Saturday, November 30, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 45. ஸ்தானங்கள் வழியேயான ஜீவனின் வாழ்வு. அறிமுகம் : பகுதி-1.





அடுத்த நொடி என்ன நடக்கப் போகிறது...? என்ற எதிர்பார்ப்புதான் வாழ்வை சுவாரஸ்யமாக்குகிறது. அதை முன்பே தெரிந்து கொள்வதிலும் ஒரு சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது.

அதையும் கடந்து... ஒரு ஜீவனின் வாழ்வின் இலக்கு எது என்பதை... அந்த ஜீவனே அறியமுடியாதவாறு வாழ்வு அமைந்திருக்கும் போது... அது எதை நோக்கியது... என்பதை அறிவிக்க ஒரு உபாயம் தேவைப்படுகிறது.

நாம் எதை விரும்புகிறோமோ... அது கிடைக்காத போதும், நாம் எதை வெறுக்கிறோமோ... அதன் வழியே கடந்து போகும் போதும், நமது விருப்பங்களுக்கும்... வெறுப்புகளுக்குமிடையே வாழ்வு கடந்து போகும் போதும்... ஏன் எனக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது...? என்ற கேள்வி எழுவது இயற்கைதான்.

ஆனால்... உலகியல் வாழ்வில் இது போன்றே, அனைவருக்கும் நடப்பதை அறிந்து கொள்ளும் போதுதான்... தற்போதைய வாழ்வின் வழிமுறைகள் அனைத்தும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும்...

தற்போதைய வாழ்வின் வழிமுறைகள் யாவற்றையும்... அந்தந்த ஜீவர்களே தமது முந்தைய வாழ்வின் செயல்களிலிருந்தும்... அவை விளைவித்த விளைவுகளிலிருந்தும்... எடுத்துக் கொண்டு வருகிறார்கள் என்ற உண்மையையும்... தெரிந்து கொள்கிறார்கள். இதைத்தான்... 'கர்ம வினைகள்' என்று அழைக்கிறோம்.

இந்த கர்ம வினைகளின் சுழற்சியால் பிறப்பெடுக்கும் ஜீவன்... தனது வாழ்வை எவ்வாறு கடந்து போகிறது...? என்பதை அறிந்து கொள்வதற்கு... ரிஷி புங்கவர்களால்... வேதத்தின் அங்கமான ஜோதிடத்திலிருந்து... விதிகளாகவும், பலன்களாகவும், எளிமையாக்கப்பட்டு... வழங்கப்பட்டிருப்பதுதான் இந்த அரிய 'ஜோதிடக் கலை'.

ஒரு ஜீவன் பிறப்பெடுக்கும் நேரத்தையும்... இடத்தையும்... மூலமாகக் கொண்டு பஞ்சாங்கத்தின் வழியே... அன்றைய நாளின் சூரிய பகவானின் உதயம்... சந்திர பகவான் பிரபஞ்சத்தில் உலவும்  நட்சத்திரக் கூட்டங்களின் அன்றைய நாளின் நட்சத்திரம்... சூரிய பகவானை வலம் வந்து கொண்டிருக்கும் கிரகங்களின் அன்றைய நிலை... இவற்றை ஒரு 'ஜாதகச் சித்திரத்தில்' குறிப்பிட்டு... அதன் வழியே ஒரு ஜீவனின் வாழ்வு இரகசியத்தை அறியும் கலையே... ஜோதிடக் கலை.

12 இராசிகளைக் கொண்ட இந்த ஜோதிடச் சித்திரத்தில்... ஜீவன் பிறப்பெடுத்த நேரம் 'லக்னமாக' அமைகிறது. இந்த லக்னத்தை மூலமாகக் கொண்டுதான்...ஏனைய 'ஸ்தானங்கள்' வகைப்படுத்தப்படுகின்றன.

லக்னத்தையும்... ஏனைய ஸ்தானங்களையும் கொண்டு... ஜீவ வாழ்வின் வழியையும், அதன் இலக்கையும் தொடர்ந்து  கண்டறிய முற்படுவோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...