இதைச் சொல்லாத அம்மாக்கள், எங்கள் காலத்தில் இருந்திருக்கவே முடியாது. அவர்களின் சொல்படி நடக்க விட்டால்... இதைச் சொல்லித்தான் பயமுறுத்துவார்கள். எனக்கும் அதே பயமுறுத்தல் இருந்தது.
எனக்கு அம்மா காட்டிய பூச்சாண்டியோ, உண்மையாக நடமாடிக் கொண்டிருந்தது. சராசரி உயரம்...முறுக்கி விடப்பட்ட நரைத்த மீசை... முழங்கால் வரையிலான வேட்டி... குளிருக்கு அணியும் கோட்டு... அழுக்குத் தலைப்பாகை... தோளில் முடிச்சுப் போட்டிருந்த ஒரு மூட்டை.. வாயில் புகைந்து கொண்டிருக்கும் சுருட்டு... என, குழந்தைகளைக் கண்டவுடன்... ஹா ! ஹா !! என்று சிரித்தபடி ஓடி வரும்.
குழந்தைகளான நாங்கள் அனைவரும், அதைக் கண்டதும் ஓடி மறைந்து கொள்வோம். அந்த மூட்டைக்குள், அது பிடித்து வைத்திருக்கும் குழந்தைகள் இருப்பதாகப் பேசிக் கொள்வோம். அது எங்களைக் கடந்து போகும் போது, பூச்சாண்டி... பூச்சாண்டி... என்று கூவிக் கொண்டு விரட்டிச் செல்வோம். அது உடனே திரும்பி எங்களை துரத்தி வரும் போது, அதனிடம் சிக்கி விடாமல் ஓடி வந்து, வீட்டுக்குள் மறைந்து கொள்வோம்.
ஒருநாள், வீட்டிலிருந்து எனது சகோதரர்கள் வியாபாரம் செய்யும் மற்றொரு கடை வீதிக்கு, தேநீர் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அது ஒரு மலைக்கும், ஒரு பள்ளத்தாக்குக்கும் இடையேயான வளைந்து செல்லும் பாதை. அந்தப் பாதையின் நடுவில், எனது வீடும்... நான் செல்ல வேண்டிய கடை வீதியும்... பார்வைக்குத் தெரியாமல் இருக்கும்.
அந்த ஆள் அரவமற்ற இடத்தைக் கடப்பது, எப்போதும் எனக்கு மிகவும் பயமானதாகவே இருக்கும். அதுபோலத்தான் அன்றும்... எனது பயத்திற்கு ஏற்ப, அந்த பூச்சாண்டி தொலைவில் வருவதைப் பார்த்தேன். ஒரு நிமிடம் எனது மூச்சே நின்று விட்டதைப் போல இருந்தது. கால்கள் பின்னிக் கொண்டன. திரும்பி புறப்பட்ட இடத்திற்கு போக முடியாமலும்... அதைக் கடந்து போக முடியாமலும்... தவித்து நின்ற வேளையில், அந்த பூச்சாண்டி என்னை நோக்கி நெருங்கி வந்தது,
வாயிலிருந்த சுருட்டைஎடுத்து விட்டு, குனிந்து, மெல்ல சிரித்து, 'என்ன சின்ன ராசா ! கடைக்கு டீ கொண்டு போறீயா ?' என்ற அந்த அன்பான குரலைக் கேட்டவுடன்தான்.. அந்தக் குரலுக்குப் பின்னாலிருந்த, ஒரு தாத்தாவை என்னால் பார்க்க முடிந்தது. நான் பயந்து கொண்டே, 'அந்த மூட்டைக்குள் என்ன இருக்கிறது ?' என்று கேட்ட போது, அவர் அதைத் திறந்து காண்பித்தார்... அதில் அன்று பறிக்கப்பட்ட கீரைகளும்.. கிழங்குகளும் இருந்தன..
அடுத்த சில நாட்களில், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த தாத்தா வந்து கொண்டிருந்தார்... பிள்ளைகள் எல்லோரும் பூச்சாண்டி... பூச்சாண்டி... என்று அவர் பின்னால் ஓடிக் கொண்டிருந்தார்கள். அவரும் வழக்கம் போல, திரும்பி வந்து, அனைவரையும் விரட்ட... எல்லாக் குழந்தைகளும் ஓடி மறைந்தன... நான் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தேன்... என்னை மறந்து !
ஸாய்ராம்.
No comments:
Post a Comment