடமாக அமைந்தது. அதைத்தான் 'ஆலயங்கள்' என்ற அழைக்கிறோம்.

'பிரபஞ்சம் முழுவதுமாகவும்... அதைக் கடந்தும்... இருக்கும் படைப்பாளன்தான்... பிரபஞ்சத்திற்குள்ளும்... அதன் படைப்புகளுக்கு உள்ளும்... இருக்கிறான்'... என்ற பேருண்மையை ஒட்டியே... ஆலயத்தின் நிர்மாணமும் இருந்தது.

'அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது...' என்பதன் படி, பிரபஞ்சத்தின் உள்ளும் புறமும் விரவியுள்ள... அந்த மகா சக்திதான்... மனிதனின் உள்ளுறையும் 'ஆத்மாவாக' இருக்கிறது என்ற உண்மையை உணர்த்தும் வண்ணமாக... மனிதனின் உடலின் வடிவத்திற்கு ஒப்ப ஆலயத்தின் நிர்மாணம்... ஆகமங்களில் விவரிக்கப்பட்டபடி.. அமைக்கப்பட்டது.

'எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்...' என்பதன் படி... ஒரு மனிதனின் உடலின் வடிவத்திற்கு ஒப்ப... நீண்டு படுத்திருக்கும் மனிதனின் பாதங்களிருக்கும் இடம், 'ராஜ கோபுரமாகவும்'... அவனின் தொப்பூள் என்ற மையப்பகுதி இருக்கும் இடம், 'கொடிக்கம்பமாகவும்'... அவன் சிரசு இருக்கும் இடம், 'கருவறையாகவும்' அமைக்கப்பட்டது. அந்தக் கருவறையில்... ஆண்டவனின் உருவங்களும் அதற்கேற்ப ஸ்தாபனமும் செய்யப்பட்டது.

அவ்வாறு உருவாக்கப்பட்ட ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் மனிதன்... ஆலயத்திற்குள் இருக்கும் போது... தனக்குள் இருந்து அருள் செய்யும் 'ஆத்மாவுக்குள்'  தான் இயல்பாகவே...லயமாவதை... 'ஆலயங்கள்... ஆன்மா லயமாகும் இடங்களாக இருக்கின்றன' என்ற பேருண்மைய உணர்ந்தான்.

இங்கிருந்து பக்தியின் ஆரம்பம் உதயமானது. தனது சுக-துகங்களை இறைவனிடம் பகிர்ந்து கொள்வதிலிருந்து... அவற்றிற்கான நிவாரணம் கிடைக்கும் வரையிலான காலத்தில், மனதை ஒரு நிலைபடுத்திக் கொள்ளவதும்... அவற்றிலிருந்து விடுபட்ட பின் நன்றி சொல்வதும் என... 'இறைவனுக்கும்... பக்தனுக்குமான பந்தம்' உருவாவதற்கு... பக்தி ஆதாரமாக இருந்தது.

தான் வேறு... ஆலயத்திற்குள் இருந்து அருள் செய்யும் ஆண்டவன் வேறு... என்ற இரு நிலைகள் இருக்கும் வரையில்...பக்தி... ஆலயங்களிலும்... வீட்டின் பூஜை அறைகளில் மட்டுமே... குடிகொண்டிருந்தது.

ஆலயங்களிலிருந்து உருவான ஆன்மலயத்தின் ஈர்ப்பினால்... தனக்குள் இருக்கும் ஆன்மாவுடன் எளிதில் லயிக்கும் வாய்ப்பைப் பெற்ற பக்தன்... 'எல்லா நிலைகளிலும்... எல்லா இடங்களிலும்... இறைவன் தனக்குள்ளே இருந்து... சாட்சியாய்... என்றென்றும் அருள் செய்கிறான்...' என்ற உணர்வை இயல்பாகவே பெற்று விடுகிறான்.

இந்த நிலையை அவன் அடைவதே பக்தியின் நோக்கம். இதை அடைந்து விட்டால்... 'பக்தி ஒரு யோகமாக' மாறிவிடுவதை அவன் உணர்ந்து விடுகிறான். சங்கல்ப்பங்கள் என்ற வேண்டுதல்களிலிருந்து அவன் விடுதலை பெற்று விடுகிறான்.

ஆண்டவனின் மீது கொள்ளும் பக்தி... யோகமாக மாறி... தனது ஜீவன் ஆத்ம சங்கமத்தில் திளைக்கும் போது... தனது கர்ம வினைகள் மெல்ல மெல்ல கரைந்து போவதை உணர்கிறான்.

இப்போது... அவன் ஆலயத்திற்கு ஆண்டவனின் தரிசனத்திற்காக மட்டும் செல்வதில்லை... 'தனது ஆன்மாவுக்குள் பிரவேசிக்கும்' அற்புத அனுபவத்தை... ஆனந்தத்தை அனுபவிக்கவும் செல்கிறான். இதுதான் 'ஆலயப் பிரவேசம்' என்பதை உணர்ந்து கொள்கிறான்.

பக்தி என்ற இறையன்பு அனுபவத்தின் சிறு துளிகளைப் பருக வாய்ப்பளித்த ஆண்டவனைப் பணிந்து... ஞானம் மற்றும் கர்மத்தின் பாதைகளிலும் தொடர்ந்து பயணிப்போம்... அவனருளாலே...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...