Sunday, January 31, 2021

அட்டாங்க யோகம் : 'பிரத்யாகாரம்'


பிரத்யாகாரம் - 'உலக விவகாரங்களிலிருந்து விடுபடல்'

உலக விவகாரங்களிலேயே மூழ்கி, அதன் 'இன்ப - துன்பம்' என்ற, இரட்டைச் சுழற்சிகளால் அல்லலுற்று... 'போதும், இந்த உலகத்துடனான பிணைப்பு...' என்று முடிவுக்கு வருகிறது... ஜீவன்.

அப்போதுதான் அதன் பயணம், என்றும் உள்ளிருந்து அருளும் 'நிலையான...நிம்மதியான... ஆனந்தத்தில்' திளைத்துக் கொண்டிருக்கும் 'ஆத்மாவுடன்', தன்னை பிணைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. அதுதான், 'யோகம்' என்ற சேர்க்கையாகிறது.

அந்தப் பாதையில் தானாக முன் வந்து முயற்சித்து, இறைவனின் மீது 'பக்தியை' (இயமம்) வளர்த்து... தன்னை ஓர் 'ஒழுங்குக்குள்' (நியமம்) கொண்டு வந்து... தனக்கு வசதியான ஓர் இருப்பு நிலையில் (ஆசனம்)  அமர்த்திக் கொள்கிறது.

அந்த முயற்சியின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்கிற 'ஆத்மா', ஜீவனின் நன்மையைக் கருதி... ஜீவனின் 'ஆன்மீகத் தகுதிக்கு' ஏற்ப.. 'இறைவனிடமோ' அல்லது 'ஒரு சத்குருவிடமோ' கொண்டு சேர்க்கிறது. அந்த 'இறையருளோ' அல்லது 'சத்குருவின் கருணையோ', அந்த ஜீவனுக்கு 'வழிகாட்டுதல்' என்ற 'தீக்ஷையை' அளித்து,' பிரணாயாமம்' என்ற 'ஜீவ சக்தி வாயுவைக் கவனிக்கும் ஆற்றலை' அளிக்கிறது.

எப்போது, அந்த ஆற்றல் அனுபவமாகிறதோ... அப்போதிருந்துதான், ஜீவனின் 'மனம்' என்ற 'மாயா சக்தி', உலக வாழ்விற்கு இழுத்துச் செல்லும், எண்ணங்கள் என்ற தொடர் அலைகளின் பிடியிலிருந்து விடுபடுகிறது. இவ்வாறு எப்போது, தனது கவனத்தை முழுவதுமாக, 'ஜீவ சக்தியான' வாயுவின் சீரான ஓட்டத்தில் வைக்கிறதோ... அப்போதுதான் 'பிரத்யாகாரம்' என்ற 'உலக விவகாரங்களிலிருந்து விடுபடல்' என்ற, 'அட்டாங்க யோகத்தின்', ஐந்தாம் படி நிலை பூர்த்தியாகிறது.

ஸாய்ராம்.


Friday, January 29, 2021

அட்டாங்க யோகம் : 'பிரணாயாமம்'


'யோகம்' என்ற, உடலுடன் சங்கமித்திருந்த ஜீவனின்... ஆத்மாவுடன் சங்கமிப்பதற்கான பயணத்தில், முதல் மூன்று  படி நிலைகளான இயமம்... நியமம்... ஆசனம்... என்ற படி நிலைகளை, தனது சொந்த முயற்சியினாலேயே கடந்து விடலாம்.

நான்காவது படிநிலையான 'பிரணாயாமம்' என்ற நிலையைக் கடப்பதற்கு, ஒரு குருவின் துணை அவசியமாகிறது. ஏனெனில், பிரணாயாமம் என்பது, ஜீவனின், ஜீவ சக்தியான வாயுவை, ஒழுங்கு படுத்துதல் அல்லது நேராக்குதல் என்பதாகும். (பிராணன் - வாயு... ஆயமம் - நேராக்குதல்)

இது, மூச்சுப் பயிற்சி மட்டுமல்ல. அதன் நீட்சியாகும். மூச்சுப் பயிற்சி என்பது, நுரையீரலில் முழுமையாக காற்றை நிரப்புவதும்... பின் அதனின்று காற்றை வெளிவிடுவதுமான... சீரான பயிற்சி முறை. இந்தப் பயிற்சி, நுரையீரலிலிருந்து வெளிப்படும் காற்று தொண்டை வழியாக, மூக்கின் துவாரங்கள் வழியாகவும்... வாய் வழியாகவும்... சிரமமின்றி, உள் வெளிப் பயணங்களை மேற்கொள்ளும் பயிற்சி முறையாகும்.

ஆனால், பிரணாயாமம் என்பது,உள் வெளி சுவாசத்தை மாற்றி... அதை பிரம்மாந்திரம் என்ற சிரசின் உச்சிப் பகுதியை நோக்கி... செலுத்தும் பயிற்சி முறையாகும். அதனால்தான், இதை பயில, முறையான யுக்தியுடன் கூடிய பயிற்சி முறை தேவைப்படுகிறது. அதற்கு, இந்தப் பயிற்சி முறையை நன்கு அனுபவித்து அறிந்தவரின் துணையைக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு, நன்கு அனுபவித்து அறிந்த ஒரு குருவின் 'தீட்சை' என்ற வழிகாட்டுதலின் வழியாகத்தான், இந்த நான்காவது படி நிலையைக் கடக்க முடியும். இந்தப் படி நிலையை முறையாகப் பயின்றால்தான்... தொடரும் நான்கு படி நிலைகளையும் கடந்து, அட்டாங்க யோகத்தை பூர்த்தி செய்யலாம்.

ஸாய்ராம்.


Wednesday, January 27, 2021

அட்டாங்க யோகம் : 'ஆசனம்'


 உடல் சார்ந்த உலகியல் வாழ்வில் மூழ்கியிருந்த ஜீவன்,,, 'இயமம்' என்ற பக்தியின் வழியாக, ஒழுங்கு முறையிலான 'நியமமான' வாழ்வியல் படி, 'உள் வாழ்வு' என்ற 'ஆத்ம நிலை ஒன்றுதலுக்குத்' தகுதி பெறுகிறது.

இந்தப் படி நிலை மாற்றங்கள் ஜீவனை, 'ஒரு சுகமான இருப்பு நிலை' என்ற 'ஆசன முறைக்கு' தயார் படுத்துகிறது. 'தவம்' என்ற உள் நிலைப் பயணத்தில் பங்கு பெறும் ஜீவன், தனது உடலை முறையாகத் தயார் செய்து கொள்வது அவசியம்.

ஒவ்வொரு நொடியும், மாற்றமடைந்து கொண்டு இருப்பதும்... அழிவை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்குபதுமான... இந்த உடலில்தான், என்றும் அழிவில்லாத 'ஆத்மா' என்ற 'பரம் பொருள்' உறைந்திருக்கிறது. ஆகவே, இந்த உடலை சரியான முறையில் பேணிக் காப்பது அவசியமாகிறது. 

எவ்வாறு ஒரு பயணத்திற்கு முன்பாக, நாம் பயணிக்க்கும் வாகனத்தை, முறையாகப் பேணிப் பாதுகாக்கிறாமோ... அது போல, நமது இலக்கான, 'இறைவனின் திருவடியை' அடைவதற்கு ஆதாரமாக இருக்கும் இந்த உடலையும் முறையாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதிகமாகப் போஷிப்பதும் கூடாது... கவனக் குறைவாக இருப்பதும் கூடாது.

நமது வயதிற்கு ஏற்பவும்... நமது உடல் நிலைக்கு ஏற்பவும்... ஒரு 'ஆசன முறையைத்' தேர்ந்தெடுத்துக் கொள்வதுதான் முறை. எல்லோரும் இயல்பாக அமரும் 'சுகாசனம்'... சற்று பயிற்சிக்குப் பின் அமரும் 'அர்த்த பத்மாசனம்'... முழு முழுமையான 'பத்மாசனம்'... என்று, எந்த ஆசன முறை நமக்கு இயல்பாகிறதோ... அந்த ஆசன முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு, பக்தி என்ற 'இயமமும்'... ஒழுங்கு முறை என்ற 'நியமமும்'... இறைவனை நோக்கிய தியானத்திற்கான 'ஆசனமும்'... அட்டாங்க யோகத்தின், முதல் மூன்று படி நிலைகளைப் பூரணமாக்குகின்றது.

ஸாய்ராம். 


Tuesday, January 26, 2021

அட்டாங்க யோகம் : 'நியமம்'


உடல் சார்ந்த 'உலக வாழ்வில்' மூழ்கிக் கிடக்கும் ஜீவன்.. 'இயமம்' என்ற பக்தியின் வழியாக... ஆத்மாவில் ஒன்றிவிடும் பாதையில் பயணிக்கும் போது, 'நியமம்' என்ற ஒழுங்கு முறையிலான வாழ்க்கை இயல்பாகவே அமைந்து விடுகிறது.

பக்தியில்லாத, ஒழுங்கு முறையான வாழ்வு, பூரணமான வாழ்வாக அமையாது. ஒழுக்கம் என்பது உடல் மட்டும் சார்ந்தது அல்ல... உள் வாழ்வும் சார்ந்ததுதான். உள்ளும்... புறமும்... ஒரே நிலையில் இருக்கும் தன்மையே... ஒழுக்கத்தின் அளவு கோளாகும்.

முதலில் கவனத்துடன் கூடிய எண்ணமும்... அந்த எண்ணத்திற்கு ஏற்ப வெளிப்படும் சொற்களும்தான்... இறுதியில், ஒரு நிறைவான செயலாக மாறுகிறது. இவ்வாறு, எண்ணம்... சொல்... செயல்... என்ற மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமையும் போது, உள்ளும்... புறமும்... ஒரே நிலையில் இருக்கும் தன்மையை ஜீவன் பெறுகிறது.

இயமம் என்ற பக்தியில் மூழ்கிய ஜீவன், நியமம் என்ற ஒழுங்கு முறையான வாழ்வில் பயணிக்க ஆரம்பிக்கும் போது, அட்டாங்க யோகத்தின் இரண்டாவது படி நிலை பூர்த்தியாகிறது.

ஸாய்ராம்.


Sunday, January 24, 2021

அட்டாங்க யோகம் : 'இயமம்'


யோகம், என்பது சேர்க்கை.

'உலக வாழ்வுக்கு' ஆதாரமாக இருக்கும் 'உடலுடன்', 'ஜீவன்' ஒன்றும் போது... அந்த சேர்க்கை, ஜீவனை 'உலக வாழ்வில்' ஆழ்த்திவிடுகிறது.

அதுவே, என்றும் நிலைத்திருக்கும் 'ஆத்மாவில்', 'ஜீவன்' ஒன்றும் போது... அந்த சேர்க்கை, ஜீவனை 'உள் வாழ்வு' என்ற 'ஆத்ம ஞானத்தில்' ஆழ்த்திவிடுகிறது.

எவ்வாறு, உலக வாழ்வுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ள எண்ணற்ற முயற்சிகளை மேற்கொள்கிறோமோ... அது போல உள் வாழ்வு என்ற ஆத்ம ஞான வாழ்வுக்கும், எண்ணற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

எல்லாவித உலக வாழ்வுக்கான முயற்சிகளுக்கும் ஆதாரமாக இருப்பது 'புத்திசாலித்தனம்'. அதற்கு மூலமாக இருப்பது 'அறிவு'. அதுபோல, ஞான வாழ்விற்கு ஆதாரமாக இருப்பது 'ஞானம்'. அதற்கு மூலமாக இருப்பது 'பக்தி' இந்த பக்தியைத்தான், யோக சாதனைகள் என்ற உள் வாழ்வுப் பயணத்தின் முதல் படியாக, 'இயமம்' என்ற யோக சாதனையாகக் கொள்கிறது 'அட்டாங்க யோகம்'.

இந்த ஜீவனின் பிறப்புக்கு மூலமாகவும்... அதன் 'கர்ம வினைக்ளைக் களைவதற்கு' ஆதாரமாகவும்... ஜீவனின் வாழ்வு முழுவதுக்கும், ஒரு சாட்சியாகவும்... ஜீவனை மீண்டும் தனக்குள்ளேயே ஒன்றிவிடச் செய்யும் ஞானத்தை அருள்பவராகவும்... இருப்பவதான், 'பரம் பொருளான இறைவன்'. அவர் மீது வைக்கும், அன்பும்... விசுவாசமும்... நம்பிக்கையும்தான்... பக்தி என்ற உன்னத யோகத்தின் முதல் படியாகிறது.

எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்... நமக்கு, இந்த அரிய மானுடப் பிறப்பை நல்கியவரின் மீது, நாம் வைக்கும் அன்பே... பக்தியாகக் கனிந்து... அதுவே, அவரை அடையும் 'யோக வாழ்வின்', முதல் படியான 'இயமமாகிறது'.

ஸாய்ராம்.



Saturday, January 23, 2021

'இரசவாதம்', உணர்த்தும் சூட்சும இரகசியம்...


இரசவாதம் :

'மிகவும் கீழான உலோகமாகக் கருதப்படும் இரும்பை, மிக உயர்ந்த உலோகமான தங்கமாக மாற்றும் முறை.'

இரும்பைப் பொன்னாக்கும் வித்தையையும்... சித்த மகா புருஷர்களையும்... இணைத்துப் பார்க்கும் வழக்கம், எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஆனால், சித்த மகா புருஷர்கள், 'சித்தம்' என்ற எண்ணங்கள் தோன்றும் மூலத்திலேயே ஒன்றியவர்கள். சித்தத்தை சுத்தமாக்கி.. அந்த மூலத்திலேயே நிலைத்து நின்றதால்தான்... 'சித்த புருஷர்கள்' என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களிடமிருந்து...'இரும்பைப் பொன்னாக்கும் வித்தை எங்களிடம் இருக்கிறது...' என்ற வாசகம் பொய்யாகுமா...!

அவர்கள், இரும்பு என்ற உலோகத்தை... பொன் என்ற உலோகமாக... மாற்றுவதைக் குறிப்பிடவில்லை.வெகு சீக்கிரமாகவே துருப்பிடித்து உதிர்ந்து போகக் கூடிய ஒரு உலோகம்... நிலைத்து நிற்கக் கூடிய ஒரு உலோகமாக மாற்றம் நடைபெற வாய்ப்பில்லை... என்பதை அறியாதவர்களா ? அவர்கள். அவர்கள் குறிப்பிட்டது, மாற்றமடைந்தே கொண்டிருக்கும் இந்த 'உடலையும்'... என்றும் மாற்றமடையாமல் இருக்கும் 'ஆத்மாவையும்'தான். 

இந்த உடல் ஜனனத்திலிருந்து ஒவ்வொரு நொடியும் மறைவை நோக்கிய பயணத்தில்தான் பயணிக்கிறது. ஆனால், அந்த உடலுக்கும், உடலுக்குக் காரணமான ஜீவனுக்கும்... என்றும் உயிர்ப்பைத் தந்து கொண்டிருக்கிற 'ஆத்மா' என்றும் மாறாது இருக்கின்றது.

இவ்வாறு, 'அழிந்து போகும் உடலுக்கும்'... 'அழிவில்லாத ஆத்மாவிற்கும்'... இடையிலிருக்கும் ஜீவனுக்கான, அனுபவ உரையாகத்தான்... இதை எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஜீவனுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறார்கள்... சித்த புருஷர்கள். அது, அழிந்து கொண்டிருக்கும் இரும்பைப் போன்ற உடலுக்கு இடம் கொடுப்பதா...? அல்லது, என்றும் நிலைத்து நிற்கும் ஆத்மாவுக்கு இடம் கொடுப்பதா... ? என்பதுதான்.

உடலுக்கு இடம் கொடுக்கும் போது, மீண்டும் பிறப்பு என்ற நிலையாமைக்கும்... ஆத்மாவுக்கு இடம் கொடுக்கும் போது, பிறப்பற்ற நிலைத்தலையும்... நோக்கி ஜீவன் பயணிக்கிறது. இந்த 'இரசவாதத்தைத்தான்', சித்தர்கள் அருளியிருக்கிறார்கள்.

ஸாய்ராம்.


ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 150. 'நிழல் கிரகங்கள் என்று ஏன் அழைக்கிறோம்...?'


 பிரபஞ்ச நாயகரான 'சூரிய பகவானைச்' சுற்றி வரும் 'புத பகவான், சுக்கிர பகவான், செவ்வாய் பகவான், குரு பகவான், சனி பகவான்', இவர்களுக்கிடையே 'உயிரினங்களைத் தாங்கியிருக்கும் ஒரே கோளான 'பூமித் தாயாரைச்' சுற்றி வரும் உப கோளான 'சந்திர பகவான்'... உட்பட்ட 7 கிரகங்களின் ஈர்ப்புகள்... பூமிக்கும், பூமியில் வாழும் உயிரினங்களுக்கும் ஏற்படுத்தும் தாக்கங்களை, வேதத்தின் அங்கமான 'ஜோதிடக் கலை' விவரிக்கிறது.

இந்த 'ஜோதிடக் கலை', கணக்கியலையும், வானியல் சாஸ்த்திரத்தையும் உள்ளடக்கிய கலையாக இருந்ததினால், நமது புரதான ரிஷிகள் தங்களது 'அந்தர் ஞானம்' என்ற 'உள்ளுணர்வின்' மூலமாக, முழுமையான விதிகள் அடங்கிய கலை வடிவமாகவும், துல்லியமான கணக்கீடுகள் கொண்ட 'நாட் குறிப்பு' என்ற 'பஞ்சாங்கமாகவும்' வகுத்தளித்தார்கள்.

ரிஷிகளின் காலம் 'கிருத யுகமாக' இருந்ததனால், ஜீவர்களின் வாழ்வு தர்மத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது. ஜீவர்கள் அனைவரும் தர்மத்தின் வழியேயே வாழ்க்கை நடத்தினர். தர்மத்தின் வழியேயான வாழ்வு... ஜீவர்களை மீண்டும் பிறப்பற்ற நிலைக்குக் கொண்டு சென்றது. ஆதலால், ஜோதிடக் கலையின்' பங்கு, இறைவனை சென்றடையும் பாதையை மட்டும் காட்டுவதாக இருந்தது. அதற்கு 7 கிரகங்களின் வழியேயான கணிப்புகள் மட்டுமே போதுமானதாக இருந்தது.

 தொடர்ந்த 'திரேதா யுகம்... துவாபர யுகம்... கலியுகங்களில்...' தர்மத்தின் வழியேயான வாழ்வில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. முழுமையான தர்மவாழ்வு, நான்கில் மூன்று பங்காகவும், பின் இரண்டு பங்காகவும் இறுதியில் கலியுகத்தில், தர்மத்தின் வழியேயான வாழ்வு நான்கில் ஒரே பங்காகவும் மாறுதல் அடைந்திருக்கிறது.

அதற்குக் காரணம், ஜீவர்கள் தர்மம் என்ற 'இறைவழிப் பாதையிலிருந்து' விலகி... அதர்மத்திற்கு வழி வகுக்கும் 'இரட்டைச் சூழல்கள்' நிறைந்த, 'உலக வாழ்வில் மூழ்கிதினால்தான். இன்பத்தை துய்க்கும் பாதையிலேயே சென்றதால்... தர்மத்தை விட்டு விலகினர். அதனால், 'பாப - புண்ணியங்கள்' என்ற'கர்ம வினைகளின்' கணக்கிற்கு 'அச்சாரம்' இட்டனர். 

'கர்ம வினைகளின் சுழற்சிகளினால்', மீண்டும், மீண்டும் பிறப்பெடுக்கும் 'பிறவிப் பிணியில்' சிக்கித் தவித்து... இறைவனை அடையும் பாதையிலிருந்து வெகு தூரம் விலகினர். கண்களைத் திறந்து, பின் கண்மூடும் வரையிலான காலம் முழுவதும். நம்மைத் தொடரும் நிழல் போலவே... பிறவிகள் தோறும் தொடரும் 'கர்ம வினைகளும்' ஜீவனை, 'நிழல் போல' தொடர ஆரம்பித்தது.

இவ்வாறு நிழல் போலத் தொடரும் 'கர்ம வினைகளைத்தான்'... ஜோதிடக் கலையில்,'நிழல் கிரகங்களான'... 'ராகு பகவானும் - கேது பகவானும்.. ஏனைய 7 கிரகங்களுடன் இணைந்து... ஜீவனின் ஒவ்வொரு பிறவியிலும் பிரதிபலிக்கிறார்கள். 'கர்ம வினைகளின் சுமையை'... ராகு பகவானும், அதிலிருந்து 'விடுபட்டு இறைவனை அடையும் மோக்ஷத்தின்' பாதையை... கேது பகவானும்... சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஆதலால்தான், 'ராகு - கேது பகாவான்களை'... 'நிழல் கிரகங்கள்' என்று வருணித்து... ஏனைய 7 கிரகங்களுடன் இணைத்து... 'நவக்கிரகங்களாக்கி'... அவைகளின் அமைவுகளுக்கு ஏற்ப, ஜீவனை 'உலக வாழ்விலிருந்து' மீட்டு... என்றும் உறையும் 'இறைவாழ்வில்' இணைப்பதுதான்... ஜோதிடக் கலையின் நோக்கமாக இருக்கிறது.

ஸாய்ராம்.



Friday, January 22, 2021

கவிதைத் தொகுப்பு - மாற்றமடைவதற்குள்... மாறாதிருப்பது... !'


கணுவின் மாற்றம் மொட்டு

மொட்டின் மாற்றம் பூ

பூவின் மாற்றம் காய்

காயின் மாற்றம் கனி - இதில்

விதைக்கு மட்டும், என்றும் அழிவில்லை !


பாலின் மாற்றம் தயிர்

தயிரின் மாற்றம் மோர்

மோரின் மாற்றம் வெண்ணை

வெண்ணையின் மாற்றம் நெய் - இதில்

நெய்க்கு மட்டும், என்றும் அழிவில்லை !


உயிரின் மாற்றம் கரு

கருவின் மாற்றம் உடல்

உடலின் மாற்றம் முதுமை

முதுமையின் மாற்றம் மறைவு - இதில்

உயிர்க்கு மட்டும், என்றும் அழிவில்லை !


ஸாய்ராம்.





கவிதைத் தொகுப்பு - 'இயற்கையின் அழகென்றும் குறைவதில்லை...'


மேகங்கள் வானில், ஒரே ஒழுங்கில் போவதில்லை

கரைபுரளும் அலைகள் யாவும், ஒரே ஒழுங்கில் வருவதில்லை

வீசும் காற்றும், காய்க்கும் கனலும்

ஓடும் நதியும், பொழியும் மழையும்

எப்போதும் ஓர் ஒழுங்கில் இருப்பதில்லை - ஆனாலும்

இயற்கையின் அழகென்றும் குறைவதில்லை !


தலை வாரிக் கொள்ளாத மலர்களும்

முகப் பூச்சு இல்லாத மலர்களும்

ஆடைகள் மாற்றாத உயிரினங்களும்

மெத்தை விரிக்கும் சருகுகளின் பாதைகளும்

எப்போதும் ஓர் ஒழுங்கில் இருப்பதில்லை - ஆனாலும்

இயற்கையின் அழகென்றும் குறைவதில்ல !


முயன்று, முயன்று ஒழுங்கு படுத்தும் நம்வாழ்வு

சீட்டுக் கட்டுக் கோபுரம் போல

ஒரே கணத்தில் களையும் போது

சீராக இருப்பதும், சீரற்று இருப்பதும்

வாழ்வியலின் இரு நிலைகள் என்ற பேருண்மை புலப்படும்

ஒழுங்காக இருப்பதும், ஒழுங்கு குலைந்து இருப்பதும்

அழகியலின் இரு வடிவம் என்ற அனுபவமும் கை கூடும்.


ஆம்,

எப்போதும் ஓர் ஒழுங்கில் இருப்பதில்லை - ஆனாலும்

இயற்கையின் அழகென்றும் குறைவதில்லை 


ஸாய்ராம்




Thursday, January 21, 2021

கவிதைத் தொகுப்பு - 'இறைவா அருள்வாய்...!'


மூழ்கித் தவிக்கும் எனக்கு - உன்

மூச்சுக் காற்றைத் தந்து விடு !


இருளில் தவிக்கும் எனக்கு - உன்

ஒளியின் கீற்றைத் தந்து விடு !


அனலில் தவிக்கும் எனக்கு - உன்

நிழலின் குளுமை தந்து விடு !


வழியை தொலைத்த எனக்கு - உன்

வழியைக் காட்டித் தந்து விடு !


உன்னைத் தொலைத்து எனக்கு - உனைச்

சேரும் ஞானம் தந்து விடு !


ஸாய்ராம்.


கவிதைத் தொகுப்பு - 'மந்திரத்தில் விளைந்த மாங்காய்'





 

கடுகளவு விதைக்குள்ளே

விரிந்து நிற்கும் விருட்சம் வைத்தான்...


கையளவு ஊற்றுக்குள்ளே

கடல் கலக்கும் வெள்ளம் வைத்தான்...


கண் காணா அணுகளுக்குள்ளே

புயலை யொத்த காற்றை வைத்தான்...


மிகச் சிறிய அரணிக்குள்ளே

வனம் எரிக்கும் அன

லை வைத்தான்...


சிறிய கரு முட்டைக்குள்ளே

சிந்தனை விரியும் மானுடம் வைத்தான்...


சிறியதற்குள் பெரிதை வைப்பதும்,

பெரியதற்குள் சிறிதை வைப்பதும்,

மந்திரத்தால் மாங்காய் விளைவிக்கும் 

மாய விளையாட்டன்றி வேறென்ன... !


ஸாய்ராம்.


Wednesday, January 20, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 149. 'கர்ம வினைகளை உறுதிப்படுத்தும் ஜோதிடக் கலை'


 84 லட்த்திற்கும் மேலான உயிரினங்களைக் கொண்டதாக, இந்த பூமி இருக்கிறது, என்பதை வேதம் உறுதி செய்கிறது.

இவ்வளவு மாறுபட்ட உயிரினங்களுக்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதற்கு. 'நமது வேதங்கள்' மட்டுமே தெளிவான விளக்கங்களைக் கொடுத்திருக்கிறது. பிறவிகளுக்குள்ளேயான மாறுபாடுகளுக்கு, அவற்றின் 'கர்ம வினைகளே' காரணம் என்பதை... அதன் அங்கமான 'ஜோதிடக் கலையின்' வாயிலாக, நிரூபணமும் செய்திருக்கிறது.

உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சிகளெல்லாம், 'தொடர் பிறவிகள்' என்ற இந்தியர்களின் மெய்ஞானத்தை நேரடியாக ஒப்புக் கொள்ளாத போதிலும்... நமது புரதான மெய்ஞானத்தின் தீர்வுகளை.. நடைமுறையில் அனுபவித்து அறிந்து கொண்டுதான் இருக்கின்றன.

நமது வேதம், படைப்பவரான பரப் பிரம்மம்... ஒவ்வொரு ஜீவனின் 'கர்ம வினைகளுக்கு' ஏற்பவே, அதற்கு ஒரு பிறப்பை அளிக்கிறார் என்பதையும்... அதனதன் 'கர்ம வினைகளுக்கு' ஏற்பவே, ஜீவர்கள் ஒவ்வொருவரும் பிறப்பையும்... வாழ்வையும் அனுபவிக்கிறார்கள்... என்பதையும் நடைமுறையில் உறுதிப் படுத்துகிறது.

அதற்குச் சாட்சிதான்... உயிரினங்களுக்கு இடையேயும். உயிரினங்களுக்கு உள்ளேயும்... எண்ணற்ற வித்தியாசங்கள் இருப்பது. எந்த ஒரு உயிரினமும் ஒன்றுக் கொன்று மாறுபட்டிருப்பது மட்டுமல்ல... ஒன்றுக்குள்ளேயே மாறுபட்ட வாழ்வை வாழ்கிறது.

உதாரணமாக ஒரு சிறிய உருவமான 'எறும்பு' முதல், பெரிய உயிரினமான 'யானை' வரை... மனிதன் உட்பட, எந்த உயிரினமும், அவைகளுக்கு இடையேயும்... அவர்களுக்கு உள்ளேயும்... ஒரே மாதிரியான வாழ்வை மேற்கொள்வதில்லை.

பகுத்து அறியும் பண்பைக் கொண்டுள்ள மனிதன் உருவாக்கும் எந்த ஒரு உருவாக்கமும் கூட ஒரே மாதிரியாக இருப்பதில்லை . உதாரணமாக, ஒரே மாதிரியான இரண்டு தோசைகளை வார்க்க முடிவதில்லை. 

அப்படியே உருவாக்கங்களை உருவாக்கினாலும், அவற்றின் பயன்கள் ஒரே மாதிரியாக அமைவதுவும் இல்லை. உதாரணமாக, ஒரே மாதிரியாக உருவாக்கப்படும் இரண்டு அரைவை இயந்திரங்கள்... அவற்றின் பயன்பாட்டின் போது, மாறுபட்ட நிலைகளை அடைந்து விடுகின்றன.

இவையெல்லாம் உறுதிப்படுத்துவது, ஒன்றைத்தான்... அதுதான் 'கர்ம வினைகள்' என்ற 'பூர்வ வாசனைகளுக்குள்',  ஜீவர்கள் மட்டுமல்ல... அவர்கள் மூலமாக உருவாக்க்கப்படும் உருவாக்கங்களும்... கட்டுப்பட்டுப் போகின்றன.

இதைத்தான், 'ஜோதிடக் கலை', 'கர்ம வினைகள்' என்றும்... அதனால் விளையும் 'தொடர் பிறவிகள்' என்றும்... வரையறுத்து, அதனை '9 கிரகங்களின் தசாக் காலங்களின்' வழியே... 'கர்ப்ப செல் நீக்கிய இருப்பு' என்று 'ஜனன கால ஜாதகத்தில்' குறிப்பிடுகிறத.

புறப்படும் இடத்தில் ஒன்றாக ஆரம்பிக்கும் ஓட்டப் பந்தயம்... இறுதியில் முதலிடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம்... என்ற வகையில்தான் முடிவடைகிறது. அது போலத்தான், ஒரே மாதிரியாக பிறப்பெடுக்கும் ஜீவனின் வாழ்வும் ஒன்றுக் கொன்று மாறுபட்டு அமைந்து விடுகிறது.

இந்தக் 'கர்ம வினைகளின்' சூட்சுமத்தை, 'ஜோதிடக் கலை' ஒன்றே நிரூபணம் செய்கிறது.

ஸாய்ராம்.


Friday, January 15, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 148. '12 ல் கேது இருந்தால் மோக்ஷமா... ?'


 மோக்ஷம்... என்பது, 'பிறவிப் பிணி' என்ற நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதுதான்.

'பரப் பிரம்ம சொரூபம்'... 'சத்து-சித்து-ஆனந்தம்' என்ற 'ஆத்ம சொரூபத்தை' ஏற்றுக் கொள்வதன் நோக்கமே.. 'ஜீவனின் வாழ்க்கைக்கு' ஆதரமாக இருப்பதற்காகத்தான்..

ஜீவன்... எந்த சொரூபத்திலிருந்து தனது வாழ்விற்கான ஆதாரத்தை ஏற்றுக் கொள்கிறதோ... அந்த வாழ்வை பூரணமாக்கி... மீண்டும் அந்த ஆதாரமான 'ஆத்ம சொரூபத்திலேயே' மூழ்கிக் கலந்து விடுவதற்குப் பெயர்தான்... மோக்ஷம் என்ற முக்தி.

ஆனால், ஜீவனின் வாழ்வு அவ்வாறு இருந்து விடுவதில்லை. தான் சுமந்து கொண்டு வந்திருக்கும் 'கர்ம வினைகளின்' விளைவுகளான பாப புண்ணியங்களுக்கு' ஏற்ப, தான் மேற்கொள்ளும் அல்லது தான் எதிர் கொள்ளும் செயல்களால், தான் தேடிக் கொள்ளும் கர்ம வினைகளின் சுமை' கூடி... அவற்றை அனுபவிக்க மீண்டும்... மீண்டும்... பிறந்து, 'பிறவிப் பிணி' என்ற நீங்க முடியாத சுழலுலுக்குள் சிக்கிக் கொள்கிறது.

அந்த சிக்கலுக்குள், சிக்கிக் கொண்டு மீள முடியாது தவிக்கும் ஜீவன் எப்போது, இந்த உண்மையை உணர்ந்து கொள்கிறதோ... அப்போதுதான், அந்த ஜீவன், தனது 'மோக்ஷத்தின் பாதையில்' பயணிக்க ஆரம்பிக்கிறது.

இந்தப் பயணம்... தான், இதுவரை வாழ்ந்த 'உலகியல் பயணத்திற்கு', நேரெதிரான பயணம். உலக வாழ்வில் இருக்கும் பந்தங்களிலிருந்தும்... அந்த பந்தங்களில் வைத்திருக்கும் பற்றுக்களிலிருந்தும்... முற்றிலுமாக விடுபடுவதற்கான பயணம். 

இந்தப் பயணத்தில் பயணிக்கும் ஜீவனின் பயணம் எவ்வாறு இருக்கும்... ? என்பதை 'ஜோதிடக் கலை' துல்லியமாக விளக்கியிருக்கிறது.

* ஜீவன் முதலில் உலகியல் வாழ்வு நிலையானதல்ல... என்பதை உணர்ந்து கொள்ளும் ஞானத்தைப் பெற வேண்டும். அதற்கு ஜீவனின் லக்னம் மறைவு ஸ்தானங்களில் வலுப்பெற்று அமைந்திருக்கும்.

* அந்த ஞானத்தை அடைவதற்கான பாதையில்... தான் இந்த வாழ்வில் மேற்கொள்ளும் மற்றும் எதிர் கொள்ளும் செயல்களிலான 'பற்றுகளிலிருந்து ' விடுபட்டு... கடமைகளை பற்றற்று, முழுமையான, பூரணமாக, செயல் புரியும் யுக்தியக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு பூர்வ புண்ணியாதிபதியான 5 ஆம் பாவாதிபதியும்... தர்ம ஸ்தானாதிபதியான 9 ஆம் பாவாதிபதியும்  மறைவு ஸ்தானங்களில் வலுப்பெற்று அமைந்திருக்கும்.  

* மேற்கண்ட நெடும் பயணத்திற்கு, ஜீவன் கடந்து போக வேண்டிய பாதை பக்தியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அதற்கு ஜீவனின், ஜீவனம் மற்றும் கர்ம பாவமான 10 ஆம் பாவாதிபதியும், மறைவு ஸ்தானங்களில் வலிமையுடன் அமைந்து, தர்மம் என்ற 9 ஆம் பாவத்துடன் ஒரு தொடர்பை  ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

* ஜீவனின் குடும்ப பாவமான 2 ஆம் பாவமும்... சுகபாவமான 4 ஆம் பாவமும்... களத்திர பாவமான 7 ஆம் பாவமும் வலிமை குன்றி... அந்த பாவாதிபதிபதிகள் மறைவு ஸ்தானங்களில் அமைந்து, லக்னாதிபதியுடன் சம்பந்தம் பெற்றிருக்கும்.

* ஆத்மகாரகனான 'சூரிய பகவானுக்கும்'... மனோகாரகரான சந்திர பகவானுக்கும்... புத்திக் காரகனான 'புத பகவானுக்கும்'... வலிம பெற்ற 'ஞானக் காரகரான 'குரு பகவானின்' அருள் பார்வை கிடைத்திருக்கும்.

* சுகக்காரகரான 'சுக்கிர பகவானும்'... போகக் காரகனான 'ராகு பகவானும்'... தங்களது வலிமையை இழந்திருப்பார்கள்.

* ஆற்றல் காரகரான 'செவ்வாய் பகவான்' வலிமை பெற்று ஜீவன கர்ம பாவத்துடன் தொடர்பைப் பெற்றிருப்பார்.

* ஆயுள் காரகரான 'சனி பகவான்' தனது ஆட்சி மற்றும் உச்ச வீடுகளில் அமைந்து, பலம் பெற்றிருப்பார்.

* மேற்கண்ட அமைவுகள் வலுத்து... மோட்சக் காரகரான 'கேது பகவானோ'... ஞானக்காரகனான 'குரு பகவானோ'... துறவிக் காரகரான 'சனி பகவானோ'... 12 ஆம் பாவத்தில் அமர்ந்திருந்தால்... 'மோக்ஷம்' என்ற வாக்கு பலிதமாகும்.

எப்போது, ஒரு ஜீவனின் வாழ்வு 'தர்மத்துடன் இணைந்த கர்மமாக மலர்கிறதோ'/// அப்போதுதான் மேற்கண்ட அமைவுகளை அந்த ஜீவனின் ஜனன ஜாதகத்தில் நம்மால் கவனிக்க முடியும். 

அதற்கு, ஜோதிடக் கலையை அணுகும், அணுகு முறையில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. அந்த அணுகுமுறை, 'ஒரு ஜீவனின் வாழ்வு, நிலையற்ற உலக வாழ்வை சார்ந்தது மட்டுமல்ல... அந்த உலக வாழ்வை பூரணமாக்கி, மீண்டும் நிலையான 'இறைவனின் திருவடி' என்ற மோக்ஷ வாழ்வையும் சார்ந்தது...' என்ற முறையிலாக இருக்க வேண்டும்.

இதற்கான பாதையில் 'ஜோதிடர்கள்' மட்டுமல்ல... 'ஜாதகர்களும்' பயணிக்க வேண்டும். அப்போதுதான், 'ஜோதிடக் கலை' என்ற 'புரதான ரிஷிகளின்' வழிகாட்டுதல்... அதன் இலக்கான பூரணத்துவத்தை நோக்கிப் பயணிக்கும்.

ஸாய்ராம்.



பந்தமும்... பற்றும்...

நமக்கு உறவுகள் ஏற்படுகின்றன. அவற்றைத் தேர்ந்திடுத்துக் கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைப்பதில்லை. என்றாலும், அவற்றோடுதான் இணைந்து வாழ வேண்டும்... என்ற கட்டாயம் மட்டும் இருக்கிறது. இதைத்தான்... பந்தம் என்று சொல்கிறோம்.

அவ்வாறு ஏற்படும் பந்தங்களின்  மேல் நாம் வைக்கும் அன்பு... பாசம்... போன்ற உணர்வைத்தான் பற்று என்று சொல்கிறோம்.

பந்தம் ஏற்படுவதை நம்மால் தவிர்க்க முடியாது. ஏனெனில் அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு நமக்கு இருப்பதில்லை. ஏனென்றால், அவற்றைத் தீர்மானிப்பது, நமது பூர்வ வாசனைகள் என்ற பூர்வ கர்ம வினைகள்தான்.  

ஆனால், அவற்றின் மேல் நாம் வைக்கும் பற்று, என்பது நமது கைகளில் இருக்கிறது. அந்தப் பற்றைக் கையாளும் பக்குவம் வந்து விட்டால்... பந்தங்களினால் வெளிப்படும் இன்ப துன்பங்களையும்... அவற்றின் மீது நமக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளையும்... மிக எளிதாகக் கடந்து விடலாம்.

இந்தப் பக்குவத்தை நாம் ஏனைய அனைத்து உயிரினஙளிலிருந்தும் கற்றுக் கொள்ளலாம். பறவைகளில் மிக எளிதாக நாம் பார்க்கும், குருவிகளின் வாழ்வில் இருந்தும் கற்றுக் கொள்ளாலாம்.

குருவிகள் தங்களது முட்டைகளைத் தாம் கட்டிய கூட்டுக்குள்ளேயே பத்திரமாக வைத்துக் காப்பாற்றும். அடைகாக்கும் போதும், ஆண், பெண் என இருபால் குருவிகளும், தமது இரை தேடல்களுக்கிடையே, இடைவிடாது ஒன்று மாற்றி ஒன்றாக பாதுகாக்கும்.

அது போலவே குருவிகள், முட்டையிலிருந்து வெளி வரும் போதும்... அவை வளரும் போதும்.மிகக் கவனமாக அருகிலிருந்து பேணிப் பாதுகாக்கும். அவற்றிற்கான இரைகளை தேடித் தேடிக் கொண்டு வந்து, எதைக் கொடுக்க வேண்டும்... எவ்வளவு கொடுக்க வேண்டும்... எப்போது கொடுக்க வேண்டும்... என்பதை நன்கு உணர்ந்து, அறிந்து செயல்படும்.

குருவிக் குஞ்சுகள், தமது சக்தியைப் பெற்று, தாமாக தமது வாழ்வை மேற்கொள்ளும் வரையில், அருகிலிருந்து பார்த்துக் கொண்ட குருவிகள், அவை, வளர்ந்ததற்குப் பின், அந்தக் குருவிகளை தமது கூட்டத்தில் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளும். அதற்குப் பின், தாய், சேய் என்ற எந்தப் பற்றுகளுமின்றி, கூட்டத்தில் ஒன்றாக வாழக் கற்றுக் கொள்ளும்.

இந்த 'பக்குவத்தைத்தான்' குருவிகளின் வாழ்க்கை மட்டுமல்ல... உலகில் வாழும் ஏனைய உயிரினங்கள் அனைத்தும் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன.  

இந்தப் பக்குவத்தை நாம் அடைவதற்கு, நாம் இந்த உலக வாழின் மீது வைக்கும் பற்றை நீக்கி... நமது உள் வாழ்வின் மீது அதை வைப்பது ஒன்றே... எளிய வழி.

'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை

பற்றுக பற்று விடற்கு'

ஸாய்ராம்.


Monday, January 11, 2021

'சொல்லின் செல்வன்'


 சொற்கள்... விலை மதிக்க முடியாதவை. இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை.

'சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனில்லாச் சொல்'

... என்று, சொற்களின் மகத்துவத்தைப் போற்றியிருப்பார்.

'ஹநுமந்தப் பிரபுவின்' வாயில் இருந்து வெளிப்பட்ட ஒவ்வொரு சொல்லும், அர்த்தங்கள் பொதிந்ததாகவும்... அவசியமானதாகவும்... 'பகவான் ஸ்ரீ இராமருடைய' அம்புகள் போல... குறி தவறாததாகவும் இருக்கின்றன.

அசோகவனத்தில், 'சீதாதேவித் தாயார்', அரக்கிகளின் கட்டுப் பாட்டில், சொல்லவண்ணா துயரில் மூழ்கித் தத்தளித்துத் தவித்துக் கொண்டிருக்கிறார்.கொடுங்கோலனான 'இராவணன்' ஒவ்வொரு நாளும் தாயாரிடம் வந்து, தாயாரின் மனதை மாற்ற எண்ணற்ற சூழ்ச்சி வார்த்தைகளைப் பேசி, அவரை மேலும் சோகத்துள்ளாக்கிக் கொண்டிருக்கிறான்.

இந்தத் துன்பத்திற்கெல்லாம், ஒரு முடிவு கட்டி விடலாம்... என்ற எண்ணத்துடன், தாயார் தன்னையே மாய்த்துக் கொள்ள எத்தனிக்கிறார். இந்த சூழலில்தான், ஹநுமந்தப் பிரபு, தாயாரைத் தேடியபடி, அசோக வனத்திற்குள் நுழைந்து... அவரமர்ந்திருக்கும் சிம்சுபா மரத்தின் மீதிருந்து, அவர் படும் அவஸ்தைகள் அனைத்தையும் பார்த்து கண்ணீர் உகுத்தபடி... தாயாரை சந்திக்கத் தக்கத் தருணத்தை நோக்கியபடிஅமர்ந்திருக்கிறார்.

தாயாரின் உச்ச கட்டச் சோதனையின் விளிம்பில்... இதுதான் தக்கத் தருணம் என்பதை உணர்ந்து, மிகச் சிறியதான தோற்றத்திற்குள் தன்னை சுருக்கிக் கொண்ட ஹநுமந்தப் பிரபு சிந்திக்க ஆரம்பித்தார்....

~ வானரராக இருப்பதால், தன்னைக் கண்டு, தாயார் பயந்து விடக் கூடும்...

~ அரக்கனான இராவணன், பல ரூபங்களை எடுக்கக் கூடிய மாயாவியாதலால், தன்னையும் அவனாக நினைக்க்கக் கூடும்..

~ ஆகவே, தான் பகவான் ஸ்ரீ இராம பிரானாரால் அனுப்பப் பட்ட தூதுவன் என்பதை முதலில் தாயாருக்கு உணர்த்த வேண்டும். அதற்குப் பின்னர்தான், பகவான் சொல்லியனுப்பிய செய்திகளையும், அவரளித்த சூடாமணியையும், தாயாரிடம் சமர்ப்பிக்க முடியும்...

... என்றெல்லாம் சிந்தித்து, ஒரு முடிவுக்கு வருகிறார்.

முதலில் எண்ணம்... பிறகு சொற்கள்... அதன் பிறகுதான் செயல், என்ற நிலையில் செயல் படும் வீரரான பிரபு, மரக்கிளைகளில் மறைந்த படியே, விழுதுகளைப் பிடித்தபடி நின்று கொண்டிருக்கிற தாயார் கேட்கும் படி, 'பகவான் இரமரது சரித்திரத்தைச்' சொல்ல ஆரம்பிக்கிறார்.

மதுரமான குரலில் ஒலிக்கும், தனது நாதரான பகவான் இராமரது சரித்திரத்தைக் கேட்ட தாயாரின் உள்ளம் களிப்பில் ஆழ்ந்தது... கவலைகளை மறந்தது அப்போதுதான்... மிகவும் பணிவாக, தனது உடலை வளைத்துக் குனிந்த படியே, இரு கைகளையும் தலை மிது கூப்பியபடியே, ஹநுமந்தப் பிரபு, தாயாரின் முன்னிலையில் தோன்றினார்.

பின் என்ன... ! தாயாரின் மனக் கவலைகள் அனைத்தும் தீர்ந்து போயின... என்பதைச் சொல்லவும் வேண்டுமோ...!

ஆம்,' சொல்லின் செல்வன்' என்றால், அது 'பகவான் ஆஞ்சநேயப் பிரபுதான்'.

'ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஸகஸ்ராம தத்துல்யம் ஸ்ரீ ராம ராம வரானனே... !'

ஸாய்ராம்.

w


ஒரு சத்குருவின் தொடர்பு அவசியமா... ?


 நமது வீட்டுக்கு வெளியே, மின் கம்பத்தில் மின்னோட்டம் இடைவிடாது பயணித்துக் கொண்டிருக்கிறது. அதன் மின்னோட்டம், மிக சக்தி வாய்ந்தது. நாம் இருக்கும் இடம் முழுவதையுமே ஒரே கணத்தில் பகலாக மாற்றக் கூடிய வல்லமை மிக்கது. ஆயிரக்கணக்கான வோல்ட் அளவுள்ள மிக சக்தி வாய்ந்த அந்த மின்னோட்டத்தைப் போன்றதுதான்... இறை சக்தி.

அந்த மின்கம்பத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாலோ அல்லது, அதைப் பூஜிப்பதாலோ... நமது வீட்டில் மின்னொளி வந்து விடுவதில்லை. நமக்கு மின்னொளி வேண்டுமெனில்... முதலில் நாம் ஒரு மின் இணைப்பைப் பெற வேண்டும். அந்த இணைப்பைப் போன்றதுதான்... ஒரு சத்குருவின் தொடர்பு.

அந்த தொடர்புதான், மிக சக்தி வாய்ந்த ஆயிரக் கணக்கான வோல்ட்டுகளைக் கொண்ட 'இறை சக்தியை', நாம் அனுபவிக்கக் கூடிய அளவிலான 240 வோல்ட்டுக்களை, நாம் அன்றடம் அனுபவிக்கும், மின் விளக்குகளாக... மின் விசிறிகளாக.. எண்ணற்ற மின் சாதனங்களை இயக்கக் கூடிய, மிக நுட்பமான சக்தியுள்ள 'வாட்ஸ்' களாக... மாற்றி விடுகிறது.

இதுதான், குருவருள் செய்யும் அற்புதம்.

ஸாய்ராம்


Friday, January 8, 2021

பிரார்த்தனை


 எண்ணங்களை ஒரு முனையில் குவிக்கும் யுக்தி.

நாம் வாழ்வில் மேற்கொள்ளும் அல்லது எதிர்கொள்ளும் செயல்களுக்கான முயற்சிகள்தான் நம் கைகளில் இருக்கிறது. அதன் பலன்களில் நமக்கு அதிகாரம் இல்லை என்பதை, நாம் அனுபவத்தில்தான் உணர்ந்து கொள்கிறோம்.

ஏனெனில், அந்த செயல்களுக்கான பலன்களை, நமது 'பூர்வ கர்ம வினைகள்தான்' நிர்ணயிக்கின்றன. காரியங்களை மட்டும்தான் நாம் அறிகிறோம்... ஆனால் காரணங்களை நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை.

அந்தக் காரணங்களைத்தான், நமது அறிவைக் கொண்டும்... புத்தியைக் கொண்டும்... ஞானத்தைக் கொண்டும் தேடிப் பார்க்கிறோம். இறுதியில்தான், அதற்கான அதிகாரம் நமது கைகளில் இல்லை என்பதை உணர்ந்து கொள்கிறோம்

இந்த உணர்தல்தான், நம்மை படைப்பவரின் ஆளுமைக்குள் கொண்டு போய் சேர்க்கிறது. அவர் ஒருவரே, காரியங்களையும்... காரணங்களையும் அறிந்தவராக இருப்பதால், அவரிடம் சரணாகதி அடைகிறோம்.

இப்போதும், நாம்தான் காரியங்களை மேற்கொள்பவராகவும்... எதிர் கொள்பவராகவும்... இருக்கிறோம். ஆனால், 'கர்த்தாவாக' இல்லை... படைப்பவரின் கைகளில் இருக்கும் ஒரு 'கருவியாக'இருந்து நமது செயல்களைச் செய்கிறோம்.

ஒவ்வொரு செயலுக்கு முன்பும், அந்த படைப்பவரிடம் முறையிருகிறோம்...'நான் உங்கள் கைகளில் ஒரு கருவி மாத்திரமே... நீங்கள்தான் கர்த்தாவாக இருந்து... இந்தக் கடமையில் என்னை வழி நடத்த வேண்டும் !'. 

இந்த முறையிடுதல்... அல்லது ஒப்படைத்தல்... என்பதைத்தான், 'பிரார்த்தனை' என்று சொல்லால் அலங்கரிக்கிறோம்.

ஸாய்ராம்.


Tuesday, January 5, 2021

நினைவுப் பெட்டகத்திலிருந்து... 'எனது வகுப்பாசிரியர்'

'க. இராசதுரை...', எனது ஐந்தாம் வகுப்பு வரைக்கான வகுப்பாசிரியர். சற்று உயரம் குறைந்த தோற்றம்... வெண்மை நிற ஜிப்பா, வேஷ்டி, தோளில் துண்டு... கையில் குடை... என பார்த்தவுடன் பளிச்சென்று இருப்பார்.

அருகில் பார்க்கும் போது, நன்கு மழிக்கப்பட்ட தேஜஸான முகம்... வெண்மையான, நெருங்கிய, சிறிய பல் வரிசை... எப்போதும் புன் சிரிப்பை உதிர்க்கும் உதடுகள்... சுத்தமாக, நறுக்கப்பட்ட நகங்களுடன் கூடிய  விரல்கள்... என, சுத்தம் என்பதன் வடிவமாகவே இருப்பார்.

அவருடைய தமிழ் உச்சரிப்பும்... கையெழுத்தும்... முத்து முத்தாக இருக்கும். எனது அட்டை போடப்பட்ட நோட்டுகளுக்கும், புத்தகங்களுக்கும் அவர்தான் பெயர், பாடங்கள் மற்றும் எது வகுப்பு என்பதையெல்லாம், முத்து முத்தான தமிழ் எழுத்துக்களில், அழகாக எழுதித் தருவார். அவர், எவரையும் ஒரு முறையெனும் கடிந்து கொண்டதை, நான் பார்த்ததில்லை.

இவ்வளவு அன்பு நிறைந்த ஆசிரியரை நான் பிரிய நேர்ந்த போது, அழுது கொண்டே அவர் முன் நின்றதும், அவர் என்னைத் தட்டிக் கொடுத்து விட்டு, நான் நீட்டிய 'ஆட்டோக்ராஃபில்' ,'அன்பு கொண்ட நெஞ்சம்... ஆசை வேண்டும் கொஞ்சம்... இன்பம் ஒன்றே தஞ்சம்.. அது, ஈடில்லா வாழ்வின் சொந்தம்... !', என்று எழுதிக் கொடுத்தது இன்றும் எனது மனதில் பதிந்திருக்கிறது.

11 வயதில் அவரைப் பிரிந்து, பின்னர்... எனது 34 ஆவது வயதில்தான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் எனது திருமணத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். எங்களது குடும்பத்தை நன்கு அறிந்தவராக இருந்த அவர்... எனது திருமணத்திற்காக எழுதியிருந்த 'வாழ்த்துக் கடிதத்தில்'... எனது பொருப்புகளையும், கடமைகளையும் நன்கு உணர்ந்தவாக... அவர் பாராட்டி எழுதியிருந்தது, எனது கண்களில் கண்ணீரை வர வரவழைத்தது.

என்னையும், அவரையும்... காலமும், தேசமும் பிரித்திருக்கலாம்...ஆனால், அவர் என் மிது வைத்திருந்த அன்பையும், அக்கரையையும்... அவை பிரித்து விடவில்லை என்பதை... அவரின் முத்து முத்தான கடித வரிகள், உணர்த்திவிட்டன.

அன்பான ஆசிரியருக்கு... பணிவான மாணவனின் வணக்கங்களும், நன்றியும்.

ஸாய்ராம்.


Monday, January 4, 2021

நினைவுப் பெட்டகத்திலிருந்து... 'அழகி'

                                                                                                                                                                                                                                                                                     

அழகி... அதுதான், அவரது உண்மைப்  பெயர். ஆனால், அப்போதெல்லாம்... அவர் 'அழவி' என்றுதான் அழைக்கப்பட்டார். 

பின் கொசுவம் வைத்த சேலை... கைகளில் வெள்ளிக் காப்புகள்... தொங்கும் காதுகளில் லோலாக்குகள்...வாரிச் சுற்றி முடிக்கப்பட்ட கொண்டை முடி... வெற்றிலைச் சாற்றின் காரை பற்றிய உறுதியான பற்கள்... மூக்குத்தி... அறுபது வயதிற்கு மேலான அனுபவங்களை வெளிப்படுத்தும் முகச் சுருக்கங்கள்... நெற்றி நிறைந்த விபூதி... இதுதான், நான் பார்த்த 'அழவி'.

எங்களது ஊரின் ஒரே மருத்துவச்சி... அழவிதான். என் வரையிலான என் குடும்பத்து 12 பிரசவங்களுக்கும், மருத்துவச்சி. அனைத்துமே சுகப் பிரசவங்கள்தான். பிரசவம் மட்டுமல்ல... தொடரும் குழந்தை வளர்ப்பிலும் அவரின் பங்கு தொடர்ந்து கொண்டே இருந்தது. 

எப்போதும் சுறு சுறுப்புடன் இயங்கும், அழவியின் குரல் மட்டும்தான்... கர, கரப்பானதாக இருக்கும். அது, என்னைப் போன்ற அன்றைய சிறுவர்களுக்கு அவரிடம் ஒரு பயத்தையே ஏற்படுத்தும். அழவி வந்தாலே, அவர், சங்கில்         ஊற்றிக் கொடுக்கப் போகும் மருந்துகளை நினைத்தும்... சுழுக்கு நீவி விடும் அழுத்தங்களை நினைத்தும்... குழந்தைகளான எங்களுக்கெல்லாம், ஓடி ஒளியத்தான் தோன்றும்.

ஆனால், அவரது வருகை, எப்போதும் வீட்டில் அம்மாவுக்கு மிக மிக உதவிகரமாக இருக்கும். அம்மாவின் வேலைகள் அனைத்தையுமே, இழுத்துப் போட்டுக் கொண்டு, செய்து முடிப்பார். அவ்வளவு வேலைகளையும் தனித்தே செய்யும் அம்மாவுக்கு, அழவியின் வருகை எப்போதும், பூரிப்பாக இருக்கும். 

வெகு நாட்களுக்குப் பின்னர்தான், அவரது பெயர்... 'அழகி' என்றே எனக்குத் தெரிய வந்தது, ஆனால், அது நான் ஊரை விட்டு வெளியேறப் போகும் காலமாக அமைந்தது. அதற்குப் பின்னால், எப்போதும் நான் அவரைப் பார்த்ததில்லை. ஆனால், அவரின் நினைவுகள் எப்போதும் எனது மனதுக்குள் பொதிந்தே இருக்கிறது.

எனது மகன் பிறக்கப் போகும் நாளன்றைய முதல் நாள் இரவில், மனைவி மருத்துவமனையில் இருக்கும் போது, குழந்தை பிறந்துவிட்டது, என்ற சேதி வரும் வரை, விழித்துக் கொண்டிருந்த போதும்... மகளின் பிறப்பின் போது, அது அறுவை சிகிச்சையாக இருக்கப் போகிறது என்று மருத்துவர் முடிவு செய்த போதும்... எனது மனதில், நிழலாடியவர்...அந்த அழகிய 'அழகிதான்'

We Miss You 'Azhahi'mma'... !

ஸாய்ராம்.



நினைவுப் பெட்டகத்திலிருந்து... 'சாலமன் அண்ணா'


ஜன்னலில் இருந்து தூரத்தில் தெரியும், சர்ச் கோபுரத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த சர்ச்சிலில்தான், சாலமன் அண்ணனுக்கு அன்று திருமணம். எங்களையெல்லாம் விட்டு விட்டு, அம்மாவும், அப்பாவும் மட்டும் போயிருந்தார்கள். அப்படியானால், சாலமன் அண்ணா எங்களுடன் பிறந்தவர் இல்லையா... ?

எங்களது கடையில், தையல் வேலை செய்து கொண்டிருந்தவர்தான் சாலமன் அண்ணா. வேலைகளுக்கு இடையில், அம்மாவுக்கு வீட்டு வேலைகள் அனைத்திலும் மிகவும் ஒத்துழைப்பாக இருப்பார். கீழே இருந்து குறுகிய படிகளில் அம்மா, ஒரு பெரிய பித்தளைப் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வருவதை, எல்லோரும் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால், சாலமன் அண்ணா, அம்மா கீழே படிகளில் ஏறும் சப்தத்தைக் கேட்டவுடனேயே, என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அதை அப்படியே போட்டு விட்டு, பாத்திரத்தை வாங்க படிகளில் இறங்கி ஓடுவார்.

குடும்பத்தில் நிலவும் அனைத்து சம்பாஷனைகளிலும் அவரது பங்கு இருக்கும். அப்பாவிடம் மட்டும், மிகப் பணிவுடனும், மரியாதையுடனும் நடந்து கொள்வார். அப்பாவுக்கு முன்னால், எப்போதும் நின்று கொண்டே பேசும் அண்ணா, அவரது வார்த்தைகளை முழுமையாக கேட்ட பின், அவரின் கருத்துக்களை முன் வைப்பார். அந்தக் கருத்துக்களுக்கு அப்பா கொடுத்த மரியாதை இப்போதும் எனது மனதில் நிழலாடுகிறது.

எங்களது வீட்டின் முதல் சுப நிகழ்வாக நடந்தது எங்களது மூத்த சகோதரியின் திருமணம், அந்தத் திருமணத்தில் அவரின் அர்ப்பணிப்பும்... முதல் மருகனாக வந்த எங்கள் மாமாவிடம், அவர் கொண்டிருந்த அன்பும்... அவரிடம்,  அக்காவைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும், எடுத்துக் கூறிய பண்பு மிக்க வார்த்தைகள், எங்கள் மாமாவை குடும்பத்தில் ஒருவராக, மூத்தவராக, நாங்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக் கொள்வதாக அமைந்தது.

ஒரு முறை, விடுமுறையின் போது, அக்காவின் வீட்டிற்கு கடைக் குட்டிகளான எங்கள் மூவரையும் அழைத்துச் சென்றார். மலைகளைச் சுற்றிச் சுற்றிச் செல்லும் பேருந்துப் பயணம் எங்களுக்கு மிகவும் புதியது. பயணத்தில் மகிழ்ச்சி இருந்தாலும், தலைச் சுற்றி, குமட்டி வாயில் இருந்து வெளியேறியவற்றை, அவர் முன்னதாகவே கொண்டு வந்திருந்த, பிளாஸ்டிக் பைகளில், கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் சேகரித்ததும், பேருந்து நிற்கும் இடங்களில் எல்லாம், எங்களை இறங்க வைத்து, சுத்தம் செய்து, பாலில்லா தேநீரையும், ரொட்டிகளையும் வாங்கிக் கொடுத்து அழைத்துச் சென்றது, இன்றும் என் மனதில் நிழலாடுகிறது.

இன்று, திருமணம் முடித்து, சாலமன் அண்ணா, அண்ணியாருடன் வீட்டுக்கு வந்தார். எங்கள் அனைவருடனும் கண்ணீருடன் விடைபெற்று, அருகில் இருக்கும் எங்கள் மாமாவின் வீட்டில் குடியேறினார். எங்கள் மாமாவும் தையல் வேலை செய்பவர். அவரின் கடையும், வீடும் இணைந்தே இருந்தது.மாமாவுடன் இணைந்து தனது வாழ்வைத் துவக்கினார், சாலமன் அண்ணா.ஆனால், தினமும் அவரின் வருகையும், அவரது அர்ப்பணிப்பும் எங்கள் குடும்பத்தைச் சுற்றியே இருந்தது.

அவர் சென்ற பின், அந்தக் காலியான தையல் மிஷினின் நாற்காலி வெறிச்சோடியே இருந்தது. அதற்குப் பின், அப்பா கடையில் தையல் தொழிலையே நிறுத்தி விட்டார். ஆர்டர்கள் அனைத்தையும், சாலமன் அண்ணனிடம் அனுப்பி விடுவார்.

காலங்கள் கடந்தன. 12 வயதில் ஊரை விட்டு வந்த நான்.. 11 வருடங்கள் கழித்து, ஊருக்குத் திரும்பிச் சென்ற போது, சாலமன் அண்ணாவைப் பார்க்கச் சென்றேன். என்னை அவர் எதிர் பார்க்கவில்லையாதலால்... உடனே அடையாளம் கண்டு கொள்ளவும் இல்லை. நான் சிரித்த படியே, சாலமன் அண்ணாவைக் கட்டிக் கொண்டு என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட போது... வார்த்தைகளின்றி... கண்களில் கண்ணீர் பொங்க... என்னை அணைத்துக் கொண்டு உச்சி முகந்தார். அண்ணியாரையும் , குழந்தைகளையும் பார்த்து விட்டு அவர்களுக்காக நான் வாங்கிச் சென்ற ஆடைகளையும், பரிசுப் பொருள்களையும் கொடுத்து விட்டு, தேநீர் அருந்தி விட்டு, கிளம்பும் போது, வாசலில் குடும்பத்துடன் நின்று கையசைத்து என்னை வழி அனுப்பியது... இன்றும் எனது மனதில் நிழலாடுகிறது.

எந்த வித எதிர்பார்ப்புகளும் இன்றி, அன்பு செலுத்தும் நல்ல உள்ளங்களை எனது வாழ்வு முழுவதுமாக, இறைவன் எனக்கு அளித்திருக்கிறான். அவையெல்லாம் உடன் பிறந்த உறவுகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான், காலம் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.

அன்பிற்கும் உண்டோ... அடைக்கும் தாழ்... !

ஸாய்ராம்.


Sunday, January 3, 2021

கவிஞர் கண்ணாதாஸன் - ஒரு பார்வை : பகுதி - 6.




'எங்கிருந்து சொந்தம் வந்தது..

இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது...

அங்கிருந்து ஆட்டுகின்றவன்...

தினம் ஆடுகின்ற நாடகம் இது...'


ஒரு மனிதனின் முப்பரிமாண முன்னேற்றத்தை, இந்த அற்புதமான வரிகளுக்குள் கவிஞர் கொண்டு வந்திருப்பார்.

கதாநயகன் ஒரு சுதந்திரப் பறவை. பெரிய செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவன். தனது இளமைக் காலம் முழுவதையும், பெரும் பொழுது போக்குகளுக்குள் கழித்தவன். அவ்வாறே, தனது வாழ்நாள் முழுவதையுமே கடந்து போக வேண்டும்... என்று நினைத்து வாழ்பவன்.

அவன் வாழ்வில், ஒரு பெண் வந்து சேர்கிறாள். அவனது வாழ்க்கை முறைகள் அனைத்தையுமே மாற்றி அமைக்கிறாள். முழுவதுமாக மாற்றமடைந்த நாயகன், தனது வாழ் நாள் முழுவதையுமே, அந்தப் பெண்ணுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறான். அந்தப் பெண்ணும் உடன் படுகிறாள்.

ஆனால் விதி வசமாக, அவர்களின் கனவுகள் தகர்க்கப் படுகிறது. தான் விரும்பிய துணையை அடைய முடியாமல்... அவளுக்காகவே தான் எழுப்பியிருக்கும் அந்தக் கனவு மாளிகையில்... விஷம் அருந்தி, தனது வாழ்வை முடித்துக் கொள்கிறான்.

அப்போது, அவன் பாடும் பாடலில் வரும் வரிகள்தான் இவை. நாயகன் கேட்கும் கேள்விகளும்... அதற்கான பதிலை தானே உணர்ந்து கொள்வதுமாக... என்ன அற்புதமான 'சூழ் நிலைப் பாடல்' இது ... !

கேள்விகள் :

* இந்தப் பெண்ணுடனான உறவு, எனக்கு எங்கிருந்து வந்தது... ?

* இன்று, இந்த நஞ்சு உண்ணும் நிலையும் எங்கிருந்து வந்தது... ?

இதற்கான பதில் :

* ஆம், எனது 'கர்ம வினைகளின் படி' எனக்கு என்ன நடக்க வேண்டுமோ... அதுதான் நடக்கிறது. அதை மேற்பார்வை செய்பவனான இறைவன்தான் இதையெல்லாம் ஆட்டுவிக்கும் சூத்திரதாரியாக இருக்கிறார்.

இது போன்ற 'சூழ் நிலைப் பாடல்கள் (Situation Song)' எழுதுவதில், கவிஞருக்கு இணை கவிஞர்தான்.

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...