'சதா நேரமும் இறைவனுடனேயே ஒன்றியிருக்கும் ஒரு சத்குருநாதனரின் திருவடிகளில், நம்மைக் கொண்டு சேர்க்கும் ஒரு உறவுதான்... உறவுகளிலேயே மிக உயர்ந்த உறவு' - ஹேமாட் பந்த். 'ஸ்ரீ ஸாயீ ஸத் சரித்திரம்'.
அவ்வாறு என்னை, சீரடி மஹானின் திருவடிகளில் கொண்டு சேர்த்த (1999), அண்ணார் திரு. ராஜ்மோகன் அவர்களின் தொடர்பைத்தான், நான் அடைந்த உறவுகளிலே மிக உயர்ந்த உறவாகக் கருதுகிறேன்.
அண்ணாரும் அடியேனும் 1994 லிருந்து ஆன்மீகம் மற்றும் ஜோதிடத் துறையில் பயணித்துக் கொண்டிருந்த சூழலில், எங்களது முக்கியத் தேடல்... ஒரு குருவை அடைவதாக இருந்தது. தென் தமிழகத்து பெரும்பான்மையான ஆலயங்களின் வழியான தேடல், திருவண்ணாமலையில் நிலைத்து நின்றது.
எண்ணற்ற திருவண்ணாமலைப் பயணத்தில், சேஷாத்திரி சுவாமிகள், பகவான் ரமண மகிரிஷிகள், யோகி ராம்சுரத்குமார்... என்ற தேடல், இறுதியாக பகவான் சீரடி மஹானின் திருவடிகளில் நிலைத்தது.
பாபாவின் தொடர் திருவிளையாடல்கள், அவரைப் பற்றி ஏதுமறியாத அண்ணாரை, எங்களது ஊரிலேயே எழுந்தருளிய (1998 - முடிகண்டம், திருச்சி) பாபாவின் திருவடிகளில் கொண்டு சேர்ந்தது. அந்த ஆனந்த அனுபவத்தை அடைந்த அண்ணார், அடியேனையும் அடுத்த சில வாரங்களில், அங்கு அழைத்துச் சென்றார். அவர் முதலில் அழைத்துச் சென்றது, அந்த ஆலயத்தில், பாபா சீரடியில் வசித்து வந்த மசூதியைப் போன்றே அமைந்திருந்த 'துவாரகமாயிக்குத்தான்'.
அதன் படிகளில் ஏறி, வலது பக்கம் அமைந்திருந்த, கிராதிக்கு உள் அமைந்திருக்கும் 'உயிரோவியமான' பாபாவின் கருணை நிறைந்த... ஆழ்ந்து உள் நோக்கும் கண்களின் ஆகர்ஷணத்தில் மூழ்கிய படியே... அவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி... அவரின் பாதங்களிலேயே சரணாகதி அடைந்து விட்டேன்.
அண்ணாரது வாழ் நாட்களிலும், அடியேனது வாழ்விலும் எண்ணற்ற அனுபவங்களை அளித்து, எங்களை வழி நடத்தும் பாபாவின் கருணை, அண்ணாரது குடும்பத்திற்கும், அடியேனுக்கும் நிலை பெற்று நின்றிட, நான் அடைந்திட்ட உறவுகளிலேயே, மிக உயர்ந்த உயர்வான அண்ணாரின் ஆசிகளை வேண்டிப் பணிகிறேன்.
'எல்லை என்றில்லாமல் எங்கும் நிறைபவனே
இல்லை எனாதபடி எதிலும் உறைபவனே
எங்கோ பிறந்திருந்த அறியாத அடியேனை
கருணை மனம் கொண்டு காத்தருள செய்தவனே...!'
ஸாய்ராம்.
No comments:
Post a Comment