பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனை ஒன்றிருந்து அங்கே பரமயோகி
ஒக்கத்தன் அருள் விழியால் என்னை நோக்கி
ஒரு குட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுள்ளே தன்விம்பங் காட்டி
'அறிதிகொலோ" எனக்கேட்டான் 'அறிந்தேன்' என்றேன்
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான் யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.
தேசிகன் கைகாட்டி எனக்குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க்கு உணர்த்துகின்றேன்.
'வாசியைநீ கும்பத்தால் வலியக் கட்டி
மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்
தேசுடைய பரிதியுருக் கிணற்றினுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்
பேசுவதில் பயனில்லை அனுபவத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்' என்றான்.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment