'இரண்டுண்டு' என்ற எண்ணம் இருக்கும் வரை 'ஞானத் தேடலின்' பயணம் தொடர்வதில் தடங்கல்கள் இருக்கும்.
'நான் வேறு...உள்ளிருந்து அருள் செய்யும் இறைவன் வேறு...' என்ற எண்ணமே தடை. இந்தத் தடையை நீக்குவதுதான் முதல் முயற்சி. இதை நமது மனம் ஏற்றுக் கொள்வதில் இருக்கும் சிக்கல்கள்தான்... அஞ்ஞானம்.
'எல்லோருக்குள்ளும் இருந்து அருள் செய்யும் பரமாத்ம சொரூபம்... எனக்குள்ளும் இருந்து அருள் செய்கிறது....' என்ற நிலையை ஏற்றுக் கொள்ளும் மனம்... 'எல்லா உயிர்களுக்குள்ளும் சமமாக இருந்து அருள் செய்யும் பரமாத்ம சொரூபம்... ஏன் ஒவ்வொரு உயிரினத்திற்கும் இடையில் இவ்வளவு மாறுபட்ட வாழ்வியல் முறைகளை வைத்திருக்கிறது...?' என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
இந்தக் கேள்வி... 'ஒவ்வொரு ஜீவனுக்குமான கர்ம வினைகள்தான்... அதற்கேற்ப ஜீவனின் பிறப்புகளுக்குக் காரணமாகிறது... என்ற ஜீவ சுழற்சியின் உண்மையை வெளிப்படுத்துகிறது'. இதை உணர்ந்து கொண்ட ஜீவன்... அதன் சுழற்சியை நிறுத்திக் கொள்வதற்கு, தனது கர்ம வினைகளைக் களைவது ஒன்றுதான் வழி... என்ற உண்மையை உணர்ந்து கொள்கிறது.
~ பிறப்பெடுக்கும் ஜீவ வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும்... அதன் 'கர்ம வினைகளின் விளைவுகளே' தீர்மானம் செய்கின்றன.
~ இந்த கர்ம வினைகள்... எண்ணங்களாக எழுவது மனதில்தான்.
~ ஜீவனிலிருந்துதான்... இந்த மனம் உற்பத்தியாகிறது.
~ ஜீவன்... ஆத்மாவிலிருந்து உற்பத்தியாகிறது.
~ ஆத்மா... பரமாத்ம சொரூபத்திலிருந்து, ஜீவன் பிறப்பெடுக்கும் போது, ஜீவனுக்கு ஆதாரமாகிறது.
'ஞானத் தேடலில்' இந்த இரகசியங்களை... ஒவ்வொன்றாக அறிந்து கொண்டு... தனது அஞ்ஞானத்தில் இருந்து விடுபடும் ஜீவன்... இதன் வழியே சென்று... தனது 'கர்ம வினைகளைக் களைந்து கொள்வது' மட்டுமல்ல... தனது ஜீவனை ஆத்மாவில் சங்கமிப்பதற்குமான முயற்சியிலும் ஈடுபடுகிறது.
எண்ணங்களை... அதன் உற்பத்தி ஸ்தானமான மனதில் நிறுத்துவதும்... மனதை... அதன் மூலமான ஆத்மாவில் நிலைப்படுத்துவதுமான முயற்சியான... தியானத்தில் ஈடுபடுகிறது.
தியானத்தின் வழியே மனதில் தோன்றும் எண்ணங்களை அதன் மூலத்தில் கொண்டு சேர்க்க முடிகிறது. அந்த எண்ணங்களின் மூலமான ஜீவனை... அதன் உற்பத்தி ஸ்தானமான ஆத்மாவில் நிலைக்க வைக்கும் முயற்சியை... உள்ளிருந்து அருளும் அந்த ஆத்ம சொரூபம்... 'அவனருளாலே அவன் தாள் வணங்கி...' என்ற... தனது கருணையினால்... ஜீவனுக்கு வெளிப்படுத்துகிறது.
தியானம் கைகூடும் போது... ஞானம்... 'ஞான யோகமாக' மலர்கிறது. கர்ம வினைகள் களைந்து... ஜீவன்... ஜீவ முக்தியான... ஆத்ம சங்கமத்தில் திளைத்து விடுகிறது.
பக்தி யோகம்... ஞான யோகம்... என்ற வழியில், 'கர்ம யோகத்தின்' வழியேயும் பயணம் செய்வோம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment