Wednesday, December 8, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 201. 'கர்ம வினைகளின் செயல்பாடுகளும்... நமது எதிர்கொள்தலும்...'


இன்றைய நாள்... காலை விழிப்புடன் ஆரம்பிக்கிறது. அதுவரை, நமக்குள்ளேயே அமிழ்ந்திருந்த ஜீவன், அதிலிருந்து வெளிப்பட்டு, அன்றைய 'கர்ம வினைகளை அனுபவிக்கத் தயாராகிறது.

அன்றைய நாளுக்கான  திட்டங்களை, நமது 'கர்ம வினைகள்' முன் வைக்கின்றது. உதாரணமாக... வழக்கம் போல, அலுவலகம் செல்வது. அலுவலக நண்பர் ஒருவரின் குடும்ப விழாவில் கலந்து கொள்வது.

இதற்கேற்ப, அலுவலக நேரத்திற்கு சற்று முன்னதாகவே கிளம்பி, நண்பர் வீட்டு விஷேசத்தில் கலந்து கொண்டு விட்டு, சரியான நேரத்திற்கு அலுவலகம் சென்று விடுவது... என்ற திட்டத்தை தீட்டுகிறோம். அப்போது, நெருங்கிய உறவினர் ஒருவர், திடீர் உடல் நலக் குறைவினால், மருத்துவமனையில் அனுமதிருப்பதைப் பற்றிய  செய்தி வந்து சேருகிறது.

தற்போது, நமக்கு முன், நம்மால் திட்டமிடப்பட்ட இரண்டு நிகழ்வுகளும்... நம்மால் திட்டமிடப்படாத, எதிர்பார்க்காத ஒரு நிகழ்வும்... வந்து நிற்கின்றன. இதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதைப் பொருத்துதான், அந்தக் கர்ம வினைகள் விளைவிக்கும் விளைவுகள் (பாபம் - புண்ணியம்) நம்மை வந்து சேரப் போகின்றன.

- அலுவலகக் கடமை நமக்கு விதிக்கப்பட்டது.

- உறவினரின் உடல் நலகுறைவும் நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளுள் ஒன்றாகிறது.

- அலுவலக நண்பரின் குடும்ப விழா நிகழ்வு, நமக்கு விதிக்கப்படாத கடமையாக இருந்தாலும், அதில் கலந்து கொள்ளாவிடில், அந்த நண்பரை அலுவலகத்தில் எதிர் கொள்வது சங்கடத்தை ஏற்படுத்தும். 

இப்போது, இந்த மூன்று நிகழ்வுகளையும் நாம் எதிர்கொள்வது நமது கைகளில்தான் இருக்கிறது.

முதலில் அலுவலகத்தில் அரை நாள் விடுப்பைக் கேட்பது. இரண்டாவது, நண்பரின் குடும்ப விழாவிற்கு சற்று முன்னதாகவெ சென்று, நமது நிலைமையை விளக்கி, வாழ்த்துக்களையும், பரிசையும் கொடுப்பது. மூன்றாவதாக, மருத்துவமனைக்குச் சென்று உறவினருக்கு உதவி செய்வது. இறுதியாக அலுவலகம் சென்று நமது கடமையை பூர்த்தி செய்வது... என்பதாக நமது செயல்கள் அமையும் போது, விதிக்கப்பட்ட கடமைகளை மட்டுமல்ல விதிக்கப்படாத கடமையையும், முழுமையாகப் பூர்த்தி செய்தவராகிறோம்.

இதைத்தான், 'நமது வாழ்வு நமது கைகளில்தான் இருக்கிறது...' என்ற வாசகம் நமக்கு உணர்த்துகிறது.

ஸாய்ராம்.





 



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...