ஞானம் என்பது தேடி அறிந்து கொள்ளும் விடயமல்ல... என்பதுதான், இந்தத் ஞானத் தேடலில் ஈடுபடும் ஒரு சாதகன் அறிந்து கொள்ள வேண்டிய முதல் பாடம்.
ஒரு விளக்கு நாள்பட... நாள்பட அழுக்கேறி பிசு பிசுத்துப் போகிறது. அந்த விளக்கின் தூய்மையை மீண்டும் கொண்டு வரவேண்டுமெனில்... அதை நன்றாகத் தேய்த்துக் கழுவி... படிப்படியாகப் படிந்த பிசு பிசுப்பை நீக்கினால்... அந்த விளக்கு மீண்டும் அது முதல் இருந்த நிலையை அடைகிறது.
அதுபோல... காலம் காலமாக... பிறவிகள் தோறும்... நாம் வாழும் இந்த உடம்புதான், 'நான்' என்ற எண்ணம் இருக்கும் வரையிலும்...
இந்த பூமியில் நாம் காணும் அத்தனை அசையும்... அசையா வஸ்துகளும் நிலையானது என்ற எண்ணம் இருக்கும் வரையிலும்...
எல்லோருக்கும் வரும் மரணம் என்ற நிகழ்வு... எனக்கு இப்போது வந்துவிடாது என்ற எண்ணம் இருக்கும் வரையிலும்... 'ஞானத் தேடலில்' மனம் ஈடுபடாது.
வாழ்வில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வந்து... நாம் தேடும் இந்த உலக சுகங்கள் யாவும் ஒரு நொடியில் தோன்றி... அடுத்த நொடியில் மறையும் மின்னலைப் போன்றதுதான்... என்ற அனுபவம் எப்போது ஒருவருக்கு ஏற்படுகிறதோ... அப்போதுதான் 'தேடுதல்' துவங்குகிறது.
அந்தத் தேடுதல் நம்மை பல கேள்விகளுக்குள் இட்டுச் செல்கிறது...
~ நான் யார்...?
~ நான் என்பது தோன்றி மறையும் இந்த உடல் மட்டும்தானா...?
~ நான் இந்த உடல் அல்ல... என்றால் நான் என்பது எது...?
~ விழிப்பின் போது நாம் பார்க்கும் ஒவ்வொரு மானிதருக்குள்ளும் இருக்கும் அந்த 'நானுக்கும்'... எனக்குள் இருக்கும் 'நானுக்கும்' இருக்கும் தொடர்பு என்ன...?
~ விழித்துக் கொண்டிருக்கும் போது... இருக்கும் 'நான் என்ற உணர்வு'... தூக்கத்தின் போது... எங்கு இருக்கிறது...?
~ தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளும் போது... அந்த உணர்வு எங்கிருந்து வெளிப்படுகிறது...?
இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதிலகள் மலர மலர... எவ்வாறு ஒரு விளக்கின் பிசு பிசுப்புத் தன்மை படிப்படியாக நீங்குகிறதோ... அது போல, 'அஞ்ஞானம்' என்ற திரைகள் படிப்படியாக விலகுகின்றன.
இவ்வாறு, படிப்படியாக விலகும் அஞ்ஞானத் திரைகளின் பின்னே ஒளிர்ந்து கொண்டிருக்கும் 'ஞானம்' என்ற 'விளக்கின் தூய்மை' நமது மனத்திற்கு புலப்படும் போது... இந்த உடல் 'நான் அல்ல' என்ற உண்மையும் புலப்படும்.
'நான் இந்த உடல் இல்லை...' என்ற உண்மை எப்போது நமது மனதில் எழுகிறதோ... அப்போதுதான், நாம் ஞானத்தின் பாதையில் பயணப்பட ஆரம்பிக்கிறோம்.
இறைவனின் அருளோடு... பயணத்தைத் தொடர்வோம்...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment