Friday, November 8, 2019

'தவறுகளும், தண்டணைகளும்' - சூட்சும இரகசியம் :

'தவறுகளும், தண்டனைகளும்' - சூட்சும இரகசியம் :





சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ராஜா ஒருவன்... தன்னை விமரிசிப்பவர் எவராக இருந்தாலும்... விமரிசனத்தின் தன்மையைக் கூட ஆராயாமல் உடனடியாக தணடனை வழங்கிவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.

அவனது தண்டனையும் வினோதமானதாகத்தான் இருந்தது. தனது கையில் வைத்திருக்கும் சவுக்கைக் கொண்டு... தான் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் இருந்து எழுந்து நின்று... தனது கோபம் தீரும் வரையில் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்துவதாக இருந்தது.

இந்தத் தண்டனையால்... எண்ணற்ற நல்லெண்ணம் கொண்டோரும் பாதிப்புக்கு உள்ளாயினர். அமைச்சர்கள் அடங்கிய அரசவையினரும்... இது விடயமாக ராஜாவிடம் ஏதும் பேச முடியாது தவித்தனர்.

காலம் கடந்தது... ஒரு நாள் ராஜாவின் வாழ்வும் முடிந்து போனது. நிம்மதியடைந்த மக்களும்... இராஜ்ஜியத்தினரும் இறுதி கிரியைகளுக்காக ராஜாவின் உடலை மயான பூமிக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். கிரியைகள் அனைத்தும் நடந்து... இறுதியாக அக்னியும் மூட்டப்பட்டது. அனைவரும் மயான பூமிய விட்டு வெளியேறினர். இடுகாட்டை ஆளும்... காவலன் மட்டுமே... எரிந்து கொண்டிருக்கும் ராஜாவின் உடலுக்குக் காவலாக நின்று கொண்டிருந்தான்.

எரிந்து கொண்டிருந்த ராஜாவின் உடல்...வழக்கமாக அவன் உயிருடன் இருக்கும் போது... தண்டனையளிப்பதற்கு எழுந்து நிற்பதைப் போல... எழுந்து, எழுந்து... நின்றது. இது வழக்கத்திற்கு மாறாக இருக்கிறதே... என்று எண்ணிய காவலன்... ஒவ்வொரு முறை எழும்போதும்... தனது கையில் வைத்திருக்கும் எரியூட்டும் கம்பினால் அடித்து, அடித்து படுக்க வைத்தான்.

இந்தக் கதையைக் கூறிய... அடியவனின் 'சத்குரு', ' பார்த்தாயா, அப்பா...! அவன் உயிருடன் இருக்கும் போது, செய்த தவறுகளுக்கு... இப்போது தண்டனை கிடைத்துக் கொண்டிருக்கிறது...! என்ன...! அவன் அன்று செய்த தவறுகளை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர்...! இன்று... அவன் அடையும் தண்டனையை பார்ப்பதற்கு ஆளில்லை. பொதுவில் அவன் செய்த தவறுகளுக்கு... தனியேதான் அவன்  தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அவனுக்குத் தண்டனை கொடுக்கும்... காவலனோ... தனது கடமையைத்தானே செய்கிறானப்பா...! புரிந்து கொள்... இதுதான் 'தவறுக்கும் - தண்டனைகளுக்கும்' இடையேயான 'சூட்சும இரகசியம்'...' என்றார்.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...