Tuesday, November 19, 2019

வேதியரையும், வேடரையும்... ஒருங்கே ஆட்கொண்ட ஈசனின் சூட்சுமம் (அன்பும்-பக்தியும்) :





'சிவ கோசரியார்'... உயர்ந்த அந்தணகுலத்தவர். ஈசனுக்கே பணி செய்வது என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டவர். தனது பிறவியின் பயனே... 'சர்வேஸ்வரனின்' திருவடித் தொண்டு... என வாழ்ந்த, வேதம் உணர்ந்த வேதியர்.

'திண்ணனார்'... வேட்டுவ குலத்தில் பிறந்தவர். கொடிய காட்டு மிருகங்களை வேட்டையாடும் 'வேட்டுவக் குலத்து' தலைவரின் மகனாகப் பிறந்தவர். தனது தந்தைக்குப் பின்... அந்த வேட்டுவ குலத்தை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்.

முற்றிலும் வேறுபட்ட சூழல்களில் வாழும், இந்த 'இரண்டு ஜீவர்களையும்'... சர்வேஸ்வரன்... தமது அருள் பொங்கும் 'லீலையைக்' கொண்டு... எவ்வாறு ஆட்கொள்கிறான் என்பதில்தான்... அவனின் அன்பும், கருணையும் நிறைந்திருக்கிறது.

அதற்காக, சர்வேஸ்வரன் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஸ்தலம் 'காளத்தி மலை'. அந்த திருமலையில்... 'குடுமித்தேவர்' என்ற நாமத்துடன்.. எவரும் எளிதில் நெருங்கமுடியாத நிலையில் அமர்ந்திருந்தான் ஈசன்.

அவரின் அருள் லீலையால் ஈர்க்கப்பட்ட முதலாமவர்... 'சிவ கோசரியார்'.

அவர், தினமும் தலையில் நீர்க்குடம்... தோள்களில் தொங்கும் பைகளில்... தூய நெய், சந்தனாதி வாசனைத் திரவியங்கள், வாசனையான மலர்கள், வஸ்திரம், சுவாமிக்கான நிவேதனம்...என்று ஏந்தி வந்து... சுவாமியின் இருப்பிடத்தைச் சுத்தம் செய்து... புனித நீரால் நீராட்டி... நெய், சந்தானாதி வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்வித்து...வஸ்திரம் சாற்றி... வாசனை மலர்கள் தூவி... தூப தீபங்களுக்குப் பின் நிவேதனம் சமர்ப்பித்து... வேத மந்திரங்கள் ஓதி... 'குடுமித் தேவருக்குத்'... தனது  நித்திய பூஜையை  சமர்ப்பணம் செய்வார்... பக்தியோடு.

இதற்கு முற்றிலும் வேறான, குணநலன்களை உடைய, வேட்டுவக் குலத் தலைவன்... கொடிய மிருகங்களின் இரத்தத்தையும்,. இரைச்சியையும் சுவைத்து உண்ணும் குலத்தில் பிறந்த... 'திண்ணன்' என்ற வேடன்தான்... ஈசனால் இரண்டாவதாக ஈர்த்துக் கொள்ளப்பட்டவர்.

இந்த வேடனும் நீரைக் கொண்டு வந்தான்... அவனது வாயில் கொப்பளித்தபடி. இந்த வேடனும் பூக்களைக் கொண்டு வந்தான்... தனது தலைப்பாகையில் செருகிக் கொண்டபடி. இந்த வேடனும் நிவேதனத்தைக் கொண்டு வந்தான்... வேட்டையாடப்பட்ட... பக்குவமாக வேக வைக்கப்பட்ட... பன்றியின் இறைச்சித் துண்டுகளாக.

தனது வாயில் இருக்கும் நீரைக் கொப்பளித்து 'குடுமித் தேவருக்கு' அபிஷேகத்தையும், காட்டுப் பூக்களால் ஆராதனையயும்... இறச்சியைக் கொண்டு நிவேதனத்தையும் சமர்ப்பித்து... அதை ஈசன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மன்றாடி... ஆனந்தக் கூத்தாடுவான் திண்ணன்... அன்போடு.

இருவரது பூஜா முறைகளும்  முற்றிலும் வேறானவை. ஒன்றுக்கொன்று நேரெதிரானவை. ஆனால்... இருவரது மனதில் இருந்ததும் ஒன்றுதான். அது அவர்கள், 'குடுமி நாதரின்' மேல் வைத்த 'பக்தியும்-அன்பும்'.

இந்த 'அன்பையும் - பக்தியையும்'... நமக்கு உணர்த்துவதற்காக 'குடுமி நாதனான'... ஈசன் நடத்திய நாடகத்தில் விளைந்ததுதான்... 

'சிவகோசரியாருக்கு' ஏற்பட்ட, கலக்கமும்... கவலையும்... வருத்தமும்.

திண்ணனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும்... அழுகையும்... தியாகமும்.

'நமக்கு கண்கள் இரண்டு. ஆனால்... காட்சி ஒன்றுதான்'. அதுபோல, 'அன்புக்கு இலக்கணமான திண்ணரும்'... 'பக்திக்கு இலக்கணமான சிவ கோசரியாரும்'... கண்டது... 'குடுமி நாதரான' ஒருவரைத்தான்... என்ற உண்மையை... இந்த... 'கண்ணுக்கு கண் கொடுக்கும் லீலை' மூலமாக... ஈசன், சூட்சுமமாக உணர்த்துகிறான்.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...