Friday, December 10, 2021

கவிஞர் கண்ணதாஸன் - ஒரு பார்வை : பகுதி - 7. 'ஞான அனுபவம்'



 நிலையாமை என்ற சூழலை அனுபவிக்கும் போதுதான் ஞானம் பிறக்கிறது. உடலை விட்டு உயிர் பிரியும் போது ஏற்படும் அனுபவ ஞானத்தைத்தான் கவிஞர், இந்தப் பாடலில் வடித்திருக்கிறார்...

'சட்டி சுட்டதடா கை விட்டதடா...

புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா...

நாலும் நடந்து முடிந்த பின்னே,

நல்லது கெட்டது தெரிந்ததடா...'

... என்ற நிதர்சனத்தை உணர்ந்த் பின், நிலையாமை எது என்பதையும், நிலைத்த தன்மைக்கு காரணமாக இருப்பது எது என்பதையும், மனம் ஆய்ந்து அறிந்து கொள்கிறது. உயிர்ப்புக்கு ஆதாரமாக இறைவன் இருப்பதையும்... அந்த உயிர்ப்புக்கு மூலமாக 'கர்ம வினைகள்' இருப்பதையும்... எப்போது கர்ம வினைகளைச் சுமந்து கொண்டிருக்கிற  உயிர்ப்பு, அதன் ஆதாரமான இறைவனிடம் சேரும் போது, கர்ம வினைகள் தானாக களைந்து போவதையும்... அடுத்த சரணத்தில் வடித்திருக்கிறார்

'பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா...

மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா...

ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா...

அமைதி தெய்வம் முழு மனதில் கோவில் கொண்டதடா...

...இந்த அமைதியை அனுபவிக்கும் மனதின் நிலையை, அடுத்த சரணத்தில் விவரிக்கும் போது,

'ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடி விட்டதடா...

ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா...

தர்மதேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா...

மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா...'

...என்று வருணித்து, இந்த அனுபவம் உணர்த்தும் ஞானம் எவ்வாறானது என்பதை விவரிக்கும் போது, 

'எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா - என்

இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா...

பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா...

இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா...'

... ஒரு சிறிய எறும்புக்குள் இருந்து, ஒரு பெரிய யானை வருவது போல, நம் மனம் என்னும் சிறியதிலிருந்து, நமது மொத்த வாழ்வுக்குமான 'கர்ம வினைகள்', கடலிலிருந்து புறப்படும் தொடர் அலைகள் போல, வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது... மனம் 'ஞானானுபவத்தில்' திளைத்து விடுகிறது.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...