'வித்வான்' என்று அழைக்கப்படும், 'திரு. வே. லெட்சுமணன்' அவர்கள் 'ஜோதிடக் கலையில்' வல்லுனர் மட்டுமல்ல... 'திரைத்துறையிலும்' தனது பங்களிப்பை அளித்தவர்.
'திரு. எம்.ஜி.ஆர்' அவர்களுடன் நெருங்கிய தொடர்புடன் இருந்த இவர், அவருக்கு 'ஆலோசகராக' இருந்தது மட்டுமல்ல... அவருடைய திரைப் பயணத்திலும் பங்கு கொண்டிருந்தார். அவரது தயாரிப்பு நிறுவனத்தை மேற்பார்வை செய்யும் மூவர் குழுவில் ஒருவராகவும் பணியாற்றினார்.
எம்.ஜீ.ஆர் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் முன்னரே, பல திரப்படங்களுக்கு கதை, வசனம், பாடல், தயாரிப்பு... என, எண்ணற்ற பங்களிப்பை அளித்திருக்கிறார். அவர் எழுதிய,
'நீயும் பொம்மை... நானும் பொம்மை...
நெனச்சு பாத்தா... எல்லாம் பொம்மை
தாயின் மடியில்... பிள்ளையும் பொம்மை
தலைவன் முன்னே... தொண்டனும் பொம்மை...'
...என்ற பாடல் மிகவும் பிரபலமானது மட்டுமல்ல... திரு. ஜேசுதாஸ் அவர்களின் முதல் பாடலும் அதுதான்..
'ஜோதிடத் துறையில்' இவரின் பங்களிப்பு, தமிழ் நாட்டையும் கடந்து, தமிழர்கள் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என... நாடு கடந்த அளவில் இருந்தது. இவரின் நிபுணத்துவத்தை, இவர் எழுதி, மாதம் இருமுறை வெளிவந்த 'பால ஜோதிடம்' இதழ் வெளிப்படுத்தியது.
அந்த இதழில் அவர் எழுதிய, கிரகங்களைப் பற்றிய மிக விரிவான ஜோதிடக் குறிப்புகள்... ஜோதிட விதிகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை வெளிப்படுத்த, அவர் கையாளும் யுக்திகள்... உதாரணமாக எடுத்துக் காட்டும் பிரபலங்களின் ஜாதக ஆய்வுக் கட்டுரைகள்... கேள்வி-பதில் பகுதி... என, எண்ணற்ற ஜோதிட அறிவுக் களஞ்சியங்கள் நிரம்பியதாக... 'பால ஜோதிடம் இதழ் திகழ்ந்தது.
கேள்வி பதில் பகுதியில், கேள்விகளை மட்டும் பார்த்து விட்டு, அதற்கான பதில்களை நாங்கள் எழுதி, பின்னர் 'வித்வானின்' பதில்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, எங்கள் ஜோதிட அறிவை வளர்த்துக் கொண்டோம், என்றால் மிகையில்லை.
இவை அனைத்தையும் கடந்து, மகான்கள், ஞானிகளின் ஜாதகங்களைப் பற்றிய இவரின் ஆய்வுகளும்... அவர்களின் ஜாதகத்தில், 'குரு பகவானின்' அமைவை, அவர் சிலாகித்து அனுபவித்தையும் கொண்டு, அவரின் 'ஆன்மீக ஞானத்தை' அறிந்து கொள்ளலாம். ஒரு ஜாதகத்தை எவ்வாறு அணுக வேண்டும்... என அவர் அளித்திருக்கும் குறிப்புகள்... ஜோதிடர்களுக்கு மட்டுமல்ல, ஜோதிட ஆர்வலர்களுக்கும், பேருதவியாக இருக்கும்.
திருவெண்காடர் உறைந்திருக்கும், ஆலயத்தில் இவர் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒரு பெரியவர், இவருக்கு அளித்த 'ருத்ராக்ஷ மாலையும்'... 'பிருகு மகிரிஷிகள்' அருளிய ஜோதிடப் புத்தகமும்... ஆலயத்தின் பிரகாரத்தில் எழுந்தருளியிருக்கும், 'புத பகவானின்' அனுக்கிரகமும்... இவரை ஜோதிடத் துறையில் பெருமை சேர்க்க வைத்ததை... அவர் தனது இதழில் குறிப்பிட்டிருந்ததும் நினைவு கூறத்தக்கது.
இந்த நூற்றாண்டின் 'ஜோதிட நிபுணர்களில்' இவரும் ஒருவராகத் திகழ்ந்தார். அவரை நினைவு கூறுவதில் பெருமை அடைகிறோம்.
ஸாய்ராம்.