எண்ணங்களை ஒரு முனையில் குவிக்கும் யுக்தி.
நாம் வாழ்வில் மேற்கொள்ளும் அல்லது எதிர்கொள்ளும் செயல்களுக்கான முயற்சிகள்தான் நம் கைகளில் இருக்கிறது. அதன் பலன்களில் நமக்கு அதிகாரம் இல்லை என்பதை, நாம் அனுபவத்தில்தான் உணர்ந்து கொள்கிறோம்.
ஏனெனில், அந்த செயல்களுக்கான பலன்களை, நமது 'பூர்வ கர்ம வினைகள்தான்' நிர்ணயிக்கின்றன. காரியங்களை மட்டும்தான் நாம் அறிகிறோம்... ஆனால் காரணங்களை நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை.
அந்தக் காரணங்களைத்தான், நமது அறிவைக் கொண்டும்... புத்தியைக் கொண்டும்... ஞானத்தைக் கொண்டும் தேடிப் பார்க்கிறோம். இறுதியில்தான், அதற்கான அதிகாரம் நமது கைகளில் இல்லை என்பதை உணர்ந்து கொள்கிறோம்
இந்த உணர்தல்தான், நம்மை படைப்பவரின் ஆளுமைக்குள் கொண்டு போய் சேர்க்கிறது. அவர் ஒருவரே, காரியங்களையும்... காரணங்களையும் அறிந்தவராக இருப்பதால், அவரிடம் சரணாகதி அடைகிறோம்.
இப்போதும், நாம்தான் காரியங்களை மேற்கொள்பவராகவும்... எதிர் கொள்பவராகவும்... இருக்கிறோம். ஆனால், 'கர்த்தாவாக' இல்லை... படைப்பவரின் கைகளில் இருக்கும் ஒரு 'கருவியாக'இருந்து நமது செயல்களைச் செய்கிறோம்.
ஒவ்வொரு செயலுக்கு முன்பும், அந்த படைப்பவரிடம் முறையிருகிறோம்...'நான் உங்கள் கைகளில் ஒரு கருவி மாத்திரமே... நீங்கள்தான் கர்த்தாவாக இருந்து... இந்தக் கடமையில் என்னை வழி நடத்த வேண்டும் !'.
இந்த முறையிடுதல்... அல்லது ஒப்படைத்தல்... என்பதைத்தான், 'பிரார்த்தனை' என்று சொல்லால் அலங்கரிக்கிறோம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment