Saturday, December 25, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 207. திரு. A. M. ராஜகோபாலன் அவர்கள்.


திரு. ஏ. எம். ராஜகோபாலன் அவர்கள், 'தினமணி' மற்றும் 'குமுதம் ஜோதிடம்' போன்ற பத்திரிக்கைகளின் வழியாக, இலவச ஜோதிடப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். ஜோதிடப் பணியுடன் இணைந்து, ஆன்மீகத்தையும், தேசப் பற்றையும் வளர்த்த உத்தமர் என்றால் மிகையாகாது.
 
அவரது ஆழ்ந்த ஜோதிட ஞானமும்... ஒரு ஜாதகத்தை முறையாக ஆய்வு செய்து, அவர் அளிக்கும் அறிவுரைகளும்... புரதான நூல்களிலிருந்து அவர் எடுத்துக் காட்டும் உவமைகளும், பரிகாரங்களும்... எண்ணற்றவர்களுக்கு வழி காட்டுதலாகவும், நிவாரணமாகவும் அமைந்திருக்கின்றன.

அவரது ஆன்மீக வழியிலான எளிய பரிகாரங்கள், வாசகர்களை எண்ணற்ற புரதான ஆலயங்களின் தரிசனங்களுக்கு வழி காட்டியது. அதனால், அந்தப் புரதான ஆலயங்களைப் பற்றி வாசகர்கள் அறிந்து கொண்டதுடன், அந்த ஆலயங்களின் புனரு ஸ்தானங்களுக்கும் வழிகாட்டி, தமிழகத்தின் எண்ணற்ற ஆலயங்கள் புத்தொளி பெருவதற்கு வழிவகுத்தன.

அவரது கட்டுரைகள், நமது தேசத்தின் வரலாற்றை, இளஞர்கள் உட்பட அனைவரும் அறிந்து கொள்வதற்கும்... நமது நாடு இருந்த செழிப்பான பொற்காலத்தையும்... படையெடுப்புகளால் நாம் இழந்த செல்வம், ஆன்மீகம், கலாச்சாரம் போன்ற இருண்ட காலத்தையும்... அவற்றையெல்லாம் கடந்து, நாம் அடையப் போகும் பெருமை மிகு மேன்மையையும்... நம்பிக்கையுடன் சுட்டிக் காட்டின.

அவரது இடைவிடா சேவைக்கு இறைவனும்... சத்குருவும் அளித்த அனுபவங்களை அவரே பகிர்ந்திருக்கிறார். 

அவரது 'திருக்கைலாய யாத்திரையின்' போது, ஒரு பனிப்புயலில் சிக்கிய அவரது குழுவினருக்கு, ஒரு வேடன் வழிகாட்டி தனது குடிசைக்கு அழைத்துச் சென்றதையும், அங்கிருந்த அவனது மனைவியும், இரு ஆண் குழந்தைகளும், அவர்களுக்கு உணவளித்து, கம்பளிகள் கொடுத்து உதவியதையும்... அடுத்த நாள் அந்த வேடனின் வழிகாட்டுதலுடன் யாத்திரையை பூர்த்தி செய்ததையும்... விடுதிக்கு வந்து சேர்ந்த போதுதான், அவர்கள் சுட்டிக் காட்டியபடி அவ்வாறு ஒரு இடமோ, மனிதர்களின் இருப்போ, அங்கிருக்க வாய்ப்பே இல்லை என்று, வாழிகாட்டிகள் கூறியதையும்... அப்படியென்றால், அவர்கள் அனுபவித்தது, 'திருக்கைலாய நாதர்களின் குடும்ப தரிசனம்தான்' என்பதை அவர்கள் உணர்ந்ததையும்... மயிர் கூச்செரிய அவர் விவரித்திருப்பார்.

அவரது 'மந்த்ராலய தரிசனத்தின்' போது, துங்கபத்ராவைக் கடக்க அவர் தனது மனைவி, குழந்தைகளுடன், ரயில் பாலத்தில் நடந்து செல்லும் போது, எதிர்பாராத விதமாக எதிரே வேகமாக ரயில் வருவதையும்... பாலத்தில் அமைந்திருந்த ஒதுங்கும் பகுதி தொலைவில் இருந்ததையும்... அதை அடையும் முன்பே ரயில் வந்து விடும் என்பதை உணர்ந்து பதைப் பதைத்து, 'பகவான் ஸ்ரீ ராகவேந்திரரைத்' துதித்ததையும்... எங்கிருந்தோ ஒரு சக்தி வந்து அவர்கள் அனைவரையும் இழுத்து, அந்த ஒதுங்கும் பகுதியில் சேர்த்த அற்புதத்தை, 'திரு.அம்மன் சத்யநாதன், அவர்கள், தனது 'ராகவேந்திரர் மகிமை' என்ற புத்தகத் தொகுப்பில், அற்புதமாக விவரித்திருப்பார்.

இந்த நூற்றாண்டின் ஜோதிட நிபுணர்களின் வரிசையில் இவர், ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார் என்பதை பெருமையுடன் குறிப்பிடலாம்.

ஸாய்ராம்.
    

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...