Thursday, December 9, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 202. 'சனி பகவானும், 8 ஆம் எண்ணும்...'


எண் கணித ஜோதிடத்தில், எண் 8... சற்று ஆழ்ந்து கவனிக்க வேண்டிய எண்ணாக இருக்கிறது.

8, 17 மற்றும் 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்... தேதி, மாதம் மற்றும் வருடத்தைக் கூட்டி வரும் எண் 8 ஆக அமையப் பெற்றவர்கள்... தனது பெயரின் ஆங்கில எழுத்துக்களின் எண் கணித எண்களைக் கூட்டி வரும் தொகை 8 ஆக அமையைப் பெற்றவர்கள்... இந்த 8 என்ற எண்ணின் ஆதிக்கத்துக்குள் வந்து விடுகிறார்கள்.

எண் கணித ஜோதிடத்தில் இந்த 8 என்ற எண், நவக்கிர நாயகரான 'சனி பகவானைக்' குறிப்பதாக வகுக்கப்பட்டிருக்கிறது. ஜாதகத்தில் 'சனி பகவான்' வெளிப்படுத்தும் 'கர்ம வினைகளின் விளைவுகளை', இந்த எண் பிரதிபலிப்பதை அனுபவத்திலும்  காணமுடிகிறது.

ஒருவரது ஜாதகத்தில் 'சனி பகவான்', திரிகோணாதிபதியாகவோ... கேந்திராதிபதியாகவோ... அமைந்து, ஜாதகத்தில் வலுத்திருக்கும் பட்சத்தில், 'சனி பகவான்' வெளிப்படுத்தும் 'கர்ம வினைகளின் விளைவுகள்' இந்த 8 என்ற எண்ணில் நடைபெறுவதில்லை. மாறாக, 5 (புத பகவான்), 6 (சுக்கிர பகவான்) அல்லது ஜாதகத்தில் வலுத்திருக்கும் கேந்திராதிபதிகள் (1, 4, 7, 10) அல்லது தன லாபாதிகளின் (2, 11) எண்களின் ஆதிக்கத்தில் நடைபெறுகின்றன.

அதே நேரத்தில், 'சனி பகவான்' வலு இழந்து, மறைவு, மாரக, பாதக ஸ்தானங்களில் அமைந்திருக்கும் பட்சத்தில், அவர் வெளிப்படுத்தும் கர்ம வினைகளின் விளைவுகள், இந்த 8 ஆம் எண்ணில் நடைபெறுவதைக் கண் கூடாகக் காண முடிகிறது. 

அது, 8, 17 மற்றும் 26 ஆம் தேதிகளிலோ... தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டி வரும் எண் 8 ஆகவோ... சனிக் கிழமையிலோ... சனி பகவானின் சாரம் பெற்ற நட்சத்திரங்களிலோ, சனி பகவானின் ஹோரையிலோ... ஜாதகத்தில் சனி பகவானுடன் தொடர்பு பெற்ற கிரகங்களின் ஹோரைகளிலோ... நடைபெறுவதைக் காணமுடிகிறது.

நமக்கு நிகழும் 'கர்ம வினைகளின் விளைவுகளை' நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பது எவ்வளவு நிதர்சனமோ, அது போல, நாம் நிகழ்த்துவதாக இருக்கும் கர்ம வினைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பதும் நிதர்சனம்தான்.

ஆகவே, இந்த 8 ஆம் எண்ணின் ஆதிக்கத்திற்குள் இருப்பவர்கள், தாங்கள் மேற்கொள்ளும் செயல்களை, இந்த 8 என்ற எண்ணின் ஆதிக்கத்திற்குள் வராமல் பார்த்துக் கொள்வதும்... 8 ஆம் எண்ணிற்கு சாதகமாக இருக்கும் 5 (புத பகவான்), 6 (சுக்கிர பகவான்), என்ற எண்கள் அமையும் நாட்களிலோ அல்லது தங்களுக்கு யோகாதிபதிகளாக இருக்கும் எண்களின் ஆதிக்கம் நிறந்த நாட்களிலோ... மேற்கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.

ஜோதிடம் என்பது கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு இருந்தாலும், எண் கணிதங்களை அடிப்படையாகக் கொண்டு இருந்தாலும், அது ஒரு 'வழி காட்டிதான்'. அது காட்டும் வழியில் பயணிப்பதற்கு 'இறைவனின் அருள்' மட்டும்தான் தேவைப்படுகிறது.

ஸாய்ராம்.




No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...