Thursday, November 21, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 39. 'ராகு - கேது பகவான்கள்' அறிமுகம் - பகுதி 1.





வேதம் இறைவனால் அருளப்பட்டது. அதன் காலம் அனாதியானது. அதைப் படைத்த இறைவனும் அனாதியானவன். 'வாய் மொழியாக கேட்டு, மனதில் பதியவைத்துக் கொள்வதால்தான்...' அதனை 'சப்த பிரம்மம்' என்று அழைக்கிறோம். அந்த வேதத்தின் ஒரு அங்கம்தான்... ஜோதிடம்.

இப்புவியில் உள்ள அனைத்துப் படைப்புகளும் இறைவனால் படைக்கப்பட்டு... அவரின் கண்காணிப்பிலேயே வாழ்ந்து... இறுதியில், அவருக்குள்ளே கலந்தும் விடுகின்றன. இந்தப் படைப்புகளிலேயே வித்தியாசமானது  மனிதனின் படைப்புதான்.

ஏனைய, எண்ணிறந்த (84 லட்சம் படைப்புகள்) படைப்புகளில்... மனிதனைத் தவிர்த்து... ஏனைய எந்த உயிரினங்களுக்கும், 'பகுத்து அறியும்' ஆற்றல் வழங்கப்படவில்லை. அவையனைத்தும், இறைவனின் திட்டப்படியே உருவாக்கம் பெற்று... தோன்றி, வாழ்ந்து அவனுள் கலந்தும் விடுகிறது.

ஆனால், மனிதனுக்கு மட்டுமே... அந்த சுதந்திரம் வழங்கப்பட்டு இருக்கிறது. அவனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்... தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும்... மறுக்கும் வாய்ப்பும் (CHOICE & CHANCE) வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த வாய்ப்பை 'கிருத யுகம்' என்ற 'தர்மத்தை' பிரதானமாகக் கொண்ட யுகத்தில்... அனைவரும் தக்கப்படி பயன்படுத்திக் கொண்டார்கள்.  வேதம் உணர்த்திய தர்மத்தின் வழியில் வாழ்ந்து.. இறுதியில், இறைவனின் திருவடியில் ஒன்றெனக் கலந்தனர்.

தொடர்ந்த, 'திரேதா... துவாபர... கலியுகங்களில்'... மனிதர்களிடையே, தர்ம நெறியின் வழியிலான வாழ்வு படிபடியாகக் குறைந்து... மீண்டும், மீண்டும் பிறப்பெடுப்பதற்கான... 'கர்ம வினைகளைத்' தாமே உருவாக்கிக் கொண்டார்கள்.

இவ்வாறு, மீள முடியாத 'கர்ம வினைகள்' என்ற... மீண்டும், மீண்டும் பிறப்பெடுக்கும்... 'பிறவிப் பிணியிலிருந்து' இந்த மனித ஜீவனை மீட்பதற்கு... அந்த ஜீவர்களுக்கு, பிறவியின் நோக்கத்தையும்... அது சென்று சேர வேண்டிய இலக்கையும் சுட்டிக் காட்ட... வேதத்தின் அங்கமான 'ஜோதிடத்தை' ஒரு கருவியாகக் கொண்டனர்... கருணையாளர்களான... 'ரிஷி புங்கவர்கள்'.

அவர்கள் வேதத்தின் வழியேயான ஜோதிடத்தை எளிமையாக்கி... அதன் வழி முறைகளை வகுத்து... தொடரும் சந்ததிகளுக்கு... ஒரு வரப்பிரசாதமாக அளித்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.

'கிருத யுகத்தில்' தர்மம் மேலோங்கி இருந்ததால்... 'சூரிய பகவான் முதல் சனி பகவான்' வரையிலான 7 கிரகங்கள் மட்டுமே... ஒரு ஜீவனுக்கு வழிகாட்டும் கிரகங்களாக இருந்தது. அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி, அனைத்து ஜீவர்களும் தர்மத்திற்குள் கட்டுப்பட்டு நின்றனர்.

'திரேதா - துவாபர - கலி யுகங்களில்'... தர்மம் முறையே... ஒரு நாற்காலியின் கால்களைப் போல... 'நான்கு - மூன்று - இரண்டு' என்று படிப்படியாகக் குறைந்து இன்று 'ஒற்றைக் காலில்' நிற்க வேண்டிய சூழலில் தத்தளிக்கிறது. இதற்குக் காரணமான... அந்தந்த ஜீவர்கள் சேர்த்துக் கொண்ட... 'கர்ம வினைகளின் தொகுப்பை' சுட்டிக் காட்டுவதற்காக... ரிஷிகளால் உருவாக்கப்பட்டதுதான் 'ராகு - கேது பகவான்கள்' என்ற 'நிழல் கிரகங்கள்'.

ஏனைய கிரகங்கள் அனைத்தும், 'சூரிய பகவானை' மூலமாகக் கொண்டு... அதனை 'இடமிருந்து - வலமாக (Clock Wise) சுற்றி வருகின்றன. இந்த இரண்டு 'நிழல் கிரகங்களும்' வலமிருந்து - இடமாக (Anti - Clock Wise) சுற்றி வருவதாக ரிஷிகள் அமைத்திருப்பதற்கான காரணமே... 'அவை அந்த ஜீவனின் வாழ்வை பின்னோக்கிப் பார்க்கிறது'... என்பதை உணர்த்துவதற்காகவே...!

இந்த 'ராகு - கேது பகவான்களின்' எனைய சூட்சுமங்களைத் தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளால்...

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...